முதலாளித்துவமும் பார்ப்பனியமும் கைகோர்த்துள்ள இன்றைய சூழ்நிலையில் மார்க்சியத்தின் தேவை அதிகமாக உள்ளது. மார்க்சியம் சித்தாந்த ரீதியாகப் பொது மக்களைச் சென்றடைய நீங்கள் முன்வைக்கும் செயல்திட்டங்கள் என்ன? உங்களது முன்னெடுப்புகள் என்ன?
டாக்டர் அம்பேத்கர் பேசுகிறபோது சொல்வார், "நமக்கு இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள்; ஒன்று பார்ப்பனியம், இன்னொன்று முதலாளித்துவம்" என்று. சாமானியர்களுக்கு எதிரானது பார்ப்பனியம் மட்டுமன்று, முதலாளித்துவமும் சாமானியர்களுக்கு எதிரானது.
தனக்குக் கீழே ஒரு சமூகத்தை வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது. அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே இப்படிச் சொல்வார், "பவுத்தம் கைவிடுகிறபோது கடைசிப் புகலிடமாக மார்க்சியம் இருக்கும்". மார்க்சிய சித்தாந்தம் உலகச் சித்தாந்தம். சாமானிய பாட்டாளிகளுக்கான சித்தாந்தம். பாட்டாளி மக்களின் விடுதலைக்கான சித்தாந்தம்.
இதை உயர்த்திப் பிடிப்பதற்கான வேலைகளை மார்க்சிஸ்டுகள் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். பெரும் முதலாளிகளின் நிலத்தை எடுத்துச் சாமானியர்களுக்குக் கொடுப்பது என்பதிலிருந்து சாதி எதிர்ப்பைக் கையில் எடுப்பது உள்ளிட்ட அனைத்தையும் செய்து வந்திருக்கிறார்கள்.
தீண்டாமைக்கு எதிராக மிகப்பெரிய சமர் செய்திருக்கிறார்கள். சமரசமில்லாமல் மக்களுக்கான போராட்டத் தலைவர்களாக மார்க்சிஸ்டுகள் இருந்திருக்கிறார்கள்.
அது விலைவாசியாக இருந்தாலும், கல்வி உரிமையாக இருந்தாலும், சுயாட்சியாக இருந்தாலும் அதைக் கையில் எடுத்தவர்களாக மார்க்சிஸ்டுகள் இருந்தார்கள், இருக்கிறார்கள். இன்றும்கூட டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் சக்தியாக மார்க்சிஸ்டுகள் இருக்கிறார்கள்.
சித்தாந்தம் தெளிவாக இருக்கிறது. அதன் அடிப்படையில் அதிகார வர்க்கத்திற்கு எதிராக, உழைக்கும் வர்க்கத்தை ஒருங்கிணைக்கும் வேலையையும் மார்க்சிஸ்டுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் அதில் முன்னேறிப் போக வேண்டிய அவசியம் இருக்கிறது.
மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த எந்தெந்தப் பிரச்சினைகளை முன்வைத்து வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் உங்களது பிரச்சாரம் இருக்கும்?
இந்திய ஒன்றியத்தில் ஏராளமான இனக்குழுக்கள் வாழ்ந்து வருகிறோம். ஏராளமான அடையாளங்களோடு வாழ்கிறோம். ஒவ்வொருவருக்குமானத் தனிச்சிறப்பான அடையாளங்கள் இருக்கின்றன.
ஆனால் இன்று ஆர்எஸ்எஸ்- பிஜேபி-சங்பரிவார் கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த அடையாளங்களை அழித்தொழிக்கும் வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இனக்குழுக்களின் மொழி, பண்பாடு, கல்வி, சுயாட்சி உள்ளிட்ட எல்லா உரிமைகளையும் பறிக்கிற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகமும் இதே காலகட்டத்தில் எல்லா உரிமைகளையும் இழந்து நிற்கிறது. கல்வி உரிமை, இடஒதுக்கீடு ஆகியவை பறிக்கப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டில் அரியவகை ஏழைகளுக்கான 10 விழுக்காடு மூலம் பார்ப்பனர்களுக்கான இடத்தைத் தக்க வைக்கப் பார்க்கிறார்கள். சிறுபான்மை மக்கள் சொந்த நிலத்தில் அகதிகளாக நடத்தப்படுகிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்கள் இரண்டு வேளை சாப்பாட்டுக்காகக் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் ஒரு நாடு, ஒரு பண்பாடு, ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் என்று பார்ப்பனக் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் திணிக்க நினைக்கும் இவர்களுக்கு எதிராக, புறக்கணிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்யவேண்டும். இவற்றை மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும்.
இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவீனமடைந்து இருப்பதற்கான காரணங்களாக நீங்கள் கருதுபவை என்ன? அதன் வலிமையை மீட்டெடுப்பதற்கான உங்கள் செயல்திட்டங்கள் என்ன?
இந்திய அளவில் கம்யூனிஸ்டுகள் பலவீனம் அடைந்து இருக்கிறார்கள் என்று சொல்லமாட்டேன்; ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்கள்.
இன்றைக்கு மதவாதமும் சாதியமும் பெருமுதலாளித்துவமும் கைகோர்த்து நிற்கும் சூழல் இருக்கிறது. இதை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தச் சூழலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் என்ன செய்தோம் என்பதை கம்யூனிஸ்டுகள் மக்களுக்குச் சொல்லவில்லை. தந்தை பெரியார் போல சமகால வரலாற்றைப் பதிவு செய்யாதது ஒரு தொய்வு.
கார்ப்பரேட்டுகளை எதிர்க்கக் களத்தில் நின்று அடிக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.
எதிரி ஒரு ஆயுதத்தைக் கையில் எடுக்கிறான் என்றால் அந்த ஆயுதத்தை வீழ்த்துகிற இன்னொரு ஆயுதத்தைக் கம்யூனிஸ்டுகள் கையிலெடுக்க வேண்டும். இதைக் கம்யூனிஸ்டுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் பொறுப்புக்கு வந்தால் மக்களுக்காகப் போராடுபவர்களாக இருப்பவர்கள். இதற்கு பாலபாரதி, சு. வெங்கடேசன் போன்றவர்கள் உதாரணம். இதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
வெறும் அரசியல் செயல்திட்டம் மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கான செயல் திட்டத்தையும் கையில் எடுக்க வேண்டும். இன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று ஆயிரம் விஷயங்கள் இருக்கலாம். ஆனால் அன்று மக்களை முகம் பார்த்துப் பேசிய இடங்களை நாம் உருவாக்கி வைத்திருந்தோம். அன்று இயங்கிய படிப்பகங்கள், இரவுப் பள்ளிக்கூடங்கள், வீதிதோறும் நூலகங்கள் இன்று இல்லாமல் போய்விட்டன.
மக்களை அரசியல்படுத்த இவையெல்லாம் அவசியமானவை. இதையெல்லாம் கையிலெடுத்து அறிவைக் கூர்தீட்ட வேண்டும்.
பெண்கள் பொது வாழ்விற்கு வருவதற்குத் தடையாக இன்னும் இருப்பவை என்று நீங்கள் கருதுபவை என்னென்ன? பெரியாரின் பங்களிப்பு தமிழகத்தின் சூழலை மாற்றி உள்ளதா?
பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவதற்குத் தடையாக இருப்பது இங்கிருக்கும் பண்பாடும், கலாச்சாரக் கூறுகளும், சாதியும், மதமும். சாதியும், மதமும் பண்பாட்டின் மையப்புள்ளியாக இருக்கின்றன. இந்த மையப்புள்ளி அதிகாரமாக இருக்கிறது. இந்த அதிகாரம் பெண்களை இரண்டாம்பட்சமாக வைத்திருக்கிறது. இப்படி வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் வெறும் பாலியல் பண்டங்களாக, வீட்டில் குழந்தைகளை வளர்க்கும் ஒரு ஆயாவாக, வீட்டிற்குள் அடிமையாக இருக்கும்படியாக மீண்டும் மீண்டும் போதிக்கப்படுகிறார்கள்.
இயற்கையாகவே பெண்கள் விபச்சார தோஷமுள்ளவர்கள் என்கிறது மனுஸ்மிருதி. இந்த விஷயங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக மூளைக்குள் திணிக்கப்பட்டு ஒரு பொதுச் சமூகம் உருவாகியிருக்கிறது.
சாதி மதம் என்ற நிறுவனங்களை உயர்த்திப் பிடிக்கிற நிறுவனமாகவும், அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் நிறுவனமாகவும் குடும்ப அமைப்புகள் இருக்கின்றன. குடும்பம் பெண்களை என்றைக்குமே இரண்டாம்பட்சமாகத் தான் பார்க்கிறது. முடிவெடுக்கும் இடத்தில் ஆண்தான் இருக்கிறான்.
கல்வி நிலையங்கள்தான் மாற்றத்திற்கானக் கருவிகளாக இருக்கவேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக, பண்பாட்டுக் கூறுகளைத் தாங்கிச் சுமக்கிற ஒரு மீடியமாகத்தான் கல்வி நிலையங்கள் இருக்கின்றன.
இந்த எல்லாவற்றையும் உடைத்து அடிப்படையானவற்றைக் காலி செய்கிற பொறுப்பு முற்போக்காளர்களுக்கு இருக்கிறது. அந்த வேலையைத்தான் தந்தை பெரியார் கையிலெடுத்துச் செய்தார்.
பிற்போக்குச் சனாதன சமூகம் பெண்களுக்கான வரையறையை உருவாக்கி வைத்தபோது பெரியார்தான் அவற்றை உடைத்தார். பெண்களின் கையில் இருக்கும் கரண்டியைத் தூக்கி எறிந்து விட்டுப் புத்தகத்தை கொடுங்கள் என்றார் பெரியார்.
பெண் விடுதலைக்குத் தீர்வாக பெரியார் முன் வைக்கும் ஒரே விஷயம் கல்வி. பெண்களுக்குக் கொடுக்கப்படும் கல்வி ஒரு சமூக மாற்றத்திற்கான கல்வி என்பதில் தெளிவாக இருந்தார். ஆண்களை நம்பிப் பெண் விடுதலை இல்லை என்றும் கற்றுக் கொடுத்தார்.
எனக்குத் தெரிந்து, உலகத் தலைவர்களில், ஆண்மை ஒழியாமல் பெண்களுக்கு விடுதலை சாத்தியமில்லை என்று சொன்னவர் தந்தை பெரியார் மட்டும்தான். அவரது தொடர்ச்சியாக, அந்த நூல் அறுந்து போகாமல், அவருக்குப்பின் வந்த திராவிட இயக்கங்களின் அரசியல் வாயிலாக அவருடைய தீர்மானங்கள் சட்டமாக்கப்பட்டன.
இன்றைக்கு இந்தியாவிலேயே பெண்கள் விடுதலை சார்ந்து மிகவும் காத்திரமான அரசியல் பேசுகிற ஒரு சூழலுக்குத் தமிழகத்தைக் கொண்டுவந்து நிறுத்தியிருப்பது தந்தை பெரியார் போன்றவர்களின் முயற்சியே.
அதைத்தான் சிங்காரவேலரும் செய்தார். டாக்டர் அம்பேத்கரும் செய்தார். தந்தை பெரியார் என்ற பெயர் பெண்களின் விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு பெயர்.
- முனைவர் சுந்தரவள்ளி, துணைச் செயலாளர், தமுஎகச
நேர்காணல் : வெற்றிச் செல்வன்