கவன ஈர்ப்பு ஒரு நோயாகி விட்டது.
எப்போதும் எப்படியாகினும் இந்த மனிதர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தினம் தினம் கோமாளிகளாகிக் கொண்டிருப்பதை பார்க்க பார்க்க... இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற நடுக்கம் வருவதை தடுக்க முடியவில்லை. ஒரிஜினலாக யாரும் செய்யாத ஒன்றை செய்து ஊரையே திரும்ப செய்யும் இயல்பு... மிக மோசமான முகமூடியை மாட்டிக் கொண்டு ஊரை திரும்ப செய்ய வேண்டும் என்று ஏதேதோ செய்து கொண்டிருக்கிறது.
ஏதேச்சையாக எதுவும் நடக்கையில் அதை படம் பிடிப்பதற்கும் ஏதாவது நடக்கும் என்று கேமராவை கையில் வைத்துக் கொண்டு அலைவதற்குமான வித்தியாசம் நான் அறிவோம். மிக குரூரமான சமூகத்தை வழி நடத்த துவங்கி இருக்கும் அலைபேசியிடம் இருந்து கவனமாக தம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை உலகம் அழிய தொடங்கி விட்டனவோ என்று கூட தோன்றுகிறது. எங்கு திரும்பினும் அலைபேசியை தூக்கி பிடித்துக் கொண்டு இரைக்கு அலையும் மிருகத்தை போல அலைந்து கொண்டிருப்பதை காண அச்சம் மேலோங்குகிறது. மிருகத்துக்கு கூட அது தேவை. ஆனால் மனிதன் செய்யும் இந்த தலை குனியும் விதி... அலைபேசி சிறைச்சாலையை வார்த்தெடுக்கிறது. எல்லாவற்றையும் பதிய வேண்டும் என்பதே பதியலின் மகத்துவத்தை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது எனலாம்...இல்லையா.
சுய புராணமும்.. தற்புகழ்ச்சியும் இருமுனை கத்திகளாக... ஊரை வலம் வந்து கொண்டிருக்கின்றன. கவுண்டமணி என்றோ சொன்ன தனக்கு தானே போஸ்டர் அடித்துக் கொள்வது நிஜமாகவே நடக்க ஆரம்பித்திருக்கிறது.
நேற்று கூட முன் சென்ற காரில் ஒரு பெண் தயாராக வைத்திருக்கும் அலைபேசியை எங்களை நோக்கி காட்டிக் கொண்டே வருகிறாள். ஏதாவது ஒரு வளைவில் ஏதாவது இன்ட்ரெஸ்டிங்காக (!) நடந்து விடாதா என்ற கழுகு ஏக்கம் அவள் உடல்மொழியில் கண்டேன். அதிர்ந்தேன்.
வழி எங்கும் ஆங்கங்கே பைக்கில் நிற்கும் பசங்க... கோமாளித்தனங்களின் உச்சத்தில் இருக்கிறார்கள். அவர்கள் நடந்து கொள்வது விசித்திரமாக இருக்கிறது. இந்த உலகத்தில்...அவர்கள் மட்டுமே இருப்பதாக ஓர் உடல்மொழி. அதுவும் கூட்டமாக இருப்பினும் தனி தனியாக இருப்பதாக ஓர் அளாவல். எல்லாருமே மேடையில் இருந்தால் யார் தான் நாடகம் பார்ப்பது. கிறுக்குத்தனங்களின் உச்சத்தில்... என்னென்னவோ செய்கிறார்கள். பாவமாக.... பரிதாபமாக இருந்தது. 90 கிட்ஸ்கள் கூட இந்த கிறுக்குத்தனங்களில் இருந்து ஓரளவு தப்பித்துக் கொண்டார்கள். 2K கிட்ஸ்களில் பாதி தான் இந்த மாதிரி அட்டூழியத்தை அழகியல் என்ற போர்வையில் அறிந்தும் அறியாமலும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
சிகை அலங்காரத்தில் இருந்து உடை அலங்காரம் வரை... ஸ்டைல் எனும் பெயரில் அவர்களிடம் இருப்பவை எல்லாம் சகிக்க இயலாதவை. பைக்கில் முன் சக்கரத்தை தூக்கிக் கொண்டு கதறிக் கொண்டே வருவது... அவர்களை பார்த்து பொடியன்கள் சைக்கிளில் அதே வேலையை மெயின் சாலைகளில் செய்வதையும் பார்க்கிறோம். எதாவது ஒரு பின்னணி இசையோடு தலைகீழாய் கிணற்றுக்குள் குதிப்பது... நின்றபடியே படக்கென பொதுமக்கள் முன் ஆடுவது.. குட்டிக்கரணம் போடுவது... வித்தியாசமாக செல்பி எடுக்க... செய்யும் தற்கொலை முயற்சிகள்... சுற்றுலா என்ற பெயரில் காட்டுக்குள் யானை அருகே சென்று மிதி வாங்குவது... இருந்திருந்தபடியே வண்டியை வேகமாய் முறுக்கி எதிலாவது முட்டி விழுவது... என்று இதெல்லாம் தனித்துவத்தை தவறாக புரிந்து கொண்ட அட்றாசிட்டியில் தானே சேருகிறது.
இதில் கொஞ்ச 80 கிட்ஸ்களும் தொப்பையை தள்ளிக் கொண்டு மூஞ்சி கழுத்து முதுகு என்று பவுடரை அப்பிக் கொண்டு அராஜகத்தில் ஈடுபடுவது... புகழ் எனும் அரங்கனிடம் சிக்கிக் கொண்ட அறியாமையே என்று உணர்கிறோம். சங்கூதற வயசுல சங்கீதா என்பது போல ஒரு கவுண்ட்டர் நமக்கு கேட்பதில் கொஞ்சம் சிரித்துக் கொள்ளவும் தான் வேண்டும்.
நிஜமாகவே திறமை உள்ள ஆட்கள் சத்தமில்லாமல் வேடிக்கை பார்க்க... அரைகுறைகளின் சாலை நாடகங்கள்... முடிவிலி துயரங்களைக் கொண்டிருக்கிறது.
தெரிந்தவர்களிடம் கெஞ்சி கூத்தாடி இன்பாக்சி செய்து.. எப்படியோ வாய்ப்புகளை வாங்கி அதை உடனே ஊருக்கே போட்டோ பிடித்துக் காட்டி... புகழுக்கு சாகும் புத்தியில் புதியவை எப்படி முளைக்கும். சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சி மானுட போக்கையே மாற்றி விட்டதாக தான் பார்க்க வேண்டி இருக்கிறது. நகல்கள் எல்லாம் நயன்தாராவாக ஆகி விட்டதை கண்டு பயப்படாமல் இருக்க முடியவில்லை. சமூக சீர்கேடு என்பது... எல்லாமே செய்தியானதில் ஆரம்பிக்கிறது. எது எடுத்தாலும் செய்தி. திரும்பும் பக்கமெல்லாம் புரோமோஷனல் வீடியோ. ஆளாளுக்கு ஹீரோயிசம். நிஜமாகவே ரித்விக் மாதிரி திறமைகளை கண்டு... வியந்து அதற்கான அங்கீகாரம் தருவது சரி. ஆனால்.. வேண்டுமென்றே குழந்தைகளை பேச விட்டு... அழ விட்டு அதை வீடியோ எடுத்து ட்ரெண்டிங் ஆக்க முயற்சிப்பதெல்லாம் ஐயோ பாவம் வகையறா.
சமூக வலைத்தளங்களை தன் திறமைகளை வளர்த்தெடுக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர சமூக ஊடகமே தன் திறமையை வளர்த்தெடுக்கும் என்று நம்புவது.... பத்தாங்கிளாஸில் பார்டரில் பாஸ் ஆகி விட்டு பெயிலானவனை பார்த்து அறிவுரை சொல்வது போல.
டூர் சென்று போட்டோ எடுத்ததில் ஓர் இயல்பு இருந்தது. போட்டோ எடுக்கவே டூர் போவதில் இருக்கும் அபத்தம் தாங்கவில்லை. (ப்ரொபசனிலிஸ்ட்களை விலக்கி விடலாம்.) கற்றுக்கொண்டதை மற்றவருக்கு சொல்வதில் இருக்கும் நியாயம் மற்றவருக்கு சொல்ல வேண்டுமே என்று கற்பதில் இருப்பதில்லை. (ஆசிரியர்களை விலக்கி விடலாம்.)
செயல்பாடுகளை முன்னிறுத்தி செயல்படுவர் பின்னிருக்க கற்றலை நினைவு கொள்ள வேண்டிய காலம் இது.
எந்த ஒரு இயற்கை காட்சிகளையும் வெறும் கண்களால் பார்ப்பதே இல்லை. அது ஒரு வியாதி போல... கேமரா கண் வழியே தான் பார்ப்பது. தான் பார்ப்பதை விட உடனே அதை எடுத்து ஊருக்கே காட்டினால் தான் ஒரு திருப்தி. அது மிக மோசமான திருப்தி. சுயத்தில் சேரும் மாயை. ரத்தமும் சதையுமாக உணர்தலில் இருந்து வெளியேறும் பொழுது போக்கு. காலத்தை இயந்திர கண்களில் பழக்குவது... என்றைக்கிருந்தாலும் ஆபத்து. எல்லாவற்றின் அடிப்படையிலும் இருப்பது தன்னை ஊர் மெச்ச வேண்டும் என்பது தான். தான் மற்றவர்களை விட கொஞ்சம் உசத்தி என்பது தான். புகழின் வழியே இந்த உலகில் தொடர்ந்து தங்கி விட வேண்டும் என்ற ஆழ்மன ஆசை தான். தெளிவின்மையின் முதல் கோணமே செல்பியாக ஆகி விடுகிறது என்பதை மெல்ல புரிய முற்படலாம். அளவுக்கு மிஞ்சினால்... தன்னில் தான் கூட அவஸ்தையே. நான் இருக்கேன் இருக்கேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பதை விட.... இருப்பது போல ஏதாவது உண்மையாகவே செய்து விடல் நன்று. அதற்கு அமைதி தேவை. உற்றுநோக்கல் அவசியம். பதறி பதறி... ஊடகங்களில் சிதறிக் கொண்டிருப்பதை விட... அமைதியாய் சற்று தன் மனதை வேடிக்கை பார்த்தல் தான் இப்போதைய தேவை. கற்க கசடற என்பதை மீண்டும் நினைவூட்ட வேண்டிய கால கட்டம் இது.
ஒருமுறை இயக்குனர் மகேந்திரன் ஒரு நேர்காணலில் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது.
பிரபலம் ஆகாமல் இருப்பது அப்படி ஒன்றும் கொலை குற்றம் அல்ல.
- கவிஜி