students 600கடந்த 05/06/2021 அன்று 2020 - 2021ஆம் கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப் படுவதாக தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள்.

அதேபோன்று கடந்த அதிமுக - ஆட்சியின் முதலமைச்சரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை ரத்து செய்து அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி என்பதாக அறிவித்ததனை நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.

இரண்டு முதலமைச்சர்களும் அறிவித்த இந்த அறிவிப்புகளில் தனித்தேர்வர்கள் பற்றியோ அல்லது தனித் தேர்வர்களுக்கான தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்பதனை பற்றியோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்துக்கும் சற்றும் குறைவான மாணவர்கள் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை தனித்தேர்வர்களாக தேர்வு எழுதி வருகின்றனர்.

சென்ற கல்வியாண்டில் மார்ச் மாதத்தில் பன்னிரண்டாம் வகுப்பிற்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெற்ற சூழ்நிலையில், 2020- செப்டம்பர் மாதத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான சிறப்பு துணைத் தேர்வை தமிழக அரசு நடத்தியது.

அந்த துணைத் தேர்வில் பள்ளிக்கூடத்தில் படிக்க கூடிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற நிலையில் பத்தாம் வகுப்பை முழுமையாக எழுதக் கூடியவர்கள் மற்றும் சென்ற தேர்வுகளில் ஒருசில பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் உட்பட சுமார் 39 ஆயிரம் தனித் தேர்வர்கள் தேர்வெழுதி 22 சதவீதத்தினரும், பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதி 20 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

இந்த தேர்வுக்கு பிறகு தமிழக அரசின் சார்பில் முழுமையாக தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கவோ அல்லது இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்காகவோ நடைபெறும் துணைத் தேர்வுகள் சம்மந்தமான எந்த ஒரு அறிவிப்பும் இது வரை தமிழக அரசால் அறிவிக்கப்படவில்லை.

மேலும் தமிழக அரசால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாக அறிமுகப்படுத்தப்பட்ட பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வின் மூலம் உயர்கல்விக்கான தகுதி என்பது 11 மற்றும் 12ஆம் வகுப்புகளின் ஒட்டுமொத்த தேர்ச்சியின் அடிப்படையிலேயே கிடைக்கப் பெற்றது.

எனவே ஒரு மாணவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முழுமையாக தேர்ச்சி அடைந்திருந்தாலும் பதினொன்றாம் வகுப்பு தேர்வில் ஏதாவது ஒரு பாடத்தில் தோல்வி அடையும் பட்சத்தில் அந்த மாணவர் உயர்கல்வி பெற முடியாத சூழ்நிலையே இருந்து வந்துள்ளது.

இந்த அடிப்படையில் இன்றுவரை சுமார் 33 ஆயிரம் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதே நேரத்தில் 11ஆம் வகுப்பு தேர்வில் ஒரு சில பாடங்களில் தோல்வியுற்று உயர்நிலை படிப்பில் சேர முடியாதவாறு உள்ளனர்.

2020- 2021 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்ட போதிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கவில்லை.

மேலும் ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு படித்து தான் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்கிற நிலையில் பதினொன்றாம் வகுப்பின் தேர்விற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராத நிலையில் எவ்வாறு பன்னிரண்டாம் வகுப்பினை நிறைவு செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உதாரணத்திற்கு மார்ச் -2020 ல் நடைபெற வேண்டிய தனித்தேர்வு கொரானாவின் காரணமாக செப்டம்பர்-2020ல் நடத்தப்பட்டது. அதில் 10ஆம் வகுப்பினை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவருக்கு அடுத்த கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பு தேர்வினை எழுத வாய்ப்பளித்திருக்க வேண்டும்.

ஆனால் இதுவரையில் அவர்களுக்கான அறிவிப்பு வரவில்லை. அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு எழுதுவதற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் சம்மந்தமாகவும் எந்த ஒரு அறிவிப்பும் வராத நிலையில் மேற்கொண்டு அவர்களுக்கு உயர்கல்வி கிடைப்பதில் வருடங்கள் தாமதமாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனவே 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு அறிவிப்பையோ அல்லது குறைந்தபட்சம் தேர்வு நடைபெறும் மாதத்தையோ தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிட்டால் மாணவர்களுக்கு அது பெரும் உதவியாகவும் நிம்மதி பெருமூச்சாகவும் அமையும்.

இது விஷயத்தில் முதல்வர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு சிரமங்களுக்கு இடையில் சுயமாக படித்து தனித்தேர்வர்களாக தேர்வு எழுதும் மாணவர்களின் வாழ்க்கையில் கல்வி ஒளியேற்றிட வேண்டுமென்பதே மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.

- ஷா.காதர் கனி

Pin It