modi ops kamalஎதிர்க்கட்சி ஊடகங்கள் உள்பட அனைத்து ஊடகங்களும் வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி பெரும் வெற்றிபெறும் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன.

கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, பொதுவான ஜனநாயகச் சக்திகளுக்கும் இச்செய்தி மகிழ்ச்சியைத் தந்துள்ளது. வரப்போகும் விடியலுக்கான ஒரு விடிவெள்ளியாக இதனை நாம் பார்க்கலாம்.

அதே நேரம், கருத்துக் கணிப்புகள் பற்றிய சில எச்சரிக்கைகளும் நமக்குத் தேவைப்படுகின்றன. கருத்துக் கணிப்புகளைத் தாண்டி நமக்கே இன்று மக்களின் ஆதரவு திமுக பக்கம் இருப்பதை உணர முடிகிறது. வெற்றி உறுதிதான். அதனால் மகிழ்ச்சி நம்மைப் பற்றிக் கொள்வதும் இயற்கைதான். இருந்தாலும் அந்த மகிழ்ச்சி நம்மையறியாமலேயே ஒருவிதமான மயக்கம் ஆகிவிடக் கூடாது.

ஏப்ரல் 6 வரையில் ஓய்வின்றி உழைத்தால் மட்டுமே அந்த வெற்றிக்கனியை முழுமையாக நாம் பெற இயலும். கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பிழந்தவர்களுக்கு ஒரு வருத்தம் இருக்கும்.

கட்சிக்குள் சிறு சிக்கல்களும் இருக்கும். அவற்றையெல்லாம் தாண்டி, ஒரு பொது எதிரியை நெஞ்சில் நிறுத்தி உழைக்க வேண்டிய தேர்தல் இது! வெற்றி மயக்கம், மனச் சோர்வு இரண்டுமே நம் இலக்கைச் சிதைக்கும்.

பாஜக இருபது இடங்களில்தானே போட்டியிடுகிறது என்று எண்ணிக் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது. 234 இடங்களிலும் நம்மை எதிர்த்து அவர்கள்தான் வெவ்வேறு பெயர்களில் போட்டியிடுகின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதிமுக இன்னொரு பாஜக என்பதை நாம் அறிவோம். மதவெறிக்கு இணையானதே சாதி வெறியும். ஆதலால் பாமக என்பதும் பாஜக தான்! காங்கிரசில் இருந்து பிரிந்த தமிழ் மாநிலக் காங்கிரஸ் கூடத் தன் தேர்தல் அறிக்கையில், கோயில்களைத் தனியாரிடம் கொடுத்துவிட வேண்டும் என்கிறது. ஆக, எல்லாமே பாஜக கட்சியின் மாற்று வடிவங்கள்தான்!

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக போன்ற உதிரிக் கட்சிகளும் திமுகவைதான் எதிர்க்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ம நீ ம கட்சி, தேர்தல் அறிக்கையில், நீட் என்பதற்குப் பதிலாக, சீட் என்கிறது. ஓரிடத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என்று கூறிவிட்டு, இன்னொரு இடத்தில், மும்மொழிக்கொள்கை அமலாகும் என்கிறது. எனவே எல்லாக் கட்சிகளும் வெவ்வேறு பெயர்களில் ஒரே முகத்ததைக் காட்டுகின்றன.

சுருக்கமாய்ச் சொன்னால், களத்தில் நிற்பது, சமூக நீதியும், மனு நீதியும்தான். சமூக நீதிச் சமரில் விலகி நிற்பவர்களும் கூட மறைமுகமாக மனுநீதிக்குத் துணை போகின்றனர் என்றே பொருள்!

வாருங்கள் தோழர்களே! களம் காண்போம், சமூக நீதியை அரியணையில் அமர்த்துவோம்!

- சுப.வீரபாண்டியன்

Pin It