இழந்த உரிமைகளை அதை அபகரித்துக் கொண்டவர்களின் மனசாட்சியுடன் மன்றாடி மீட்டெடுக்க முடியாது. இடைவிடாத போராட்டங்களின் மூலமே மீட்க முடியும். ஆடுகள் தான் பலியிடப்படுகின்றன, சிங்கங்கள் அல்ல - டாக்டர் BR அம்பேத்கர்.
ஒடுக்கப்பட்ட மக்கள் வென்றெடுக்கும ஒவ்வொரு அரசியல் உரிமையையும் சிற்சில பலன்களையும், சனாதனவாதிகள் வன்முறை மூலமாகவோ அல்லது அறமற்ற முறையில் ஏமாற்றியோ பறித்துக் கொள்கிறார்கள். ஜாதியை பாதுகாக்கும் நால்வர்ண முறையின் அடிப்படை தன்மையே இதுதான் என்பதால் இதில் ஆச்சர்யம் அடைவதற்கு ஒன்றுமில்லை. உரிமைக்குரல்கள் அதிகமாகும்போது அடக்குமுறைகளை அதிகரித்து மோதல்களை உருவாக்கும் முயற்சிகளும் அதிகரிக்கின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்ற பெயரில் அளிக்கப்பட்டுள்ள 10% EWS இடஒதுக்கீடும் அப்படியான ஒரு அடக்குமுறைதான். எந்த நியாமான தர்க்கமும் இன்றி கொண்டுவரப்பட்டுள்ள இந்த 10% EWS இட ஒதுக்கீட்டுக் கொள்கை அனைத்து சமத்துவக் கோட்பாடுகளையும், இதுவரை பின்பற்றி வந்த இட ஒதுக்கீடு கோட்பாட்டு அடிப்படைகளையும் மீறுகிறது. மோடி அரசின் 10% EWS இட ஒதுக்கீடு எவ்வித தரவுகளும் இன்றி, தர்க்கமும் இன்றி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது என நிருபிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான ஜாதிய பாகுபாடுகளும் தொடர்கின்றன.ஜாதிய அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டால் தகுதி, திறமையற்றவர்கள் பயனடைவார்கள் என்றும், கடந்தகால உயர்சாதி முன்னோர்கள் செய்த தவறுக்கு நாங்கள் தற்காலத்தில் தண்டனை அனுபவிக்கவேண்டுமா என்பன போன்ற வழக்கமான கேள்விகளுக்கு மிக எளிதாக பதிலளித்து விடலாம். வாய்ப்புகளை கண்டடைவதே இந்தியாவில் தகுதி என்பதற்கு பொருள் ஆகும். இந்திய சமூகத்தில் ஒருவர் எந்த ஜாதியப் படிநிலையில் இருக்கிறார் என்பதை பொறுத்தே அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்பது பல ஆய்வுகளில் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன. அதாவது வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒருவருடைய தகுதிக்கும், திறமைக்கும், அவருக்கு கிடைக்கும் வாய்ப்புக்கும் எவ்விதத் தொடர்பில்லை. இரண்டாவதாக, சாதியக் கொடுமைகள் கடந்த காலத்தில் மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நடந்து வருகின்றன. அவை முன்னோர்கள் செய்த பாவங்கள் மட்டும் இல்லை. பல்வேறு காரணங்களுக்காக ஜாதிய வன்கொடுமைகள் தற்காலத்தில் நிகழ்த்தப்படுகின்றன. ஜாதி மாறி நடக்கும் காதல் திருமணங்களில் தொடர்புடைய ஒடுக்கப்பட்ட மணமக்களை கொலை செய்வது நிகழ்கால ஜாதிய ஒடுக்குமுறை இல்லையா? ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் மீதி நிகழ்த்தப்படும் வன்முறை கடந்தகால தவறா?
70 ஆண்டுகால இட ஒதுக்கீட்டு வரலாற்றில் இதுவரை ஜாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒழுங்கான முறையில் நடைமுறைப் படுத்தப்படவேயில்லை என்பதையும், பொதுத்துறை நிறுவனங்களிலும், மத்தியப் பல்கலைக் கழகங்களிலும், SC, ST, OBC பிரிவினருக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப் படவில்லை என்பதையும் பல ஆய்வுகள் தகுந்த தரவுகளுடன் நிறுவியுள்ளன.
இட ஒதுக்கீடு என்பது ஒரு மக்கள் நலத் திட்டம் என்பதை போலவும், அதில் பயனடையும் மக்கள் அரசையே நம்பிக் கொண்டிருப்பதை போலவும் இட ஒதுக்கீட்டில் பயன் பெறுபவர்கள் அரசின் தயவால் தான் வாழ்கிறார்கள் என்பது போன்ற பிம்பத்தை 10% EWS இட ஒதுக்கீடு மூலம் உருவாக்க முயல்கின்றனர். இது ஏதோ உயர்சாதியினர் தாராளவாதிகள், அறிவாளிகள் என்ற தோற்றத்தை விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், இட ஒதுக்கீட்டு வரலாறையே மாற்றி அமைக்கும் நயவஞ்கப் போக்காகும். எந்த அடிப்படையில் இந்திய அரசு உருவாக்கப்பட்டதோ, அந்த அடித்தளத்திற்கு இழைக்கப்படும் துரோகமே EWS இட ஒதுக்கீடு. பெரும்பான்மையினர் இது குறித்து பேசாததும் பெருஞ்சோகம்.
இதை புரிந்து கொள்ள, இந்திய அரசு உருவாக்கப்பட்ட வரலாற்றை மீளாய்வு செய்ய வேண்டும். அப்போது நடந்த பேச்சுவார்த்தைகளையும் விவாதங்களையும் கூர்ந்து நோக்க வேண்டும். இதன் வேர் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் இருந்து துவங்குகிறது. அண்ணல் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா உள்ளிட்ட தலைவர்களின் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான தனித் தொகுதி கோரிக்கையை வட்ட மேசை மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஒரே பிரதிநிதியாகச் சென்ற காந்தி எதிர்த்தார். SC, ST மக்கள் அனைவரும் இந்து மதம் என்ற ஒரு பெரிய ஒற்றைக் குடைக்குள் வருவதால் அவர்களுக்கு தனித்தொகுதி தருவதில் காந்திக்கு உடன்பாடில்லை. வட்ட மேசை மாநாட்டிலும் அதற்கு முன்னும் பின்னும் அம்பேத்கர் வைத்த வாதங்கள் வெற்றி அடைந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித் தொகுதி கோரிக்கையை ஆங்கிலேய அரசு ஏற்றது. அன்றைய இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டொனால்டின் அரசு ஒடுக்கப்பட்ட மக்களை சிறுபான்மையினர் என அங்கீகரித்தது. அதன்படி, உயர்சாதி இந்துக்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், இந்திய கிறிஸ்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், ஐரோப்பியர்களோடு சேர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தனித் தொகுதி வழங்கப்பட்டது. அந்தத் தனித்தொகுதி என்பது தற்போது இருப்பதை விட வேறுபட்டது. ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த வேட்பாளரைத் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே வாக்குச் செலுத்தி, தேர்ந்தெடுப்பார்கள். அதே தொகுதியின் சாதி இந்து வேட்பாளருக்கும் ஒடுக்கப்பட்டோர் வாக்களிப்பார்கள்.
இரட்டைத் தொகுதி அல்லது தனித்தொகுதி என்றழைக்கப்பட்ட இந்த ஏற்பாடு, இந்துக்களை பிளவு படுத்தும் வேலை என்று காந்தி அதிருப்தி அடைந்தார். ஆனால் அந்த வருத்தத்திற்கான அடிப்படை காரணம் வர்ணாஸ்ரமும் ஜாதிய அடுக்கு முறையும் காந்தியின் ஆன்மிகச் சிந்தனையில் கலந்திருந்ததாகும். நினைத்ததை சாதித்துப் பழக்கப்பட்ட காந்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதி வழங்கும் முடிவை எதிர்த்து, ஏர்வாடா சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட தனித் தொகுதி உரிமையை திரும்ப பெற பிரிட்டிஷ் அரசுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுக்கும் கடும் அழுத்தத்தையும் நெருக்கடியையும் அன்றைய காங்கிரஸ் கட்சி தந்தது. அதற்காக அனைத்து ஒடுக்கப்பட்டோர் மாநாட்டை கூட்டியது. ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கும் அழைத்தார்கள். வர்ணாஸ்ரம, இந்துத்துவ தத்துவத்தில் ஊறிப்போன பார்ப்பனரான மதன் மோகன் மாளவியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் செல்ல மறுத்தார். காந்தியின் மிரட்டலுக்கு அஞ்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை விட்டுத் தரமுடியாது என்று முடிவெடுத்திருந்தார். அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த, எம்சி ராஜா எடுத்த பல முயற்சிகளும் தோற்றுப் போனது. உண்ணாவிரதம் இருந்த காந்தி ஒருவேளை உயிர் இழக்க நேரிடுமானால், அந்தக் கோபம் ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் திரும்பும் என்பதை நினைத்து அஞ்சிய அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். காந்தியின் பிரதிநிதியாய் மாளவியா கையெழுத்திட்டார். சுருங்க சொன்னால், அம்பேத்கர் தனித் தொகுதி உரிமையை விட்டுக்கொடுத்ததும் காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
வட்ட மேசை மாநாட்டு விவாதங்களும், பூனா ஒப்பந்தமும் இட ஒதுக்கீட்டு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகள் என்றாலும், அதற்கு முன்னரே இட ஒதுக்கீடு கோல்ஹாபூர், மைசூர் சமஸ்தாங்களிலும், மெட்ராஸ் மாகாணத்திலும் இருந்தது. சத்ரபதி சாகு மகாராஜா தனது அரசாட்சியின் கீழுள்ள அனைத்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளையும் பார்ப்பன சாதியினரே கோலோச்சுவதை கண்டு கோபமடைந்து, 26 ஜூலை 1902 ஆம் ஆண்டு ஒரு ஆணை பிறப்பித்தார். அந்த அரசாணையில் 'ஆணை பிறப்பித்த இந்த நாள் முதல் இனிவரும் வேலை வாய்ப்புகளில் 50 விழுக்காடும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்படும். இன்றைய தேதியில் அனைத்து வேலைகளிலும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களின் பங்கு 50% தான் உள்ளது. இனி உருவாகும் வேலைவாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் என்பதை அரசர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறார்' என்று குறிப்பிடப்பட்டது.
ஆனாலும், இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் இட ஒதுக்கீடு பற்றிய விவாதம் முதன் முதலில் உருவானது பூனா ஒப்பந்தத்தில் தான். ஒடுக்கப்பட்ட மக்கள் இட ஒதுக்கீட்டிற்காக தனித் தொகுதி உரிமையை விட்டுக் கொடுத்தார்கள். எதிர்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன் வடிவமாகிய இந்திய அரசு சட்டத்தில் (1935) இட ஒதுக்கீடு சட்டப் பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்த வரலாறு சொல்லும் செய்தி என்னவென்றால், ஒடுக்கப் பட்ட மக்களுக்கு தரப்பட்டுள்ள இட ஒதுக்கீடு போராடிப் பெற்ற உரிமை. சனாதனாவாதிகள் சொல்வதைப் போல, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தரப்பட்ட கருணை அல்ல. அரசுகள் வழங்கிய சலுகையும் அல்ல. நீதித்துறை, அரசுத் துறை நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, தனித்தொகுதி உரிமையை விட்டுக்கொடுத்து இட ஒதுக்கீட்டு உரிமையை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றிருக்கிறார்கள். தனித்தொகுதி உரிமையை ஒடுக்கப்பட்ட மக்கள் விட்டுக் கொடுத்தது உயர்சாதி இந்துக்களுக்கு சாதகமாக அமைந்தது. இட ஒதுக்கீட்டில் பெற்ற நன்மைகளை விட தனித் தொகுதி மூலம் கூடுதல் நன்மைகளை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றிருப்பார்கள். அவ்வகையில் பூனா ஒப்பந்தம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் முக்கியமான பின்னடைவே. எனவே தான் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை நினைத்து அண்ணல் அம்பேத்கர் வருந்தினார்.
ஒருவேளை பூனா ஒப்பந்தம் நடைபெறாமல், அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்திலும் இடம் பெற்ற இட ஒதுக்கீட்டிற்குப் பதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதி (இரட்டைத் தொகுதி) கிடைத்திருக்குமேயானால் இந்திய அரசியல் நிலை எப்படி இருந்திருக்கும் என்று ஆராய்வது பயனற்றது என்ற போதிலும், தனித் தொகுதி உரிமை கிடைத்திருந்தால் ஜாதி அழிந்திருக்காது என்பது நிச்சயம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் களத்திலும், சமூக ரீதியாகவும் இன்றிருப்பதை விட நிச்சயமாக அதிக செல்வாக்குடன் இருந்திருப்பார்கள். மேலதிக உரிமைகள் வென்றெடுக்கப்பட்டிருக்கலாம்.
EWS இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட விதத்தில் பல்வேறு தவறுகள் நிரப்பி இருப்பதாக பலரும் வாதம் செய்கிறார்கள். நவ தாராள பொருளியல் கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தும் அரசில், EWS இட ஒதுக்கீட்டை ஏழைகளின் சமூக அரசியல் உரிமையாக முன்னிறுத்துவதே மிக முக்கியமான மோசடியாகும். அவர்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. மாறாக அரசியலமைப்புச் சட்டத்தின் இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தை சீர்குலைத்து, பெரும் விவாதத்திற்கு பிறகு அமைந்த அரசியலமைப்புச் சடட்த்தின் அடிப்படையை மறுப்பதாகும். EWS இட ஒதுக்கீடு பூனா ஒப்பந்தத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.
உயர்சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட EWS இட ஒதுக்கீடு செல்லுமா செல்லாதா என உயர்சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் இன்னொரு அமைப்பான நீதிமன்றங்களில் விவாதிக்கப் படுகிறது. ஒருவேளை EWS இட ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பெழுதினாலும், அதை நிர்வாகத் துறையில் நிரம்பியுள்ள உயர்சாதியினரே செயல்படுத்தப் போகிறார்கள். எங்கும் எதிலும் ஆதிக்கம் செலுத்தும் சனாதனவாதிகளாலும், உயர்சாதியினராலும் EWS இட ஒதுக்கீடு இயற்றப்பட்டது. குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட நீதிபதிகள் மிக மிக குறைவு. 2019 நிலவரப்படி 2 பிற்படுத்தப்பட்ட நீதிபதிகளும், ஒரு பட்டியலின நீதிபதி மட்டுமே உள்ளனர். மீதமுள்ள அனைத்து இடங்களிலும் உயர்சாதியினரே ஆக்கிரமித்துள்ளனர். இட ஒதுக்கீடு அடிப்படையை மீறும் வகையில் பல்வேறு தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஒருபுறம் அரசு நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குறைவான பிரதிநிதித்துவம். மறுபுறம், இட ஒதுக்கீட்டை சரியான முறையில் அமல்படுத்தாத நிர்வாகத் துறையும் இணைந்து வேலை செய்யும் இந்தியாவில் EWS இட ஒதுக்கீட்டினால், ஒடுக்கப்பட்ட மக்களின் 50–60 விழுக்காடு இடங்கள் பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரும் பொய்கள், அரசியல் சூழ்ச்சிகள், அவதூறுகள் ஆகியவற்றால், பூனா ஒப்பந்தத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த இட ஒதுக்கீடு மேலும் சீர்குலைகிறது. கடும் போராட்டத்திற்கு பிறகு ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்ற உரிமைகளை குறைத்தும், அவர்களுக்கான சட்டங்களை சீர்குலைக்கும் ஆயுதம் தான் EWS இட ஒதுக்கீடாகும். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்ற பெயரில் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்யப்பட்ட துரோகம் தவிர வேறில்லை.
என்னைப் பொறுத்தவரை, மரணத்தை விட மோசமான விஷயம் துரோகம். என்னால் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் துரோகத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - மாலிக் ஷாபாஸ்
- பாபி குன்ஹு
நன்றி: Round Table India இணையதளம் (2019, ஜனவரி 23 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)
தமிழ் மொழியாக்கம்: சுமதி, ஆஸ்திரேலியா