modi ops and epsதமிழ்நாட்டின் மீதான பார்ப்பன - பனியா பாசிச ஆட்சியை முறியடிப்போம் !
பாசிச எதிர்ப்பு தமிழ்த் தேச சனநாயக இடைக்கால அரசமைப்போம் !

பாசிசம் பற்றிய பொதுக் கோட்பாடுகள்

‘பாசிசம் நிதி மூலதனத்தின் அதிகாரமாகும். அது தொழிலாளி வர்க்கம், புரட்சிகர தன்மை கொண்ட விவசாயிகள், படிப்பாளிகள் பகுதிக்கும் எதிரான பயங்கரமான வன்முறைமிக்க பழி தீர்க்கும் ஸ்தாபனமாகும். வெளிநாட்டுக் கொள்கையில் பாசிசம் மிகவும் கொடூரமான வடிவத்திலான இனவெறி கொண்டதும், இதர நாடுகள் மீது மிகவும் கீழ்த்தரமான வெறுப்பை தூண்டிவிட்டு தூபம் போடுவதுமான சக்தியாகும்”

‘பாசிசத்தின் வளர்ச்சியும், பாசிச சர்வாதிகாரமும் பல்வேறு நாடுகளில் பல்வேறுபட்ட வடிவங்களில் வந்திருக்கின்றன. அந்தந்த நாட்டு வரலாறு, சமுதாயம், பொருளாதாரம் ஆகிய நிலைமைகளுக்குத் தக்கபடி தேசியத் தனித்தன்மைகளுக்கும், குறிப்பிட்ட நாட்டின் சர்வதேச ஸ்தாபனத்தைப் பொறுத்தும் பாசிசம் உருவெடுக்கிறது”.

‘பாசிசம் அதிகாரத்திற்கு வருவது என்பது சாதாரண முறையில் ஒரு பூர்ஷ்வா சர்க்கார் போய் அடுத்த ஒரு பூர்ஷ்வா சர்க்கார் வருவதைப் போல அல்ல. பூர்ஷ்வா வர்க்கத்தின் வர்க்க ஆதிக்கத்தின் ஒரு அரசாங்க வடிவத்திலிருந்து அதாவது பூர்ஷ்வா சனநாயகத்திலிருந்து அடுத்த வடிவம் பகிரங்கமாக பயங்கர வடிவத்திலான சர்வாதிகார முறையாக மாறி இடம் பெறுவதாகும். இந்த வேறுபாட்டை நாம் தெளிவாக காண வேண்டும். இல்லாவிட்டால் நாம் தவறிழைத்து விடுவோம்”.

பாசிசமானது ஜெர்மனியில்’ தனிநபர்களின் நலன்களைக் காட்டிலும் பொது நலன்கள் உயர்ந்தவை - முக்கியமாவை” என்னும் ஏமாற்று கோஷத்தை முன் வைத்தது. இத்தாலியில் ‘ நமது அரசு முதலாளித்துவ அரசல்ல, ஆனால் ஒன்றிணைக்கப்பட்ட கூட்டரசாகும்” என்று கூறினர். ஜப்பானில் ‘ சுரண்டல் அற்ற ஜப்பான்” என்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில்’ செல்வத்தைப் பங்கு போட்டுக் கொள்வது” என்றும் இவ்வாறாக வாய்ப்பந்தல் அளக்கின்றனர்.

‘ஆனால் பாசிசம் எத்தகைய ஒரு முகமூடியை அணிந்திருந்தாலும், எந்த வடிவத்தில் அது தன்னைக் காட்டிக் கொண்டாலும், எந்த வழிகளில் அது அதிகாரத்திற்கு வந்தாலும்- பாசிசம் என்பது முதலாளித்துவம் உழைக்கும் மக்கள் மீது மிகவும் கொடூரமான கோரமாக நடத்தும் தாக்குதலாகும்.

பாசிசம் என்பது கடிவாளம் இல்லாத இனவெறியும், ஆதிக்க வெறியும் பிடித்த யுத்தமாகும்.
பாசிசம் என்பது வெறிபிடித்த பிற்போக்குத்தனமும் எதிர்ப்புரட்சியுமாகும்.
பாசிசம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் சகல உழைக்கும் மக்களின் கொடிய விரோதியாகும்.
பாசிசம் ஒரு கொடிய ஆனால் நிலையற்ற ஆட்சி அதிகாரமாகும்.
பூர்ஷ்வா வர்க்கத்தின் பாசிச சர்வாதிகாரம் ஒரு கொடிய ஆட்சி அதிகாரமாகும். ஆனால் அது நிலையற்றது.”

‘பூர்ஷ்வா முகாமிற்குள்ளேயே உள்ள பகைமைகளையும், மோதல்களையும் தொழிலாளி வர்க்கம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அதே சமயத்தில் பாசிசம் தானகவே சக்தியிழந்து செயலிழந்துவிடும் என்னும் பிரமையை பற்றிக் கொண்டிருக்கக் கூடாது. பாசிசம் தானாகவே வீழ்ச்சியடையாது.தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான நடவடிக்கைதான், பூர்ஷ்வா முகாமிற்குள் இயல்பாகவே தோன்றுகின்ற மோதல்களைப் பயன்படுத்திக் கொண்டு பாசிச சர்வாதிகாரத்தைக் கீழறுத்துத் தள்ளுவதற்கும் தூக்கி எறிவதற்கும் துணை புரிகிறது.”

மேலே கண்ட மேற்கோள்கள்1935 இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது உலக காங்கிரசில் முன் வைக்கப்பட்ட டிமிட்ரோவ் அறிக்கையிலிருந்து பாசிசம் குறித்து பொதுவாக அறிகிறோம். மேலும் அவ்வறிக்கையில் பாசிசத்தை வீழ்த்துவதற்கான ஐக்கிய முன்னணியையும், அதற்கான அமைப்பையும், நிறுவி கொள்கையியல் போராட்டம் நடத்தி பாசிச எதிர்ப்பு ஆற்றல்களைக் கொண்ட அரசமைக்க வழி காட்டுகிறார். அதிலிருந்து படிப்பினைகள் பெறுவோம்.

இந்தியாவில் பாசிசத்தின் தோற்றமும் நோக்கமும்

இராட்ஷ்ரிய சுயம் சேவக் சங்கமும் (ஆர்.எஸ்.எஸ்.) அதன் துணை அமைப்புகளான சங்கபரிவாரங்களும் படிநிலை சாதியை அடிப்படையாகக் கொண்ட வேத கால ஆரிய ஆட்சியை நிலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைப்புகளாகும்.

1925 ஆம் ஆண்டு நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தோற்றுவித்த கேசவ பலிராம் ஹெட்கேவார் மற்றும் அவருடன் தொடக்கத்தில் பொறுப்பிலிருந்த டாக்டர் தால்கர், வி.டி.சாவர்க்கரின் அண்ணன் பாபாராவ் சாவர்க்கர், டாக்டர் பி.எஸ்.மூஞ்சே, டாக்டர் எல்.வி.பரஞ்சிபே ஆகிய ஐவரும் சித்பவன் பார்ப்பனர்களே. பார்ப்பனர்களிலேயே தங்களை மேலானவர்களாகக் கருதிக் கொள்பவர்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்து ராஷ்டிரத்தில் இந்து சமக்கிருத மொழியைக் கொண்டு இந்து தர்மம் படைப்பதாக பீற்றிக் கொள்வதெல்லாம் பாhப்;பனர்களின் மேலாண்மையைக் கொண்ட படிநிலையிலுள்ள சாதிய சமுதாயத்தை படைப்பதே அல்லது பாதுகாப்பதே ஆகும்.

அதன் இந்து ராஷ்ட்ரம் என்பது இன்றைய இந்திய எல்லைகளுடன் வடக்கே திபெத் முதல் தெற்கே இலங்கை வரையிலும், மேற்கே ஆப்கானிஸ்தானத்திலிருந்து கிழக்கே பர்மா வரையிலும் எல்லைகளை விரிவுபடுத்தும் காலனி தன்மை கொண்டதாகும். இது தான் அவர்களது அகண்ட பாரதம் என்பதாகும். அவர்களது அகண்ட பாரதத்தில் முஸ்லீம்களுக்கு, கிறித்தவர்களுக்கு, கம்யூனிஸ்டுகளுக்கு இடம் இல்லை என சங்கபரிவாரக் கும்பல் கூறுகிறது.

ஜெர்மானியர்களே தூய்மையான ஆரியர்கள்; பிற இரத்தக் கலப்பில்லாத உன்னதமான ஆரியர். இவர்களே உலகை ஆளப்பிறந்தவர்கள், பிறரெல்லாம் அடிமைகள்" என இட்லர் எக்காளமிட்டான். இந்தியாவில் உள்ள பார்ப்பனக் கூட்டம் தங்களை ஆரியர் எனக் கூறிக் கொள்வதை ஏளனம் செய்தான்.

ஆர்ய - நார்டிக் மக்களின் ஆதிக்கத்தின் கீழ் ஐரோப்பாவை ஒன்றுபடுத்துவதே நாசிகளின் திட்டமாகும். இனவெறி கொண்ட இட்லர் இலட்சக் கணக்கில் யூதர்களை வேட்டையாடி ஒழித்தது மட்டுமல்ல, இந்த நாடுகளில் வாழ்ந்த 140 இலட்சம் உயர் இனத்தவர்கள், மட்டும் அங்கு தொடர்ந்து வாழ அனுமதிக்கப் படுவார்கள் என்றான். எஞ்சிய 310 இலட்சம் தாழ்ந்த இன மக்கள் இந்நாடுகளிலிருந்து பனிப் பாலைவனமான மேற்கு சைபீரியாவுக்கு நாடு கடத்தி ஒழித்துக் கட்டவும் திட்டம் போட்டிருந்தான்.

இதேபோல் முசோலினியின் பாசிசப் படைகள் அபிசீனியாவில் நச்சுப் புகைக் குண்டுகளைப் போட்டு அப்பாவி மக்களைக் கொன்று குவித்தன. ஐரோப்பியாவில் நாசிகளால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாயிற்று. இப்படி இன வெறியுடன் படுகொலை செய்து சனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்த இட்லரும், முசோலினியும்தான் தங்களது வழிகாட்டிகள் எனக் கூறிக் கொள்வதில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பலுக்கு துளியும் வெட்கமில்லை.

கம்யூனிசத்தையும், சனநாயகத்தையும் அந்நியக் கோட்பாடு எனக் கூறும் சங்கபரிவாரங்கள் அந்நியக் கோட்பாடான இட்லரின் நாசிசத்தையும், முசோலினியின் பாசிசத்தையும் எற்றுக் கொள்வதன் மர்மம் என்ன? இட்லரின் ஆரியத் தூய்மை வாதமே இவர்கள் நாசிசத்தையும், பாசிசத்தையும் ஏற்றுக் கொண்டதற்கான காரணமாகும்.

‘ஒரு மக்கள்-ஒருநாடு-ஒரு தலைவர்” என்பது நாசிகளின் முழக்கம். ‘ஒரு நாடு - ஒரு கலாச்சாரம் - ஒரு மக்கள் - ஒரு தலைவன்” என்பது ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவாரங்களின் முழக்கம். இதன் நீட்சியாகத் தான் பி.ஜே.பி மோடிக் கும்பல் ‘ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை,ஒரு நாடு ஒரே வரி, ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே நாடு, ஒரே தளபதி,ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பனவற்றை செயல்படுத்துகிறது.

இதன் பொருள் இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களை ஒழித்துக்கட்டி இந்திய தேசியத்தையும், பிற மதங்களை ஒழித்துக் கட்டி ஆரிய வேத மதத்தையும், பிற கடவுள்களை ஒழித்துக்கட்டி இராமனை கடவுளாகவும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வரலாற்றாய்வின் படியும், மார்க்சிய ஆய்வின் படியும் இந்தியா தேசம் இல்லை. இதனை தேசமாகக் காட்டுவது போல் புவியியல் அடிப்படையிலான மக்கள் பிரிவை இந்து மதத்தினர் என்கின்றனர். இந்து மதம் என்ற சொல் வேதங்கள், உபநிடதங்கள், கீதை, இதிகாசங்கள், புராணங்கள் போன்ற எதிலும் இல்லை.

பாரசீகர்களும், கிரேக்கர்களும் வடமேற்கு இந்தியப் பகுதிகளை சிந்து நாடு என்றனர். புவியியல் அடிப்படையிலான இப்பெயர் இந்து நாடு எனத் திரிந்தது. ஆங்கிலேயர்கள் தங்களது நிர்வாக வசதிக்காகவும், பிரித்தாளும் அரசியல் தந்திரத்திற்காகவும் முகமதியர் அல்லாதவர்களை இந்துக்கள் என அழைத்தனர்.

1884இல் ஆங்கிலேயர்களால் முதல் மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட்டபோது இந்து என்ற சொல் நடைமுறை ஏற்பையும், 1950 இல்; சட்டத்தில் இச்சொல் அரசியல் ஏற்பையும் பெற்றது.

ஒரு மதம் என்பது ஒரு முழுமுதற் கடவுளையும், குறிப்பிட்ட வழிபாட்டு நெறிகளையும், குறிக்கோள்களையும் கொண்டிருக்க வேண்டும். இந்து மதத்திற்கு இவை ஏதும் இல்லை. சொல்லப்படும் இந்து மதத்திற்குள் வேதத்திற்கு அல்லது பார்ப்பனியத்திற்கு எதிராக உருவான லிங்காயத்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் இடம் பெற்றுள்ளனர். நான்கு வர்ணங்களுக்கு வெளியே இருந்த (ழுரவ உயளவந) பஞ்சமர்கள், பழங்குடிகள் இந்துக்களாக இடம் பெற்றுள்ளனர்.

வேதங்களுக்கு எதிரான ஆகமங்களைக் கொண்ட சைவர்கள், வைணவர்கள் இந்துக்களாக இடம் பெற்றுள்ளனர். உருவ வழிபாட்டை மறுக்கின்ற வேதத்தை மட்டுமே நம்புகிற ஸ்மார்த்தர்கள் இந்து மதத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இவைகளுக்கு முற்றிலும் தொடர்பில்லாத நூற்றுக்கணக்கான சிறு தெய்வ வழிபாட்டைக் கொண்ட அம்மனை, மாடனை, அய்யனை, கருப்பனை, காடனை, முருகனை,.. வழிபடுகின்ற பெரும் மக்கள் திரள் கூட்டத்தையும் இந்துக்கள் என்கின்றனர்.

ஒன்றும் அறியா அப்பாவி மக்களை விட்டு விடுவோம், பல்வேறு முரண்பட்ட ஆன்மீக - மெய்யியல் கண்ணோட்டம் கொண்டவர்கள் எப்படி இந்துக்களாக இருக்க முடிகிறது? இதில் துளியும் ஆன்மீக - மெய்யியல் நோக்கம் இல்லை என்பது வெளிப்படையானது. பிழைப்பதற்கான அரசியல் தந்திரம் மட்டுமே உள்ளது.

‘முஸ்லீம்களையும், கிறித்துவர்களையும் விட எங்களுக்கு எண்ணிக்கை அதிகம், எனவே எங்களுக்குத்தான் அரசாங்க பணிகளிலும், அதிகார மையங்களிலும் அதிக இடம் வேண்டும்” என்பதற்காக இரு பிறப்பாளர்கள் எனக் கூறும் கூட்டம் இதனை செய்துள்ளது. இந்துக்கள் பெயரால் எல்லா அதிகார மையங்களிலும் பார்ப்பனிய மேலாண்மையே நிலவுகிறது. இவ்வாறாக அரசியல் வழியிலும், ஆன்மீக வழியிலும் இப்பார்ப்பனியக் கூட்டம் அப்பாவி மக்களை ஏய்த்துப் பிழைக்கிறது.

இந்து மதம் தொடர்பாக சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதியின் கூற்றொன்றைக் காண்போம்

‘அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்கா விட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருகபக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை... வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல.

சைவர்களில் தீவிரவாதிகளுக்கு விட்ணு சாமியே அல்ல, சிவன் தான் சாமி. விட்ணு சிவனுக்கு பக்தன் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது? வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது”.

இதில் என்ன ஆன்மீக - மெய்யியல் நோக்கம் இருக்கிறது? அவாளின் நோக்கம் மந்திரம் ஓதி ஏய்த்து பிழைப்பதே. இவ்வாறு வரலாறு காலம் தொட்டே பார்ப்பனியம் உடமை வர்க்கத்துடன் இணைந்து ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்து வருகிறது. தற்போதும் அது நீடிக்கிறது.

பார்ப்பனிய - பனியா கார்பரேட் முதலாளிகளுக்காக பி.ஜே.பிமோடிக் கும்பலின் அடக்குமுறை ஆட்சி

ஆர்.எஸ்.எஸ்-சின் நோக்கத்தை நிறைவேற்றும் அரசியல் பிரிவே பி.ஜே.பி. அது 1999இல் இருந்து 2004 வரை வாஜ்பாய் தலைமையிலும், 2014இல் இருந்து 2019 வரையிலும், அடுத்து 2019இல் இருந்து இன்று வரையிலும் மோடி தலைமையிலும் மத்தியில் ஆட்சி செய்து வருகிறது.

2001 லிருந்து 2014 வரை குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது 2,000க்கும் மேலான அப்பாவி இஸ்லாமிய மக்களை படுகொலை செய்ததன் மூலம் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சிறந்த அடியாளாக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991க்கு பிறகு தொழில்துறை, வேளாண்துறை, சேவைத்துறை, அரசுத் துறை அனைத்தும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்காக தாரைவார்க்கப்படுகிறது. அதற்கு எதிரான மக்களின் போராட்டங்களை ஈவு இரக்கமின்றி ஒடுக்க ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும் கார்பரேட் முதலாளிகளுக்கும் கிடைத்த சிறந்த அடியாள் படையே மோடி கும்பல்.

இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் தேசத்தின் நலன், வளர்ச்சி, தற்சார்பு என்ற பெயர்களில் பறிக்கப்படுகிறது. இது உண்மையில் கார்பரேட் முதலாளிகளுக்காகவும், பார்ப்;பனிய மேலாதிக்கத்திற்காகவும் செய்யப்படுவதாகும்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்புரிமை நீக்கம், முத்தலாக் தடை சட்டம், போக்சோ சட்டத் திருத்தம், பசுவதைத் தடைச்சட்டம், தகவல் அறியும் உரிமை 2005- சட்டத்திருத்தம், மோட்டார் வாகன சட்டத்திருத்தம், என்.ஐ.எ. சட்டத் திருத்தம், ஊதியங்கள் சட்டத் திருத்தம், குடியுரிமைச் சட்டத் திருத்தம் போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் 44 தொழிலாளர் சட்டங்கள் 4ஆகத் தொகுக்கப்பட்டு வேலைப்பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தையும் நீர்த்துப் போகச்செய்து எல்லாஅதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களால் விவசாயம் கார்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. புதிய மின்சார சட்டங்களால் இலவச மின்சாரம் நீக்கப்படும்.

புதிய உணவுக் கொள்கை சட்டத்தால் ரேசன் கடைகள் மூடப்படும். புதிய கல்விக் கொள்கையால் கல்வி பார்ப்பனிய கார்பரேட் மயமாகிவிடும். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் கல்வி உரிமை, இட ஒதுக்கீடு, சமூகநீதி பறிக்கப்படுகிறது.

நீட் தேர்வு முறை மருத்துவ படிப்பு மட்டுமின்றி அனைத்து உயர் கல்விக்கும் என்ற நிலையில் ஏழை, எளிய மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகள் பறிபோகின்றன. ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் தேசிய இனங்களின் வரிவருவாய் பறிக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய இனங்களின் வரலாற்றை திரித்து புரட்டும் வேலையில் மோடிக் கும்பல் ஈடுபட்டுள்ளது.

நீதி, நிர்வாகம், பாதுகாப்பு, அரசு என அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களை மோடிக் கும்பல் ஊடுருவச் செய்துள்ளது. இவ்வாறான பார்ப்;பனியமயத்திற்கு எதிராக குற்றாய்வு செய்த தபோல்கர், பன்சாலே, கௌரிலங்கேஷ் போன்றவர்கள் பார்ப்பனிய அடியாட்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேர்மையான அறிவாளிகள் பலர் பி.ஜே.பி.யின் கொலைப் பட்டியலில் உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவாரக் கும்பல் தங்களை நேர்மையானவர்களாகவும், இந்துக்களின் பாதுகாவலர்களாகவும் தற்சார்பு கொண்டவர்களாகவும் காட்டிக் கொள்வதெல்லாம் மக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொள்ளும் ஏமாற்று நாடகமே. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் வங்கி முன் மக்கள் வரிசையில் நின்று துன்பப்பட்ட போதும், வரிசையில் காத்திருந்த 25க்கும் மேற்பட்டோர் இறந்தபோதும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பி.ஜே.பியினர் கட்டுக் கட்டாக ரூ. 2000 நோட்டுகளை வைத்திருந்தனர்.

கருநாடாகவில் பி.ஜே.பி. அமைச்சர் ஒருவரது வீட்டு திருமணமும், வடநாட்டு பி.ஜே.பி. ஆதரவு பெற்ற மார்வாடி வீட்டு திருமணமும் பல ஆயிரம் கோடி புதிய ரூபாயில் நடந்தன. எப்படி? புதியகொல்கத்தா ஜெனரல் அவென்யுவில் உள்ள இந்தியன் வங்கியில் 500, 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கும் சில மணி நேரத்திற்கு முன்னால் உள்@ர் பி.ஜே.பி. கிளையின் சார்பில்; 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒரு கோடிக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இது நமக்கு தெரிந்தது, தெரியாதது எவ்வளவோ? ரூபாய் 30, 000 கோடி வங்கிப் பணத்தை வாரி சுருட்டி வெளி நாட்டுக்கு பத்திரமாக வழியனுப்பப்பட்ட மல்லையா தொடங்கி, நீரவ் மோடி, மெஹீல் சோக்ஸி, நிதின், ஹந்தேசரா, சந்தேசரா, ஜதீன் மேத்தா என நீளும் குசராத்தி பண முதலைகளின் ஆத்மார்த்த நண்பர் மோடி. மோடி ஆட்சிக்கு வரும்போது வங்கியிலிருந்து வாராக் கடன் 2,13,000 கோடி 5 ஆண்டுகளில் 9 லட்சம் கோடிக்கு மேலாகி விட்டது. இந்த ஊழல் பேர்வழி மோடி தான் நேர்மையான நாயகனாக முன் நிறுத்தப்படுகிறார்.

பி.ஜே.பி. இந்துக்களின் பாதுகாவலன் என்பது ஏமாற்றே. மத்திய அரசில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கிய மண்டல் கமிஷனை இக்கும்பல் எதிர்த்ததை நாடறியும். தற்போது நீட் தேர்வு மூலம் இட ஒதுக்கீடு நீக்கப்பட்டுள்ளது. பார்ப்பன மேலாதிக்கத்திற்கும் பனியா முதலாளிகளை கட்டுப்படுத்தவும் இக்கும்பல் காந்தியை படுகொலை செய்தது.

உலகமயம், தாராளமயம், தனியார்மயத்தை தீவிரமாக நடைமுறைப் படுத்திக் கொண்டே இந்தியாவின் சுய சார்பு பற்றியும், இந்தியப் பொருட்களையே வாங்க வேண்டும் என மோடிக் கும்பல் பேசுவது நாடகமே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் சுதந்திரத்திற்காக சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. இவ்வாறு பி.ஜே.பி மோடிக் கும்பலின் மோசடிகளை எழுதுவதற்கு தனி புத்தகமே தேவைப்படும்.

உலகமயம், இந்தியமயம், கார்பரேட்மயம், பார்ப்பனியமயத்தால் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், சிறு தொழில் புரிவோர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடிகள், பெண்கள், மாணவர்கள், நேர்மையான அறிவாளிகள் என எல்லா பிரிவினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதே நேரத்தில் குஜராத் முதலாளிகளும், அம்பானியும், அதானியும் கொழுத்து திரிகின்றனர். இதற்கு ஜனநாயக, புரட்சிகர ஆற்றல்கள் முடிவு கட்ட வேண்டும்.

இந்திய உருவாக்கமும், தேசிய இனங்களின் விடுதலையும்

தேசம்;; என்று அழைக்கப்படும் இந்தியா இதே எல்லைகளுடன் 1947க்கு முன்னும் பின்னும் இருந்ததில்லை. பல்வேறு பொது மொழிகளைக் கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்றன. இவர்களது தன் தீர்வு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பல்வேறு தேசிய இனங்களின் உரிமையை மறுத்து அவைகளை மாநிலமாக குறுக்கிக் காட்டுவதும், இந்தியாவை தேசம் எனக் காட்டுவதும் மோசடியாகும்.

இந்திய உருவாக்கத்தில் பல்வேறு வர்க்கங்களும், வர்க்கப் பிரிவுகளும் பங்கு பெற்றப்போதிலும் பெரும் முதலாளிகளின் சந்தை நலனை கணக்கில் கொண்டே இந்தியா உருவாக்கப்பட்டது.

பெரும் முதலாளிகள் இந்தியச் சந்தையை தற்போது கைப்பற்றி வைத்துள்ளதுடன் மத்திய ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இவர்கள் நிதி மூலதனம் ஏற்றுமதி செய்கின்றனர்.

இந்திய ஒற்றுமை என்ற பெயரில் பெரும் பனியா முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள பார்ப்பன அதிகார வர்க்கமும் சாதிய நிலக்கிழாரிய வர்க்கமும், பன்னாட்டு முதலாளிய வர்க்கமும் தொழிலாளிகளையும் விவசாயிகளையும் சுரண்டுவதைப் போல தேசிய இனங்களையும் சுரண்டுகின்றனர்.

இந்தியாவில் 3372 மொழிகள் பேசப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறினாலும், அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் 22 மட்டுமே. அரசியல் சட்டத்தில் ஏற்றுக்கொண்ட மொழிகளில் உருது, சிந்தி, சமக்கிருதம் ஆகியவைகளுக்கு இந்தியாவில் தாயகங்கள் இல்லை.

அதே நேரத்தில் காஷ்மீர், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து தாயக மக்களின் மொழிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. தேசிய இனச் சிக்கலின் தீவிரத்தை இது காட்டுகிறது. இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தியும், துணை ஆட்சி மொழியாக ஆங்கிலமும் நீடிக்கிறது. மற்ற மொழிகள் நீச பாசையாம்.

இவ்வாறான இந்திய தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசிய இன மக்கள் தங்களது தனித்த அரசுரிமைக்காகப் போராடி வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட பிற தேசிய இனங்களும் தங்களது தேசிய இன உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனை இந்திய ஆளும் வர்க்கம் பிரிவினைவாதம் என முத்திரை குத்தி ஒடுக்குகின்றது.

இந்தியாவில் சனநாயகத்திற்கான போராட்டம் என்பது தேசிய இனங்கள் விடுதலை பெறுவதில் அடங்கியிருக்கிறது. தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை ஏற்பதும், மொழி சிறுபான்மையினரின் உரிமையை ஏற்பதும் தமிழகப் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும். இதனை இந்திய ஆளும் வர்க்கம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை.

இந்தியாவில் ஒடுக்கப் பட்ட தேசிய இனங்கள் தங்களது விடுதலையை பிரிந்து போய் தனித்த அரசமைப்பதன் மூலம் பெறுவதா அல்லது சேர்ந்து போராடுவதன் மூலம் பெறுவதா என்பதில் இந்திய பொது உடமை இயக்கங்களுக்கிடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

தேசிய இனச் சிக்கலில் ஒரு தேசிய இனத்தின் விடுதலையை அல்லது தன் தீர்வு உரிமையை பாட்டாளி வர்க்கம் ஏற்றுக் கொள்கிறது. அத்தேசிய இனத்தின் பிரிவினையை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்ற சிக்கல் எழும்போது அத்தேசிய இனம் பிரிவதன் மூலம் அனைத்து நாடுகளிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையும் வர்க்கப் போராட்டத்தின் நலனும் பாதுகாக்கப்படும் என்றால் பிரிவினையை ஆதரிக்க வேண்டும்.

சேர்ந்து இருப்பதன் மூலம்தான் அனைத்து நாடுகளிலும் உள்ள பாட்டாளி வர்க்கதின் ஒற்றுமையும் வர்க்கப் போராட்ட நலனும் பாதுகாக்கப்படும் என்றால் பிரிவினையை எதிர்க்க வேண்டும். இம்முடிவினை அந்தந்த நாடுகளின் குறிப்பான நிலைமைகளை ஆய்வு செய்வதன் மூலமே பெறமுடியும். இதற்கு எடுத்துக்காட்டு.

அயர்லாந்து, போலந்து ஆகியவை பிரிந்துபோய் விடுதலை பெறுவதை மார்க்சு ஆதரித்ததையும், நார்வே பிரிந்துபோய் விடுதலை பெறுவதை ஆதரித்த லெனின், போலந்து பிரிந்துபோய்தான் விடுதலை பெற வேண்டும் என்பதை எதிர்த்ததையும் கொள்ளலாம்.

இந்தியாவின் அரசியல் அரங்கில் இரண்டு விதமான நேர் எதிரான அரசியல் போக்குகள் மோதிக்கொள்கின்றன. ஒன்று. இந்திய தேசிய ஆளும் வர்க்கப்போக்கு. மற்றொன்று. மொழி வழி தேசிய சனநாயகப் போக்கு. முதல் போக்கில் பெரும் முதலாளிகள், பார்ப்;பனிய ஆற்றல்கள், நிலக்கிழார்கள், பன்னாட்டு முதலாளிகள் இணைந்துள்ளனர்.

முதல் போக்கின் பகராளிகளாக காங்கிரசு, பி.ஜே.பி. கும்பல் உள்ளது. மொழி தேசிய சனநாயகப் போக்கில் தேசிய முதலாளிய கூறுகள், குட்டி முதலாளிய ஆற்றல்கள், விவசாயிகள், தொழிலாளிகள், சிறுதொழில் முதலாளிகள், வணிக முதலாளிகள், அறிவாளிகள் இணைந்து உள்ளனர். இரண்டாவது போக்கில் தமிழ் தேசிய விடுதலைக் குழுக்கள் உள்ளன. மற்றவர்கள் சந்தர்ப்பவாதிகளாக உள்ளனர். தமிழ்த் தேசியப் பட்டாளி வர்க்கமானது மொழி தேசிய போக்குடன் இணைந்தே தனது சனநாயகக் கடமையை செய்ய வேண்டி உள்ளது.

பாட்டாளி வர்க்கத்தின் அனைத்து தேச ஒற்றுமை அதன் வர்க்கப் பேராட்ட நலன் என்ற கண்ணோட்டத்திலிருந்து தேசிய இனச் சிக்கலை ஆராய்ந்தோமானல், ஒரு தேசிய இனத்தின் பிரிவினையை மூன்று நிலைமைகளில் மட்டுமே எதிர்க்க வேண்டும்.

ஒன்று: பல்தேசிய இன நாட்டில் ஒடுக்கும் தேசிய இனத்தில் புரட்சியை முன்னெடுக்கும் நிலையில் ஒரு பலம் வாய்ந்த பாட்டாளி வர்க்க இயக்கம் அல்லது ஜனநாயக இயக்கம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை ஏற்று போராடும் நிலையில்.

இரண்டு: ஒரு தேசிய இனம் பிரிவதை ஒட்டி உலகப்போர் மூளும் நிலையில்.

மூன்று: ஒரு தேசிய இனத்தின் பிரிவினை பெரும் வல்லரசுக்கு உதவும் நிலையில். மற்ற நிலைமைகளில் தேசிய இனங்கள் பிரிந்து போவதை மார்க்சியம் எதிர்ப்பதில்லை. மாறாக பிரிவினையை ஆதரிப்பது மட்டுமல்ல. பட்டாளி வர்க்கத்திற்கு உகந்த நிலை ஏற்படுமானால் பிரிவினைக்கு தலைமை ஏற்று புரட்சியை முன்னெடுக்க வழி காட்டுகிறது

தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம்

தமிழ்த் தேசிய இனம் தனக்கான தனித்த வரலாறு கொண்ட பழைமையான தேசிய இனமாகும். தமிழ்நாட்டு சுமார் ஏழரைக் கோடி மக்களைக் கொண்டது. தமிழ் மொழியைப் பேசக்கூடிய மக்கள் உலகில் சுமார் பத்துக் கோடிப் பேர் உள்ளனர். இந்திய வல்லாதிக்கத்தின் கீழ் தமிழ்த் தேசிய இனம் தன் தீர்வு உரிமை அற்று அடிமை நிலையில் வாழ்கிறது.

தமிழ்த் தேசிய இனம் தனது அடிமை நிலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடியே வந்துள்ளது. இப்போராட்டமானது மொழி உரிமைக்காக, மாநில உரிமைக்காக, எல்லை மீட்புக்காக, ஆற்று நீர் உரிமைக்காக இன்னும் பிறவாகவும் நடந்துள்ளன, நடந்து வருகின்றன.

வெள்ளை வல்லரசியத்தின் மேற்பார்வையிலேயே இருந்த இந்திய ஆளும் வர்க்கம் தேசிய இனங்களின் மீதான (மொழி, அரசியல், பிற....) ஒடுக்குமுறையை ஏவிய போது தேசிய இனங்கள் அதற்கு எதிராகப் போராடத் தொடங்கின. தமிழ்த் தேசிய இனமும் போராடியது. 1947-க்கு முன்னர் இப்போராட்டமானது இரண்டு நோக்கங்களைக் கொண்டதாக இருந்தது.

ஒன்று. முதன்மையாக வெள்ளை வல்லரசியத்திலிருந்து விடுபடுவது. மற்றொன்று. இந்தியாவில் தங்களது உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வது அல்லது பிரிந்து செல்வது. தேசிய இனங்கள் தங்களது தேசிய இன உரிமைப் போராட்டத்தை முதன்மைப் படுத்திய போது காங்கிரசு கட்சி ‘ விடுதலைக்குப் பின்னர் எந்த ஒரு மொழி பேசும் மக்களையும் வலுக் கட்டாயமாக இந்திய யூனியனோடு சேர்க்க மாட்டோம்” என்று உறுதி கூறியது. 1947க்குப் பிறகு தேசிய இன விடுதலைப் போராட்டங்களை ஒடுக்க அதே காங்கிரஸ் கட்;சி தான் 1963இல் பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டு வந்தது.

வெள்ளை வல்லரசு தமிழ்நாட்டில் காலூன்றி இருந்தபோதே தமிழ் ஆர்வலர்களால் தனித் தமிழ்நாடு கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. இது முதலில் மொழி உரிமைக்காக தொடங்கி தனிநாடு கோரிக்கையாக வளர்ந்தது. 1938லும் 1965லும் ஏற்பட்ட மொழிப் பேராட்டம் இந்தியப் படையால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

1963இல் பிரிவினை தடைச் சட்டம் வந்தபோது தனிநாடு கோரிக்கையை கைவிட்டு இந்திய ஆளும் வர்க்கத்துடன் தி.மு.க. சமரசம் செய்து கொண்டது. ஒன்று பட்ட இந்திய பொது உடைமை இயக்கம் இப்போராட்டத்தை பிரிவினை வாதம் என இழிவு படுத்தியது.

வெள்ளை வல்லரசியத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் இரு கடமைகளில் ஒன்றான வெள்ளை வல்லரசியத்திலிருந்து 1947ல் விடுபட்டது. மற்றொரு கடமையான இந்தியாவிலிருந்து விடுபடுவது அல்லது உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வது என்ற கோரிக்கை நீடிக்கிறது. 1947க்குப் பின் தமிழ்த் தேசிய இனம் இக்கோரிக்கையை முதன்மையாக முன்னெடுத்திருக்க வேண்டும். இது தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக் கோரிக்கையாகும்.

தெற்காசியாவில் இந்திய அரசு பார்ப்பனிய மத அடிப்படையிலான மிகவும்; பிற்போக்கான பல்தேசிய அரசாகும். இது பன்னாட்டு வல்லரசியங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு புரட்சி இயக்கங்களையும், தேசிய விடுதலை சனநாயக இயக்கங்களையும் ஒடுக்குகிறது.

பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ரசியப் புரட்சியும் கூட ஒரு தேசியப் புரட்சியாகத் தான் தொடங்கிப் பரவியது. ரசியப்புரட்சியின் ஒட்டுமொத்த விளைவாக எந்த ஒரு தேசிய இனமும் தனது அரசுரிமையை விட்டுக் கொடுக்கவில்லை. உலகில் நடைபெற்ற அனைத்துப் புரட்சிகளும் பொதுவாக தேசியப்புரட்சிகளே. உலகில் நடைபெற்ற புரட்சிகள் அந்நாடுகளின் சூழலுக்கு ஏற்ற வடிவங்களை எடுத்தது போல தமிழ்த் தேச விடுதலைப் புரட்சியும் தனித்தன்மை உடையதாகவே இருக்கும்.

உலகில் ஆகப் பெரும்பாலான நாடுகளில் தேசிய இனச் சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அச்சிக்கல் தான் முதன்மையாக நீடித்து வருகிறது. இந்திய ஆளும் வர்க்கம் இச்சிக்கலைத் தீர்க்கப் போவதில்லை.

மாறாக தனது நலனுக்கு உகந்த வகையில் கையாளுகிறது. தேசிய இனத்திலுள்ள முதலாளிய வர்க்கங்களோ இச்சிக்கலைப் பயன்படுத்தி மக்களை தன் பக்கம் திரட்டி இந்திய ஆளும் வர்க்கத்துடன் பேரம் பேச பயன்படுத்திக் கொள்கிறது. இச்சிக்கலுக்கு பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்கும் போதுதான் இந்திய ஆளும் வர்க்கத்தையும் அதன் அடிவருடிகளையும் சமரசமின்றி வீழ்த்த முடியும்.

ஒடுக்கும் பெரும் தேசிய இனமாக ரசிய தேசிய இனமும், அதில் பலமான பாட்டாளி வர்க்க இயக்கமும் பிற ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை ஏற்று புரட்சியை ஒன்றுபட்டு நடத்தியது போல, இந்தியாவின் முழுமையிலும் ஒரே கட்சியின் தலைமையில் புரட்சி நடத்த இயலாது. இங்கு ஒடுக்கும் மொழியாகவும், சலுகை பெற்ற அரசு மொழியாகவும் இந்தி இருக்கிறது.

அதில் பலமான பாட்டாளி வர்க்கமோ அல்லது முதலாளிய சனநாயக இயக்கமோ ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன் தீர்வு உரிமையை ஏற்று புரட்சியை முன்னெடுக்கும் என எதிர்பார்க்க வேண்டியதில்லை. இந்நிலையில் தமிழ்த் தேசிய இனம் தனது தனி அரசுரிமைக்கான போராட்டதினூடகவே புரட்சியை ஈட்ட முடியும்.

குறிப்பான திட்டம்

தமிழ்த் தேச சனநாயக இடைக்கால அரசமைப்போம் !

தமிழகப் பாட்டாளி வர்க்க இயக்கம் தனது அதிகபட்ச திட்டமாக சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும், குறைந்தபட்ச திட்டமாக தமிழ்த் தேச விடுதலை சனநாயகப் புரட்சியையும் கொண்டு பொருத்தமான செயல் உத்திகளையும் வேலைமுறைகளையும் வகுத்து செயல்படுகிறது. அப்படி செயல்படும்போது புரட்சியின் கட்டம் மாறாமலே வேறு சில உடனடி சிக்கல்களையும் பாட்hளி வர்க்கம் எதிர் கொள்ள வேண்டிய அரசியல் சூழல்; ஏற்படுகின்றது.

அப்படியான சூழலை ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.மோடி கும்பல் ஏற்படுத்தி உள்ளது. இதனை எதிர்கொள்வதற்கும், இதனை வீழ்த்துவதற்கும் குறைந்தபட்ச திட்டம் போதுமானதாக- பொருந்துவதாக இல்லை. எனவே இச்சூழலை எதிர்கொள்ள குறிப்பான திட்டம் தேவைப்படுகிறது.

அதிகபட்ச, குறைந்தபட்ச திட்டங்களுக்கான வர்க்க அணி சேர்க்கை மாறுவது போலவே, குறிப்பான திட்டதிற்கும் வர்க்க அணி சேர்க்கை மாறுகிறது. இவ்வணி சேர்க்கையினை ஒவ்வொரு வர்க்கத்தின் வரலாற்று வழியிலான குறிக்கோள்களைக் கொண்டு மதிப்பீடுகளுக்கு வர வேண்டிய தேவை பாட்டாளி வர்க்கத்திற்கு ஏற்படுகிறது. மேலும் பாசிசம் தோன்றியதற்கான அரசியல் பொருளியல் நிலைமைகளையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

இந்தியாவில் முதலாளிய வளர்ச்சியின் இயல்பில் மூன்று பண்புகள் வெவ்வேறு கட்டங்களாக வெளிப்படுவதை காண இயலும். அதே நேரத்தில் அவை சுவர் வைத்தார் போல் தடுக்கப்பட்டிருக்க வில்லை. முதலாவது, வல்லரசியங்களின் கீழ் 1947 வரைக்குமானது. இரண்டாவது, 1947 லிருந்து 1991 வரைக்குமானது. மூன்றாவது, 1991 க்;குப் பிறகானது.

ஐரோப்பாவில் தோன்றிய முதலாளியமானது கைத்தொழில் பட்டறைத் தொழிலாகவும், பட்டறைத் தொழில் பெரும் ஆலைத் தொழிலாகவும் வளர்ந்தது. வல்லரசியங்களின் காலனிய இந்தியாவில் இப்படியான இயல்பான வளர்ச்சி தடைப்பட்டது. ஐரோப்பாவின் முதலாளிய வர்க்கம் நிலக்கிழாரியத்தின் அழிவில் தோன்றியதென்றால், இந்திய முதலாளிய வர்க்கம் வல்லரசியங்களின் வருகையால் நிலக் கிழாரியத்துடன் கூட்டமைத்துக் கொண்டு தோன்றியது.

1947க்கு முன்னால் இந்தியா பல்வேறு வல்லரசியங்களின் சந்தைக்கான காலனியாகவும், அவர்களின் மூலப்பொருள்கள் ஏற்றுமதிக்கான விளைநிலமாகவும் இருந்தது. ஆகையினால் வல்லரசியங்களுடன் இணைந்து வணிகத்தில் ஈடுபட்ட வணிக முதலாளிகளும், வட்டி தொழில் செய்தவர்களும் தொழிற்துறை முதலாளியாக மாறினர்.

அப்போதுதான் அது வல்லரசியங்களுடன் முரண்படுகிறது. வல்லரசியங்களிலிருந்து விடுபடும் வரை இப்பண்பு நிலவுகிறது. இக்கால கட்டமானது அரசியலிலும், பொருளியலிலும் பெரும் நெருக்கடியை கொண்டிருந்தது.

1914இல் தொடங்கி 1918 வரை நடந்த முதல் உலகப்போரும், 1939ல் தொடங்கி 1945 வரை நடந்த இரண்டாம் உலகப்போரும், உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரும் சரிவை ஏற்படுத்தியது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் ஏற்பட்டது. போரின் சுமைகள் ஆட்சியாளர்களால் மக்கள் மீது திணிக்கப்பட்டது.

எனவே, மக்கள் போரின் சுமை தாங்காமல் மாற்று ஆட்சி முறைகளைப் பற்றியும், மாற்றங்களைப் பற்றியும் சிந்திக்கலாயினர். அதற்கான கொள்கைகளும், இயக்கங்களும் இருந்தன. இதன் விளைவே ரசியா, சீனா, கிழக்கு ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள். முதல் உலகப் போரின் முடிவில் தான் 1919 இல் பாசிச கட்சியும், நாசிசக்கட்சியும் தோன்றின. போரின் விளைவாக மக்கள் பெரும் அரசியல் உணர்வு பெற்றனர்.

1947 க்குப் பிறகு இந்திய முதலாளி வர்க்கம் சுதந்திரமான தொழில்துறை வர்க்கமாக உருவெடுத்தது. உலகம் முழுவதும் ஏற்பட்ட புரட்சிகளும், சனநாயக மாற்றங்களும் மக்களிடையே ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வும் முதலாளிகளை மக்கள் நல அரசு அமைக்க நிர்ப்பந்தித்தது. இதன் காரணமாகவே விவசாயி, தொழலாளி, பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் சனநாயக உரிமைகள் முதலாளிகளால் ஏற்கப்பட்டன.

இதே காலத்தில் உலகில் போடப்பட்ட நேட்டோ, சீட்டோ, சென்டோ ஆகிய ஒப்பந்தங்கள் அனைத்தும் அதில் இடம் பெற்றுள்ள நாடுகளில் புரட்சி ஏற்படுவதை ஒன்றுபட்டு தடுப்பதற்கான ஏற்பாடே.

1991ல் சோவியத் ரசியாவின் வீழ்ச்சிக்கு பின் பனிப்போர் முடிவுக்கு வந்தது. புதிய உலக நிலைமையில் வல்லரசுகள் உலகை கொள்ளையிட புதிய காலனிய கொள்கையை (டங்கல் திட்டத்தை) கொண்டு வந்தனர். இது உலகிலுள்ள ஏகபோக முதலாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டதாகும். இதில் இந்தியாவும் பிணைக்கப்பட்டது.

இந்தியாவின் பெரும் தொழில் துறை மற்றும் கார்பரேட் முதலாளிகளாகவும் நிதி ஆதிக்க கும்பலாகவும் டாடா, பிர்லா,அம்பானி, வேதாந்தா, இம்போசிஸ், மிட்டல், மினரல், அதானி ஆகியோர் உருவெடுத்து உள்ளனர். இவர்கள் அனைவரும் வடநாட்டு மார்வாடி, பனியா, பார்சி முதலாளிகளாவர். இந்தியாவில் 95.3 கோடி மக்களின் அதாவது மக்கள் தொகையில் 70 மூ மக்களின் செல்வத்தை விட அதிகமான செல்வம் 1மூ பெரும் பணக்காரர்கள் சுருட்டி வைத்துள்ளனர்.

இந்தியாவில் 63 பேர்களில் மொத்த செல்வமானது மத்தியப் பட்டஜெட்டின் மதிப்பை விட அதிகம் என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இச்சூழலில் புதிய காலனிய கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் ஏற்பட்ட நெருக்கடியை சரி செய்ய மோடி அரசு பெரும் முதலாளிகளின் வாரா கடனை தள்ளுபடி செய்து அதன் சுமையை மக்கள் தலையில் ஏற்றியுள்ளது.

புதிய காலனியக் கொள்கையினால் உலக ஏக போக நிதி ஆதிக்க கும்பலுடன் இந்திய முதலாளிகள் போட்டியிட வங்கிகள் இணைக்கப்பட்டு பெரும் நிதி மூலதனம் ஒன்று குறிக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியப் பெரும் முதலாளிகள் தங்கு தடையின்றி பயன்படுத்திக் கொள்வர். இந்தியப் பெரும் முதலாளிகள் தொழில்துறை, வேளாண்துறை, சேவைத்துறை, அரசுத்துறை ஆகிய பெரும்பாலனவற்றை தனியார்மயம் என்ற பெயரில் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவின் பொருளாதாரத்துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அரசியல் பண்பாட்டுத் துறையிலும் மாற்றங்களை ஆளும் வர்க்கங்கள் ஏற்படுத்துகின்றன. 1991ல் ஏற்பட்ட புதிய காலனி கொள்கையும், அதனை நடைமுறைப்படுத்தியதால் ஏற்பட்ட பொருளாதார அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து முதலாளி வர்க்கம் மீளுவதற்கு பழைய சனநாயக ஆட்சிமுறை கடிவாளமாகிறது. ஆகையினால் சர்வாதிகாரமாக மாறுகிறது. இந்திய பெரும் முதலாளிக்கு விரிந்த இந்திய சந்தை தேவைப்படுகிறது.

பார்ப்பன அதிகார வர்க்கமானது வரலாறு காலம் தொட்டே உடைமை வர்க்கத்துடன் இணைந்து ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்கிறது. நிலக்கிழாரிய சமூகத்தில் இவர்கள் பெரும் அதிகாரம் படைத்தவர்களாகவே இருந்தனர். தற்போதும் அவர்களே அரசியல் கொள்கைகளை வகுப்பவர்களாகவும், அரசைக் கட்டுபடுத்துகின்றவர்களாகவும் உள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகையில் வெறும் 3 விழுக்காடு கொண்ட இவர்கள் அரசு அதிகாரிகளாக 98 விழுக்காட்டை கைப்பற்றி வைத்துள்ளனர்.

ஆக, தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டமானாலும், பிற தேசிய இனங்களின் போராட்டமானலும் அது பெரும் முதலாளிகளின் இந்தியச் சந்தையையும், பார்ப்பன அதிகார வர்க்கத்தின் சாதிய மேலாண்மையையும் சிதைத்து விடும். இதன் காரணமாகவே பெரும் முதலாளிகளின் இந்திய தேசியமும் பார்ப்பனிய இந்து மயமும் ஒத்துப் போகின்றன. ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. கும்பலின் அகண்ட பாரத முழக்கமானது இந்தியப் பெரும் முதலாளிகளுக்கு விரிந்த சந்தையை தேடிக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டது. இவ்வாறாக இந்திய முதலாளித்துவமும், இந்து பார்ப்பனியமும்; கைகோர்த்து செல்கின்றன.

உலகப் பொருளாதாரமும், இந்தியப் பொருளாதாரமும் புதிய காலனியக் கொள்கையினால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சரிந்துள்ளது. இதன் சுமைகள் மக்கள் மீது சுமத்தப்படுகிறது. இதன் விளைவாக பல இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான மக்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முதல் உலகப்போரின் பொருளாதார அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி பாசிசமும், நாசிசமும் தோன்றியது போல இந்தியாவின் பழைய ஆட்சியாளர்களான காங்கிரசின் முதலாளிய அரசியல், பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்ட நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான பி.ஜே.பி கும்பல் ஆட்சிக்கு வந்துள்ளது.

பி.ஜே.பி. மோடி கும்பல் 2-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் வாகன விற்பனை, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை, வெளிநாட்டு வர்த்தகம், விவசாயத்துறை ஆகியவனவற்றின் மிகப் பெரும் பொருளாதார சரிவும், அதனால் மிகப்பெரிய வேலை இல்லா பட்டாளமும் உருவாகி உள்ளன. இதனால் வரக்கூடிய போராட்டங்களை ஒடுக்குவதற்கு பல்வேறு சட்டத்திருத்தங்களை மோடி அரசு கொண்டுவருகிறது.

முரணற்ற சனநாயக்திற்காக நிற்கும் தமிழக அரசு பாட்டாளி வர்க்கம் மிகவும் பலவீனமான நிலையிலிருந்து வளர்ந்து முன்னேற வேண்டுமானால் பெயரளவிலான முதலாளித்துவ சனநாயக உரிமையை காத்து முன்னேற வேண்டியுள்ளது. பெயரளவிலான முதலாளித்துவ ஜனநாயக உரிமையை பறித்து பாசிச ஆட்சி நடத்தும் மோடிக் கும்பலை தமிழ்நாட்டை விட்டே துரத்தியாக வேண்டும். அதற்காக பாசிச எதிர்ப்பு இடைக்கால அரசு அமைக்க வேண்டும்.

இடைக்கால அரசென்பது பாசிச எதிர்ப்பு சனநாயக முன்னணியால் அமைக்கப்படும் பாசிச எதிர்ப்பு தமிழ்த் தேச ஜனநாயக அரசாகும். இதற்காக தமிழகப் பாட்டாளி வர்க்கம் அரசியல் அரங்கில் பாசிச எதிர்;ப்பு ஜனநாயக முன்னணியைக் கட்டும். பாசிச எதிர்ப்பு ஜனநாயக முன்னணியானது பாசிச எதிர்ப்பு நோக்கம் கொண்டதாக இருக்கும்.

பாசிச எதிர்ப்பு முழக்கங்களை பெரும் திரளான மக்களிடம் கொண்டு சென்று பாசிச எதிர்ப்பு இடைக்கால அரசு அமைக்கப் பரப்புரை செய்யும். அதன் மூலம் அவ்வரசு அமைக்கப்படும். இடைக்கால அரசானது தமிழ்த் தேசிய கண்ணோட்டம் கொண்டவர்களையும், இந்தியத் தேசிய கண்ணோட்டம் கொண்டவர்களையும் கொண்ட பாசிச எதிர்ப்பு அரசாக திகழும்.

இந்த இடைக்கால அரசானது பாட்டாளி வர்க்கத்தின் தற்காலிக அரசாகும். அது தமிழ்த் தேச விடுதலைக்கான பாதையை செப்பனிட்டுத் தருவதுடன் பாசிச எதிர்ப்பு ஆற்றல்களுக்கும், பெருவாரியான மக்களுக்கும் சனநாயகம் வழங்கும்.

பி.ஜே.பி.மோடி அரசு கொண்டு வந்த அனைத்துக் கறுப்புச் சட்டங்களையும், குடியுரிமை திருத்தம் போன்ற மனித உரிமைக்கு எதிரான சட்டங்களையும், விவசாயிகள், தொழிலாளிகள், பெண்கள், மாணவர்கள், பட்டியலின மக்கள் ஆகியோரின் சமூக நீதிக்கு எதிரான சட்டங்களையும், தேசிய இனங்களுக்கு எதிரான சட்டங்களையும் சுருக்கமாகக் கூறினால் 2014இல் இருந்து பி.ஜே.பி அரசால் கொண்டு வந்த அனைத்து மக்கள் பகை சட்டங்களையும் தமிழ்நட்டில் தடை செய்யும்.

இந்திய வரலாற்றில் தமிழக பாட்டாளி வர்க்கத்தின் இடைக்கால அரசென்பது புதியது. காஷ்மீர் இந்தியாவுடன், பாகிஸ்தானுடன் இணைவதா, தனித்திருப்பதா என காஷ்மீரில் குழப்பமான அரசியல் நெருக்கடி ஏற்பட்ட போது இந்திய ஆளும் வர்க்கம் திட்டமிட்ட செயலுத்தியாக காஷ்மீரில் இடைக்கால அரசை நிறுவியது. அதில் சேக்அப்துல்லா இந்தியாவை நம்பி ஏமாந்து போனதை தமிழகப்பாட்டாளி வர்க்கம் பாடமாகக் கற்றுக்கொள்ளும்.

தமிழகப் பாட்டாளி வர்க்க இயக்கம் தமிழக அரசியல் அரங்கில் செயல்படுகிறது. அப்போது ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்ளும் பேர்வழிகளான மாநில சுயாட்சி, தன்னாட்சி, சுய நிர்ணய உரிமை முழக்கங்களுடன் செயல்படுகின்றனர்.

இவர்களின் தவறான முடிவுகளை கோட்பாட்டு வழியில் சமரசமின்றி எதிர்த்துப் போராடும் வேளையில் தேவையான செயல் நடவடிக்கைகளில் ஒன்றுபட்டு செயல்படும். மேலும் இனவாத போக்குக்கு எதிராகவும், சீர்திருத்தவாதப் போக்குக்கு எதிராகவும் போராடும். இப்போராட்டமானது இடைக்கால அரசு அமைப்பதில் தடையேற்படும் விதத்தில் இருக்காது.

அரசியல் அரங்கிலான பணியில்-மக்களை அரசியல் அடிப்படையில் அணிதிரட்டுவதற்கு தேர்தல் அரசியலுக்குள் செயல்படுவது மிக முக்கியமானதாகும். பாராளுமன்றப் பாதை மற்றும் தேர்தல் பாதையை மூல உத்தி அடிப்படையில் முற்றாக நிராகரிக்க வேண்டும். அதே வேளையில் செயலுத்தி அடிப்படையில் இவற்றை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேர்தல் பெரும்பாலான மக்கள் பங்கேற்கும் பெரிய சனநாயக நடவடிக்கை ஆகும். பாசிசவாதிகளால் எதிர்காலத்தில் இந்நடவடிக்கையைக் கூட முடக்குவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். தேர்தல் பங்கேற்பு பற்றிய முடிவுகள் குறிப்பான நிலைமையில் கணக்கிடுவதாகும். முன்கூட்டியே அது குறித்து கூற இயலாது.

வெற்று பாசிச எதிர்ப்பு முழக்கங்களோ, புதிய சனநாயக புரட்சிக்கான குறைந்த பட்ச திட்டங்களோ, பாசிச எதிர்ப்புக்கான சிறந்த கட்டுரைகளோ அல்லது வீர வசனங்களோ பாசிசத்தை வீழ்த்தாது. இப்படியான குருட்டுத்தனத்தை முறியடிப்போம்.

பெருவாரியயான மக்களை அணிதிரட்ட பாசிச எதிர்ப்பு இடைக்கால அரசமைப்போம். பாசிச ஆட்சியை தமிழ்நாட்டில் முறியடிப்போம். இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கத்திற்கும் இதுதான் கலங்கரை விளக்காகும்.

தமிழகத்திலும் பிற தேசிய இனங்களிலும் பாசிசத்தை வீழ்த்துவதற்கு தேசிய இன அடிப்படையிலான பாசிச எதிர்ப்பு ஜனநாயக இயக்கத்தையும், அதற்கான முன்னணியையும், வேலை முறை, வேலைத் திட்டத்தையும் வகுத்து செயல்பட வேண்டும். இந்திய அளவில் ஒரே திட்டத்தின் கீழ் பாட்டாளி வர்க்க இயக்கம் ஏன் கட்டப்பட இயலாது என்பதற்கான விரிவான விளக்கத்தை ‘மார்க்சியமும் தமிழ்த் தேசமும்”; என்ற எமது வெளியீட்டில் பார்க்கவும்.

- தமிழ்த் தேச இறையாண்மை