தமிழ்க் கடவுள் முருகனுக்காக பா.ஜ.க. முருகன் வேல் தூக்கினார்; யாத்திரை போனார்; பக்திப் பரவசத்துடன் பெண்கள் குத்தாட்டம் போட்டார்கள்; பா.ஜ.க. தொண் டர்களின் ‘பரத நாட்டியமும்’ ஆங்காங்கே நடந்தது. அந்த கண் கொள்ளாத பக்திப் பரவசக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் ‘தரிசிக்கும்’ ‘பெரும் புண்ணியம்’ கிடைத்தது. கையில் தூக்கிச் சென்ற ‘அட்டை’ வேலை (வேல்) ‘கர்ப்பகிரகத்துக்குள்’ கொண்டு போக துடித்தார் முருகன்.

அர்ச்சகர்கள் மறுத்து விட்டார்களாம். ‘கர்ப்பகிரகத்துக்குள்’ இருக்கும் ‘மூல விக்ரகத்தை’ படம் பிடிக்கக் கூடாது என்பது அய்தீகமாம். ஆனால், பா.ஜ.க. முருகன், தனது முகநூல் பக்கத்தில் ‘மூல விக்ரகமான முருகனை’ படம் பிடித்துப் போட்டார் (சில நாட்களில் அவரே நீக்கி விட்டார்). தமிழ்க் கடவுளை முன் வைத்து தமிழ்நாட்டு ஓட்டுகளை அள்ளி விடலாம் என்று கணக்கு போட்டார்கள்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமீத்ஷாவால் உறுதி யானதால், இப்போது யாத்திரையும் பாதியில் இரத்தாகிவிட்டது. ‘முருகனை’ நம்புவதைவிட அ.இ.அ.தி.மு.க.வை நம்பினால் கூடுதல் ஓட்டு கிடைக்குமே! நல்லாத்தான் கணக்கு போடுறாங்க.

“முருகன் தமிழ்க் கடவுள்; தமிழ்க் கடவுளை தி.மு.க. அவமதிக்கிறது” என்றெல் லாம் தி.மு.க. மீது பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டினார்கள். “முருகன்ஜி, தமிழ்க் கடவுள் முருகன் கோயிலில் ஏன் தமிழில் வழிபாடு இல்லை?” என்று எதிர் கேள்வி எழுந்தது. அந்தக் கேள்விக்கு பதிலே வரவில்லை.

இப்போது மற்றொரு சேதி. அரசு நடத்தும் மாநில மொழி தொலைக் காட்சிகளில் நாள்தோறும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிப்பரப்பாக இருக்கிறதாம். தமிழ் நாட்டு மக்களிடம் பா.ஜ.க.வின் சாதனைகளை பெருமைகளை ‘சமஸ்கிருதத்தில்’ சொன்னால் மக்கள் ஆதரவு அலை புயலாக வீசும் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது! சரி, இருக்கட்டும்!

“8 கோடி இந்திய மக்களில் சமஸ்கிருதம் தெரியும் என்று பதிவு செய்தவர்கள் 15,000 பேர். இவர்களுக்காக ஒவ்வொரு மாநிலத் திலும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்தி அதுவும் பெரும்பான்மை இந்துக்களுக்குப் புரியாத மொழியில்! இதுதான் பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை மதிக்கும் இலட்சணமா?”, “நாங்கள் பெரும்பான்மை இந்துக்கள்” என்று மூச்சு முட்ட முழங்கும் எந்த ‘சங்கி’களும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கப் போவது இல்லை. தமிழ்க் கடவுளுக் காக ‘யாத்திரை’ போனவர்களும் கேட்க மாட்டார்கள்! ஆக, என்ன நடக்கப் போகிறது?

ஏராளமான ‘பிராமணர்’களை செய்தி வாசிப்பாளர்களாகப் பார்க்கும் கண்கொள்ளா காட்சி கிடைக்கப் போகிறது. கொழுத்த சம்பளம் கிடைக்கும்; புரோகிதத்தைவிட கூடுதல் வருவாய் தான்! அர்ச்சகர்களேகூட அதே கோலத்தில் வந்து சமஸ்கிருதத்தில்  செய்தி வாசித்தால் எப்படி இருக்கும்? நினைத்தாலே உடல் புல்லரிக்குது போங்க...

ஆனாலும் மோடி அருமை பெருமைகளை சமஸ்கிருதத்தில் கூறும் போது அதைப் புரிந்து கொள்ளும் ‘சக்தி’ பாமர ஓட்டர்களுக்கு இல்லையே என்பதுதான் நமது கவலை!

கடவுள்களுக்கு மட்டும்தான் அந்த சமஸ்கிருதச் செய்தி புரியும். கடவுளுக்குத் தெரிந்தது ஒரு மொழி கொள்கை தானே! ஆனாலும் அவர்கள் எல்லாம் வாக்குச் சாவடிக்கு வந்து கியூவில் நின்று வாக்களிக்க முடியாதே! பாவம்! கர்ப்பகிரகத்துக்குள்ளேயே பல நூறு ஆண்டுகளாக முடங்கிக் கிடக் கிறார்கள்! அதே அர்ச்சனை; அதே படையல்!

சரி விடுங்க; அடுத்த வேலையைப் பார்ப்போம்! “சமஸ்கிருதத்தைப் போற்று; பெரும்பான்மை இந்துக்களைத் தூற்று” என்ற முழக்கத்துடன் யாத்திரைக்குத் தயாராவோம்!           

- கோடங்குடி மாரிமுத்து

Pin It