இந்தியச் சமூகம் சாதிய கட்டமைப்புகளால் ஆனது. சாதியக் கூறுகள் இல்லாமல், இங்கு எந்த ஒரு தனி மனிதனின் வாழ்க்கையும் நகராது. இந்நாட்டின் பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும், இந்த வகுப்புகளில் இருந்து இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம் ஆகிய மதங்களுக்கு மாறிய மதச் சிறுபான்மையினருக்கும் ஒரே எதிரி யாரென்றால், அது முன்னேறிய வகுப்பினர் தான். குறிப்பாக, முன்னேறிய வகுப்பில் இருக்கும் பார்ப்பனர்கள்தாம். இந்து மதத்தில் உச்சாணிக்கொம்பில் பன்னெடுங்காலமாய் அமர்ந்து கொண்டு, நாட்டில் அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைத்துப் பிரகாஸ்பதிதனம் செய்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

அறைக்குள் புகுந்த யானை போல, நாட்டிலுள்ள உயர்சாதிகள் ஜனநாயகத்தின் நான்கு தூண்களிலும் புகுந்து பெரும்பான்மையாய் ஆக்கிரமித்துக் கொண்டு, மேற்கொண்டும் தங்களது ஆட்கள் மட்டுமே உள்ளே வரவேண்டும், மற்றவர்கள் உள்ளே வரக்கூடாது என பிற்படுத்தப்பட்டோரை, தாழ்த்தப்பட்டோரை, பழங்குடியினரைப் பார்த்து கேலி செய்கிறார்கள். கூடுமானவரை, தங்கள் கைவசம் இருக்கும் அதிகாரங்களை, சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, அவர்கள் ஆட்களையே இன்னும் கூடுதலாக ஜனநாயகத்தின் நான்கு தூண்களிலும் எப்படியேனும் புகுத்தி விட வேண்டும், என்று துடியாய் துடித்துக் கிடக்கிறார்கள்.EWS Mumbai eventஅதன் முதல் கட்டமாகத்தான், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) என்று வெறும் உயர்சாதிகள் மட்டுமே இருக்கும் பிரிவு ஒன்றை உருவாக்கி, அதில் ஆண்டு வருமானம் எட்டு இலட்சத்திற்கும் குறைவாக இருப்போருக்கும், ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்போருக்கும், கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு என்ற ஒரு சட்டத்தை அவசர அவசரமாக இயற்றியுள்ளனர். “உம் பிரிவில் மட்டுமா ஏழைகள் உள்ளார்கள், எம் பிரிவிலும் ஏழைகள் உள்ளார்கள். அவர்களைப் பாரும், அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகள் அளிக்க வேண்டாமா?” என்று இத்துப்போன அரதப் பழைய பொய்யான வெற்று வாதத்தைக் கூச்ச நாச்சமின்றி மீண்டும் மீண்டும் உரக்க கூறி, சட்டத்தைப் இயற்றியுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்று. உயர்சாதியினரின் ஏழ்மை பற்றி பேசுவது என்பது இல்லாத ஒன்றைப் பற்றிப் பேசுவதாகும். ஏனெனில் பெரும்பான்மை உயர் சாதியினர் ஏழைகளாக இல்லை. இனி ஏழைகளாக பிறக்கப் போகும் உயர்சாதியினருக்கு கிடைக்கவிருக்கும் உரிமைகள் இப்போது உயிரோடு உள்ள உண்மையான ஏழைகளான பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இல்லை.

இந்தியாவில் அரசியலிலும் சமூகவியலிலும் உள்ள ஒரு பெரும் பிரச்சனை என்னவென்றால், சில வகுப்புகள் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் மட்டும் பின்தங்கியிருப்பதாக நாம் நம்புகிறோம், ஆனால் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் தீண்டாமை, சாதிய பாகுபாடு, வெறுத்தொதுக்கப்படுதல், அல்லல், துன்பம் ஆகியவற்றை யாரும் கண்டு கொள்வதில்லை. எல்லாம் தெரிந்தே தான் கண்டு கொள்ளாமல் விடப்படுகிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், உலகில் எந்த நாட்டிலாவது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினரை அந்நாட்டின் மற்ற மக்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறார்களா என்று. இந்தியாவில் உள்ள இரட்டை பிரச்சனை என்னவென்றால், இங்கு சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கிய மக்களே ஏழையாகவும் இருக்கிறார்கள். அதாவது இங்கு வாழும் பிற்படுத்தப்பட்டவர்களும், பட்டியலினத்தவர்களும், பழங்குடியினரும் தான் ஏழைகளாக இருக்கிறார்கள். சரி, ஏழைகளையாவது எந்த நாட்டு மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்? இந்தியாவில் ஏழ்மை என்பது ஒரு நோயின் விளைவு மட்டுமே. அந்த விளைவை உருவாக்கும் நோயானது சாதியும் அதன் பல்வேறு கூறுகளும். இங்கு நோயை குணப்படுத்தாமல், அந்நோய் உருவாக்கும் அறிகுறிகளுக்குக் களிம்பைத் தடவிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இந்நாட்டில் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மேல் உயர்சாதியினருக்கு ஒரு வன்மம் உள்ளது. அந்த வன்மம் பட்டியலிடப்பட்ட சாதியினர் மேலும் உள்ளது என்பதை யாவரும் அறிந்ததே. பழங்குடியினர் மேல் உயர்சாதியினருக்கு உள்ள வன்மம் ஒரு சிறப்பு வகையினானது. அவற்றை நாம் ஒன்றாக இணைக்க வேண்டாம் அல்லது ஒப்பிட்டும் பேச வேண்டாம், அது தேவையற்றது. ஆனால் இந்திய சமூகத்தின் உளவியல் என்பது மிகவும் சிக்கலானதும் ஆழமானதும் என்பது மட்டும் திண்ணம். இந்தியாவில் அரசியலைக் கட்டுப்படுத்துபவர்களின் சமூக உளவியலை மறந்து இந்த வர்க்க முறை அப்படியே இருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கிறோம். அண்ணல் அம்பேத்கரும், புரட்சியாளர் கார்ல் மார்க்சும் “மாற்றம் ஒன்றே உலகில் மாறாத ஒன்று” என்று ஒரே குரலில் கூறியதை மறந்துவிட வேண்டாம். இந்தியாவின் ஆளும் அரசியல் வர்க்கம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரையே (பார்ப்பனர்களும் இன்னபிற உயர் சாதியினர்) அதிகம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால், நாம் அவர்களை நமக்கு எதிரான ஒரு வர்க்கமாகவோ அல்லது குறிப்பிட்ட சாதியாகவோ பார்க்கவில்லை. ஏதோ நம்மவர்களில் ஒருவர் என்பது போலத்தான் பார்க்கிறோம். நம்முடைய உளவியலும் அப்படித்தான். அடிப்படையில் இனி வரும் காலங்களில் இதை மாற்ற வேண்டும், இந்த அரசியல் வர்க்கத்தையும், உளவியலையும் மாற்ற வேண்டும். அதற்கான முழு முயற்சிகளை இன்றே, இனிதே தொடங்கிட வேண்டும்.

உயர் சாதியினர் தாம் கையிலெடுத்த காரியங்களை வெற்றிகரமாய் செய்து முடிப்பதற்கு காரணம், அவர்கள் ஏற்கனவே ஜனநாயகத்தின் நான்கு தூண்களிலும் மிகுதியாய் ஆக்கிரமித்துக் கொண்டு அமர்ந்திருப்பதே. அது, அவர்களுக்கு ஒருவித வசதியை கொடுக்கிறது. நினைத்ததை நாட்டில் நடத்திக் காட்டி விடலாம் என்ற உந்து சக்தி அவர்களுக்கு ஏற்படுவதற்கு அடிப்படை மூலக்காரணமே அது தான்.

அது என்ன ஜனநாயகத்தின் நான்கு தூண்கள்? ஜனநாயகம் என்பது மக்களாட்சி. மக்களாட்சியை ஒரு மணிமண்டபம் என்று வைத்துக்கொண்டால் அதை தாங்கும் நான்கு தூண்கள்: சட்டமியற்றும் ஒன்றிய நாடாளு, மாநில சட்ட மன்றங்கள், நிர்வாகத்துறை, நீதித்துறை, ஊடகத்துறை. இந்த நான்கு தூண்களே மக்களாட்சி எனும் மணி மண்டபத்தைத் சரிந்து விழாமல் தாங்கிப் பிடிக்கின்றன. அந்தத் தூண்கள், எத்தகைய தூய்மையான நோக்கங்களைத் தாங்கிப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்டனவோ, அந்த நோக்கங்கள் இந்த நூற்றாண்டில் மிகப் பெரும் சோதனைகளுக்குள்ளாகி, பெரும் சவால்களை எதிர் நோக்கி உள்ளன. பொன்னாக மிளிர வேண்டிய அந்தத் தூண்கள், துருப்பிடிக்கத் தொடங்கிவிட்டன. அவற்றின் மதிப்பும் சரியத் தொடங்கி விட்டது. அதற்குக் காரணம், மக்களாட்சிக்கு விரோதமான தீய சக்திகள், நமது சமுதாய-அரசியல் கட்டமைப்பின் அனைத்து அங்கங்களிலும் ஊடுருவி, அவற்றை உருக்குலைத்து வருவதே.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களை என்னென்னவென ஆழமாகப் பார்ப்போம்.

1. சட்டம் இயற்ற அதிகாரமுள்ள மக்கள் பிரதிநிதித்துவ கூடங்கள் – மாநில சட்ட மன்றங்கள், சில மாநிலங்களில் உள்ள சட்ட மேலவைகள், ஒன்றிய அரசின் மக்களவை, மாநிலங்களவை ஆகியனவாகும்.

2. சட்டத்தை திறம்பட செயல்படுத்தும் அதிகார வர்க்கத்தை உள்ளடக்கிய மத்திய, மாநில அரசுப் பணிகள், குறிப்பாக IAS, IPS உள்ளிட்ட Group A, Group B பணிகள் ஆகியன.

3. நீதிமன்றங்கள் – மாவட்ட கீழமை நீதிமன்றங்கள், மாநிலத் தலைநகரங்களில் உள்ள உயர்நீதிமன்றங்கள், டில்லியில் உள்ள உச்ச நீதிமன்றம் ஆகியன.

4. ஊடகங்கள் – நாட்டிலுள்ள எண்ணிலடங்காத அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள். டிஜிட்டல் ஊடகங்கள் புதிய வரவு.

அறிவுள்ள அனைவருக்கும் தெரியும், இந்த நான்கு தூண்களிலும் நாட்டில் மிகுதியாய் இருப்பது யார் என்று. ஆம், அந்த உயர் சாதியினர்தான். ஒவ்வொரு தூணின் ஆரோக்கியத்தையும் கெடுத்து, துருப்பிடிக்க வைத்து உருக்குலைத்து வரும் அந்த உயர் சாதியினர்களே.

1. முதல் தூணின் நிலை என்னவென்று பார்ப்போம்.

இந்திய நாடாளுமன்றத்தில் (லோக்சபை) இப்போது (2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய நிலை) 230 இடங்களில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட உறுப்பினர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அவற்றுள் 131 இடங்கள் பட்டியல், பழங்குடியினருக்கு அரசமைப்பு சட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எப்படியோ 99 இடங்கள் கிடைத்துள்ளன. இந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடங்களில் நாட்டில் மொத்தம் உள்ள 2500 பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருந்து சுமார் 20 சாதிகள் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன. கணக்கிலடங்காத இன்னும் பல நூறு சாதிகளுக்கு பிரதிநிதித்துவமே இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் உண்மையான பெரும்பான்மை உயர்சாதிகளே. சுமார் 310-320 உறுப்பினர்கள் வரை இவர்கள் உள்ளனர். மாநிலங்களை, மொழிகளைக் கடந்து உயர் சாதிகள் இதை பெரும்பான்மையாக ஆக்கிரமித்துள்ளார்கள்.

பாராளுமன்றத்தை இந்த இலட்சணத்தில் வைத்துக் கொண்டு, அது நீதித்துறையை விடவும் அனைவருக்குமான உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என இன்றும் வழி மேல் விழி வைத்து எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு கிடக்கிறோம் நாம்.

நீதித்துறை சுதந்திரமும். பாராளுமன்றம் அனைத்து மக்களின் நலனுக்கும் மதிப்பளிக்கக் கூடிய உணர்வோடும் நடந்து கொள்வதும் நாட்டின் மிகப்பெரிய நகைச்சுவைகள். உண்மையில் அப்படிப்பட்ட விஷயங்க நம் நாட்டில் இல்லை. நயவஞ்சகத்தின் குடிலாகிய இரண்டிலும் நயத்தை, உணர்வு பூர்வத்தை, நேர்மையை, சுதந்திரத்தை, நீதியை எதிர்பார்ப்பது, சகாரா பாலைவனத்தில் பென்குயின் பறவையை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பது போல. சாராம்சத்தில், சில கலாச்சார பழக்கவழக்கங்களிம், உச்சரிப்பு முறைகளில், சொல்லாட்சிகளில், ஆளும் அரசியல் வர்க்கம் மாறாது. ஆனால் அரசியல் வர்க்கத்தை சுற்றியுள்ள சூழல் மட்டுமே மாறும்.

சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றம் முதல் இன்று வரை பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட கூட்டு பிரதிநிதித்துவம் 35% மட்டுமே. பல சந்தர்ப்பங்களில் அதைவிடக் குறைவானது என்பதைக் காட்டும் தரவுகளின் முழுப் பட்டியலும் உள்ளது. நாட்டின் முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒன்பது மாநில அரசுகள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல்வர்களால் (2019 ஏப்ரல் நிலவரம்) நிர்வகிக்கப்படுகின்றன. பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்த எந்த ஒரு மாநில முதல்வரும் இல்லை. சுமார் இருபது மாநிலங்கள் உயர்சாதியைச் சேர்ந்த முதல்வர்களால் ஆளப்படுகின்றன. இதுதான் நமது ஜனநாயகத்தின் முதல் தூணின் நிலை.

2. இரண்டாம் தூணின் நிலை என்னவென்று பார்ப்போம்.

ஒன்றிய அரசின் நிர்வாகத்துறையில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் ஒன்றும் சிறப்பாக இல்லை. இத்துறையில் SC, ST, BC, MBC மக்களுக்கு 35-40% பிரதிநிதித்துவம் மட்டுமே உள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதைவிடக் குறைவானது. ஒன்றிய அரசில் மட்டுமல்ல, மாநில அரசுகளிலும் SC, ST, BC, MBC மக்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் இதற்கு விதிவிலக்கு.

ஒன்றிய அரசில் பெரும்பாலான அமைச்சர்கள் உயர்சாதியினராகவே உள்ளனர், குறிப்பாக பார்ப்பனர்கள். முக்கிய இலாக்காக்கள் அனைத்திற்கும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அமைச்சர்களாகவும், அவர்களே அத்துறை சார்ந்த அதிகாரிகளாகவும் உள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களிலும், வங்கிகளிலும் நம்மவர்களுடைய நிலைமை மிகவும் மோசம் தான். குரூப் ஏ, குரூப் பி எனப்படும் மேல்நிலைப் பிரிவுகளில் பெரும்பாலும் இருப்பது உயர்சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான். பட்டியலின, பழங்குடி மக்கள் குரூப் சி, குரூப் டி எனும் கீழ்நிலை வேலைகளில் மட்டுமே. அதாவது, வெறும் கடைநிலை வேலைகளையே இன்னும் செய்து கொண்டுள்ளனர். இதுதான் நம் ஜனநாயகத்தின் இரண்டாம் தூணின் நிலை.

3. மூன்றாம் தூணின் நிலை என்னவென்று பார்ப்போம்.

நீதித்துறை என்று வரும்போது ஒரு பரம இரகசியமாகவே அதன் பிரதிநிதித்துவ விவரங்கள் பொத்திப் பாதுகாக்கப்படுகின்றன. கீழமை நீதிமன்றங்களில் 30% வரை SC, ST, BC, MBC மக்களுக்கு பிரதிநிதித்துவம் இருப்பதைக் காண்கிறோம். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களைப் பற்றியத் தரவுகள் யாருக்கும் தெரியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோர முடியாத அளவிற்கு அதைப் பாதுகாத்து வெளித் தெரியாத இரகசியமாகவே வைத்துள்ளனர். அவர்கள் ஏனோ யாருக்கும், எந்த குடிமகனுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை போலும். நீதிபதிகள் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாம். இதுதான் மூன்றாவது தூணான நீதித்துறையில் SC, ST, BC, MBC மக்களின் நிலைமை.

4. நான்காம் தூணின் நிலை என்னவென்று பார்ப்போம்.

நான்காவது தூண் என்பது ஊடகத்துறை. 1990 களில் பி.என்.உனியால் குழுவினராலும், 2000 களில் யோகேந்திர யாதவ் குழுவினராலும் இரண்டு முக்கிய கணக்கெடுப்புகள் ஊடகத்துறையில் நடந்துள்ளன. இதில் தெரிய வந்தது என்னவோ மாபெரும் அதிர்ச்சியே. ஹிந்தி, ஆங்கிலம் என தேசிய ஊடகங்களில் பட்டியலின, பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் பூஜ்ஜியத்திற்கு அருகில் உள்ளது என்பதை இருவரும் ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர். அதாவது யாருமில்லை. பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் சுமார் 3-4% இருக்கும். இது இன்றுவரை பெரிதாக மாறாமல் அப்படியே இருக்கிறது என்பதே உண்மை. மண்டல் கமிஷன் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவத்தின் நிலை என்ன என்பது குறித்து புறநிலை ஆய்வுகள் இருந்தால், அவர்களின் பிரதிநிதித்துவம் உண்மையில் இப்போது வெகுவாக குறைந்துள்ளது என்பதை நன்கு கண்டறியமுடியும். அந்தந்த மாநிலங்களில் உள்ள மொழிவாரி ஊடகங்களில் யார் யாருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் உள்ளது என்பதைப் பற்றி தெளிவான தரவுகள் இல்லை. இதிலும் வட இந்தியாவில் குறிப்பாக ஹிந்தி ஊடகங்களில் உயர்சாதியினர் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது என்பதை கண்கூடாகவே தொலைக்காட்சி விவாதங்களில் நாம் உணர்ந்து உள்ளோம். தென் மாநிலங்களில் நிலைமை ஓரளவு சிறப்பாக இருக்கலாம், ஆயினும் ஆழமான தரவுகள் இல்லாமல் எந்த முடிவுக்கு வர முடியாது. இது ஜனநாயகத்தின் நான்காம் தூணின் நிலைமை.

இதையெல்லாம் இத்தனை ஆண்டு காலம் கண்டு கொள்ளாமல் அல்லது அதிகம் விவாதிக்காமல் தான் இருந்து வந்திருக்கிறோம் என்பதும் மேலும் வேதனை. இதற்கு காரணம் பெரும்பாலும் SC, ST, BC, MBC மக்களிடம் இருக்கும் ஒரு விதமான ஏமாளி குணமாகும். எனவே SC, ST, BC, MBC மக்களின் நிலை மோசமாக இருந்தாலும், வருங்கால அரசியல் அப்படியே நிலையானதாக இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. கடந்த 30-40 ஆண்டுகளாக இது நிலையானதாக இருந்தாலும், அதை அப்படியே இருக்க இனியும் அனுமதிக்க முடியாது. ஏனெனில் அது SC, ST, BC, MBC மக்களை மிக மோசமாக பாதிக்கும், இது அவர்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இருப்பினும் உயர் சாதிகளை குறிப்பாக பார்ப்பனர்களை அறிவிஜீவிகளாக நினைத்து மதிப்பது. தன் சொந்த சாதியிலும், ஏன் தன் சொந்த குடும்பத்திலும் கூட வறியவராக இருக்கும் ஒருவருக்கு உதவாமல், உயர்சாதியில் உள்ள குறிப்பாக ஏழையாக உள்ள பார்ப்பனருக்கு சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் உதவ நினைக்கும் எண்ணவோட்டம் பலர் மனதில் பதிய வைக்கப்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். உயர்சாதிகளில் எல்லாம் குறிப்பாக பார்ப்பனர்களுள் ஏழைகள் என்ற ஒரு குழு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. சமூகப்படிநிலையில் உச்சாணிக் கொம்பில் இருப்பவர்கள், ஏழையாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்பதை இங்கு நிறையப் பேர் ஏனோ உணர்வதில்லை. அவர்களிலும் ஏழைகள் இருக்கிறார்களே என்று வெகுளியாகவே நம்மவர்களும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்

ஆனால், இதை இன்னமும் இப்படியே தொடர்ந்து நீடிக்க விடுதல் கூடாது, மாற்றம் வந்தே தீர வேண்டும். உளவியல் மாற்றமும் சமூகவியல் மாற்றமும் வந்தே தீர வேண்டும். அண்ணல் அவர்கள், தான் அரசியலமைப்பை உருவாக்கும் போது ஒன்றை மிகவும் தீவிரமாகத் தெளிவுறக் கூறியுள்ளார். அவர் அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது, ​​”இந்த அரசியலமைப்பின் முக்கிய நோக்கம் ஆளும் வர்க்கத்தை இது இப்போது இருக்கும் நிலையிலிருந்து வெளியேற்றி, அவர்களை ஆளும் வர்க்கமாகவே நீடிப்பதைத் தடுப்பதுவுமேயாகும்” என்றார்.

அண்ணல் அம்பேத்கர் பல முறை பார்ப்பனர்களை ஆளும் வர்க்கம் என்றே குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பெரும்பான்மையான உயர் பதவிகளை பிடித்து வைத்திருப்பது உயர்சாதிகள் என்று பொத்தம் பொதுவாகக் கூறினாலும், அதில் குறிப்பாக, பிடித்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்களே. இதை இப்போதே மற்றைய உயர் சாதியினர்களான மராத்தாக்களும், காப்புகளும், பட்டேல்களும், ஜாட்களும் ஓரளவு உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை ஆக்கிரமித்துக் கொண்டு வேலை பார்ப்பது, உயர்சாதிகளுக்கு வேலை உத்தரவாதம் மட்டுமில்லாமல் நல்ல மாதாந்திர சம்பளத்தோடு கூடிய வாழ்க்கையையும் 30-40 ஆண்டு காலம் வாழ்வதற்கு வழிவகுக்கிறது. இதில் வசதிகள் மிக அதிகம். அதனால்தான் இவற்றையெல்லாம் நன்றாக பற்றிப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிம்மதியான வாழ்வாங்கு வாழ்கிறார்கள். அதனால்தான் அவர்களால் பல விஷயங்களில் கூடுதல் நாட்டம் செலுத்த முடிகிறது. தம் பிள்ளைகளின் படிப்பு முதற்கொண்டு அனைத்தையும் மிகச் சிறப்பாகவும் அவர்களால் வழங்க முடிகிறது. நாம் ஏதோ கிடைத்த உள்ளூர் வேலையைப் பார்த்துக் கொண்டு சொற்ப சம்பளத்தில் வேலை செய்து, அதுவும் எந்த உத்தரவாதமும் இல்லாத வேலையைப் பார்த்து துன்புகிறோம். நம்மால் அவர்களைப் போல் ஏதும் கூடுதலாகச் செய்ய முடிவதில்லை. நம் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பையும், நல்ல வேலையையும் நம்மால் வழங்க முடிவதில்லை.

மகாராஷ்டிராவில் 80% விவசாய நிலங்களை மராத்தாக்கள் வைத்திருக்கிறார்கள். குஜராத்தில் பட்டேல்களுக்கு 60-70% விவசாய நிலங்கள் சொந்தமானது. பஞ்சாப், ஹரியானா நிலைமையை எடுத்துக்கொண்டால் 70% நிலங்கள் ஜாட்களுக்கு சொந்தமானது. தமிழ்நாட்டில் நிலவுடைமை கவுண்டர்கள், கம்மாக்கள், பிள்ளைகள், பிற ஆதிக்க சாதியினர் கையில் உள்ளது. இவர்களுள் கவுண்டர்களை தவிர ஏனையோரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் முன்பு நீக்கின என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் மராட்டியர்களின் செய்த மேல்முறையீடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களால் நிராகரிக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இதே நிலைமைதான். தெலுங்கானாவில் 70% நிலத்தை ரெட்டிகள், வேலமாக்கள் வைத்துள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தில் காப்புகள், கம்மாக்கள், ரெட்டிகள், ராஜுக்கள் 70-80% நிலத்தை வைத்திருக்கிறார்கள்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மொத்த விவசாய நிலத்தை இரண்டு மூன்று சாதிகள்தான் ஒட்டுமொத்தமாக ஆண்டு அனுபவித்து வருகின்றனர். ஒரு கிராமத்தில் 2500 ஏக்கர் நிலம் இருந்தால், அதில் 1800 ஏக்கர் நிலம் வரை உயர்சாதிகளுக்கு சொந்தமானதாகவும், மீதமுள்ள் வெறும் 700 ஏக்கர் நிலம் மட்டுமே மற்ற எளிய மக்களுக்கு சொந்தமானதாகவும் உள்ளது எனத் தெரிய வருகிறது. அந்த உயர் சாதிக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்து உழுபவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களே. அதாவது 90% பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் குத்தகை விவசாயிகளாக மட்டுமே உள்ளனர். அவர்களில் பெரும்பான்மையோர் 1 ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான நிலம் மட்டுமே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். கூடுதல் நிலத்தை குத்தகைக்கு எடுத்தால், செலவுகளை சமாளிக்க இயலாத சூழலில் உள்ளனர். எனவே இன்றையச் சூழலில் பட்டியலின மக்கள் நிலத்தை உழுபவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். அதற்கான பலன்கள் பெரும்பாலும் உயர் சாதியினர் வீட்டுக்கு போய்விடும். அவர்களுக்கு மிஞ்சுவது ஏனோ வறுமையும், துயரமும், துன்பமும், பசியும், நோயும், மரணமும் தான். இது ஒன்றுதான் இங்கு மாற்றம் இல்லாமல் பன்னெடுங்காலமாய் நடந்து வருகிறது.

கிராமங்களில் உள்ள உயர்சாதியினர் விவசாய நிலங்களை தங்களுடன் தக்க வைத்துருப்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். குறிப்பாக கல்வியறிவு அதிகம் உள்ள ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் உயர்சாதியினர் நிலங்களை தன்வசம் வைத்திருப்பது பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த உயர்சாதியினர் ஏன் நிலங்களை தக்கவைத்துக் கொள்கிறார்கள் என்பதற்குப் பின்னால் மிகப்பெரிய உளவியல் இருக்கிறது.

கேரளாவில் நாயர்கள் நிலத்தை ஏன் தக்கவைத்துக் கொள்கிறார்கள்? தெலுங்கானாவில் ரெட்டிகளும், வேலமாக்களும் ஏன் இன்னும் நிலத்தை வைத்திருக்கிறார்கள்? ஏனென்றால் சாதியின் அடிநாதம் அதில் அடங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட சாதிகளால் சொந்தமாக்கிக் கொள்ள வாய்ப்பில்லாத ஒன்றை உயர்சாதியினர் வைத்திருக்கும் போதுதான் சாதிக்கு மிகப்பெரிய அந்தஸ்து கிடைக்கிறது. அவர்களுக்கு சிலிர்ப்பூட்டும் பண்ணையார்த்தன உணர்வும் ஏற்படுகிறது. நிலம் உள்ளிட்ட உடைமைகளை சொந்தமாக வைத்திருப்பதைப் பொறுத்தது ஒருவருடைய கலாச்சார மற்றும் சமூக அந்தஸ்து கூடுகிறது. அனைவருக்கும் அனைத்தும் சரிசமமாக கிடைத்து விட்டால் அங்கு எப்படி சாதியும், பண்ணையார்த்தனமும் இருக்கும்? எல்லாம் சரிசமமாக ஒன்றாகி விட்டால் யார் மேல்? யார் கீழ்? ஒரு சாராருக்கு எல்லாம் கிடைத்தும், ஒரு சாரருக்கு எதுவும் எப்போதும் கிடைக்காமல் போகும் இருக்கும் நிலைதான் சாதியின் இருப்புக்கும் ஒரு அர்த்தத்தை வழங்கும். இங்கு நிலவுடைமை அதை வழங்குகிறது. இச்சூழலில் தான் சாதியும், பண்ணையார்த்தனமும் இரட்டைப் பாம்புகள் போல வசதியாக வாழும். 20 ஏக்கர் நிலம் தரிசு நிலமாக இருந்தாலும், உயர்சாதி ஒருவருக்கு சொந்தமாக இருந்தால், அந்த நில உடைமை மூலம் அவருக்கும், அவர் சந்ததிகளுக்கும் தொடர்ந்து சமூக அந்தஸ்து கிடைக்கிறது. நிலத்தை தந்தையிடமிருந்து மகன் பெறும்போது அவனுக்கும் சமூக அந்தஸ்து தானாகவே கடத்தப்படுகிறது. இதைத்தான் அவர்களும் விரும்புவார்கள். ஆனால் உங்களிடம் நிலம் இல்லை என்பதால் உங்களுக்கு இது எதுவுமே சாத்தியமில்லை. மாறாக உங்களுடைய வலியும், துன்பமும், வேதனையும், நோயும் தான் உங்கள் சந்ததிக்கு கடத்தப்படும். அதுவே உங்களது விதி. அதுவே வேறொரு உயர்ந்தசாதியின் அந்தஸ்தையும் சிறப்பாக உறுதி செய்கிறது. அதனால்தான், இந்த வகையான நிரந்தர, பாதுகாப்பான கீழ் சாதியினருக்கு ஏற்படுவதை உயர்சாதியினர் என்றும் விரும்புவதில்லை.

இதுபோன்ற ஓர் உளவியல் காரணத்தால் தான், அரசு வேலைகளிலும், பொதுத்துறை நிறுவன வேலைகளிலும் நாம் வருவதை உயர்சாதியினர் விரும்பவில்லை. நமக்கு என்றுமே கிடைக்காத ஒன்றாக அரசு வேலைகளையும், பொதுத்துறை நிறுவன வேலைகளையும் ஆக்குவதன் மூலம் அவர்களின் சமூக அந்தஸ்து தொடர்ந்து நிறுவப்பட்டுக்கொண்டே இருக்கும். மேலும் இது இன்னொரு உளவியல் சிக்கலையும் அடிப்படையில் கொண்டுள்ளது. வயல்களில் உழுவதில் இருந்து, கைவினைப் பணிகள் முதற்கொண்டு அனைத்தையும் செய்வதிலிருந்து, திடீரென்று நவீனத்துவத்திற்கு நாம் நகர்ந்துவிட்டோம் என்று அவர்களுக்கு ஒரு பொறாமை உணர்வு சுல்லென்று ஏற்பட்டு மண்டையில் உணர வைக்கிறது. அவர்கள் மனதில் ஒரு வித நெருக்கடியை இது ஏற்படுத்துகிறது. அதனால் தான் நாம் உயர்பதவிகளுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. தூய்மையற்ற நிலையில் செய்யும் கீழ்நிலை வேலைகளாக இருந்தாலும் சரி, சிறந்த கைவினைஞர்களாக இருந்தாலும் சரி, விஞ்ஞானிகளாக இருந்தாலும் சரி, அது நம் நிலையை உயர்த்துவதற்கு பயன்படாது.

நினைவில் கொள்ளவும், நாம் கோட் சூட் மற்றும் டை அணிந்து செல்ல வேண்டிய வேலைக்குச் சென்றால் அல்லது அரசு அலுவலகத்தில் அமர்ந்தால் மட்டுமே நமக்கு மதிப்பு உயரும். தொழிலாளியாக நிலத்தை உழுது கொண்டு இருந்தால் நம் மதிப்பு இன்னும் குறையும். நம் சந்ததிகளுக்கும் பெரிய துரோகங்களை இழைக்கிறோம். நம்முடைய பொறுப்பின்மை குணத்தால் அவர்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வருகிறார்கள். இந்த 10% EWS இட ஒதுக்கீடு கூட அவர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதற்காக கொண்டு வரப்பட்டதல்ல். இதன் முக்கிய நோக்கமே, 10% இடத்தை கூடுதலாக ஆக்கிரமித்துக் கொண்டு SC, ST, BC, MBC மக்களுக்கான இடத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அவர்களுக்கு அக்கறையாக எழுதப்பட்டது என்பதை விட, SC, ST, BC, MBC மக்கள் உள்ளே வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு தான் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமங்களுக்கே நம்மை திரும்பிச் செல்ல வைத்து, உயர்சாதியினரான அவர்கள நிலத்தை உழும் வேலையை மீண்டும் செய்ய வைக்கலாம் என்பது அவர்களது ஆசை. கோட் சூட் அணியும் மற்றும் டை கட்டும் எந்த வேலைகளுக்கும் வராதீர்கள் என்று அவர்கள் வெளிப்படையாக கூறாமல் கூறுகிறார்கள். நாம் கோட் சூட் அணிவது அவர்களை எந்த அளவுக்கு வாட்டி வதைத்திருக்கிறது என்றுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பல்கலைக்கழகங்களில் என்ன நிலை என்று பார்ப்போம். பல்கலைக்கழகங்களில், குறிப்பாக மத்தியப் பல்கலைக் கழகங்களில் (இது 2 ஆண்டுகளுக்கு, 2017 க்கு முன்பு இருந்த அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையில் (AISHE) இருந்து தெரிய வருவது – அங்கு பயலும் மாணவர்களுள் 23% மாணவர்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள். மீதம் அனைவரும் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள். மேலும் இந்த புள்ளிவிவரங்கள், ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பின் புள்ளிவிவரங்கள் என்பதால் நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
சந்தேகத்தின் பலனைக் கொடுத்துப் பார்த்தாலும் மத்திய பல்கலைக்கழகங்களில் 20% வரைதான் SC, ST, BC, MBC மாணவர்கள் இருப்பார்கள் என்று சொல்லலாம். இதை விட குறைவாக வேண்டுமானால் இருக்கலாமே ஒழிய அதிகமாக இருக்க வாய்ப்பில்லை. மேலும் இது மாணவர்கள் பற்றிய நிலவரம் மட்டுமே. பேராசிரியர்களுக்கான மொத்த இடங்களில் 95% உயர்சாதியினர் உள்ளனர். எனவே, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 20% வரை மட்டுமே மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் நுழைய முடிகிறது என்பது தெரிகிறது. 20% மாணவர்கள் இந்த ஐ.ஐ.டி (IIT), ஐ.ஐ.எம் கள்(IIM) போன்றவற்றில் சிறுபான்மையாக நுழைந்து அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையும் கூட பொறுக்க முடியாமல் தான் உயர் சாதியினர், ஒழுங்காக பின்பற்றப்படாத, கிட்டத்தட்ட தங்கள் சொந்த ஒதுக்கீடான ‘பொதுப் பிரிவில்’ மேலும் 10 விழுக்காட்டை கபளிகரம் செய்ய விரும்புகிறார்கள். பொதுப் பிரிவுக்கு, அதாவது உயர்சாதிக்கு 10 விழுக்காடு போய் விடுவதால், நம்மவர்களின் எண்ணிக்கை இப்போதுள்ள 20 விழுக்காட்டை விட குறைவதற்கான வாய்ப்புகளே உள்ளன. இது மேலும் குறைந்து 15% ஆக சுருங்க வாய்ப்புள்ளது. பேராசிரியர்கள் விகிதாச்சாரத்தை பற்றி கேட்கவே வேண்டாம். நம்மவர்கள் முழுமையாக இல்லாத சூழல் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

பெரும்பாலும் நம் மாணவர்கள் இயல்பாகவே ஏழைகள். எந்தவொரு தனியார் பல்கலைக்கழகத்திற்கும் காசு கொட்டியெல்லாம் படிக்கச் செல்ல இயலாது. குறைந்த கட்டணம் வசூலிக்கும் அரசு நிறுவனங்களைத் தான் நம்மவர்கள் சார்ந்து இருக்க முடியும். அவர்களுக்கு அரசு நிறுவனம் வந்து படிப்பது என்னவோ போனஸ் தான். உயர்சாதி மாணவர்களுக்குள்ளேயே நன்றாக படிப்பு வராதவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பொருட்டு தனியார் பல்கலைக்கழகங்கள் நாடு முழுக்க அக்கறையாய் உருவாக்கப்பட்டுள்ளன. இவைகள், அவர்கள் நாட்டிற்கு வெளியேயும் படிக்கச் சென்று முனைவர் பட்டம் பெறும் வாய்ப்பையும், பன்னாட்டு நிறுவனங்களில் வேலையில் அமரும் வாய்ப்புகளையும் அள்ளி வழங்குகிறது.

உலகிலேயே சிறந்த பாசுமதி அரிசியை நம்மவர்கள் உற்பத்தி செய்யலாம். ஆனால் அது 99% உயர் சாதியினரால் உட்கொள்ளப்படுகிறது. உலகில் மிகச்சிறந்த பொருட்களை நாம் உற்பத்தி செய்யலாம். ஆனால் உயர் சாதியினர் தான் அவைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நான் என்ன செய்தாலும் அதற்கான பிரதிபலன்களை அனுபவிப்பது என்னவோ அவர்கள் தாம் இன்று வரை.

இந்த 10 விழுக்காடு உயர் சாதி இடஒதுக்கீடு என்பது ஒரு முக்கியமான உரிமைப் பறிப்பு நிகழ்வாகும். அவர்கள் மண்டல் கமிஷனையே நகைச்சுவையாக மாற்றியதை விட அதிகமான நகைச்சுவை இது. இப்போது ஒட்டுமொத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்கூத்தாக மாற்றிவிட்டார்கள். எனவே நம்முடைய அரசியலை, வெறும் சட்டங்களாலும் தொழில் நுட்பங்களாலும் மட்டுமே அமைக்க இனியும் முயற்சிக்க கூடாது. அண்ணல் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்படுத்திக் கொடுத்திய “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற வார்த்தைகளை மீண்டும் படித்து அடிப்படைகளுக்குத் திரும்புவோம். இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் அவர், “இந்திய மக்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மையான, சோசியலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்கும் அதன் அனைத்து குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் உறுதியுடன் தீர்மானித்துள்ளோம்” என்று கூறியதில் ‘நீதி, சமூக, அரசியல்’ என்பதை சேர்ப்பது இப்போதைக்கு சாத்தியமற்றது என்பது தெளிவாகிறது.

சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்றால் உண்மையில் என்ன என்று கேட்க, அம்பேத்கரை மீண்டும் படித்து நம் முயற்சிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பழங்குடியின மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் இப்போதைக்கு உள்ளது. நமக்கு ஒரு பொது எதிரி இருக்கிறான். அவன் நாட்டின் சிறந்த பதவிகளை, வாய்ப்புகளை மற்றும் வளங்களை 70-80% ஆக்கிரமித்துள்ளான். பொருளாதார உற்பத்தி செய்யும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான். மேலும் அதிக செல்வத்தையும் நுகர்ந்து கொண்டிருக்கிறான். பார்ப்பனர் தலைமையிலான உயர்சாதியினர் நமக்கு பொது எதிரியாக உள்ளனர். எனவே, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் இதை ஒரு சாதாரண வகையான அரசியல் பிரச்சினை என்றோ நீதிப் பிரச்சினை என்றோ அல்லது சாதாரணச் சட்டச் சிக்கல் என்றோ உதாசீனப்படுத்தி விடாதீர்கள். விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஒன்றிணைந்து போராட வேண்டியது மிக மிக அவசியம்.

குஃபிர்

நன்றி Round Table India இணையதளம் (2019, ஏப்ரல் 25 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: டாக்டர் ஈஷ்வர்