ஒரு குழந்தை என்பது பெண் என்றால் 18 வயது முடிவடையாத ஒரு பெண்ணைக் குறிக்கும். திருமணம் செய்து கொள்ளும் இரு தரப்பினரில், ஒருவர் குழந்தையாக இருந்தால் அதாவது பெண் என்றால், 18 வயது முடிவடையாதவராக இருந்தால், அது குழந்தைத் திருமணம் என்று பொருள்படும்.

child_marriage 18 வயதிற்கு மேற்பட்டு, 21 வயதிற்குட்பட்ட ஓர் ஆண், குழந்தைத் திருமணம் செய்து கொண்டால், அவருக்குப் பதினைந்து நாட்கள் வரை நீட்டிக்கக்கூடிய வெறுங்காவல் தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதமோ அல்லது இரண்டையுமோ நீதிமன்றம் தண்டனையாக விதித்தாக வேண்டும்.

21 வயதிற்கு மேற்பட்ட ஓர் ஆண் குழந்தைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு 3 மாதம் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டனையும் மற்றும் அபாரதமும் விதித்து தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்பவருக்கும் தண்டனை உண்டு. குழந்தைத் திருமணத்தை நடத்துபவருக்கும், செயல்படுத்துபவருக்கும், இயக்குபவருக்கும் தண்டனை உண்டு. 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டனையும், மற்றும் அபராதமும் விதித்து தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

குழந்தைத் திருமணம் அல்ல என்று தான் நம்புவதற்குக் காரணம் இருந்தது, என்று மெய்பித்தால்தான், இந்த தண்டனையிலிருந்து தப்ப முடியும்.

இளையர் ஒருவர் குழந்தைத் திருமணம் செய்துகொண்டால் அந்த இளையரின் பெற்றோர்களோ, அல்லது சட்டப்படியோ, அல்லது சட்டத்திற்கு முரணாகவோ, அந்த இளையரை பொறுப்பில் வைத்திருக்கும் காப்பாளரோ, அந்தத் திருமணம் நடைபெறுவதற்காக செயலில் ஈடுபட்டிருந்தாலோ, அல்லது அத்தகைய திருமணம் நடப்பதற்கு அனுமதித்திருந்தாலோ அல்லது அசட்டை காரணமாக திருமணம் நடப்பதைத் தடுக்கத் தவறியிருந்தாலோ, அத்தகைய நபர், 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

ஆனால், பெண் எவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடாது. இந்தச் சட்டப்பிரிவின் நோக்கங்களைப் பொறுத்தமட்டில், ஒரு இளையர் குழந்தைத் திருமணம் செய்து கொண்டால், அந்த இளையரைப் பொறுப்பில் வைத்திருக்கும் நபர் அதற்கு மாறான நிலை மெய்பிக்கப்படும் வரை, தம் அசட்டை காரணமாக, திருமணம் நடைபெறுவதைத் தடுக்கத் தவறிவிட்டார் என்றுதான் அனுமானிக்கவேண்டும்.

குழந்தைத் திருமணச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள குற்றங்கள், பிடி ஆணையின்றி கைது செய்வதற்குரிய குற்றங்களாகவே கருதப்பட்டாக வேண்டும்.

விளக்கம்: 1973ஆம் ஆண்டின் குற்ற விசாரணை முறைச் சட்டப்டி, அந்தச் சட்டத்தின் 42வது பிரிவு மற்றும் பிடி சட்டப்படி, அந்தச் சட்டத்தின் 42வது பிரிவு மற்றும் பிடி ஆணையின்றி கைது செய்தல் போன்றவைகளைத் தவிர்த்து, இதர பொருள்களின் நோக்கங்களுக்காகவும் மற்றும் அந்தக் குற்றங்களை புலன் செய்வதற்குரிய குற்றங்களாகவே கருதப்பட்டாக வேண்டும்.

பெருநகர நடுவர் நீதிமன்றம், அல்லது நீதித்துறை முதல் வகுப்பு நடுவர் நீதிமன்றம் ஆகியவைதாம் குழந்தைத் திருமணச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் எதனையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும், விசாரணை செய்யவும் அதிகாரம் பெற்றவை ஆகும். எந்த நிதீமன்றமும், குழந்தைத் திருமணச் சட்டத்தில் குறிப்பிட்ட குற்றம் எதுவும், அந்தக் குற்றம் புரியப்பட்ட நாளிலிருந்து ஓராண்டு முடிந்த பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாகாது.

குழந்தைத் திருமணம் நடக்க இருப்பதைத் தடை செய்ய வழி என்ன?

குழந்தைத் திருமணத் தடைச்சட்டத்தின் பிரிவுகளுக்குப் புறம்பாக, குழந்தைத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அல்லது நடைபெற உள்ளது என்பதை ஒரு நீதிமன்றம் ஒரு முறையீட்டின் பேரிலோ, அல்லது அதன்முன் வைக்கப்பட்ட தகவல் அடிப்படையிலோ, அதற்கு திருப்தியளிக்கும் வகையில் முடிவிற்கு வருமானால், அந்த குழந்தைத் திருமணத்தைத் தடை செய்து ஏவுகட்டளை பிறப்பிக்க வேண்டும்.

குழந்தைத் திருமணத்தைத் தடை செய்து, ஏவுகட்டளை பிறப்பிக்கும் முன், எதிர்தரப்பினருக்கும் அறிவிப்பு கொடுத்து, ஏவுகட்டளை ஏன் பிறப்பிக்கக் கூடாது, என்பதற்குத் தகுந்த காரனம் காட்ட சந்தர்ப்பம் ஒன்று அளிக்கப்பட்டாக வெண்டும். அந்த ஏவுகட்டளை உத்தரவை, நீதிமன்றம் தானாவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரின் முறையீட்டின்பேரிலோ நீக்கி விடலாம் அல்லது மாற்றலாம்.

குழந்தைத் திருமணத்தைத் தடை செய்து ஏவுகட்டளை பிறப்பிக்கப்பட்ட நபர், அந்த நீதிமன்ற உத்தரவிற்குக் கீழ்ப்படியாது செயல்பட்டால், 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் சிறைத் தண்டணை அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது இரண்டாலும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார். ஆனால் பெண் எவருக்கும் தண்டனை விதித்துத் தண்டிக்கப்படலாகாது.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் உள்ள குற்றங்களுக்கான தண்டனையில் குற்றம் செய்தவர் பெண் என்றால், அவருக்கு தனிச் சலுகை உள்ளது. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் பிரிவு (3) மற்றும் (4) ன் கீழ் குழந்தைத் திருமணம் செய்து கொள்ளும் 18 வயதுக்கு மற்றும் 21 வயதுக்கு மற்றும் மேற்பட்ட ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கப்படுகிறது.

குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் பிரிவு (6)ன் கீழ், இளையர் ஒருவருக்கு குழந்தைத் திருமணம் செய்தவர், அவர் பெற்றோராக இருந்தாலும், பாதுகாவலராக இருந்தாலும் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பிரிவில் குற்றம் புரிந்த ஒரு பெண்ணை சிறைத் தண்டனை விதித்துத் தண்டிக்க முடியாது.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் பிரிவு (12)ன் கீழ், நீதிமன்றம் பிறப்பித்த ஏவுகட்டளைக்குப் பணியாமல் செயல்பட்டவருக்கு, 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் சிறைத் தண்டணையும் விதிக்கப்படலாம். ஆனால், அத்தகைய குற்றம் புரிந்தவர் பெண் என்றால், அவருக்குச் சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பளிக்க முடியாது.

(நன்றி: வழக்கறிஞர் முனைவர் சோ.சேசாலம் எழுதிய ‘பெண்ணுரிமைச் சட்டங்கள்’)

Pin It