modi and amit shahதமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என மாற்ற வேண்டும் என சங்கி பத்திரிகையாளர் மாலன் அவர்கள் சில நாட்களுக்கு முன்னால் முன்மொழிந்திருந்தார்.

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டின் பெயரோடு மட்டும் நாடு என்ற சொல் ஒட்டிக் கொண்டிருப்பது பார்ப்பன போலி தேசியவாதத்தில் முழ்கிக் கிடக்கும் மாலன் போன்ற பிற்போக்குவாதிகளுக்கு பெரும் உறுத்தலாகவே இருக்கின்றது.

பல்வேறு மொழிகளையும், பண்பாடுகளையும், வாழ்வியல் முறைகளையும் அழித்து பார்ப்பன ஒற்றை அடையாளத்தை திணிக்க முற்படும் பாசிஸ்ட்கள் இந்தியா என்பதை பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை ஏற்க மறுத்து இல்லாத போலி தேசியத்தை கட்டமைக்க முயன்று வருகின்றார்கள்.

ஆனால் வழமையான மொழியையும், பண்பாட்டையும், இலக்கிய, இலக்கண வளத்தையும், தத்துவத்தையும் கொண்டு தனக்கென்று ஒரு ஆட்சி பரப்பையும், பொருளாதார வாழ்வையும் வைத்திருக்கும் எந்த ஒரு இனமும் தனக்கு எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாத, தன்னை மேலாதிக்கம் செய்ய முற்படும் ஒரு கூட்டத்தின் அத்துமீறலை ஒரு போதும் விரும்பாது.

அப்படியான எதிர்ப்பே ஒரு மண்ணின் வரலாறாக பதிவாகி இருக்கும் போது அந்த மண்ணின் மீது தனது சித்தாந்தத்தை திணிக்க முற்படும் கூட்டத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

வருண அமைப்பும் அதன் அடி நாதமான சாதி அமைப்பும் சமஸ்கிருத பார்ப்பன பாசிஸ்ட்களால் புராணங்களாக, இதிகாசங்களாக, உபநிடதங்களாக உருவான காலத்தில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று ஓங்கி ஒலித்த மண் இது.

பார்த்தால் தீட்டு தொட்டால் தீட்டு என பார்ப்பனியம் விஷத்தை கக்கிய காலத்தில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என சக மனிதனை கொண்டாடிய மண் இது. சித்தர்களும், வள்ளலாரும், அயோத்திதாச பண்டிதரும், பெரியாரும் சாதி எதிர்ப்பை பேசி பார்ப்பனிய மேலாண்மையை கேள்விக்குள்ளாக்கிய மண் இது.

அப்படிப்பட்ட மண்ணில் இருந்து எழும் தேசிய இன உரிமைக்கான கோரிக்கைகளின் அழுத்தம் அது போன்ற சிந்தனையில் இருந்து வரலாற்றில் ரீதியில் தூர நின்ற தேசிய இனத்தை விட அதிகமாகவே இருக்கும்.

20 நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் நடவடிக்கையையும் எடுத்துக் கொண்டால் அனைத்தின் பின்னாலும் பார்ப்பனிய எதிர்ப்பு இருந்ததை நம்மால் கண்டுகொள்ள முடியும்.

அதன் உச்சமாகத் தான் 1938 இல் சென்னை மாநிலப் பிரதமராக இருந்த ராஜாஜி இந்தியைத் திணித்த போது சென்னைக் கடற்கரையில் 11.9.1938 நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியாரால். ‘‘தமிழ்நாடு தமிழர்க்கே!’’ என முதன் முறையாக உரிமை முழக்கம் எழுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து தன் வாழ்நாள் எல்லாம் தனித் தமிழ்நாடு கோரிக்கையில் பெரியார் உறுதியாக இருந்தார். தமிழர்களை சூத்திரர்களாக மாற்றிய பார்ப்பன இந்து தேசியத்தில் இருந்து விடுதலை பெறுவதை அவர் கடைசி வரை கைவிடவே இல்லை.

என் பிறவி காரணமாக, என் இழிவுக்குக் காரணமாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதும், என் இன மக்களாகிய தமிழர்களுடைய, என்னுடைய, தாய் நாடான தமிழ் நாட்டைப் பார்ப்பன பனியா அடிமைத் தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழவைக்க வழி செய்வதுமான ‘தனித் தமிழ்நாடு’ பெறுவது என் உயிரினும் மேலான கொள்கை!” என்று பிரகடனப்படுத்தினர்.

‘தமிழ்’‘ தமிழ்நாடு என்கின்ற பெயர் கூட இந்த நாட்டிற்கு சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாத படி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்? என்று கேட்டார்.

“தமிழ்நாடும், தமிழரும் தப்பிப் பிழைத்து விடுதலை பெற வேண்டுமானால், இந்தியக் கூட்டாட்சி என்கிற பார்ப்பன ஏகபோக சர்வாதிகார ஆட்சியிலிருந்து விலகி தமிழ்நாட்டைச் சுதந்திரத் தமிழ் நாடாக ஆக்கிக் கொண்டாலன்றி வேறு எக்காரணத்தாலும், எக்கிளர்ச்சியாலும் முடியவே முடியாது!” என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான் தமிழ்நாடு நீங்கலான தேசியப்பட எரிப்பு போராட்டத்தை நடத்தினார்.

அதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டில் பார்ப்பன இந்து தேசியவாதத்திற்கு எதிரான சிறு குரலை கூட பார்ப்பன கூட்டம் மிரட்சியாக பார்க்கின்றது.

இந்தியா ஒன்றியம் தன்னை அனைத்து மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் உச்சபட்ச அமைப்பாக கருதிக் கொண்டாலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வசிக்கும் மக்கள் ஒன்றிய அரசை எப்போதுமே தனக்கான அரசாக உளமார ஏற்றுக் கொண்டது இல்லை. அதனால் தான் பாராளுமன்ற தேர்தலில் கூட மாநில கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

தமிழ்நாட்டு மக்களுக்கு நாடு என்றால் அது தமிழ்நாடு தான். பிரதமர் என்றால் அது தமிழ்நாட்டின் முதலமைச்சர்தான். அப்படித்தான் ஒவ்வொரு தமிழர்களும் எண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கி, இது நீ கருதினை யாயின் என்று கூறிய இளங்கோவடிகள் காலத்தில் இருந்தே தமிழ்நாடு தமிழ்நாடாகவே இருக்கின்றது. அதனால்தான் பார்ப்பன இந்து தேசியவாதிகளுக்கு தமிழ்நாடு என்ற பெயரே இன்றுவரை பெரும் குலைநடுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றது.

தமிழ்நாட்டு வருமானத்தை எல்லாம் ஒட்டுமொத்தமாக சுருட்டிக் கொண்டு தமிழ்நாடு வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போதுகூட பிச்சைக்காரர்களை நடத்துவது போன்றுதான் ஒன்றிய அரசு நடத்தியுள்ளது.

இந்த லட்சணத்தில்தான் தொடை நடுங்கிகள் திமுக ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பதை எதிர்க்கின்றார்கள். ஆனால் ‘india that is bharath shall be a union of states’ (இந்தியா என்பது அரசுகளின் ஒன்றியம்) என்றுதான் அரசமைப்பு சட்டத்திலேயே சொல்லப் பட்டுள்ளது, இதில் ஸ்டேட் என்பது நாடு என்று பொருளில்தான் கையாளப் பட்டுள்ளது. அதாவது இந்தியா என்பது பல நாடுகளின் ஒன்றியம் என்பதுதான் இதன் பொருள்.

United States of America (USA) என்றால் ‘அமெரிக்க ஐக்கிய நாடுகள்’ என்று தான் பொருள், ‘ஸ்டேட்ஸ்” என்ற சொல் ‘நாடு’ என்பதைத்தான் குறிக்கின்றது. அதே போல ஐரோப்பிய ஒன்றியம் European Union (EU) என்பது 27 நாடுகளின் கூட்டமைப்பாகும்.

27 நாடுகளும் சுதந்திரமான இறையாண்மை உள்ள நாடுகளாகும். கடந்த ஆண்டு பிரிட்டன்  ஐரோப்பிய  ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னால் 28 நாடுகள் இருந்தன. மேலும் இந்திய அரசியலமைப்பின் 300 வது பிரிவில் ”இந்திய அரசின் மீது வழக்குத் தொடுப்போர் இந்திய ஒன்றியம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம் என்றும் அரசும் இப் பெயரைக் கொண்டு வழக்கு தொடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மாநில அரசு உரிமைகள் அனைத்தும் ஒன்றிய அரசால் பறிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டின் மீது வலுக்கட்டாயமாக நீட் திணிக்கப்பட்டு பல மாணவர்களின் உயிரை பலி எடுத்திருக்கின்றது. ஜிஎஸ்டி மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வரியையும் கபளீகரம் செய்கின்றது.

மீத்தேன், நியுட்ரினோ, கெயில், எட்டு வழிச்சாலை என பல நாசகார திட்டங்களை செயல்படுத்த துடிக்கின்றது. மாநில அரசுக்கே சொல்லாமல் மாநிலத்தில் இருந்து ஆக்சிஜனை திருடிக் கொண்டு செல்கின்றது.

தான் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு அதிகமான தடுப்பூசிகளையும் தான் ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு குறைவான தடுப்பூசிகளையும் வழங்குகின்றது.

இப்படிப்பட்ட ஒன்றிய அரசை எதற்காக தமிழ்நாட்டு மக்கள் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என சங்கிகள் விரும்புகின்றார்கள் என்றால் தமிழ்நாட்டு மக்களின் பொருளாதாரத்தை அட்டை போல உறிஞ்சவும் அவர்களை இன்னும் கால காலத்திற்கு சூத்திர அடிமைகளாகவே வைத்திருக்கவும் தான்.

இதை நன்றாக புரிந்துகொண்ட தன்மானமும் சுயமரியாதையும் உள்ள நபர்கள் தமிழ்நாட்டின் நலன்களை புறக்கணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள்.

ஆனால் தன்மானம் சுயமரியாதை என்ற சொற்களின் பொருள் அறியா கிருஷ்ணசாமி போன்ற அடிமைகள் “ஐந்தே மாதத்தில் திமுக ஆட்சி கலைந்து விடும்” என சிரிப்பு மூட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஒன்றிய அரசு என்று கூறியதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கலைக்கும் எண்ணம் இந்த பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிமைகளின் மூளையில் ஓடுகின்றது என்றால் பெரியார் அன்று தனித் தமிழ்நாடு வேண்டும் என்பதற்காக சொன்ன காரணங்கள் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன என்று அர்த்தம்.

எப்போதுமே தமிழ்நாடு நாடுதான் என்பதையும் ஒன்றியம் பல தேசிய இனங்கள் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு என்பதையும் இவர்கள் மனதில் நிறுத்தி ஆட்சி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் ப்ரெக்ஸிட் போன்ற நிலை ஏற்படாமல் தடுக்கும்.

இன்று ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் நடந்துவரும் போராட்டங்களை மனதில் வைத்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களை தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் நடத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளது.

- செ.கார்கி

Pin It