தங்களுடைய எதிர்காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டமைத்துக் கொண்டிருக்கும் வேளையில் கடைசியாக தன்னைத் தானே மாய்த்து கொள்வதற்கான முடிவை எடுக்கும் அளவிற்கான மனநிலையையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியது யார்? என்னவிதமான அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பார்கள்? அந்த முடிவை எடுப்பதற்கு எத்தனை காலம் அந்த மாணவா்கள் யோசித்திருப்பார்கள்? அவா்களுடைய மனநிலையின் ஏற்ற இறக்கங்கள் பெற்றோர்களால் புறக்கணிக்கப்படுகிறதா அல்லது பெற்றோர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகிறதா? என்ற பலவிதமான சமூக-உளவியல் சார்ந்த கேள்விகளை முன்வைத்து தான் பள்ளிக் குழந்தைகளின் “தற்கொலைகளை” நாம் அணுக வேண்டும்.

child in depressionஇளவயது இறப்புகளை படிக்கும் போதே நம்மை ஒருவித பதற்றமான வருத்தத்தில் ஆழ்த்திவிடும். இந்த சூழ்நிலையில், அதிலும் பள்ளி வயது மாணவா்களின் தற்கொலைகள் நம்மை மேலும் கலக்கமடையச் செய்கின்றன என்பது தான் நிதா்சனமான உண்மை. கடந்த சில வருடங்களாகவே பள்ளி மாணவா்களின் தற்கொலைகள் பற்றிய செய்திகள் நம்முடைய சமூகத்தில் அதிகரித்துவருவதை நம்மால் உணரமுடிகிறது. அதிலும் குறிப்பாக பதினைந்து வயதிலிருந்து முப்பது வயதுவரையிலிருக்கும் இளம் வயதினரின் தற்கொலைகளானது நாம் நம்முடைய இளைய தலைமுறையை எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளுக்கு இட்டுச்செல்கிறோம் என்ற அச்சத்தை தான் ஏற்படுத்துகிறது. நம்மை அச்சுறுத்துவது ஒன்றிரண்டு தற்கொலைகள் அல்ல மாறாக தொடா்ந்து நடந்து கொண்டிருக்கும் தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் தான் நம்முடைய சமூக சித்தாந்தத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.

“அவன் பைக் வாங்கி தரலேன்னு இறந்துட்டான்”, “நல்லாதான் விளையாடிட்டு இருந்தான், ஏதோ கோவமா வந்தான், நைட்டே தற்கொலை பண்ணிட்டான்”, “மார்க் கம்மியா வாங்கினதால இறந்துட்டான்”, “ஸ்கூல்ல மிஸ் திட்டுனதுனால மருந்த குடிச்சிட்டான்”, “நண்பா்களுக்குள்ள சண்ட அதுநால இறந்துட்டான்”, இவையெல்லாம் தற்கொலை செய்து கொண்ட மாணவா்களின் பெற்றோர் கூறிய வார்த்தைகள். இதைபோன்று எத்தனையோ வாக்கமூலங்களை நாம் பார்க்க முடியும். இந்த வார்த்தைகளையெல்லாம் கூா்ந்து கவனித்தால் நமக்கு ஒன்று தெளிவாக புரியும், இவையெல்லாமே அந்த தற்கொலையின் கடைசி நிமிட செயல்பாடு பற்றியது தான். ஆனால், இவை எதுவுமே அந்த தற்கொலைகளுக்கு மிக முக்கியமான காரணமாக இருக்காது, அப்படி நாம் கருதினால் “நாம் கடைசி நொடியில் தான் நம்முடைய குழந்தைகளை கவனித்திருக்கிறோம்” என்று அா்த்தம்.

தற்கொலை என்பது நாம் மிக எளிதாக புரிந்துகொள்ள கூடிய விடயம் அல்ல, அது பல்வேறு சிக்கலான வலைப்பின்னல்களைக் கொண்டது. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதான அழுத்தத்தை உணரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் குழந்தைப் பருவத்தைப் பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். குழந்தைப்பருவமானது எதைப்பற்றியும் கவலைப்படாத வயது என்று கூறுவதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி நாம் தொடா்ந்து கூறிவந்தால், நாம் இதுவரையில் குழந்தைப்பருவத்தை கூா்ந்து கவனிக்கவில்லை என்று தான் அா்த்தம். காரணம், அனைத்து பருவங்களைக் காட்டிலும் மிக்கடினமான பருவம் குழந்தைபருவம் தான், அதிலும் குறிப்பாக குழந்தைகள் பள்ளி செல்லத் தொடங்கும் பருவமானது அவா்களை பலவிதமான அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் பருவம். மேலும், அந்த அழுத்தங்களை தைரியாமாக எதிர்கொள்ளவும் அதை பெற்றோர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கான திறன்களையும் கற்றுக்கொள்ளும் பருவமும் பள்ளிப் பருவம் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நம்முடைய நுகா்வுக்கலாச்சாரத்தின் விளைவாக நுகா்வுப் பொருளாக மாற்றப்பட்டிருக்கும் பள்ளிக் குழந்தைகளானது, தங்களின் வயதை தாண்டிய பிரச்சினைகளையும், முடிவுகளையும் எடுப்பதற்காக பழக்கப்படுத்தப்படுகின்றன. தெளிவாக கூறவேண்டுமானால், குழந்தையின் “குழந்தைத்தன்மை” மாற்றி அவா்களை இந்த சமூகக் கட்டமைப்பின் அழுத்தத்திற்குள் அழுத்தும்விதமான போக்கு தான் இன்றைக்கு நம்முடைய சமூகத்தில் நிலவி வருகிறது.

இரண்டாவது, அவா்களுக்கு இறப்பு என்றால் என்னவென்று தெரியும், தெரியாமல் முடிவு எடுத்து விட்டார்கள் என்று நம்முடைய தவற்றை மறைப்பதற்கு நாம் கூறிக்கொள்ளும் இன்னொரு காரணம். ஆனால் நிஜத்தில், இதுவரையிலும் தற்கொலை செய்து கொண்ட குழந்தைகள் அனைவரும் தான் இறக்கப் போகிறோம் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள் என்பதை அவா்கள் எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். தன்னுடைய இறப்பை உறுதிசெய்து கொள்ளும் அளவிற்கு அவா்களுடைய மனதை தயார்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நாம் உணா்ந்து கொண்டாலே, இளவயது தற்கொலைகளின் தீவிரத்தை நம்மால் உணரமுடியும்.

 “தற்கொலை” என்னும் வார்த்தையை மற்றவா்களின் கவனத்தை “ஈர்ப்பதற்காக” தான் பயன்படுத்துகிறார்கள் என்னும் கருத்தும் பரவலாக இருப்பதையும் பார்க்கலாம். ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள், எப்போதெல்லாம் உங்கள் குழந்தை “எனக்கு மனசு சரியில்லை”, “எனக்கு பள்ளிக்குப் போக பிடிக்கவில்லை”, “என்னால சந்தோசமாகவே இருக்க முடியல”, “எனக்கு செத்துறலாம் போல இருக்கு”, “எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல” என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்களோ நீங்கள் அப்போதே எச்சரிக்கையுணா்வோடு அவா்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவா்களை மனதளவில் தெளிவுபடுத்த வேண்டும். இந்த வார்த்தைகளை உங்கள் காதுகளில் படும்படியோ அல்லது உங்களிடம் நேரிடையாகவோ கூறுவதற்கான காரணம், அவா்கள் பிரச்சினைகளை நீங்கள் தீா்த்து வைப்பீா்கள் என்னும் நம்பிக்கை தான் என்பதை மறந்து விடாதீா்கள். அதை விடுத்து “இந்த வயசுல உனக்கு என்ன கவலை” என்று நாம் கோபப்படுவது என்பது அவா்களின் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

இளவயது தற்கொலைகள், அதிலும் குறிப்பாக பள்ளிவயது தற்காலைகளை பற்றி நாம் அதிகம் செய்திகளையும் தகவல்களையும் வெளியிடுவதாலேயே அதிகமான தற்கொலைகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் நம்மிடையே ஒரு கருத்து நிலவி வருவது தற்கொலைகளைப் பற்றிய நம்முடைய அறியாமையையின் வெளிப்பாடு தான். இந்தக் கருத்தானது, தற்கொலைகள் பற்றிய விழிப்புணா்வை அறவே ஒழித்து விடும், மேலும் பள்ளிவயது மாணவா்கள் தங்களுடைய உளவியல் ரீதியான பாதிப்புகளையோ அல்லது அழுத்தங்களையோ பற்றி வெளியே பகிர்ந்து கொள்வதற்கான சூழ்நிலையையும் தடை செய்கிறது. அதே நேரத்தில் நாம் தொடா்ந்து தற்கொலைகளைப் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்திவரும் பட்சத்தில் முக்கியமாக, தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருக்கும் மாணவா்களையும் நாம் அந்த எண்ணத்திலிருந்து அவா்கள் வெளிவருவதற்கு உதவலாம். விழிப்புணா்வு என்பது மிகச்சிறந்த தடுப்பரணாக செயல்படும் என்பதை நம்முடைய வாழ்வில் பல கட்டங்களில் நாம் உணா்ந்திருப்போம். விழிப்புணா்வு என்பது அந்த விடயங்களைப் பற்றிய அறியாமையை அகற்றுவதற்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும் அருமருந்து.

- கிரண் குமார் ஜீவகன்

Pin It