மோடி இந்தியாவின் பிரதமராக ஆக வேண்டும் என்று கனவு கண்டார். குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்களின் உயிரை பாரத மாதாவிற்குக் காவு கொடுத்தார். அதனால் பாரத மாதா அவருக்குத் தன்நாட்டை ஆளும் வாய்ப்பை வழங்கினாள். இப்போது பாரத மாதாவை மகிழ்வித்து அவரது ஆசியுடன் அடுத்து பிரதமராக வர உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் முடிவு செய்துவிட்டார். எனவே மோடியைப் போன்று பாரதமாதாவிற்குக் கொத்துக் கொத்தாக மனித உயிர்களை பலிகொடுக்க அவர் கடும் முயற்சி எடுத்து வருகின்றார். ஏற்கெனவே பசு பாதுகாப்புப் படை, ஆண்டி ரோமியோ என பல தேசபக்தக் குழுக்களை உருவாக்கி பாரதமாதாவிற்குப் பிடிக்காதவர்களை எல்லாம் பாடை கட்டி வருகின்றார். ஆனாலும் பாரத மாதாவை திருப்திபடுத்த அவை போதுமானவையாக இல்லை. பாரதமாதா மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து அகோரப்பசியுடன் அலைகின்றாள். அவளின் பசியை ஒற்றை இலக்க பலிகளால் திருப்தி படுத்த முடியாது. அவளை திருப்திபடுத்த அங்கொன்றும் இங்கொன்றுமாக பலி கொடுப்பது அவளின் பசியை சோதித்துப் பார்க்கும், அது இன்னும் அவளை வெறியுடன் அலைய வைக்கும். அவளின் பசியை புஷ்யமித்ர சுங்கனின் பசியோடு ஒப்பிடலாம். இல்லை என்றால் கூன்பாண்டியனின் பசியோடு ஒப்பிடலாம். திருப்தி மிக முக்கியமானது. அது இல்லை என்றால் எந்தக் கடவுளும் எந்த வரத்தையும் எப்போதுமே தருவதில்லை. அதுவும் காளியின் வடிவான இந்து பாரதமாதாவை திருப்திபடுத்துவதென்றால் அது சாதாரணமானதல்ல!. எனவே பாரத தேசத்தில் இப்போதைக்கு அந்தத் தகுதியை முழுவதும் பெற்று இருப்பவர் மோடிக்கு அடுத்து யோகி ஆதித்யநாத் மட்டுமே. எனவே அவர் 70 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாரதமாதாவிற்குப் பலி கொடுத்துள்ளார்.

yoginath

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு பொது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் அந்த பலி கொடுக்கும் திருவிழாவை ஆதித்யநாத் நடத்திக் காட்டியுள்ளார். மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை செய்துகொண்டிருந்த நிறுவனத்துக்கு 68 லட்சம் கடன் பாக்கியை மருத்துவமனை நிர்வாகம் வைத்ததால் ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனம் ஆகஸ்ட் 1 ஆம் தேதியே ஆக்ஸிஜன் சிலண்டர்கள் சப்ளையை நிறுத்தியுள்ளது. இது மருத்துவமனை நிர்வாகத்துக்கும் தெரியும், மருத்துவமனைக்குப் பணம் கொடுக்காத மாநில அரசுக்கும் நன்றாகத் தெரியும். 10 ஆம் தேதி இரவு வரிசையாக குழந்தைகள் உயிரிழக்க ஆரம்பித்து ஊடகங்களில் செய்தி வெளியான உடன் தான் மருத்துவமனை நிர்வாகம் 21 லட்சத்தைக் கொடுத்து மீண்டும் ஆக்ஸிஜன் சப்ளையைப் பெற்றிருக்கின்றது.

பாபாராகவ் தாஸ் மருத்துவமனையின் முதல்வர் ராஜிவ் மிஸ்ரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள எவ்வளவு மோசடிகளை அரங்கேற்ற முடியுமோ அவ்வளவு மோசடி வேலைகளையும் ஆதித்யநாத் செய்து வருகின்றார். ராஜிவ் மிஸ்ரா 4 ஆம் தேதிதான் பணம் கேட்டு கோரிக்கை வைத்ததாகவும், அரசு 5 ஆம் தேதியே பணத்தை மருத்துவமனை வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டதாகவும், அவர் அந்தப் பணத்தை 11 ஆம் தேதிதான் ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்திற்குக் கொடுத்ததாகவும், அதன் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் மிஸ்ரா பணம் கேட்டு அனுப்பியதாக சொல்லப்பட்டும் 4 ஆம் தேதிக்கு முன்பாகவே இரண்டுமுறை பண பாக்கியைப் பற்றி மாநில அரசிடம் தெரிவித்து கடிதம் எழுதியதும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தெரியப்படுத்தியதும் தற்போது தெரியவந்துள்ளது.

இத்தனைக்கும் 9 ஆம் தேதி ஆதித்யநாத் அந்த மருத்துவமனையைப் பார்வையிடச் சென்றுள்ளார். இதன் காரணமாகத்தான் இப்போது ராஜிவ் மிஸ்ரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையை தான் ஆய்வு செய்த லட்சணம் பார்த்து ஊரே காறித்துப்புவதை உணர்ந்துகொண்ட ஆதித்யநாத், அதில் இருந்து தப்பித்துக் கொள்ளவே ராஜிவ் மிஸ்ராவை பலிகடா ஆக்கியுள்ளார். கோரக்பூர் ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியாகும் இந்தத் தொகுதியில் இருந்து ஐந்துமுறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்படி இருந்தும் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் மிகக் குறைவாகவே இருந்துள்ளதை ஊடகங்கள் தற்போது அம்பலப்படுத்தியுள்ளன.

என்செபாலிடிஸ் என்ற மூளை அழற்சி நோயால் அதிகமான மக்கள் பாதிக்கப்படும் மாநிலங்களில் உத்திரப் பிரதேசமும் ஒன்று ஆகும். இது பெரும்பாலும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா போன்றவற்றால் ஏற்படுகின்றது. சுகாதார சீர்கேட்டால் தான் இது முதன்மையாக பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உத்திரப் பிரதேசத்தில் உள்ள சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்த நோயின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது. இந்தச் சூழ்நிலையில்தான் இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் ஆதித்யநாத் அரசாங்கம் இந்த உண்மையை மறைத்து குழந்தைகள் இறப்புக்கு மூளை அழற்சிதான் காரணம் என்று கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் கூறுகின்றது. குழந்தைகள் மூளை அழற்சி நோயின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்களுக்குத் தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும். ஆனால் ஆக்ஸிஜன் வாங்க கடந்த பல மாதங்களாக மாநில அரசு நிதி ஒதுக்கவில்லை. ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனம் பல முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பிய பிறகும் மாநிலத்தை ஆளும் பரதேசி அரசு அதை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது நாடே காறித்துப்பிய பின்னர் என்செபாலிடிஸ் நோய்க்கு எதிராக ஆரம்பம் முதல் தீவிரமாக குரல் கொடுத்து வருவதாக ஆதித்யநாத் தெரிவிக்கின்றார். கடந்த நாற்பது ஆண்டுகளில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 40000 குழந்தைகள் என்செபாலிடிஸ் நோய்க்கு இறந்துள்ளார்கள் என்று பார்க்கும் போது யோகியின் யோக்கியதை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் தலித்துகளுக்கு எதிராகவும் வன்முறையையும், கலவரத்தையும் தூண்டுவதையும் மட்டுமே முழுநேரத் தொழிலாக செய்துகொண்டிருக்கும் யோகிக்கு மனிதர்களைப் பற்றி யோசிக்க நேரம் இருந்திருக்காது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தன்னுடைய சொந்த பணத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி மருத்துவமனை நிர்வாகத்துக்குக் கொடுத்து, நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் கபீல் கானையும் பணி நீக்கம் செய்து, தன்னுடைய இஸ்லாமிய வெறுப்பைக் காட்டியுள்ளது உத்திரப் பிரதேச அரசு. பாரத மாதாவிற்கு இன்னும் அதிகமான குழந்தைகளைப் பலிகொடுக்க நினைத்த யோகியின் கனவில் கபீல் கான் மண்னை அள்ளிப் போட்டுவிட்டார் என்ற கோபம் கூட அவரது பணி நீக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

பிரதமர் மோடி நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றார் என்றும். இந்த சம்பவத்தால் மோடி மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளார் என்றும் மோடியின் பஜனை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மோடி இதே போல தான் குஜராத் கலவரம் நடந்த போது நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்தார் என்பதையும், கலவரத்தை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இறந்த குழந்தைகளுக்கு எந்த நியாயமும் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் பாரதமாதாவிற்குப் பலி கொடுக்கப்பட்டவர்கள். அதனால் அவர்கள் தேசபக்தர்கள் ஆகியுள்ளார்கள். மோடி பிரதமராக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிரைக் கொடுத்து அவருக்கு உதவியதுபோல ஆதித்யநாத் அடுத்த பிரதமராக வந்து நாட்டுக்கு சேவை செய்ய குழந்தைகள் தங்களது உயிரை காணிக்கையாக கொடுத்திருக்கின்றார்கள்.

உச்சநீதி மன்றமே சொல்லிவிட்டது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வருவதாக. அவர்கள் ராஜிவ் மிஸ்ராவையும், கபீல்கானையும் வேலையைவிட்டு துரத்தியதைத்தான் அப்படி சொல்கின்றார்கள். பாரத மாதாவிற்கு பலிகொடுக்கப்படுவதை அந்தப் பாரத தேசத்தில் இருக்கும் நீதிமன்றங்கள் எப்போதுமே தன்னுடைய உச்சிக்குடுமியை ஆட்டி ஆமோதித்தே வந்திருக்கின்றன. அதனால் பலிகள் இத்தோடு நிற்கப்போவதில்லை, அது தொடரும். எதுவரை என்றால் பாரதமாதா மலடாகி பிள்ளை பெறும் தகுதியை இழக்கும் வரை.

- செ.கார்கி

Pin It