காலச்சுவட்டில் கடிதங்கள் படிப்பது ஒரு ‘நல்ல அனுபவம்’ என்கிறார் பெரிய குளத்திலிருந்து வைத்தியநாதன் (இதழ் எண் 40). ‘இதுவரை தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமலிருந்தது, காலச்சுவடைப் படிக்கும்வரை’ என்கிற ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’ மாதிரிக் கடிதங்கள் அதில் அதிகமிருக்கும். சுந்தர ராமசாமி, மனுஷ்ய புத்திரன், கண்ணன் அப்புறம் அவர்களின் ஜவுளிக்கடை கடல் எல்லாம் இல்லாவிட்டால் தமிழ்நாடு ‘அம்போ’தான். உதாரணத்திற்கு இதழ் 36ல் மனுஷ்ய புத்திரனின் ‘அரசி’ கவிதை வந்திருந்தது. இதழ் 37 முழுவதும் கடிதங்கள்; ‘அரசி’ பற்றிய பாராட்டுப் பத்திரங்கள். ஹெலன் சிசுவின் நாடகத்தை நினைவுபடுத்தியது, ஆகச் சிறந்த அரசியல் கவிதை என்றார் ரமேஷ் பிரேதன். இன்குலாப்பின் கவிதைகள் வெற்றுக் கோஷங்களாகவும் தூங்கும் பிரசுரங்களாகவும் தெரிகிற ஜெயமோகனுக்கு அரசி நல்ல அரசியல் கவிதை. உண்மையில் கருணாநிதி தலைமையில் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை வாசித்திருந்தால் இதைவிட நல்ல ஜெ. எதிர்ப்புக் கவிதையை எழுதியிருப்பார்.

babri_masjidநிற்க. இதழ் 40ல் வந்த ஜோதிடர் பஞ்சலிங்கத்தின் கடிதம் சொல்லும் சேதி தங்கவேல் செட்டியார் மகன் சண்முகத்திற்கு ஜோதிடம் பார்த்ததற்குச் சன்மானமாக ஜே.ஜே. சில குறிப்புகள் தந்தாராம்! ஊருக்கெல்லாம் குறி சொல்லும் ஜோதிடருக்குப் போதாத காலம், தனக்குச் ‘சனிப்பிடிக்கப் போவது’ தெரியவில்லையே. இத்தகைய வாசகக் கடிதங்களுக்கு மத்தியில் அ.மார்க்சைத் தோலுரித்ததற்கு கண்ணனுக்கு ‘சபாஷ்’ போட்டு வாசகக் கடிதங்கள் வெளியானதைப் பார்த்த பிறகுதான் இக்கட்டுரையை எழுதத் தோன்றியது. இதழ் 39ல் மௌனத்தின் சிறகடிப்பில் கண்ணன் அப்படி என்ன சொல்லிவிட்டார்? PUCL கூட்டமொன்றில் பாபர் மசூதி இடித்ததை ஆதரித்து காலச்சுவடு எழுதியதாக அ.மார்க்ஸ் பொய் சொல்லிவிட்டாராம். மறுத்து கண்ணன் எழுதுகிறார். ‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு ஆதரித்து எழுதவில்லை. இடிப்பதற்கு முன்பேயே இடிப்பதை ஆதரித்து கட்டுரை வெளியிட்டோம்.’

எதற்காகவாம்? மாற்றுக்கருத்துக்களை அனுமதிக்கும் வெளிகளைத் திறந்து விடுவதற்காம்! ‘நடுநிலை நாளிதழ்’ என்று தினமலர் விளம்பரம் செய்து கொள்வதைப் போல! இந்தக் ‘கருத்துச் சுதந்திரத்தை’ காப்பதற்காகத்தான் ‘தமிழ்நாட்டு நோம் சோம்ஸ்கி” சு.ரா அதை மறுத்துக் கொண்டே கட்டுரையை வெளியிட்டுவிட்டாராம். இந்துத்துவக் கருத்துக்களைப் பரப்புவதற்கு சினிமா இருக்கிறது, தொலைக்காட்சிகள் இருக்கின்றன. காலச்சுவட்டிற்கு இந்துத்துவத்தின் பக்கமுள்ள ‘நியாயத்தை’ எடுத்துரைக்க என்ன அவசியம் நேர்ந்தது? தற்பொழுது குஜராத் நிகழ்வுகளைக் கண்டித்து ‘காலச்சுவடு’ எழுதுகிறது. கோத்ரா சம்பவத்திற்குக் காரணமான முஸ்லிம்களைப் பழி தீர்க்கும் ‘இந்துத்துவத்தின் நியாயம் உரைக்கும் கட்டுரை’ எதுவும் காலச்சுவட்டிற்குக் கிடைக்கவில்லையா? இப்பொழுது இந்துத்துவத்தின் எதிர்ப்பாளர்களாகப் பாவனை செய்ய வேண்டிய நிர்பந்தம் காலச்சுவடிற்கு ஏற்பட்டிருக்கின்றதென்றால் அ.மா., ரவிக்குமார், ராஜ்கவுதமன், ராஜன் குறை போன்றோர் சிறுபத்திரிகைச் சுழலில் இடைவிடாது நடத்திவந்த போராட்டத்தின் விளைவு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் நாம். ஆனால் எல்லாப் பாவனைகளையும் தாண்டி காலச்சுவடு ஒரு பார்ப்பனீயப் பத்திரிகை என்பதை நிருபிக்கத் தவறியதேயில்லை.

ஒரிஸ்ஸாவில் ஆஸ்திரேலியப் பாதிரியார் ஸ்டெயின் கிரஹாம் இந்துத்துவ ரவுடிகளால் எரித்துக் கொல்லப்பட்ட நேரம். ‘ஒரிஸ்ஸா இந்துப் பழங்குடிகளை கிறித்துவ மதத்திற்கு மதமாற்றம் முயன்றதன் விளைவு இது’ என்கிறது சங்பரிவார். ‘மதமாற்றம் குறித்த தேசிய விவாதம் தேவை’ என்கிறார் வாஜ்பாயி. காலச்சுவடும் ஒரு மொழிபெயர்ப்பு நூலை வெளியிடுகிறது. சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகள்’ ஆப்பிரிக்கப் பழங்குடிகள் கிறித்துவத்திற்கு மாறியதால் ஏற்பட்ட ‘தீமை’களைப் பேசுகிறது.

இன்னொரு சமீபத்திய உதாரணம் மதுரையில் நடைபெற்ற ‘காலச்சுவடு’ நூல் வெளியீட்டு விழாச் செய்தி. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவனும் கலந்து கொள்கிறார். பொதுவாக, மதுரையில் வி.சி.அமைப்பில் இளைஞர்கள் அதிகம். மதுரையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ‘தலித் கலை விழா’வில் திருமாவளவன் பேசுகிறார். இளைஞர்கள் ஆரவாரம் அதிகம். திருமாவளவன் போனபிறகு அரங்கு காலி. ‘வழிபாட்டு அரசியல்’ விமர்சிக்கக் கூடியதெனினும், மய்ய நீரோட்ட அமைப்புகளிலிருந்து விலகித் தலித் தலைமையின் கீழ் இளைஞர்கள் திரள்வது என்பது வரவேற்கப்படக்கூடிய ஒன்று. மதுரையில் நடைபெற்ற காலச்சுவடு நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகளின் இளைஞர்கள் கண்ணனைப் பின்னுக்குத் தள்ளியதாக அறிந்தேன். ‘பேச்சும் எதிரொலியும்’ என்று விழா பற்றி கட்டம் கட்டி செய்தி வெளியிடுகிறது ‘காலச்சுவடு’. ‘அரங்கில் பேச்சை விடவும் பல சமயங்களில் எதிரொலி கடுமையாக இருந்தது நிகழ்வில் கரும்புள்ளியாக உறுத்தியது’ என்று. மேலே திருமாவளவனின் படம். ஒரு தலித் தலைவருக்கு கோஷம் எழுப்புவது கண்ணனுக்கு ‘உறுத்துகிறது.’ அவர் அப்பன் சுந்தர ராமசாமிக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைக்கவில்லை என்று தமிழ் ‘எழுத்தாளர்கள்’ மட்டும் ஒவ்வொரு இதழிலும் ஒப்பாரி வைக்கலாமாம். இதுதான் கண்ணன் மாற்றுகளைத் திறக்கும் வெளி. நமக்கு மலங்கழிக்கும் வெளி.

இன்றளவிலும் ஒரு தலித் கவிதைகூட காலச்சுவடில் வெளிவராததைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘தமிழ் இனி 2000’ குறித்த விமர்சனங்களுகுப் பதில் எழுத வந்த மனுஷ்ய புத்திரன் எழுதுகிறார். ‘பார்ப்பனீயம் போன்ற கற்கால ஆயுதங்களை நம்மீது எறிகிறார்கள்’ என்று. பிஜே.பி.க்கு ஒரு சிக்கந்தர் பகத்; காலச்சுவடிற்கு ஒரு மனுஷ்ய புத்திரன். கடைசியில் சிக்கந்தர் பகதைப் போலவே மனுஷ்ய புத்திரனையும் தூக்கி எறிந்துவிட்டது கா.சு. இன்று இந்துத்துவ எதிர்ப்பு அரசியலுக்கும் தலித்தியத்திற்கும் ‘மார்க்கெட் வேல்யு’ உள்ளதால் காலச்சுவடு தமிழர் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாற்றை வெளியிடுகிறது. தொ.ப. நூலை வெளியிடுகிறது.போதாதற்கு தலித் ஆதரவு பம்மாத்து காட்ட ரவிக்குமார் வேறு.

மௌனத்தின் சிறகடிப்பதில் ‘அ. மாவைத் தோலுரித்துவிட்டு’ கண்ணன் சொல்கிறார், மதவாதத்தை, தீவிரவாதத்தை பயங்கரவாதத்தை ஆதரிப்பது எனப் பல உரிமை மீறல்களைத் தமது செயல்பாட்டின் ஆதாரமாகக் கொண்டு இயங்கிவரும் பேராசிரியர்களைத் தங்கள் கூட்டத்திற்கு அழைப்பதன் பொருத்தப்பாடு பற்றி விளக்கம் அளிக்க வெண்டிய கடமைக்கு PUCLக்கு உண்டு என்று எழுதுகிறார். அ.மா. ஒரு தீவிரமான இந்துத்துவ எதிர்ப்பாளர், இந்துத்துவ வன்முறைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக எழுதுபவர்; பேசுபவர். இன்று தலித்துகளுக்காகக் குரல் கொடுக்கவும் அறிவுஜீவிகள் உண்டு. ஆனால் இன்று இசுலாமியர்களின் வாழ்வுரிமைக்காகவும், தன்னிலைக்காகவும் குரல் கொடுப்பவர் மார்க்ஸ் மட்டுமே. ஆனால் முஸ்லிம்களை ஆதரிப்பது என்பதே பயங்கரவாதமாம். இதைத்தான் தினமலர் சொல்கிறது; இராமகோபாலன் சொல்கிறார்; இதோ கண்ணனும் சொல்கிறார், ‘முஸ்லீம்களை ஆதரிப்பது பயங்கரவாதத்தை ஆதரிப்பது’ என்று. இது போதாதா கண்ணனின் ஆர்.எஸ்.எஸ். மனோபாவத்தைக் காட்ட?

சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் வானொலி நிலைய குண்டுவெடிப்பிற்கு காரணம் ‘நிறப்பிரிகை’ தான் என்று எழுதியது தினமலர். மேலும் ‘நிறப்பிரிகை’, தமிழ்த் தீவிரவாதிகளுக்கு சுற்றுக்கு விடப்படும் ரகசிய பத்திரிக்கை என்றும் எழுதியது. (இத்தனைக்கும் தேசியம் குறித்த விவாதத்தைத் தமிழ்ச் சுழலில் தொடங்கி வைத்தது நிறப்பிரிகை. தமிழ்த் தேசியர்கள் இன்றளவும் அ.மா. மீது காய்ச்சலோடே இருக்கின்றனர்). எதிர்க்கலாச்சாரம், எதிர் அரசியல் என்று பேசுபவர்களை ஒடுக்க அரசாங்கத்திற்கு ஆள்காட்டி வேலை பார்த்தது ‘தினமலர்’. இன்று அந்த வேலையைத் தனதாக்கிக் கொண்டுள்ளது ‘காலச்சுவடு’.

இறுதியாக மார்க்ஸ் எவ்வளவு ‘மோசமான மனிதர்’ என்பதையும் நிரூபிக்கத் தவறவில்லை கண்ணன். தமிழ்ச் சூழலில் முதன்முதலில் பெரும் பத்திரிக்கைக்கு பொறுப்பேற்றிருந்த சென்னையில் தனியாகக் குடியிருந்த பெண் திருமதி. வாசந்திக்கு ‘இந்தியா டுடே’ மலந்துடைத்து அனுபினாராம் மார்க்ஸ். தானாடாவிட்டாலும் பூணூல் ஆடுகிறதே, கண்ணா!

நீங்கள் சென்னையில் தனியாகக் குடியிருக்கவில்லை என்று எண்ணுகிறேன். அம்மாடு, அத்திம்பேர், தோப்பனார் சகிதம் கூட்டுக் குடும்பமாக வசிக்கும் ‘ஆம்பிளை’ என்று நம்புகிறேன். (‘ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே’, ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ போன்ற பாடல்கள் எஸ்.ஏ.ராஜ்குமார் பின்னணி இசையில் ஒலிக்கின்றன). பெரியாரையும், தலித் அரசியலையும் மார்க்கெட் பொருளாக நினைக்கும் முஸ்லிம்களை ஆதரிப்பதே பயங்கரவாதம் என்று பேசும் தலித் ஆதரவு பம்மாத்து காட்டும் இலக்கியத் தினமலர் காலச்சுவடை மலந்துடைத்து, தங்களுக்கு அனுப்புவது தவறில்லையென்றே எனக்குத் தோன்றுகிறது. தோழர்களே உங்களுக்கு?

ஓரு பின் குறிப்பு:

அவசரப்பட்டு கட்டுரையை முடித்துவிட்டேன். நம் மலந்துடைக்கவும் தகுதியானதுதானா காலச்சுவடு என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது.

நன்றி: புதிய தடம், ஜூன் - ஆக.2002

(காலச்சுவடின் ஆள்காட்டி அரசியல் நூலிலிருந்து)

- சுகுணா திவாகர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It