vinayaga rally in tamilnaduகொரோனா நெருக்கடியை இந்தியப் பார்ப்பனிய அரசு தன் அரசதிகார வெறியை நிலைப்படுத்திக் கொள்ள முழு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

கொரோனாவை ஒழிப்பதற்கு அது திட்டமிட்டதாகத் தெரியவில்லை. மாறாக இந்தச் சூழலைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராக, ஆரியப் பார்ப்பனிய அதிகாரத்திற்கு எதிராக உள்ள அனைத்து இருப்புகளையும், முயற்சிகளையும், கருத்துகளையும் அழித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது...

மொழித் தேசங்களை அழிக்க, ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே வாழ்வியல், ஒரே வரலாறு, ஒரே ஓர் ஆட்சி, ஒரே ஒரு கட்சி - என்று மக்களாட்சி முறைக்கு மாறான முற்றதிகார ஆட்சிமுறைக்கு வழிவகுக்கும் ஆர்எஸ்எஸ்-இன் திட்டத்தைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
கல்விக்கூடங்கள், கல்வி முறைகள், ஊடகத் துறைகள், ஆட்சித் துறைகள், ஞாய(நீதி)த் துறைகள் வழிபாடு, வாழ்வியல் முறைகள், வரலாற்றியல், தொல்லியல் துறைகள் - என அவற்றிற்கான எல்லாவகை அடித்தளங்களையும் எப்படி அமைத்துக் கொள்ளலாம் என ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஆரியச் சார்பு கட்சிகள் அமைத்து விட்டிருப்பதால் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்து அவர்கள் கோடு போட்ட பாதையில் மிக எளிதாக சாலை போட்டுக் கொண்டிருக்கிறது.

இவற்றை யெல்லாம் உணர்ந்து கொள்ளவும், அவற்றிலிருந்து தங்களை மீட்டு உரிமைப்படுத்திக் கொள்ளவும் அடிமைப்பட்டுள்ள ஒவ்வொரு மொழியின மக்களும் செயல்பட்டாக வேண்டும்.

அவ்வகையில் எல்லாம் ஒவ்வொரு தேசத்திலும் என்னென்ன நடந்தன, நடக்கின்றன என்பது குறித்தும், தமிழகத்தில் ஆரிய அதிகார வகுப்பின் உள்ளடி வேலைகள் என்னென்ன நிலையின என்பது குறித்துமான ஆய்வே இக்கட்டுரை. ஏற்கனவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட அரசியலும் நடைமுறைகளும் வெவ்வேறு வழித் தடங்களில் சென்று கொண் டிருக்கிற நிலையில் பல்வேறு குழப்பங்கள்...

• தமிழ்நாடு விடுதலையா? தமிழீழ விடுதலையா? அல்லது இரண்டையும் இணைத்து ஒன்றாக முயற்சி செய்வதா?

• இரண்டையும் சேர்த்தா? தனித்தனியாகவா? அது முதலிலா, இது முதலிலா? இப்படி ஒரு வகைக் குழப்பம்..

• தமிழ்நாட்டின் விடுதலைக்குரிய முதன்மை எதிரி யார்? இந்தியமா? திராவிடமா? திராவிடத்தை ஒழிக்காமல் இந்தியத்தை ஒழிக்க முடியுமா?

• திராவிடமே இரண்டகம் இழைத்தது. அதனால் அதையே முதலில் ஒழிக்க வேண்டும்! இரண்டையும் ஒரே இலக்கில் எதிர்த்திட வேண்டும்.

• இப்படியாக ஆரியத்திற்கெதிராக நூற்றாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் அடையாளச் சொல்லையும், திராவிட நாடு என்று இல்லாத ஒன்றையும், யாரும் இப்போது சொல்லாத ஒன்றையும், பொய் உருவாய்க் காட்டி அதை எதிர்ப்பதான இன்னொரு வகைக் குழப்பம்...

• தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைத் தர மறுப்பவர்கள் கன்னட இனவெறியர்களே. முல்லைப் பெரியாற்று நீரைத் தடுப்பவர்கள் மலையாள இன வெறியர்களே; அவர்களே தமிழர்களின் முதற் பகைவர்கள்... இப்படியாக அவர்களையே உடனடி எதிரிகளாகக் காட்டிச் செயல்படும் வழித்தடக் குழப்பம்...

• தமிழ்நாடே அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலையில் அதை மீட்பதற்கான இலக்கின்றி, தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் தமிழர் ஒருவரையே முதலமைச்சராக்க வேண்டும்... பிறப்பால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர் ஒருவர் முதலமைச்சராக இல்லாததால்தான் தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய இழப்புகளும் ஏமாற்றங்களும்... என்று தமிழ்த் தேச விடுதலை அரசியலையே தடம் மாற்றித் தன்னை முதலமைச்சராக்கிக் கொள்ள முனையும் சிலரின் திசைவழியிலான இன்னொரு வகைக் குழப்ப வழித்தடம்...

இப்படியாகக் குழப்பப்படும் நிலையில், தமிழக மக்களிடையே தமிழ்த் தேச இயக்கங்களும், பொதுவுடைமை இயக்கங்களும், சாதி ஒழிப்பு இயக்கங்களும் செய்கிற களப் பணிகளைவிட வைதீகப் பார்ப்பனியச் சார்பிலான ஆர் எஸ் எஸ்ஸின், அதன் பரிவார அமைப்புகளின் களப்பணிகளே அதிகமாகி வருகின்றன.. அவற்றுக்குச் சார்பாக இயங்கும் கட்சிகளும், இயக்கங்களும் தனி யாட்களும் அவற்றுக்குக் களம் அமைத்துத் தருகின்றனர்...
தமிழ் உணர்வைச் சிதைப்பதற்கும், சாதிய உணர்வுகளை அதிகப்படுத்துவதற்கும், சாதி சார்ந்த மக்களிடையே உள்ள பகைப் போக்குகளை வளர்ப்பதற்கும், மதவியல் மூடநம்பிக்கைகளை அதிகப்படுத்துவதற்கும், தமிழகம், தமிழ்நாடு என்பதான அடையாளங்களே இல்லாமல் செய்வதற்கும் அத்தகைய வைதீக இயக்கங்கள் திட்ட மிட்டுச் செயலாற்றி வருகின்றன.

தமிழகத்தில் உள்ள தேர்தல் கட்சிகளுக்குள் தொடங்கி, இயக்கங்கள் பலவற்றுக்குள்ளும், உள்ளூரில் இருக்கும் சிறுசிறு மன்றங்களுக்குள் வரையிலும் நுழைந்து அவற்றைத் தன்வயப் படுத்துவது அல்லது கூறு படுத்துவது, அவற்றின் குறிகோள்களை, கொள்கைகளை மாற்றுவது, அவற்றிடையே இந்துத்துவ வெறியை ஊட்டி அவர்களின் அறிவை நஞ்சாக்குவது போன்ற எண்ணற்ற வேலைகளே இப்போது அதிகமாக நடந்து வருகின்றன.

அவ்வகைப் போக்குகள் எவ்வாறெல்லாம் நடைபெற்றன, நடை பெற்று வருகின்றன அவற்றையெல்லாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பதான செய்திகளைக் குறிப்பாகவாவது தமிழர்கள் அறிந்தாக வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை சில விளக்கங்களைத் தருகின்றது.

பிற கட்சிகளைப் போல பா.ஜ.க.வும் ஒரு கட்சியா?

திமுக போல, அதிமுக போல, மதிமுக போல இன்னும் பிற கட்சிகளைப் போல... பாஜகவும் ஒரு கட்சி தானே! அதை மட்டும் ஏன் கடுமையாக எதிர்க்க வேண்டும்... அதில் சேர்வதுமட்டும் என்ன வகையில் தவறு என்பதாகவும், ஆர்எஸ்எஸ் அப்படி என்ன பெரும் கொடுமைகளைச் செய்துவிட்டது... அதன்மீது எதற்காக இவ்வளவு கடுமையான எதிர்ப்புகளைச் செய்ய வேண்டும் என்றும், பார்ப்பனச் சாதியினர்களா, தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் பிற்படுத்தப் பட்டவர்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர், சாதி வெறியோடு, வன்முறை செய்பவர்கள் இடைநிலைச் சாதி வெறி யர்கள்தாமே அவ்வாறு செய்கின்றனர்.. அவர்களை எதிர்க்காமல் பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டும் என்கிறீர்களே என்றும் அறியாத பலரும் இப்போதும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குமுகச் சூழல் காரணமாக நடைமுறை அளவில், மற்ற கட்சிகள் சாதியைப் பயன்படுத்தித் தங்கள் கட்சியை வளர்த்துக் கொள்ளவும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றும், தங்கள் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கருதுகின்றனவேயன்றி, சாதி இருக்க வேண்டும் என்றோ, வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும் என்றோ, மூட நம்பிக்கைகள் பரப்பப்பட வேண்டும் என்றோ அப்போக்குகளைத் தங்கள் கோட்பாடாகக் கொள்கையாக அவை வைத்திருக்கவில்லை.

ஆனால், ஆர்எஸ்எஸ் - இற்கும் பாஜகவிற்கும் அவைதாம் கொள்கையும் கோட்பாடும். எனவே அக் கோட்பாட்டைத் தாங்களாகவும் அல்லது கூலிக்கு ஆட்களை வைத்தும் நடைமுறைப் படுத்தி வருகின்றன. காந்தியைக் கொலை செய்தது தொடங்கி எனத் தொடர்ந்து காலம் நெடுகிலும் கொலை செய்ததும், கல்புர்கி, கௌரி லங்கேஷ் எனத் தொடர்ந்து செய்து வருவதும், மண்டைக் காடு கலவரம், குஜராத் கோத்ரா வண்டி எரிப்பு - தொடர்ந்த கலவரங்கள், கோவைக் கலவரங்கள், மும்பைக் கலவரம் எனப் பன்னூறு மத, சாதிக் கலவரங்களை நேரடியாக ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களே செய்யாமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் கூலிப்படைகள்தாம் செய்தன என்பது அனைவரும் அறிந்ததே.

நாடார், முக்குலத்தோர், வன்னியர், கவுண்டர் என்கிற ஒரு குறிப்பிட்ட சாதி என்பது ஒரு கோட்பாடு இல்லை. அவற்றின் ஆண்டைகள் சிலர் அவர்களின் வகுப்பு (சாதி-வர்க்க) அதிகாரத்தை நிலைப்படுத்திக்கொள்வதற்கான வகையில் தூண்டி, கூலி ஆட்களை வைத்துக் கொண்டு வெறிச்செயல் செய்து வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு சாதிக்குள்ளும் அச் சாதியின் பெரும்பான்மை மக்கள் ஏழை அடித்தட்டு மக்களாகவே உள்ளனர், அவர்கள் தங்கள் வாழ் நிலையிலிருந்து விடிவைக் காண வேண்டுமான நோக்கம் உடையவர்கள். மார்க்சியம் தங்கள் வாழ்நிலை விடுதலைக்கு வழி சொல்வதாக அவர்களுள் சிலரும், பெரியாரியம் தங்கள் விடுதலைக்கு வழி சொல்வதாகச் சிலரும், வள்ளலார் வழி செயல்படுகின்றவர்கள் ஒரு பகுதியினரும், வைகுண்டர் வழி, பசும்பொன் முத்துராமலிங்கனார் வழி செயல்படுகின்றவர் என்று ஒருபகுதியினரும் என்று அவரவர்கள் ஏற்றுக் கொண்ட கொள்கையை நோக்கிச் செயல்படுவதோடு மேற்படி அந்தந்தச் சாதிகளுக்குள்ளான வெறிப் போக்குகளை எதிர்க்கவும் கண்டிக்கவுமான நிலைப்பாடு கொண்டுமிருக்கின்றனர்.

ஆனால், பார்ப்பனியத்தைக் கோட்பாடாக ஏற்றுக் கொள்பவர் எவரும் சாதி ஒழிப்பை ஏற்பதில்லை, (தீண்டாமையை ஒழிக்க வேண்டும் எனப் பசப்பு மட்டுமே பேசுபவர்கள்) வர்ண ஒழிப்பை ஏற்பதில்லை, முதலாளிய ஒழிப்பை ஏற்பதில்லை, மத மறுப்பை ஏற்பதில்லை, மூடநம்பிக்கை எதிர்ப்பை ஏற்பதில்லை - எனவே பார்ப்பனியமே சாதிக்கு, வருணத்திற்கு, மதத்திற்கு, மூடநம்பிகைகளுக்கெல்லாம் பக்க வலுவாய் இருந்து காத்து வருவதை அறிய முடியும். அதன் வழியில் பார்ப்பனிய அதிகாரத்தை ஒழிப்பது என்பதும் மேற்சொல்லப்பட்ட அதிகாரங்களை ஒழிப்பது என்பதும் பிரிக்க முடியாதவை. அவை அனைத்தோடும் பார்ப்பனியம் ஒன்றைஒன்று சார்ந்ததாகவே இயங்குகிறது.

பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்கள் மட்டுமே அன்று. பார்ப்பனர்களில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பனிய அதிகாரங்களைக் கொண்டவர்கள் என்பதால் இயல்பாகவே அவர் களின் அதிகாரமும் எதிர்க்கப்பட வேண்டிய நிலையிலாகின்றது. பிற சாதிகளைச் சார்ந்த சிலரும் பார்ப்பனிய அடிவருடிகளாகச் செயல் படுவதால் அந்த அடிவருடிகளும் அந்த அரங்குக்குள் இருப்பதன் வழி எதிர்க்கப்பட வேண்டியவர்களாகின்றனர்.
எனவேதான் இந்தியப் பார்ப்பனியத்தின் கருவாக இயங்குகிற அனைத்துக் கட்டமைப்புகளையும், குறிப்பாக ஆர்எஸ்எஸ் - ஐயும், அதன் ஆக்டோபசு கைகளாக இருக்கிற பாஜக உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட சங்பரிவார் அமைப்புகளையும் எதிர்க்க வேண்டியுள்ளது.

அவ்வகையில், முதலில் ஆர்எஸ்எஸின் கொள்கை கோட்பாடுகள் நடைமுறைகள் பற்றி (அவை குறித்தெல்லாம் விரிவாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன என்றாலும், அவற்றின் சாரத்தைப் பற்றி)ச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம் :

ஆர்.எஸ்.எஸின் கொள்கை கோட்பாடுகள் :

• பல்வேறு மொழித் தேசிய இனங்கள் இந்தியாவிற்குள் இருக்கக் கூடாது என்கிறது ஆர்எஸ்எஸ்... அதாவது இந்தியா என்பது இந்து நாடு. இந்து என்பது ஓர் இனம். அதற்கென்று ஒரு தனித்த பண்பாடு வாழ்க்கை முறைகள் உண்டு. அந்த வாழ்க்கை முறைக்குள் உட்பட்டவர்கள்தாம் சமணர்களும் புத்த சமயத்தவர்களும், சிவனியர்களும், வைணவர்களும், கடவுள் இல்லை - மதம் இல்லை என்பவர்களும்கூட.. அதாவது இந்தியாவிற்குள் பிறந்து சில காரணங்களால் மதம் மாறிப் போனவர்களும் அவர்கள் இங்குள்ள வாழ்முறையை ஏற்கிறபோது அவர்களும் இந்துக்கள் தாம் என்கிறது ஆர்எஸ்எஸ்.

• கல்வியில், வைதீகக் கல்வி முறைதான் இருக்க வேண்டும் என் கிறது. சமசுகிருதமும் இந்தியுமே கல்வி மொழியாகக் கட்டாயப் படுத்தவேண்டும் என்கிறது. (சமசக்கிருதம் இந்தியாவின் பொது மொழியாக ஆட்சிமொழியாக ஆக்கப்படுகிறவரை, இந்தியே இருக்கலாம்; என்பதே அவர்களின் கொள்கை) ஆங்கிலமோ பிற மொழிகளோ கூடாது என்பதும் வேண்டுமானால், தாய்மொழியை மொழிப்பாடமாக மட்டும் படிக்கலாம் என்பதும், இந்துப் பண்பாடு வாழ்முறைகள் மட்டுமே கல்வியாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்றும், வேத, வைதீக, புராண சாஸ்திரங்கள் மட்டுமே வரலாறாக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வேலைகளைச் செய்கிறது. கல்வி அனைவருக்குமாக, இலவயமாகத் தரப்பபட வேண்டும் என்பதற்காகவோ, வெளிநாட்டினர் பலரும் இங்கு வந்து கல்விக்கூடங்கள் அமைத்து இண்டர்நேஷனல் பள்ளிகள் நடத்துவதை மறுத்தோ, சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயாவில் ஆங்கிலக் கல்வியே முதன்மைப் படுத்தப்படுவதை மறுத்தோ, இங்குக் கல்வி கற்றவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு உழைத்திடுவதைப் பற்றியோ, இங்குள்ள வெளிநாட்டு ஐடி நிறுவனங்கள் வழியும், பிற கனிம வளங்கள் உள்ளிட்ட சொத்துக்களையும், மண்ணின் மக்களின் உழைப்பையும் வெளிநாடுகள் சூறையாடுவதைப் பற்றியோ, ஆர்எஸ்எஸ் கேள்வி கேட்பதும் இல்லை, அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடுவதும் இல்லை. திரைமறைவில் அவர்களோடெல்லாம் கூட்டுச் சேர்ந்து பங்கு வாங்கிக் கொண்டு ஆரியக் கருத்தியலுக்குச் சார்பாக அவர்களை வளர்க்கவே செய்கிறது..

• சமஸ்கிருதமே உயர்ந்த மொழி என்றும், மாந்தர்கள் வாழும் இந்த உலகத்தில் மட்டுமல்லாமல் அவர்கள் மறைந்த பிறகு சென்றடைவதாகப் புளுகுகிற தேவலோகம் முழுக்க சமஸ்கிருதமே மொழி. அதையே அனைவரும் போற்றிக் கொள்ள வேண்டும். எனவே, அதற்கு அதிகப்படியாகச் செலவு செய்வது தவறு இல்லை என்றும் கூறுகிறது ஆர்எஸ்எஸ்.

• சாதிகள், வருண வேறுபாடுகள் இருந்தால்தான் சமூகத்தில் மேலிருந்துகீழ் வரையான அனைத்துத் தரப்பு வேலைகளும் ஆச்சார ஒழுங்கு முறைகளும் செப்பமாக இருக்கமுடியும் என்கிறது ஆர்எஸ்எஸ்.

• ஒவ்வொரு மொழி இன மக்களுக்கும் தனித்தனி வரலாறுகள் என்றெல்லாம் இல்லை. பாரதத்தின் வரலாறே. பழமையான வரலாறு. அதற்குள் உள்ளடக்கப் பட்டவையே பிற வரலாறுகள் எல்லாம். எனவே ஒவ்வொரு மொழித் தேசத்திற்கும் தனித்தனி வரலாறுகள் உண்டு என்பதும், குமுக வாழ்முறைகள், பண்பாடுகள் உண்டென்பதும் அப்பட்டமான பிரிவினைவாதம் என்கிறது ஆர்எஸ்எஸ்..

• சுதேசி என்று முழக்கமிட்டாலும் அமெரிக்காவுடனும், பிற வல்லரசு நாடுகளுடனும் கூட்டுச்சேர்ந்து, அந்நாட்டு முதலாளி களை அழைத்து வந்து இங்குள்ள வளங்களை எல்லாம் சூறையாடிக் கொண்டு செல்ல வழி அமைத்துத் தருகிற இந்திய அரசே தேசிய அரசு என்றும், மாறாகச் சுதேசி என்கிற வகையில் முதலாளியச் சுரண்டல் கருத்துடைய வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களை எதிர்ப்பதும், வெளியேற்றச் சொல்வதும், அல்லது அதற்காகப் போராடுவதும் தீவிரவாதம் என்று ஆர்எஸ்எஸ் சொல்கிறது.

• வைதீகப் பார்ப்பனியக் கோட்பாடுகளுக்கு எதிரான மொழித் தேசங்களைச் சிதைக்கிறது.. பொதுவுடைமைக் கருத்துகளை எதிர்க்கிறது. மொழித் தேசங்களை இரண்டாக மூன்றாகப் பிளவுபடுத்த வேண்டும் என்று கூறுகிறது; அப்படிச் செய்தும் வருகிறது; மொழிகளை இழிவுபடுத்திப் புறக்கணிக்கிறது. கோயில்களில் பார்ப்பன அதிகாரங்களைச் செலுத்தி சமசுக்கிருதத்தில் மட்டுமே வழிபாடு, குடமுழுக்குகளைச் செய்ய வலியுறுத்துகிறது..

• அனைத்துக் கோயில்களிலும், அனைத்துச் சாதியினரையும் பூசாரிகளாக ஆக்க வேண்டும் என்றோ, திருமணம் உள்ளிட்ட வாழ்க்கைச் சடங்குகளை அனைத்துச் சாதியினரும் செய்யலாம் என்றோ ஆர்எஸ்எஸ் வலியுறுத்துவது கிடையாது.

• தீண்டாமையை எதிர்ப்பதாக மேலோட்டமாகப் பேசியும், தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் எனச் சாதியக் கண்ணோட்டத்தோடு குமுகத்தை இயக்கி வருவதும், சாதிய உணர்வுகளும் வெறித்தனமும் குமுகத்தில் நீங்கிடாதபடி கவனித்துத் தூண்டி விடுவதும், எந்த நிலையிலும் இடஒதுக்கீட்டை ஏற்காமல் மறுப் பதும் ஆர்எஸ்எஸின் திட்டமிட்ட தொடர் வேலையாக இருந்து வருகிறது...

• மதங்களுக்கு இடைப்பட்ட முரண்களை உருவாக்கி இந்து - வைதீகவெறி உணர்வைத் தூண்டி, குமுகத்தில் உள்ள எல்லா வகைச் சிக்கல்களுக்கும் வைதீக - இந்து அல்லாத பிற சமயத்தினர்களே காரணம் என்பதாகக் காட்டி வருகிறது. சமணம் தொடங்கி புத்த சமயத்தினரையெல்லாம், அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு கொலைசெய்ததும், தீயிட்டதுமான வெறித்தன வைதீக வெறியால் அழித்த கடந்தகால வரலாறும்.. அதன் தொடர்ச்சியாய்ப் பின்னர்க் கிறித்தவர்களை, இஸ்லாமியர்களை என அனைவரையும் எதிர்ப்பதன்மூலம், கலவரம் நடத்தி அழித்த துடன், அவர்களை எதிர்த்து அடக்கித் தங்களை மட்டுமே கொண்டதான பாரத நாட்டை உருவாக்கினால்தான் எல்லாச் சிக்கல்களும் தீரும் என்பதாகக் கதைக் கட்டினர் இப்போதும் கதைக் கட்டி வருகின்றனர்.

• மொத்தத்தில் கடந்தகாலப் பார்ப்பனர்களின் வெறித்தனங்களை, வேத, மனுதர்ம, அர்த்தசாத்திர கொடுமைகளை - வன்முறைகளையே கொள்கையாக, கோட்பாடாக நடைமுறையாக உள்ளடக்கத்தில் கொண்டிருப்பதே ஆர்எஸ்எஸ்...

- இப்படியான நோக்கங்களுக்காக 1925-இல் தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அதை வளர்த்துக்கொள்வதற்காகவும் வைதீக பாரதத்தை உருவாக்கிக் கொள்வதற்காகவும் செயல்படுத்தும் தில்லுமுல்லுகள், அடாவடித்தனங்கள் கொஞ்சநஞ்சமல்ல..

ஆர்எஸ்எஸ். தொடங்கப்படுவதற்குமுன் ஏறத்தாழ நூறாண்டுகள் அளவில் வைதீகப் பார்ப்பனியத்தின் கீழ் இந்துக்களை அணி திரட்டிட வேண்டுமான நோக்கத்தில் வங்காள, குசராத்திய, மராட்டிய, கொங்கனிய பிராமணர்கள் பல்வேறு இயக்க, செயல் முயற்சிகளைச் செய்தனர்.. அவற்றின் தொடர்ச்சியின் இறுதியாகவே ஆர்எஸ்எஸ். தொடங்கப்பட்டது. மூஞ்சே, பாஞ்சிசடெ, எட்கேவர், தபல்கர், சாவர்க்கர் என ஐவரால் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டிருந்தாலும் முதல் ஒருங்கிணைப்புத் தலைவராக இருந்தவர் எட்கேவர்.

எல்லா மொழித்தேச மக்களையும் தங்களின் கொள்கை, கோட் பாடுகளுக்கு அடிமைகளாக்கி ஆள்வதற்காக அது எடுத்துக்கொண்ட வேலைத்திட்டங்கள் விரிவானவை.. ஒவ்வொரு மொழித் தேசங்களுக்குள்ளாகவும் அதன் கொள்கைகளையும் அமைப்பையும் கட்டமைத்துக் கொள்வதற்காக அது செய்த சூழ்ச்சிகள் கட்டாயம் அறியப்பட வேண்டியவை.. மிக விரிவானவை... அவ்வகையில் தமிழ்நாட்டிற்குள் அது நுழைந்ததும், நுழைந்து காலூன்றுவதற்கு அது எடுத்துக் கொண்ட முயற்சிகளும் மிகப்பெருமளவில் கவனிக்கப்பட வேண்டியவை.

ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிராக இயங்கிக் கொண்டிருந்த தமிழ் உணர்வாளர்களை, தமிழ்த்தேச உணர்வாளர்களை, பார்ப்பனிய எதிர்ப்பு உணர்வாளர்களை, சாதி ஒழிப்பு நோக்க உணர்வாளர்களை, சமன்மை இலக்கு நோக்கிய உணர்வாளர்களை எல்லாம் கடந்து ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டிற்குள் எப்படி நுழைந்தது, தனது பரிவாரங்களுடன் நுழைந்து கொண்டிருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்திடாமல், அதை நாம் தடுத்துவிடவோ, எதிர்த்து விடவோ இயலாது...

எனவே, ஆர்எஸ்எஸ், தமிழ் நாட்டிற்குள் நுழைந்ததையும், தமிழ் நாட்டிற்குள் நிலையாய்க் காலூன்றுவதற்காக நடத்திக்கொண் டிருக்கக்கூடிய சூழ்ச்சி உள்ளடி வேலைகளையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

பார்ப்பனிய வெறி கருத்துகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து ஆயிரமாண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. வைதீகம் எனும் பெயரை உருவாக்கிக்கொண்டு அப்போதைய அரசர்களையும் நிலவுடைமை ஆண்டைகளையும் அண்டித் தங்களைத் தக்கவைத்து கொண்டனர்.

சமற்கிருதத்தைத் தேவமொழி என்று உயர்த்திக் கூறிக் கொண் டனர், தங்களைத் தேவ உலகத்தினர் என்று கூறிக் கொண்டனர். மனு தர்மங்களும் வேதங்களும் அவ்வாறே சொல்வதாகக் கூறினர். பிரம்மா என்பவரே படைப்புக் கடவுள் என்று கதை கட்டிவிட்டனர். அந்தப் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவர்களே பிராமணர்கள் என்றனர் (இரிக்கு வேதம் எட்டாம் கட்டளை). பிராமணர்கள்தாம் பிற வர்ணத்தவர்களுக்குத் தெய்வம் என்றனர் (பத்தாம் ஸ்லோகம் மனுதர்மம் அத்தியாயம் 1 ஸ்லோகம் 100).

அரசர் வழியும் நிலவுடைமையாளர்கள் வழியும் நிலத்தையும் பொன்னையும் பொருளையும் கொடையாகப் பெற்றனர். தமிழர் களின் அறிவைப் பறித்து சமஸ்கிருதத்தில் எழுதிக் கொண்டபின், தமிழ் இலக்கியங்கள் பலவற்றை அழித்துவிட்டனர். குறிப்பாக மருத்துவம், வானியல், கணக்கியல், மெய்யியல் என அவர்களால் திருடப்பட்டவை பல.

ஆளவந்த வந்தேறி அரசர்களுடனெல்லாம் உறவாடித் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் அவர்களுக்குக் காட்டிக் கொடுத்ததோடு, அவர்களுக்குத் துணை நின்று பார்ப்பனியச் சார்புடைய அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொண்டனர்.

அதே தொடர்ச்சியில்தான் ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக நுழைந்தது தொடங்கி, அவர்கள் ஆட்சி உருவாக்கிக் கொண்டபின் ஒருபுறம் அவர்களின் அதிகார அணிகளுக்குத் துணையாக இருந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும், இன்னொருபுறம் ஆங்கிலேய எதிர்ப்புக்குரிய விடுதலைப் போராட்டங்களைத் தங்கள் தலைமை யில் ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்லும் வகையில் வைதீகப் பார்ப்பனியம் செயல்பட்டது.

பார்ப்பனியச் சார்பு நிலைக்கு அல்லாத தலைமைகளிடம் விடுதலைக்குப் பின் இந்திய அதிகாரம் போய்விடப் போகிறது எனும் அச்சத்தில் முழுக்க முழுக்கப் பார்ப்பனிய அதிகாரத்தை நிறுவும்படி யான அதிகாரம் வாய்ந்த ஓர் அரசை உருவாக்கும் நோக்கத்திலேயே 1925-இல் ஆர்எஸ்எஸ் - ஐ உருவாக்கினர்.

அவ்வகை நோக்கத்திலிருந்து அது தோற்றுவிக்கப்பட்ட அதன் தொடக்கக் காலத்திலிருந்து இன்றைய காலம் வரை அதன் செயல் பாடுகளை நான்கு வகையாகப் பிரித்து அறியலாம் :

1. காந்தி கொலை செய்யப்பட்ட காலம் வரை
2. காந்தி கொல்லப்பட்ட காலத்திலிருந்து நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலம் வரை
3. நெருக்கடி கால நிலையிலிருந்து பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலம் வரை
4. பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்திலிருந்து மோடியின் இப்போதைய ஆட்சிக் காலம் வரை

இந்தக் காலங்களில் அதன் இலக்கு நோக்கி மக்களை எப்படி யெல்லாம் திரட்டினார்கள் என்பதும், எல்லா அமைப்புகளுக் குள்ளும் எப்படி ஊடுருவினார்கள் என்பதும், அவற்றையெல்லாம் எப்படித் தன்வயப் படுத்தினார்கள் என்பதும் அறியப்படவேண்டிய முகாமைச் செய்திகள்.

1. காந்தி கொலை செய்யப்பட்ட காலம் வரை

ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட காலம் (1925) முதல் எட்கேவர் 1937 வரை காங்கிரஸ் கட்சியிலும் இயங்கிக் கொண்டிருந்தார் என்பது முகாமையானது. எனவே அந்தக் காலங்களில் காங்கிரசோடு தொடர்பு கொண்டிருந்த பொதுவுடைமைக் கட்சியினர் சிலரும்கூட ஆர்எஸ்எஸ் வுடன் தொடர்புடையவர்களாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மராட்டிய கொங்கனி பகுதிகளைச் சார்ந்த சித்பவன பிராமணர் களான திலகர், சாவர்க்கர் உள்ளிட்டோரின் தொடர்பில் நாக்பூரைச் சேர்ந்த பிராமணர்களே ஆர்எஸ்எஸ்-க்கான வித்தாக இருந்தாலும், அவர்களில் பெரும்பான்மையோர் கல்கத்தாவில் விவேகானந்தா நிறுவனங்களிலும் அங்குள்ள ஆசிரமங்களிலும் பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர்

1938-இல் சாவர்க்கார் எழுதிய நாம் அல்லது நமது தேசியத்தின் விளக்கம் எனும் நூலும், எட்கேவரின், தேசம் என்பதை இந்துத் துவத்தோடு தொடர்புபடுத்திய ஆய்வும் ஆர்எஸ்எஸ் பேசக்கூடிய அடிப்படைக் கருத்துகளை வலுப்படுத்தி விளக்கப்படுத்தின.

சாவர்க்கார் தொடங்கியிருந்த இந்துமகா சபையும், ஆர் எஸ் எஸ் உம் இணைந்தே பல வேலைத்திட்டங்களை வகுத்துக் கொண்டன. சித்பவன பார்ப்பனர்கள் எங்கெல்லாம் அரசு வேலைகளில் இருக் கிறார்களோ அவர்களெல்லாம் ஆர்எஸ்எஸ் - இல் இணைக்கப் பட்டனர். அரசின் அதிகாரத் துறைகளில், படைத்துறைகளில், காவல் துறைகளில் உள்ளீடாக நுழைந்து ஆர்எஸ்எஸ் வளர்க்கப் பட்டது.

அமைச்சர்கள் அளவில் இருந்த காங்கிரசுகாரர்களுள் பலரும் ஆர்எஸ்எஸின் உறுப்பினர்களாக இருந்தனர். எட்கேவர் மறைவுக்குப் (1940) பிறகு, நாக்பூரைச் சேர்ந்த பிராமணர் கோல்வால்கர் கல்கத்தா விவேகானந்த ஆசிரமத்தின் வழிகாட்டலில் செயல்பட்டார். 1939-இல் ஆர்எஸ்எஸின் பொதுச் செயலாளராக இருந்த அவரின் தலைமையில் இன்னும் கூடுதலான வேலைகள் நடந்தன

1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் ஈடுபடாமல் ஒதுங்கியது மட்டுமன்றி, ஆங்கிலேயருக்கு ஆதரவாகப் பல வேலைகளைச் செய்தது என்பதும், பலரையும் காட்டிக் கொடுத்தது என்பதும் வரலாற்றில் அறியப்பட வேண்டிய செய்திகள். ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வகையில் எழுச்சியோடு அப் போராட்டம் நடைபெற்றிருந்த போதிலும், அப் போராட்டச் செயல்பாடுகளில் ஆர்எஸ்எஸ் ஈடு படாமல் ஒதுங்கி இருந்தது.

அந்த இயக்கத்திற்குப் பின்னர் வன்மையாக இஸ்லாமிய எதிர்ப்பை அதிகப்படுத்தி இந்துக்கள் என்கிற பார்வையை விரைவு படுத்தியது ஆர்எஸ்எஸ். பல பகுதிகளாக இருந்த பல அரசுப் பகுதி களை யெல்லாம் இந்தியாவிற்குள் இணைக்க காங்கிரசில் படேலின் முயற்சிக்கு ஆர்எஸ்எஸின் துணை இருந்தது கவனிக்கத்தக்கது.

காஷ்மீரை இணைப்பதற்குக் காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கை 1947-இல் சந்தித்துப் பேசி இணைக்கிற வேலைகளில் கோல்வால்கரையே பட்டேல் ஈடுபடுத்தியது அறிய வேண்டியது.

1948 சனவரி 30ஆம் நாள் இந்து மகா சபை - ஆர்எஸ்எஸின் திட்டமிடலில் காந்தியைக் கோட்சே சுட்டுக் கொன்றதன் பின், ஆர்எஸ்எஸ் பிப்ரவரி மாதத்தில் தடை செய்யப்பட்டது.

ஆர்எஸ்எஸ் கொல்லவில்லை எனப் பொய்கூறியது மட்டுமன்றி, தடைசெய்யப்பட்டபின் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பதுங்கிக் கொண்டனர். பலர் அடிபணிந்து காங்கிரசு தலைவர்களிடமெல்லாம் மன்றாடி தடைநீக்கம் செய்யக் கேட்டுக் கொண்டனர்.

1949 சூலை 11ஆம் நாள் தடைநீக்கப்படுவதற்கு முன்பாகப் பட்டேல் கோல்வால்கரைச் சந்தித்துப் பேசியது கவனிக்கப்பட வேண்டியது. ஆர்எஸ்எஸ்-ஐப் பாதுகாப்பதில் பட்டேல் மிகமிக அக்கறை கொண்டு தொடர்ந்து போராடியது அறியப்பட வேண்டியது. ஆக, காங்கிரசுக் கட்சியின் தலைவர்கள் சிலரைத் தன் உறவுக்குள் வைத்துக் கொண்டே அரசின் நிர்வாகத் துறைகளிளெல்லாம் ஆர்எஸ்எஸ்-க்கு ஆதரவாளர்களை அமர்த்திக் கொள்ளும் வகையில் ஊடுருவியது.

2. காந்தி கொல்லப்பட்ட காலத்திலிருந்து நெருக்கடி காலநிலை அறிவிப்பு வரை

ஆர்எஸ்எஸ்-சின் திட்டங்களுக்கு ஏற்ப அரசின் அனைத்துத் திட்டங்களும் பல ஊர்களின் பெயர்கள் எல்லாமும் சமசுக்கிருதப் பெயர்களாகவும் வைதீகப் பெயர்களாகவும் சூட்டப்பட்டன.

காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பின் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டு மீண்டும் தடை நீக்கம் செய்யப்பட்ட பின், சில காலம் ஆர்எஸ்எஸ் வளர்ச்சி இல்லாமல் இருந்தது. முழு நேரப் பணிகளில் இருந்த பலரும் விலகி இருந்தனர். என்றாலும், அதன் கொள்கை அளவிலிருந்து அவர்கள் விலகிவிடவில்லை.
ஆர்எஸ்எஸ் தொடர்புடைய கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட பள்ளி, கல்லூரிகளைத் தொடங்கிச் செயல்பட்டனர். இதனால் தேர்தலில் ஈடுபாடு கொள்வதற்கான திட்டத்தை ஏற்று ஜனசங்கம் கட்சியை அதற்காக ஈடுபடுத்தி 1952 தேர்தலில் அக்கட்சி பங்கேற்றது. அதற்கு முன்பாக 1949-இல் மாணவர்களுக்கு என்று அகில பாரத்திய வித்தியார்த்தி பரிசத்தும், 1955-இல் பாரதிய மஸ்தூர் சங்கமும் 1952-இல் வனவாசிகள் கல்யாண் ஆஷ்ரம் எனும் அணி அமைப்புகளும் கட்டப்பட்டு வேலைகள் நடந்தன.

இதற்கிடையில் 1960-இல் கோல்வால்கர் சிந்தனைக் கொத்து நூலைக் கொண்டு வந்து, அதனடிப்படையில் கொள்கையைப் பரப்பியது, மொழிவழி மாநில அமைப்புகள் உருவெடுப்பதை ஆர்எஸ்எஸ் கடுமையாக எதிர்த்தது, இந்தியைத் தேசிய மொழியாக அறிவிக்க வலியுறுத்தியது, இந்துக்களின் பாதுகாப்புக்காக அறிக்கை களை விட்டது என அதன் பணிகள் நடந்தன.

1973-இல் கோல்வால்கர் மறைவுக்குப்பின் தேவரசு பொறுப் பேற்ற நிலையில் பல புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. 1952, 1957, 1962, 1971 தேர்தல்களில் பாரதீய ஜன சங்கத்தின் வளர்ச்சி நிலையையும் அவை எங்கெங்கு வளர்ந்தன என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆண்டு  நா.உ.எ காங்கிரசு           பா.ஜ.ச              மாநிலங்கள்

1952                482                  371                  1                      உத்திரப்பிரதேசம்

1962                494                  361                  5                      உபி (2), மகாராட்டிரம் (2),  இந்து மகாசபை (1)

1967                520                  283                  10                    உபி (7), மத்தியப்பிரதேசம் (3)

1971                518                  352                  34                    மபி (10), உபி (12), ராசசுதான் (3), தில்லி (6), பஞ்சாப் (1), சண்டிகர் (1), பீகார் (1)


(* நா.உ.எ - நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை, பா.ஜ.ச - பாரதிய ஜன சங்கம்)

அக்காலத்தில் ஆர்எஸ்எஸின் கொள்கை பரப்பு இதழாக 1942-இல் தி ஆர்கனைசர் ஆங்கில இதழும் 1948-இல் பஞ்ச சன்யா இந்தி இதழ் கிழமை இதழாகவும் கொண்டு வரப்பட்டது. இந்தி இதழின் ஆசிரியராக வாஜ்பாயும், இப்போதைய ஆசிரியராகத் தருண் விஜய்யும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்.

காங்கிரசில் நேருவுக்கு எதிராக இருந்தாலும் பட்டேலும் லால் பகதூர் சாஸ்திரியும் பிறரும் ஆர்எஸ்எஸ்-சோடு நெருக்கமாகவே இருந்தனர். 1947-இல் தில்லி சட்டம் - ஒழுங்கைச் சரிசெய்ய தில்லி படைத் துறைத் தலைவர், ஆர்எஸ்எஸ்-ஐச் சந்தித்ததும், 1949-இல் ஆர்எஸ்எஸ் தடை நீக்கப்பட்ட முன்பும் பின்பும் பட்டேலைப் பல முறை சந்தித்துப் பேசியதும், 1963-இல் குடியரசு நாள் அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் அழைக்கப்பட்டு பங்கேற்கிறபடி இலால்பகதூர் சாஸ்திரி செய்ததும், நேருவின் மறைவுக்குப்பின் சாஸ்திரி இந்தியத் தலைமை அமைச்சரானதால் ஆர்எஸ்எஸ் மகிழ்வு தெரிவித்து உறவு கொண்டாடியதும், 1965-இல் சாலைப் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய ஆர்எஸ்எஸ் தொண்டர்களை இந்திய அரசே அமர்த்தியதும், ஆர்எஸ்எஸ் அரசு அதிகாரங்களில் மட்டுமல்லாது தேர்தல்களில் வெற்றி அடைகிற வகையில் பல வேலைகள் செய்து கொள்ளவும் பயன்பட்டது.

1963 நேரு மறைவுற்ற ஆண்டு ஓர் ஊக்கமான நிகழ்வாக அதற்கு அமைந்தது. இலால் பகதூர் சாஸ்திரி துணையில் பெருமளவில் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது. விவேகானந்தர் நூற்றாண்டு விழாவை எல்லாப் பகுதிகளிலும் முனனெடுக்கிற நிகழ்வின் நிழலில் ஆர்எஸ்எஸ் ஊடுருவத் தொடங்கியது. விவேகானந்த கேந்திரா எனும் அமைப்பைத் தொடங்கி அதற்குள் பிற கட்சியினரை இணைப்பதுபோல் இணைத்து அவர்களைப் படிப்படியாக ஆர்எஸ்எஸ் தொடர்பினராக ஆக்கியது.

இந்நிலையில் இந்திராகாந்தி தலைமை அமைச்சராக இருந்த போது நடந்த ஊழல்களும் அதிகார வெறி போக்குகளும் மக்கள் நடுவில் எதிர்ப்பை உருவாக்க காங்கிரசை எதிர்த்து களம் காணத் திட்டமிட்டார் செயப்பிரகாசு நாராயணன்.

பிரசா சோசலிசுட் கட்சி - (ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமை யிலான கட்சி), லோக்தள், பழைய காங்கிரசு கட்சி(காமராசர் மறைவுக்குப் பின்), சுதந்திராக் கட்சி( ராஜாஜி மறைவுக்குப்பின்), பாரதிய சன சங்கம் (ஆர்எஸ்எஸின் தேர்தல் கட்சி) ஆகியவற்றை இணைத்து உருவாக்கிய ஜனதாக் கட்சி காங்கிரசை எதிர்த்து தேர்தலில் நின்று வெற்றி பெற்றது.

இந்திரா காந்தியின் அரம்பப் போக்கை வீழ்த்திட இந்த அளவு ஒருங்கிணைவு நடந்ததும், அதில் பாரதிய ஜனசங்கம் இணைந்ததும் ஆர் எஸ் எஸ் ஐ ஒரு சிறந்த இயக்கம் போல் மக்களிடையே காட்ட பயன்பட்டது.

அதுமட்டுமன்றி ஆர்எஸ்எஸின் தலைவர் தேவரசின் 1964ஆம் ஆண்டின் பேச்சு, ஆர்எஸ்எஸ்-ஐப் புதிய முகத்தில் மக்களிடம் காட்டியது.

இப்படியாக வாய்ப்பியத் தன்மையில் உருமாற்றி இயங்குவதும், மாற்றி மாற்றிப் பேசுவதும் வைதிக பார்ப்பனியத்தின் இயல்பு என்பதை மக்கள் எளிதே இன்றுகூட உணரமுடியாத சூழலில், அப்போது உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

அவருடைய பேச்சில், “தீண்டாமை தவறு இல்லை என்றால் இந்த உலகத்தில் எதுவுமே தவறில்லை” என்றும், “புதிய கண்டுபிடிப்புகள் வந்துவிட்டாலும் அறிவியல் வந்து விட்டாலும் ராகுவையும் கேதுவையும் கிரகணத்தின்போது சூரியன் விழுங்குகிறான் என்று நம் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கின்றனர்... இருக்கலாமா நிலை மாறிவிட்டது அதுபோலவே சூழ்நிலையும் முகாமையானதாகி விடுகிறது... மரபுப் பெருமைகள் சமகால அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருக்க வேண்டும்” என்றும், “பல நூற்றாண்டுகளாக நம் தலித் சகோதரர்கள் மிக அதிகமாகத் தொல்லைகள் பட்டு வருகின்றனர். அவற்றைக் குறித்து நம் மனங்களில் வலி உண்டாகிறது, சமன்மை இன்மையை மாற்றும் வகையில் நம் மனநிலை இருக்க வேண்டும்... அடுத்து இந்து தேசத்தை ஒருங்கிணைத்தாக வேண்டும். இன்று ஒருங்கிணைப்பு மிகத் தேவையானது நான்கு வர்ணமுறை இன்றும் தொடர்ந்து வருவது தொடர்பான என்னுடைய நிறைவின்மை அச்சத்தில் முளைத்ததுதான்... இந்துக் குமுகத்தில் இது கடைப்பிடிக்கப்பட்டால் அது தீண்டாமையை ஒழிக்கக் கட்டாயம் உதவாது என்பதில் ஐயமே வேண்டாம்” என்றெல்லாம் அவர் பேசியது ஆர்எஸ்எஸ்-இல் இணைய வேண்டுமெனத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பரப்புவதற்கு அவர்களுக்குப் பயன்பட்டது.

பொதுவுடைமைக் கருத்துக் கொண்டிருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் பாரதிய ஜன சங்கத்தையும் இணைத்து ஜனதா கட்சியை உருவாக்க அதற்குத் தேவரசின் இத்தகைய பேச்சுகளும் காரணமாக இருந்தன. ஆனால், மிக விரைவிலேயே செயப்பிரகாசு நாராயணனும், இராஜ்நாராயணனும் ஆர்எஸ்எஸ் திருந்தவே இல்லை என்பதை வெளிப்படுத்திக் கண்டிக்கலாயினர்.

ஆக, ஆர்எஸ்எஸ், அரசியலுக்குள் நுழையவும், வெகுமக்களை ஈர்க்கவும் தன் பேச்சில் காட்டிய மாற்று உத்தி பயன்பட்டது. அவர்களுக்கு இந்துக்களை ஒன்றிணைக்க வேண்டும், இந்தியாவை இந்து நாடாக அமைக்க வேண்டும் எனும் நிலையில் அவர்களின் நோக்கத்தைக் கவனிக்க வேண்டும். சித்பவன் பார்ப்பனர்கள் மட்டுமே ஆர்எஸ்எஸ் இல்லை; மற்ற அனைத்து சாதியினரையும் இணைக்க வேண்டுமானால் வைதீகப் பார்ப்பனியக் கருத்துகளை, கோட்பாடுகளை அனைத்துச் சாதியினரின் அறிவிலும் புகட்டிட வேண்டும் என்பதையே ஆர்எஸ்எஸ் அப்போது செய்யத் தொடங்கியது. இந்திராவின் நெருக்கடி கால ஆட்சியில், ஜனதாவிற்குள் புகுந்து தன் களப் பணிகளைப் பெருமளவில் திட்டமிட்டுச் செய்திட ஆர்எஸ்எஸ் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டது.

3. நெருக்கடி கால நிலையில் இருந்து பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலம் வரை

நெருக்கடி கால ஆட்சியில் ஆர்எஸ்எஸ், ஜமாய்த் இசுலாமி உட்பட 27 அமைப்புகள் தடை செய்யப்பட்டன. தடை செய்யப் பட்ட காலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் பலர் தலைமறைவாகப் பணியாற்றியதாக ஆர்எஸ்எஸ் பெருமைப்பட்டுக் கொண்டது. நெருக்கடி காலநிலை ஓராண்டில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் எடுத்த முயற்சியால் ஜனதா கட்சியில் இணைந்து ஆர்எஸ்எஸ் ஜன சங்கத்தைத் தேர்தலில் நிறுத்துவதைப் பார்த்து, இந்திரா காந்தி தேவரசுக்குத் தூது அனுப்பி, ஜனதாவில் சேராமல் இருந்தால் ஆர்எஸ்எஸ் தடையை நீக்கிவிட்டுத் தொண்டர்களை விடுதலை செய்வதாக கேட்டதும், ஆர்எஸ்எஸ் அதற்கு காலம் கடந்து விட்டது என அறிவித்ததுமாகச் சொல்லப்படும் நிகழ்வு கவனிக்க வேண்டிய செய்தி.

இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி கால ஆட்சிக்குப் பிறகு நடந்த தேர்தலில் பாரதிய ஜனசங்கம் உள்ளடங்கிய ஜனதா கட்சியே பெருமளவில் வென்றது. 1977-இல் மொத்தம் 542 நாடாளுமன்ற பதவிகளில் 345 இடங்களில் ஜனதா கட்சி வெற்றி பெற்றிருந்தது ஏறத்தாழ 95 இடங்கள் தங்களுக்குக் கிடைத்தது என ஆர்எஸ்எஸ் சொல்லிக் கொண்டது.

ஜனதா கட்சியில் ஜனசங்கத்தைச் சேர்த்ததெல்லாம் ஆர்எஸ்எஸ்-சின் வெகுமக்கள் ஆதரவைத் திரட்டுதலுக்கு வழியமைத்ததாக ஆகிவிட்டது. காங்கிரசு உள்ளிட்ட இந்தியக் கட்சிகள் எல்லாம் ஆர்எஸ்எஸ்-ஐ நடுவாக வைத்துச் சுழலும்படி செய்துகொண்டது ஆர்எஸ்எஸ்.

முஸ்லிம்களானாலும் ஆர்எஸ்எஸ் இல் இணையலாம் என ஆர் எஸ் எஸ் தீர்மானித்தது. முஸ்லிம்கள் இந்தியாவைத் தங்கள் நாடாகக் கருதினால், தங்களின் கடந்த காலம் இந்த நிலத்தைச் சேர்ந்தது என்று நம்பினால், இந்துச் சடங்குகளைச் செய்ய அவர்கள் ஒத்துக் கொண்டால், ஆர்எஸ்எஸின் கதவு அவர்களுக்குத் திறந்திருக்கும் என்று அறிவித்தனர்

மும்பையில் முகமத் கரீம் சக்லா, நான் மதத்தால் முஸ்லீம் ஆனால் இனத்தால் இந்து என்று அறிவித்ததாக ஆர்எஸ்எஸ் பெருமை கொண்டது.

இந்தியன் என்று கூட ஓர் இனம் இல்லாதபோது, இந்து என்பது எப்படி இனமாகும்? என்ற கேள்விகள் ஆர்எஸ்எஸ் மீது அப்போது வைக்கப்படவில்லை.
அதுமட்டுமன்றி ஜனதா கட்சியை எப்படியாவது முழுமையாக விழுங்கிவிட வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் திட்டமிட்டது. அதில் அனைவரையும் இந்துவாக ஆக்குகிற முயற்சியும், இந்தியாவை இந்து நாடு என அறிவிப்பதையும் ஜனதா கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெயபிரகாஷ் நாராயணன் மறைவுக்குப்பின் ஜனதா கட்சிக்குள் குடுமிப்பிடி சண்டைகள் நடந்தன.

ஜனதா கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், 1980-இல் இந்திரா காந்தியே ஆட்சிக்கு வந்ததை ஆர்எஸ்எஸ் பெரிய வருந்தத் தக்க நிகழ்வாகவே பார்த்தது.

பாரதிய ஜன சங்கத்தின் பத்தாவது தலைவராக இருந்த தீன்தயாள் மறைவு பெரும் சிக்கலைக் காங்கிரசுக்குக் கொடுக்கும் என எதிர்பார்த்தது நடக்கவில்லை. இந்திரா கொண்டு வந்த மன்னர் மானிய ஒழிப்பினை ஆர்எஸ்எஸ் எதிர்த்தது. அதேபோல் வங்கிகளைத் தேசிய மயம் ஆக்கியது மிகப்பெரும் தவறு என ஆர்எஸ்எஸ் அறிவித்தது. ஆனால் எதுவும் இந்திராகாந்திக்கு எதிராக எடுபடவில்லை.

ஆனால் இந்தக் காலக்கட்டமே ஆர்எஸ்எஸ் மிக வீச்சாக பரந்து பட்டு எல்லா மொழித் தேசங்களுக்குள்ளும் ஊடுருவி அந்த அந்த மொழித் தேசச் சூழலுக்கு ஏற்ப மாற்றி மாற்றிப் பேசி ஒருங்கிணைத்த காலம் என்று அறியலாம்.

இந்திரா காந்தியின் ஆட்சி, ஊழல், முறையற்ற ஆட்சி என்கிற அளவில் மட்டுமன்றி பிற மொழித் தேச வளர்ச்சிகளை நசுக்கிய வகையிலும், பார்ப்பனியத்தை வளர்த்த வகையிலும் எல்லாம் வெறி உணர்வோடு நடந்தன.

எனவேதான் அந்தந்த மொழித் தேச உணர்வடிப்படையிலும், ஒவ்வொரு தேச மக்களும் தங்களுக்கான உரிமைகளுக்கு விடுதலைக்குப் போராடத் தொடங்கினர்.

காஷ்மீரம், பஞ்சாப், அசாம், நாகலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு தேசங்களின் உணர்வுகளையெல்லாம் ஆர்எஸ்எஸ் எப்படியெல்லாம் திசை திருப்பியது, ஊடுருவி அழித்தது என்பது கவனமாக அறியப்பட வேண்டியவை.

ஜனதா கட்சிக்குள் இருந்து செயல்பட்ட ஜனசங்கத்திற்கு, ஜனதா கட்சியின் கதவுகள் மூடப்பட்டு விட்டதால் பாரதிய ஜனதா கட்சி என்கிற தேர்தல் கட்சியான வடிவத்தை ஏப்ரல் 1980-இல் முன் னெடுத்தது.

ஆனால் அதற்கு முன்பாக 1980-இல் ஜனவரியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆர் எஸ் எஸ் பங்கேற்கவில்லை. 1984 தேர்தலில் ஆந்திராவில் ஒன்று, குஜராத்தில் ஒன்று என்ற அளவில் இரண்டு இடங்களில் மட்டுமே ஆர்எஸ்எஸ்-இன் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 374 இராஸ்ட்ரிய இடங் களில் வெற்றி பெற்றது. அதன்பிறகு ஆர்எஸ்எஸின் பணி முடுக்கமானது.

அசாமில் ...

அசாமில், விடுதலை முன்னணி வலுப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு இயங்கத் தொடங்கிய அனைத்து அசாம் மாணவர் சங்கம், அசாம் கன பரிசத் - அமைப்புகளுக்குள்ளும் ஆர்எஸ்எஸ்-சின் சங்பரிவார்கள் உள் நுழைந்தனர்.

அசாமிற்குள் நுழைந்திட்ட வங்காள ஏதிலி(அகதி)களில் இந்துக்கள் - இசுலாமியர்கள் எனும் வேறுபட்ட பார்வை தேவை என்பதாகத் தூண்டி நச்சுக் கருத்துகளைப் பரப்பினர். ஆர்எஸ்எஸ் இயக்கங்களைச் சங்பரிவார் துணை கொண்டே இயக்கினர். விவேகானந்தர் கேந்திராவை அசாமிலும் நிறுவி மருத்துவம், கல்விக் கூடங்கள் அமைத்து அதன் வழியாக மக்களை ஈர்த்து ஆர்எஸ்எஸ்-இற்குக் கொண்டு வரும் பணிகளை விடாமல் செய்து வந்தனர்.
இன்றைக்கு மோடி குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை முதலில் அசாமில் நடைமுறைப்படுத்திக் கலவரத்தை உருவாக்கியதுவரை பல்வேறு வகையில் ஆர்எஸ்எஸ்-சின் நச்சு ஊடுருவல் நடைபெற்று வருகிறது.

கிழக்குத் தேசங்களில் ...

அருணாச்சலப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆர்எஸ்எஸ்-காரரான இதழியலாளரைப் பகுதிநேரமாக விவேகானந்த கேந்திராவை உருவாக்கிக் கவனிக்கச் செய்தது, அதை நிறுவியபின் கேந்திரத்தின் வழி பள்ளிக்கூடங்கள் நடத்துவதாக அந்த தேச முதல்வரிடம் பேசி அதற்காகப் பெருமளவில் நிலத்தை ஒதுக்கி இலவயமாகப் பெற்ற துடன், அதில் கட்டடம் கட்டவும், மேசை நாற்காலிகள் பிற கருவிகள் அனைத்தையும் இலவயமாகவே பெற்றனர்.

1926 முதல் ஆர்எஸ்எஸ் முழுநேரப் பொறுப்பாளராக இருந்த ஏக்நாத் ரானடே முழு அதிகாரக் கட்டுப்பாட்டில் இயங்கும் விவேகானந்தா கேந்திரா மூலம் 1977-இல் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டும் ஏறத்தாழ 40 பள்ளிக்கூடங்கள் நிறுவி ஆளுகை செய்கிற அளவில் ஆர்எஸ்எஸ் முழுமையாக அந்த மொழி மாநிலத்தில் ஊடுருவிக் களப் பணிகள் செய்யத் தொடங்கியது. இதற்காகப் பிற எல்லா மொழித் தேச ஆர்எஸ்எஸ் சாகாக்கள் பலரையும் அந்த கிழக்குத் தேசங்களுக்கு அனுப்பியது ஆர்எஸ்எஸ். 1970-கள் வரைகூட, பெருமளவில் தொடர்பில்லாத அப்பகுதிகளைப் பிற்காலத்தில் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அத்திட்டம் பெரும் அடித்தளமாக அமைந்தது. அங்கு நடைபெறும் கிறித்துவ மதச் செயல்பாடுகளால் எல்லாம் ஏதோ அந்த மொழி மாநிலங்கள் பறிபோய்விடும் நிலைக்கு ஆளாக்கப்படுவதுபோல் காட்டி பெரிய அச்சத்தை உருவாக்கிப் பல வெளியீடுகள், ஆய்வுநூல்கள் வெளி யிட்டு வருகிறது, இந்த வகையில் இந்தியன் சர்ச் என்கிற பெயரில் விராக் பாச் போரே - என்ற இதழியல் பொறுப்பாளரின் நூல் குறிப்பிடத்தகுந்தது.

ஏறத்தாழ இதே நிலைப்பாடுகளில்தான் நாகலாந்து, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் பகுதிகளிலும் ஊடுருவத் தொடங்கியது ஆர்எஸ்எஸ். சாதி சங்கங்கள் வைத்து அதை ஊக்கப்படுத்தி வளர்த்தது, பிராமணர்களிடையே சங்கங்கள் உருவாக்கி செயல்பட வைத்து, அதைப் பயன்படுத்துவது போன்றவையும் ஒரு வேலைத் திட்டமாக நடந்து வருகிறது.

பஞ்சாபில் ...

இவை போலன்றி பஞ்சாப் சீக்கியர்களிடையே ஆர்எஸ்எஸ் நுழையத் திட்டமிட்டதில் உள்ள நுணுக்கங்களையும் கவனமாக அறிந்தாக வேண்டும் சீக்கியர்களிடையே பரவியிருந்த காலிசுத்தான் விடுதலை இயக்கச் செயல்பாடுகள், சீக்கியர்களே மேலாண்மைக் குரியவர்கள் எனும் எண்ணங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்ட ஆர்எஸ்எஸ், இராஷ்டிரிய சீக்கியர் சங்கம் எனும் பெயரில், அதுவும் ஆர்எஸ்எஸ் என வருகிறபடி ஓர் அமைப்பை உருவாக்கியது. இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் உறவை ஏற்படுத்தவும் இந்துத்துவ கருத்துகளைப் பாதுகாப்பதற்கே சீக்கிய மதம் தோற்று விக்கப்பட்டது என்றும், ஒவ்வொரு குடும்பத்திலும் மூத்த மகனைச் சீக்கியனாக்குவார்கள் - என்றும் புரட்டல் பேசி, விஷ்வ இந்து பரிஷத் அதற்கான விரிந்த பொறுப்புகளை எடுத்துக் கொண்டு ஏறத்தாழ ஆறு நிறுவன அமைப்புகளைச் சீக்கிய ஒற்றுமைக்காக அமைத்தது. ஆனால் 2004 சூலை 23ஆம் நாள் சீக்கியத் தலைமையகம் ஆர்எஸ்எஸ்-சின் தூண்டலில் நடைபெறும் இராசுட்டிரிய சீக்கிய சங்கம் தவறானது என்றும் அது ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் சூழ்ச்சியாய் இயங்குவது என்றும் வெளிப்படுத்தித் தடை செய்தது.

ஆனாலும் அது விடாமல் செயல்பட்டு வருகிற நிலையில் 2009-இல் அந்த சீக்கியச் சங்கத் தலைவர் குண்டாசிங்கை காலிஸ்தான் சீக்கிய இளைஞர் கொலை செய்தார். ஆனால், தொடர்ந்துவிடாமல் அந்த சீக்கிய சங்கத்தை நடத்தி வருவதும், ஆர்எஸ்எஸ் குரு ஏகர்சிங் என்பார் இப்போது அச் சங்கத்தின் தலைவராகச் செயலாற்றி வருகிறார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

மராட்டியத்தில் ...

மராட்டியத்தில்தான் ஆர்எஸ்எஸ் வேரூன்றி தொடங்கியிருந்தது. மேற்குக் கடற்கரையோரத் தேசங்களில் உள்ள சித்பவன பார்ப்பனர்கள் எல்லாரையும், ஆர்எஸ்எஸ் அதன் வலைக்குள் முழுமையாகக் கொண்டிருந்தது. திலகர், சாவர்க்கர், எட்கேவர், கோல் வால்கர், தேவரசு என எல்லா சித்பவன் பார்ப்பனர்களும் தொடர்ந்து அந்த வேலைகளைச் செய்துவந்தனர். அவர்களைக் கடந்து மகாத்மா பூலே அவர்களாலும் அம்பேத்கர் அவர்களாலும் ஒருங்கிணைக்கப் பட்டு இருந்த பெருவாரியான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களைத் திரட்டுவதற்கு ஆர்எஸ்எஸ் போட்ட சூழ்ச்சித் திட்டம் கவனத்திற்குரியது.

1983-இல் சமர்சதா மஞ்சு என்கிற அமைப்பை ஏப்ரல் 14 அன்று திட்டமிட்டுத் தொடங்கியது. அந்த நாள் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதோடு, எட்கேவர் பிறந்த நாளாகவும் சொல்லி இணைத்துப் பெருவிழாவை எடுத்தது.

பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை வைக்கச் சொல்லி ஆர்எஸ்எஸ் ஆதரவு தெரிவித்தது. சமர்சதா மஞ்ச் சார்பில் ஆர்எஸ்எஸ், அம்பேத்கர் யாத்திரை ஒன்றைத் திட்டமிட்டு நடத்தியது. அந்த யாத்திரையில் அம்பேத்கர் படம், பூலே படத்துடன் மநு நூல் படத்தையும் வைத்துக் கொண்டு 7000 கிலோமீட்டர் தொடர்ந்து 47 நாள்கள் மராட்டியம் முழுமையும் அந்த யாத்திரை சுற்றி வந்தது. சமர்சதா மஞ்சு சார்பில் இலக்கிய நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகள் நடத்தி கட்கோ பாவா சமதா விருது என்கிற பெயரில் இந்திய ஒற்றுமை இலக்கியங்களுக்குப் பரிசுகளைக் கொடுத்துப் பலரையும் இணைத்தது. மராட்டியத்தில் பராதிகள், கோபாலர்கள், மே தங்கி, ஜோசி, தேவதாசிகள், பில்கன், மாரியவைலே போன்ற பழங்குடி யினரிடையே களப்பணி செய்து அவர்களின் வளர்ச்சிக்குத் துணை செய்து அவர்களையெல்லாம் அதன் அரங்குக்குள் கொண்டுவந்தது.

பிள்ளையார் ஊர்வலத்தை நடத்தி வருவதும், சிவாஜியை முன்னிறுத்தி வெகு மக்களைத் திரட்டுவதும், சிவசேனை இயக்கப் போக்குகளையும் தங்களுக்கு வாய்ப்பாக்கிக் கொண்டதும் - என மராட்டியத்தில் ஆர்எஸ்எஸ்-ஐப் பெரிதாக வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

பிற பகுதிகளில் ...

அவ்வாறாகவே ஒவ்வொரு மொழித் தேச மாநிலங்களுக்குள்ளும் நுழைந்து அம்மொழி மாநில மக்களைத் தங்களின்கீழ் திரட்டிக் கொள்ள பல்வேறு தனித்தனி முயற்சிகளை ஆர்எஸ்எஸ் முன்னெடுத்தது. கர்நாடகாவில் இந்து சமேஜோத்சவம் என்கிற பெயரில் இந்துக்களைச் சமநிலைப்படுத்தி ஒருங்கிணைந்த பெருவிழா என்கிற பொருளில் ஒரு பெரும் விழாவை முன்னெடுத்தது.

கர்நாடக ஆர்எஸ்எஸ்-சும், விஸ்வ இந்து பரிஷத்தும் இணைந்து நடத்திய விழாவில் இந்துமத மடாதிபதிகளையும், வைதிக பிராமண ஆச்சாரிகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக உணவு உண்ணும் படியும் செய்தது. அதேபோல் 1982 முதல் ஆண்டுதோறும் இந்து சங்கமம் எனும் பெயரில் ஒரே வகை உடை அணிந்து முதல் முறையாக வெங்காலூரில் 20,000 பேரும் கூடி ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனும் அறிவிப்பைச் செய்தது.

கேரளத்தில் நம்பூதிரிகளின் தலைமையில் ஆர்எஸ்எஸ் பெரு மளவில் வேலையைத் தொடங்கியது.

ஆட்சி அதிகார அளவில் ஆர்எஸ்எஸ் பெரிய அளவில் கேரளத்தில் காலூன்றவில்லையானாலும், குமுக ஆளுமை அளவில் அதன் உள் நுழைவு ஊடுருவல் என்று சொல்லும்படியாவுள்ளதை அறிய வேண்டும். கேரளத்தின் குருவாயூர், சபரிமலை, ஐயப்பன், பகவதி அம்மன் விழா போன்ற ஒருங்கிணைப்புகளை இந்துக்களின் ஒருங்கிணைப் பாகக் காட்டி நம்பூதிரி நாயர்களோடு ஈழவர்களை, புலையர்களை ஒருங்கிணைக்கத் திட்டங்களை அமைத்துக் கூடுதல் கவனம் செலுத்துகிறது ஆர்எஸ்எஸ்.

அதேபோல் வெளிநாடுகளிலும் திட்டமிட்டு அந்தந்த நாடுகளுக்கென்று தனித்தனித் திட்டங்களோடும் பெயர்களோடும் இயங்கியது.

தென்னாப்பிரிக்காவில் தெற்காசிய நண்பர்கள் என்கிற பெயரிலும், மியான்மரில் சனதன் தர்ம சுயம் சேவக் சங்கம் என்கிற பெயரிலும், மொரீசியசில் சுயம் சேவக் சங்கம் என்கிற பெயரிலும், அமெரிக்காவில் இந்து சுயம் சேவக் சங்கம் என்கிற பெயரிலும் திட்டமிட்டு இயங்கத் தொடங்கியது.

தமிழ்நாட்டில் மீனாட்சிபுரம் மதமாற்றம் நிகழ்வுக்குப் பின்னர் 1981-இல் பெருமளவில் ஆர்எஸ்எஸ் முகாமிட்டது. அறிவுத்தேர் என்கிற பெயரில் ஞான ரதம் என்கிற அடையாளத்தில் முருகனைத் தேர்களில் வைத்துத் தமிழகத்தின் சுற்றுப்புறங்களிலும் ஏறத்தாழ 900 சிற்றூர்களிலும் பரப்பல் செய்தனர். அது பெரும் வரவேற்பைத் தரவே அதே தன்மையில் கேரளத்திலும் தேர் ஊர்வலங்களை நடத்தினர்

இந்தத் தன்மையில், எளிய மக்களை எளிதாக இணைக்கமுடிகிறது என அறிந்தபின் விஸ்வ இந்து பரிஷத் தர்ம சன்சத் - என்ற மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுத் தீண்டாமையை ஒழிப்பதற்கும், இந்துக்கள் எல்லாரும் ஒன்றே என்று சொல்லியும் ஏகாத்மத ரத யாத்திரையை இந்தியாவெங்கும் நடத்தத் தொடங்கியது. 312 தேர்களை ஆங்காங்கு உருவாக்கியது. கங்கை நீரைக் கொண்டு வருவதாகவும், பாரத மாதா சிலையை வைத்து வருவதாகவும் அந்தத் தேர் ஒவ்வொரு சிற்றூருக்குள்ளும் நுழைந்தது. சிற்றூர் நீரை ஒரு குடம் வாங்கிக்கொண்டு கங்கைநீர் ஒரு குடம் தருவதாகக் கூறி மக்களிடையே ஒரு மயக்கத்தை உருவாக்கிக் கங்கை நீர் பற்றியதான மயக்கத்தில் இலக்கக்கணக்கான மக்களை ஈர்த்தது.

ஏறத்தாழ 5 இலக்கம் சிற்றூர்களை ஒருங்கிணைத்து 85,000 கிலோ மீட்டர் சுற்றி வந்த தேர், இறுதியாக நாக்பூர் சென்று சேர்ந்தன. பெரும் வெற்றியை அந்தப் பேரணி அளித்ததாக அறிவித்தார்கள். இவையெல்லாம் காங்கிரசு ஆட்சியில் இருந்த போதுதான் அவர் களின் ஆதரவோடு நடந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

காங்கிரஸ் ஆட்சியை முழுமையாய்ப் பயன்படுத்திக் கொண்டது ஆர்எஸ்எஸ். அந்த நேரத்தில் அரசுத் தொலைக்காட்சியில் முழுக்க முழுக்க ஆர் எஸ் எஸ்ஸின் அடிவருடிகளே இருந்த நிலையில் 1987-இல் இராமாயணம் தொடரைத் தொலைக்காட்சியில் பரப்பிப் பெருவாரியான மக்களை அதை நோக்கி ஈர்த்தது.

இதற்கிடையில் ஆர்எஸ்எஸ்-சின் கிளை அமைப்புகளும் பெரு மளவில் கடுமையாக வேலைகளைச் செய்தன. ஏபிவிபி பெருமளவில் மாணவர் அமைப்பை வலுப்படுத்தியது, மசுத்தூர் சங்கம்வழி தொழிற்சங்கங்கள் கட்டப்பட்டன. விசுவ இந்து பரிசத் மிக விரிவாகக் களம் கண்டிருந்தது.

பாரதிய ஜனதா கட்சி, எண்பதுகளில் தேர்தலில் பங்கெடுக்காததன்பின் 1984ஆம் ஆண்டின் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. பின்னர் 1989 தேர்தலில் 85 இடங்களை வாஜ்பாய் அத்வானி தலைமையில் பெற்றது. அதைவிடக் கொடுமை என்னவெனில், அப்போது 143 இடங்களை மட்டுமே பெற்றிருந்த வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணிக்கு ஆதரவு தந்து, தேசிய முன்னணியை பாஜகவின் ஆதரவில் ஆட்சியில் அமர்த்தியது. இதன்வழி காங்கிரசுக்கு மாற்றாக உருவான எழுச்சியையும் தன்பக்கம் இழுத்துக் கொண்டது. இதன் வழி பாஜக குறிப்பிடத்தக்க ஆளும் கட்சி எனும் நிலையைப் பெற்றுக் கொண்டது. 1991ஆம் ஆண்டு தேர்தலில் 125 இடங்களையும் 1996ஆம் ஆண்டில் 161 இடங்களையும் பிடித்து ஜனதா தளம் துணையுடன் ஆட்சியை பிடித்தது.

ஏற்கனவே கர்நாடகாவில் நடத்திய சம்ஸ்கிருதி ரக்ஷ போஜனா, பின்னர் ஏகாத்மத யாத்ரா - வின் படிப்பினைகளும் கருத்துகளும் அவர்களுக்கு அயோத்தி ராமர் கோயில் கட்டுவது தொடர்பான சிந்தனையைத் தூண்டிவிட்டன. அயோத்தி, காசி, மதுரா என்கிற மூன்று விடுதலை இயக்கம் எனப்பட்டியலிட்டுக் கொண்டு, முதலில் அயோத்தியை முன்னிறுத்தி நடத்தத் திட்டமிட்டனர்.

1983-இல் விசுவ இந்து பரிசத் மாநாட்டில் அதற்கான திட்டத்தை உத்தரப்பிரதேச காங்கிரசின் முதலமைச்சரான சந்திரபாபு குப்தாவின் அமைச்சரவையில் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சரான தாவ் தயால் கன்னவா முன்வைப்பை ஏற்றுக் கொண்டனர்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி முக்கிய அந்தோலன் என்கிற பெயரில் 1983-இல் முன்வைத்த கருத்தை 1984-இல் விஸ்வ இந்து பரிஷத் முழுமையாகவும் ஏற்றுக் கொண்டது.

1990-இல் வி.பி.சிங் மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்த முன்வந்த சூழலில் மண்டலுக்கு எதிராகக் கமண்டலம் என்கிற பெயரில் பேரணியைத் தொடங்கினர். சோம்நாத் முதல் அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தினர். 200 ஸ்ரீ ராம ஜானகி ரதங்கள் என்கிற பெயரில் மூன்று ஆண்டுகள் இந்தியா முழுக்கச் சுற்றி வீட்டிற்கு ஒரு செங்கல்லைப் பெற்றனர். கரசேவை எனப் பெயரிட்டு 1990-இல் அடையாளக் கர சேவையை நடத்தி, பீகார் விஸ்வ இந்து பரிஷத்தின் செயலர் ஆனகா மேர்வர் சௌபால் என்ற தாழ்த்தப் பட்டவரைக் கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இப்படியான நடைமுறைகள் எல்லாம் ஓர் உத்தியாக மேற் கொண்டு 1992 திசம்பரில் மசூதியை இடித்து நொறுக்கி வன்முறை வெறியாட்டம் ஆடினர். பல இலக்கக் கணக்கான மக்கள் அயோத்தியில் திரண்டதையும் திரட்டப்பட்டதையும் இந்திய காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

4. பாபர் மசூதியை இடித்த காலம் முதல் இப்போதைய மோடியின் வெறியாட்சி வரை

தேசிய முன்னணி வழி 1989-இல் விபிசிங் பாஜகவின் ஆதரவைப் பெற்று தலைமை அமைச்சராக ஆனதில் ஏற்பட்ட நெருக்கடியால் மண்டல் குழு அறிக்கையை நிறைவேற்ற முடியாது போனது. அதேபோல் கரசேவை ஊர்வலத்தை நடத்த விடாததால் பா.ச.க வி.பி.சிங்-கிற்கான ஆதரவை விலக்கிக் கொள்ள வி.பி.சிங் பதவி இழந்து போனார்.

ஆக, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ஆர்எஸ்எஸ் ஏற்கவில்லை என்பதும், பாபர் மசூதியை இடித்துவிட்டு இராமர் கோயில் கட்டுவதுதான் மிக முக்கியமானது என்பதாக ஆர்எஸ்எஸ் செயல்பட்டதையும் கவனிக்க வேண்டும்.

1991-இல் இராஜீவ்காந்தி கொலை நடந்த பின்னர் தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்று நரசிம்மராவ் தலைமை அமைச்சரானார். 1992-இல் பாபர் மசூதி இடிப்பைக் காங்கிரஸ் கட்சி தடுத்து நிறுத்தி விடவில்லை. தொடர்ந்த கலவரங்களையும் இழப்புகளையும் இந்திய அரசு நடவடிக்கை எடுத்துத் தடுக்கவும் இல்லை.

1993 தேவரசு ஆர்எஸ்எஸ் தலைமையிலிருந்து இறப்பதற்கு முன் 1994-இல் ராஜேந்திர சிங்கைத் தலைமைத் தலைவராக்கிவிட்டர். பார்ப்பனரல்லாத, மராட்டியர் அல்லாத, தலைவராக வந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2000-வரை தலைவராக இருந்த காலத்திலும் அதன் பிறகு 2000-இலிருந்து 2009 வரை சுதர்சன் தலைவராக இருந்த காலத்திலும் ஆர்எஸ்எஸ்-இன் நடைமுறைகள் கவனத்திற்குரியவை.

வி.பி.சிங் ஆட்சியை முறைப்பட நடக்கவிடாமல் செய்தது, மண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றாமல் செய்தது, பாபர் மசூதி இடிப்பு - போன்றவற்றின் காரணங்களால் ஆர்எஸ்எஸ், பாஜக, உள்ளிட்ட அதன் பரிவாரங்கள்மீது தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மதச் சிறுபான்மையர்க்கும் பெருத்த எதிர்ப்பு வந்திருக்க வேண்டும். ஆனால் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு 1996 தேர்தலிலும் 1999 தேர்தலிலும் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கிறது. தேர்தல் வெற்றிக்கான அரசியல் கண்ணோட்டத்தில் திமுக, அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்தது என்பது வரலாற்றில் மிகப்பெரும் பிழையாகத் தொடங்கியது.

ஏற்கனவே, 1967-இல் காங்கிரசு கட்சியை வீழ்த்துவதற்காக தேர்தல் நலனுக்காக ஆர்எஸ்எஸ்-சின் இன்னொரு முகமான இராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் திமுக தேர்தல் கூட்டு வைத்ததே முதல் பெரும் தவறாய் ஆரியப் பார்ப்பனியம் ஊடுருவ வழி அமைத்தது. இந்தத் தவறையே வழிகாட்டலாய் ஏற்றுகொண்டு அதிமுக-வும் உருவாக்கப்பட்டு, இராஜாஜி துணையோடு அரசியலுக்குள் நுழைந்தது. பின்னர் அதிமுகவை எதிர்க்க திமுகவும், திமுகவை எதிர்க்க அதிமுகவும் மாறிமாறி ஆரியத்தின் அடித்தளமான அகில இந்தியக் கட்சிகளுள் ஒன்றான காங்கிரசோடு கூட்டணி வைத்தன.

தமிழகத்தின் அடிமை அரசை ஆட்சி செய்த இழிவான நடைமுறையின் தொடர்ச்சியாகவே, பாஜகவை ஒரு தேர்தல் கட்சி என்ற அளவில் மட்டுமே அடையாளப்படுத்தி மக்களிடையே அறிமுகப்படுத்திவிட்டு, அதனோடு கூடி அரசவையிலும் பங்கேற்று ஆட்சி நலன்களைப் பெற்றுக்கொண்டவைதாம் திமுக, அதிமுக இரண்டும் அவற் றாலேயே மிகப்பெரும் வரலாற்றுப் பிழைகள் தொடர்ச்சியாக நடைபெற்றன என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டே ஆர்எஸ்எஸ்-சும் அதன் பரிவாரங்களும் - ஒவ்வொரு மொழித் தேசங்களுக்குள்ளும் எளிதாக ஊடுருவிக் களங்கள் அமைத்து விரிவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

1996, 1999-ஆம் ஆண்டுத் தேர்தல்களில் வென்று ஆட்சியை ஆறாண்டுகள் நடத்தியபோதும், அதன்பிறகு 2014, 2019ஆம் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியை நடத்திவரும் சூழல்களிலும் ஆர்எஸ்எஸ்-இன் வழிகாட்டலில் பாஜக செய்த, செய்துவரும் அடித்தள வேலைகளும், சூழ்ச்சிகளும், உள்ளடி வேலைகளும் சொல்லி மாளாதவை. இதில்தான் என்றில்லாமல் எல்லாத் துறைகளிலும் ஆரியப் பார்ப்பனியம் அடித்தளமிட்டு வலுப்படுத்தி இயங்கிக் கொண்டிருக்கிறது.

• சமசுக்கிருத ஆண்டு உருவாக்கியது, அதற்கு மட்டுமே அனைத்திலும் முன்னுரிமை தருவது,

• நூற்றுக்கணக்கான கலவரங்களை நடத்தி, இசுலாமிய எதிர்ப்பை, பாக்கிசுத்தான் எதிர்ப்பைப் பேசியே ஆரியத்தின் ஆக்டோபசு கைகளால் மொழித் தேச மக்களின் கழுத்தை நெருக்கி காசுமீர மொழித் தேசத்தைப் பிரித்தது, 370 பிரிவை நீக்கியது உள்ளிட்டு அழித்து வருவது,

• கல்புர்கி, கௌரிலங்கேஷ் உள்ளிட்ட ஆரிய எதிர்ப்பாளர்களைப் பன்னூற்றுக் கணக்கில் கொலை செய்தது,

• கல்வியில் சரஸ்வதி வந்தனம் பாடுவது தொடங்கி முழுக்க முழுக்க ஆரியச் சார்புக் கல்வியாக மாற்றியதோடு, இந்திய அரசதிகாரப் பிடிகளுக்குள் கல்வித் துறையை முழுமையாய்ப் பறித்துச் சென்றது.

• இராமர் கோயில் கட்டுவது, பட்டேல் சிலை எழுப்புவது என்கிற பெயரில் பல ஆயிரம் கோடிகளைப் பாழாக்கி வருவது,

• எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் துறைக்கு விற்பனை செய்வதன்வழி பெருமுதலாளிகளின் வேட்டை நிலமாய் மாற்றி வருவது,

• சுதேசி என்று பேசிக் கொண்டே உலகம் சுற்றி அலைந்து பன்னாட்டு முதலாளிகளை அழைத்து வந்து எல்லா தொழில்களிலும் முதலீடு செய்திட வழியமைத்துக் கொடுத்து, கனிம வளங்களை, உழைப்பின் ஈட்டங்களைச் சூறையாடிக் கொண்டு செல்ல வழி செய்வது,

• அரசியல் சட்டம் என்ற ஒன்றே வேண்டாதபடி, முற்றிலும் மக்களாட்சி முறைக்கு மாறான முற்றதிகார (சர்வதிகார)ப் போக்கில் ஆட்சி அமைத்து வருவது,

• இந்து ராஷ்டிரம் என்கிற பெயரில் வைதீகப் பார்ப்பனியப் பண்பாட்டையே அடிப்படையாக வளர்ப்பது,

• கிறித்துவ, இசுலாமியப் பெண்களைப் பாலியல் கொடுமை செய்து கொலை செய்வது, (ஒரிசா பாதிரியார் உள்ளிட்டு) பாதிரிமார் களைக் கொலை செய்வது.

• பார்ப்பன, மார்வாடி பெரு முதலாளிகளுக்குப் பல இலக்கக் கோடி கடன் கொடுத்துத் திரும்பப் பெறாமலேயே தள்ளுபடி செய்தது, என்று பாஜக செய்துவரும் அட்டூழியங்களைப் பட்டியல் எடுத்தால் அவையே பல தொகுப்புள்ள நூல் அளவிற்கு ஆகிவிடும்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் நுழைவு

ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டு நெடுங்காலம் வரை தமிழ் நாட் டிற்குள் நுழைய முடியாத சூழலே இருந்தது. 1939-இல் பதினைந்துக்கும் மேற்பட்ட சித்பவன பார்ப்பனர்கள் தமிழ்நாட்டிற்குள் அனுப்பப் பட்டதாகவும், அவர்கள் ஆரிய சமாஜம் உள்ளிட்ட தொடர்புடைய வழக்கறிஞர்கள் சிலரைத் தொடர்பு கொண்டிருக்க முடிந்ததே அல்லாமல் ஆர்எஸ்எஸ்-ஐ நிறுவி வளர்க்க முடியவில்லை.

1940 மார்ச்சு 23-இல் வீர சவர்க்கார் சேலத்தில் இந்து மகா சபை மாநாட்டை அங்குள்ள பார்ப்பன - மார்வாடி - சௌராட்டிரர் தொடர்பில் நடத்தத் திட்டமிட்டார். கூட்டமில்லாமலே மாநாடு நடந்தது. மார்ச்சு 26-இல் சென்னையில் மராட்டிய சிவாஜி விழாவில் கலந்துகொண்டு பேசியிருந்ததும், அந்த நான்கைந்து நாள்களாகத் தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்ததும் கவனத்திற்குரியது.

1942-க்கு முன்பாக இந்தியாவில் வங்காளம், அஸ்ஸாம், ஒரிசா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளுக்குள் ஆர்எஸ்எஸ் நுழைய முடியவில்லை என ஆர்எஸ்எஸின் குறிப்பேடு சொல்லுகிறது.

1948 சனவரி 30ஆம் நாள் காந்தி கொலை செய்யப்பட்ட அன்று இரவு கோல்வால்கர் சென்னையில் தேநீர் விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்ததாகவும் அன்று மாலை தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது காந்தி கொலை செய்யப்பட்ட செய்தி அவருக்கு தெரிந்ததாகவும் கோல்வால்கரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

1948-க்கு முன்பும் 1949-களிலும்கூட ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டிருந்த காலம் கோல்வால்கர் சென்னைக்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறார், விசுவ இந்து பரிஷத்தின் கலந்தாய்வுக் கூட்டங்களுக்கு வந்து சென்ற பதிவு உள்ளது.

1956-இல் மதுரைக்குக் கோல்வால்கர் வந்ததாகவும் அங்கு பசும்பொன் முத்துராமலிங்கரைச் சந்தித்ததாகவும் விடப்பட்ட கதை முக்குலத்தோரை ஆர்எஸ்எஸின் ஆதரவாக்கும் நோக்கத்திற்கானதே தவிர கோல்வால்கர் 1956-இல் பசும்பொன் முத்துராமலிங்கரைச் சந்திக்கவில்லை என்பதும், 1959-இல் தான் மதுரைக்கே வந்த தாகவும் அறியமுடிகிறது.

தமிழ்நாட்டில் பிராமணர்களை, சௌராஷ்டிரர்களை, மார்வாடிகளைக் கொண்டே தொடக்கத்தில் ஆர்எஸ்எஸ்-சும், அதன் அமைப்புகள் சிலவும் கிளைகளை அமைத்தன. 1963-இல் விவேகானந்தர் நூற்றாண்டினையொட்டித் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவிக் காலூன்றிட வேண்டும் எனத் திட்டம் விரிவாகப் போடப்பட்டது.

1962-இல் கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரம் ஒன்றை நிறுவிடவும், கன்னியாகுமரி கடற்கரையில் இருக்கும் பெரிய பாறையில், 1892 நவம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாள்களில் விவேகானந்தர் தியானம் செய்ததாகவும் (காலமும் இடமும் எந்த அளவு உண்மையானது என ஆய்வு நடத்தப்பட வேண்டும்) சொல்லி அந்தப் பாறையில் விவேகானந்தர் மண்டபம் அமைக்க விவேகானந்தா கேந்திரத்தின் மூலம் பெரும் முயற்சி எடுத்தது. ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ரானடேவை முன்னிறுத்த அதற்கான முயற்சிச் செய்தனர்.

அந்தப் பாறையைக் கன்னியாகுமரி மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததும் அவர்கள் அனைவரும் கிறித்துவர்களாக இருந்ததால் கிறித்துமசு காலங்களில் குறுந்தட்டி வழிபாடு செய்து வந்தனர். மீன் பிடி வலைகளை உலர வைக்கப் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அந்தப் பாறையை விட்டுத் தர அவர்கள் மறுத்துப் பெரிய அளவில் போராடவே முதலில் அப்போதைய தமிழக முதல்வர் காமராசரிடமும் பிறகு பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தபோது அவரையும் சந்தித்து இசைவு கேட்க அவர்கள் தாங்கள் செய்ய இயலாது எனச் சொல்லி மறுத்துவிடவே ரானடே அப்போதிருந்த இந்திய அரசின் கல்வி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் உமாயூன் கபீர்-ஐச் சந்தித்தபோது, அவர் அதற்கு “இது வீணாகக் கிறித்துவர்கள் இடையே முரண் உணர்வை உருவாக்கி விடும், அது மட்டுமன்றி கடலின் இயற்கை அழகைக் கெடுத்து விடும் என்றும், இதில் இந்திய அரசு தலையிட முடியாது” என்றும், “மாநில அரசை நீங்கள் அணுக வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.

உடனே ரானடே குடியரசுத் தலைவர் இராதாகிருட்டிணனையும், அமைச்சர்கள் இலால்பகதூர் சாஸ்திரி, பட்டேல், மற்றும் சங்கராச் சாரி, இராமகிருஷ்ண மிசன் தலைவர் சுக்லா என அனைவரையும் சந்தித்திருக்கிறார். இலால் பகதூர் சாஸ்திரி நேருவிடம் தெரிவித்து இசைவு பெறுவதாகக் கூறினார்.
இதற்கிடையில் மேற்கு வங்க முதல்வர், கேரள முதல்வர் மற்றும் 323 நாடாளுமன்ற உறுப்பினர்களின் இசைவுக் கையொப்பங்களை யெல்லாம் பெற்று இறுதியாக நேருவின் பரிந்துரையையும் பெற்றுத் தமிழக முதல்வர் பக்தவச்சலத்தை மீண்டும் சந்தித்தார் ரானடே. பின்னர், தமிழக அரசின் இசைவை 1964 செப்டம்பர் 24-இல் பெற்றார்.

வேடிக்கை என்னவென்றால் அதற்கான அமைப்புக் குழுவின் சிறப்புத் தலைவராகப் பக்தவச்சலமே அமர்த்தப்பட்டவுடன், எதிர்க் கட்சித் தலைவர் அண்ணாத்துரையின் இசைவில் நெடுஞ்செழியனும் குழு உறுப்பினராக ஆக்கப்பட்டிருக்கிறார். பிற தலைவர்களும் அதில் உறுப்பினர்களாக்கப்பட்டனர். மபொசி-யும் பிற தலைவர்களும் உறுப்பினர்களாயினர் - என ஆர்கனைசரில் செய்தி பதிவாகியிருக்கிறது.

அதன்வழி, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு இல்லாத நிலையில் கேரள அரம்பர்(ரௌடி)களையும் கட்டுமானப் குழுவினரையும் வைத்துக் கொண்டு மண்டபம் கட்டத் தொடங்கினர். கேரள முதல்வர் நம்பூதிரிபாட்-டின் வழிகாட்டலில் அச்சுத மேனன் குழுவிற்குத் துணை செய்தார், தமிழ் நாட்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிச் சார்பில் கல்யாணசுந்தரமும், மேற்கு வங்கத் துணை முதல்வர் ஜோதிபாசுவும் பெருமளவில் ரானடே-வுக்குத் துணை நின்றனர்.

ஆக, தமிழ்நாட்டில் விவேகானந்தர் கேந்திரா எனும் பெயரில் கன்னியாகுமரி பாறையைப் பறித்துக்கொண்டு விவேகானந்தர் பாறையாக ஆக்குவதற்கான ஆர்எஸ்எஸ்-இன் முயற்சிக்கு எல்லாக் கட்சியினரும் எந்த எந்த அளவு பின்னிருந்து செயல்பட்டனர் என்பதும் கன்னியாகுமரியைத் தாரை வார்த்து வாங்குவதற்கு ஒவ்வொருவரையும் எந்த அளவு ஈடுபடுத்தினர் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு அந்த கேந்திரத்தின் தலைவரும் செயலாளரும் பரமேசுவரன், பாலகிருஷ்ணன் என்கிற கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு பக்கம் எனில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் மூலம் 75 கல்விக்கூடங்கள் (அந்தமானில் 9, தமிழ்நாட்டில் 3, அசாமில் 18, அருணாசலப் பிரதேசத்தில் 35) மருத்துவமனைகளும் நடைபெற்று வருகின்றன. பல மொழிகளில் சிறு வெளியீடுகள் அங்கு வருவோர் போவோர் அனைவருக்கும் கொடுக்கப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக கேந்திரத்தின் முழு ஆதரவில் ஆந்திரா-திருப்பதி கோயிலும், அரித்துவாரின் பாரத மாதா கோயிலும் இங்கு நிறுவிடும் பணி நடந்து வருகிறது. 2017-இல் மோடி பாரத மாதா கோயிலும் இராமாயணக் காட்சிக் கூடமும் சிவன் சிலை கொண்ட நுழைவாயிலும் கட்ட 25 கோடி செலவில் கொடுத்து (யார் அப்பன் வீட்டுச் சொத்து) அவை கட்டப்பட்டுத் திறக்கப்பட்டன. ஆக, ஆர்எஸ்எஸ்-இன் கோட்டையாக அது செயல்பட்டு வருகிற அளவில், தமிழ்நாட்டில் முதற் பெருமிடமாக வலுவாகக் காலூன்றியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக அது செய்த வேலைகள் பல...

1970-இல் விவேகானந்தர் பாறை திறக்கப்பட்டதன்பின் திருவள்ளுவர் சிலையைத் தமிழ்நாடு அரசு திறந்து விடாதபடி பல தகிடு தத்தப் பணிகளை ஆர்எஸ்எஸ் செய்தது.

“என் உயிர் இருக்கிறவரை விவேகானந்தர் பாறைக்கு அருகில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு நான் விடமாட்டேன்” என எம்ஜிஆர் தன்னைச் சந்திக்க வந்த விவேகானந்தர் கேந்திரத்தினரிடம் (ஆர்எஸ்எஸ்-சினரிடம்) கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொண்டார்.

அதன் பிறகு திருவள்ளுவர் சிலை, கருணாநிதி முதலமைச்சராக இருந்தபொழுது திறக்கப்பட்ட பின், அதனைப் பெருமை இழக்கச் செய்வதிலும் அதன் ஆளுமைப் பணிகளையும் தானே கவனிப்பதாய் அதை அழிக்கத் திட்டமிடுகிற முயற்சியிலும் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்-ஐ காலூன்ற வைக்கப் பெரிதும் துணை இருந்த பலருள் இராஜாஜியும் ஒருவர். சுதந்திரா கட்சியில் ஈடுபட்டிருந்த அவருக்கு நெருக்கமான பர்மா தமிழரான அரங்க சாமி (தேவர்)தான் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்-இன் முதல் தலைவர். அவரைக் கொண்டு தேவர் குல மக்களை எல்லாம் பெருமளவில் ஆர்எஸ்எஸ்-இற்குள் இணைக்கிற வேலையைச் செய்தனர்.

ஏற்கனவே நேதாஜியை எப்படியாவது ஆதரவாக்கிவிடலாம் என ஆர்எஸ்எஸ் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை. அதேபோல் நேதாஜியின் அரசியல் அரங்கில் இருந்த பசும்பொன் முத்துராமலிங்கருக்கு ஆர்எஸ்எஸ்-இல் உடன்பாடில்லாதபோதும் அவர் ஆர்எஸ்எஸ்-ஐப் பாராட்டியதுபோல் பொய்யுரைத்துப் பலரையும் நம்ப வைத்தனர் ஆர்எஸ்எஸ்-காரர்கள்...

அரங்கசாமி(த் தேவர்) மறைவுக் காலம்வரை அவரே தமிழகப் பொறுப்பாளராக இருந்தார். அதன்பிறகு தமிழ்நாட்டின் தலைவராகப் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் நெருங்கிய உறவினர் மாரிமுத்து தலைவராக்கப்பட்டதன்வழி கொங்கு கவுண்டர் குல மக்களையும் பெருவாரியாக ஆர்எஸ்எஸ்-க்குள்ளும் அதன் பரிவார அமைப்புகளுக்குள்ளும் கொண்டு வரத் தொடங்கினர்... ஆளுமைத் தன்மைக்காகவும், தமிழ்நாட்டைக் கூறுபோட வேண்டும் எனும் வெறியிலும் தமிழ்நாட்டைத் தெற்கு வடக்கு என இரண்டாகப் பிரித்ததுடன் இரண்டிற்கும் ஒவ்வொரு பொறுப்பாளரை அமர்த்தி அவரவர் வழி சாதி மக்களை இணைக்கத் திட்டமிட்டது.

விவேகானந்தா கேந்திரா குமரியில் செயல்படத் தொடங்கிய பின் அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தாணு லிங்க (நாடார்) ஆர்எஸ்எஸ்-சோடு தொடர்புகொள்ளலானார்.

தொடர்ந்து வைதிக வெறித் தனத்தோடு பேசிக் கொண்டிருந்த இராம கோபாலன் 1979-இல் சிலரால் தாக்கப்பட்ட பின்னர், அவரையே முன்னிறுத்தி 1980-இல் இந்து முன்னணியைத் தொடங் கியது ஆர்எஸ்எஸ்.

1981-இல் மீனாட்சிபுரத்தில் நடந்த மத மாற்றத்தால் ஆர்எஸ்எஸ் பெரிய அளவில் தாக்கம் அடைந்தது. 200-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட பள்ளர் குலத்தைச் சார்ந்த மக்கள், இசுலாம் மதத்திற்கு மாறிச் சென்ற நிகழ்ச்சி ஆர்எஸ்எஸ்-ஐக் கதிகலங்க வைத்தது. உடனடி யாகப் பறந்து வந்தனர். வாஜ்பேயி தலைமையில் மீனாட்சிபுரத்தில் ஊர்வலம் எல்லாம் நடத்தினார்கள்.

முக்குலத்தோரை இணைத்ததுபோல நாடார்களைப் பெருமளவில் இணைக்கும் நோக்கில் தானுலிங்க (நாடா)ரை 1982 முதல் தலைமைப் பொறுப்பில் அமர்த்தி இயக்கத் தொடங்கினர். அதற்கு முன்பு காணாமைக்குட்பட்டிருந்த நாடார் குலமக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து சிறு வணிகத்தில் ஈடுபட்டுப் பொருளியலில் சற்று மேலெழுந்து வரும் நிலையில் அவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் சலுகைகளைக் காட்டி நாடார்கள் பலரை இந்து முன்னணிக்குள் இணைத்தனர். 1983-இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக் காடு கலவரம் நடந்தது.

விவேகானந்தர் கேந்திரம் அமைக்க முயன்ற காலம் முதலே கிறித்துவர்களை வம்புக்கு இழுத்துக் கலவரம் செய்ய காத்திருந்தது ஆர்எஸ்எஸ். கன்னியாகுமரி மீனவர்கள் பெரும்பாலும் கிறித்துவர் களாகவே இருந்தனர். மண்டைக்காடு பகுதியில் ஒரு முக்கூட்டுச் சந்தில் பிள்ளையார் சிலை ஒன்றை வைத்துப் பின்னர் அதை எடுக்க மறுத்ததன்வழி மிகப் பெருமளவில் கலவரத்தை உருவாக்கினர். ஏறத்தாழ 49 பேர் சுடப்பட்டு இறந்தனர்.
இந்தக் கலவரத்தைக் காட்டியே இந்து முன்னணி வலுவாகப் பல பகுதிகளிலும் இறங்கி வேலை செய்தது. தமிழகம் முழுக்க அளாவிக் கிறித்துவர்கள் இஸ்லாமியர்கள் அல்லாத நடுத்தட்டு சாதி மக்களைப் பெருமளவில் தங்களுக்குச் சார்பாக அணி சேர்த்தது, ரெட்டியார்கள், நாயக்கர்கள், மார்வாடிகள், மலையாளிகள் எனத் தாய் மொழி தமிழல்லாத மாற்றுமொழியினரை முதன்மையாகவும், பிற தமிழ்ச் சாதியினரைப் பரவலாகவும் இந்து முன்னணியில் சேர்த்தனர்.

சென்னை உள்ளிட்ட வட பகுதிகளில் இஸ்லாமியர்கள் சேர்ந்து வாழும் பகுதிகளை ஒட்டியுள்ள. மக்களைத் திரட்டினர்.

பிள்ளையார் ஊர்வலம் நடத்துவதற்காக ஆட்களைத் திரட்டினர். சென்னையில் தாழ்த்தப்பட்டவர்களையும் மீனவர்களையும் பெரு மளவில் பணத்தை வைத்து ஊர்வலம் நடத்தவும் கலவரம் செய்யவும் பழக்கினர்.

பணமும் மதுவும் ஏராளமாய்க் கிடைத்திட கூலிக்குத் தாழ்த்தப் பட்டவர்கள் பெருமளவில் அவர்களுக்கு ஆதரவாய்த் திரண்டனர்.

பெரியாரியக் கருத்தாளர்கள், மார்க்சியக் கருத்தாளர்கள், சாதி ஒழிப்புக் கருத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் இவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். 1990ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட பிள்ளையார் ஊர்வலங்கள் சென்னை, ஓசூர் போன்ற ஊர்களில் வேண்டுமென்றே மசூதிக்குள் செருப்பை எரிவது, இசுலாமியர்களை எதிர்த்து இழிவாய் முழக்கமிடுவது ஆகிய நிலைகளில் திட்டமிட்டுக் கலவரத்தை உருவாக்கினர்.

பிள்ளையார் ஊர்வலத்தோடு ஒவ்வொரு சாதியினரையும் இணைத்ததுமட்டுமன்றி ஊர்வலத்தின் மூலம் இந்து மதவெறியைத் தூண்டிப் பல பகுதிகளில் குண்டுவெடிப்புகள் வரை சென்று பல கொலைகளையும் செய்யத் தொடங்கினர். இதனால். இஸ்லாமியர் களும் வன்முறை இயக்கமாக உருவாகி அவர்களும் கலவரம் செய்யத் தொடங்கினர்.

ஒவ்வொரு சாதியினரையும் ஆர்எஸ்எஸின் ஆளுமையின் கீழ் இணைப்பதற்குப் பல்வேறு உத்திகளைக் கையாண்டனர்.

• கோவை கவுண்டர்களை இந்து முன்னணியில் சேர்த்ததும், கலவரம் செய்யப் பெருமளவில். தூண்டியதுமாக வேலைகள் நடந்தன.

• ஆரியப் பார்ப்பனியம் கடந்த காலங்களில் மயிலாடுதுறையை மாயூரம் என்றும், மரைக்காட்டை வேதாரண்யம் என்றும், முது குன்றத்தை விருதாச்சலம் என்றும் எண்ணற்ற பல ஊர் பெயர் களைச் சமசுக்கிருதத்தில் மாற்றியது போன்றும், தமிழில் பெயர் களைச் சூட்டிக்கொள்ளும் பழந்தமிழ் வழக்கப் பெயர்களை சுதர்ஷன், நரேஷ், சுரேஷ், சரஸ்வதி, பரமேஸ்வரி என்றெல்லாம் முழுக்க முழுக்க சமசுக்கிருதப் பெயர்களையே உருவாக்கிப் பெயர் சூட்டியதுமாக, நல்ல தமிழ்ப் பொருளுடைய வாழ்வியல் தொழில் பெயர்களாக இருந்த குலப்பெயர்களைச் சமசுக்கிருதத்தில் உருவாக்கியதும் சாதிவெறி ஊட்டுவதாகவும் ஆர்எஸ்எஸ் பிரித்து வேலை செய்தது. மீனவர்கள் செம்பரவர்களையெல்லாம் பர்வத ராஜ குலத்தினர் என்றதும், வன்னியர், படையாட்சி என்ற பெயருடையவரை சத்ரிய குலத்தினர் என்றதும், பள்ளர், குடும்பர் என்றெல்லாம் பெயருடையவரை தேவேந்திர குல வேளாளர்கள் என்றதுமாகப் பல திரிபு வேலைகளைச் செய்தனர்.

• ஒவ்வொரு சாதிக்கும் பெயர் மாற்றுவது மட்டுமன்றி அவர்களை ஆர்எஸ்எஸ்-இன் சார்பினர்களாக மாற்றுவதுமாகச் செயல் பட்டனர்.

• ஆர்எஸ்எஸ்-இன், இந்து முன்னணியின், ஏபிவிபி-யின், விசுவ இந்து பரிசத்தின் என அவர்களின் பரிவாரங்களில் எல்லாம் ஒவ்வொரு சாதியினரைத் தலைவராக்கினார்.

• முக்குலத்தோரும், நாடாரும், கோவை கவுண்டர்களும் தொடர்ந்து பள்ளர்களை, சக்கிலியர்களை, கோனார்களை, வன்னியர்களை, பறையர்களை என எல்லா சாதித் தலைவர்களையும் விலை பேசுவதும், ஒருபுறம் அரசின் அதிகாரத்தைக் கொண்டு அவர் களை நெருக்கடிக்குள்ளாக்குவதும் மறுபுறம் தேவையான சலுகைகள் செய்து கொடுப்பதும் எனப் பல உத்திகளால் ஆர்எஸ்எஸ்-சோடு இணைக்கப்பட்டனர், இணைக்கப் படுகின்றனர்.

அரசின் வருமான வரி உள்ளிட்ட பிற வழக்குகள் இல்லாமல் செய்வது, ஏராளமாய்ப் பணம் கொடுப்பது, வீடு கொடுப்பது, வண்டி கொடுப்பது, கல்லூரி, பல்கலைக்கழகம் நடத்த வழி அமைத்துத் தருவது, பிற குமுகச் சீரழிவுகளுக்கு ஆட்படுத்துவது உள்ளிட்ட நிலைகளில் எல்லா சாதி மக்கள் தலைவர்களும் விலை பேசப்பட்டனர். அவர்களைப் பல நிகழ்ச்சிகளில் அடையாளப் படுத்தி ஆர்எஸ்எஸ்-க்கு ஆட்களைப் பிடித்தனர். இவற்றையெல்லாம் மறுத்து, ஆர்எஸ்எஸ் செய்யும் பார்ப்பனியத் தையும் எதிர்த்து தமிழ் உணர்வோடு, தமிழ்த்தேச உணர்வோடு இயங்குபவர்களையும், மார்க்சியக் கோட்பாட்டோடு இயங்குபவர்களையும், சாதியொழிப்புச் சமன்மை உணர்வோடு இயங்குபவர்களையும் தனிமைப்படுத்திக் குமுகப் பகைவர்கள்போல் மக்களிடையே அடையாளப்படுத்துகிற வேலைகளைச் செய்து வருகின்றனர். 

அதற்காகப் பெருவாரியான வெகு மக்களைத் திரட்டுவதற்குப் பல்வேறு உத்திகளோடு செயல்படுகிறது ஆர்எஸ்எஸ்:

• இருக்கிற கோயில்களை யெல்லாம் புதுப்பிப்பது, வைதீக வேத முறைப்படி நடத்துவது, விழாக்கள் குடமுழுக்குகள் நடத்துவது, சமசுக்கிருத வழிபாட்டில் நடத்துவது,

• 1993-இலேயே சிற்றூர்ப்புற பூசாரிகளை ஒருங்கிணைத்து பூசாரிப் பேரவை அமைத்து மாநாடு நடத்தி அவர்களைப் பெரும் கோயில் வழக்கு முறைகளோடு இணைத்தது, சிற்றூர்ப்புற சிறு கோயில் குடமுழுக்கை பிராமணப் புரோகிதர்களை மட்டுமே வைத்து நடைமுறைகளை மாற்றி அமைத்தது,

• பள்ளிக்கூடங்களை ஆர்எஸ்எஸ்-இன் கீழான சிபிஎஸ்இ பள்ளிக் கூடங்களாக மாற்றுவது, ஆரியக் கருத்தாடல்களைக் கொண்டு வருவது, சங்கரமடத்தின் வழியாக, இராமக்கிருஷ்ண மடத்தின் வழியாக, விவேகானந்தா கேந்திராவின் வழியாக எனப் பல ஆயிரக் கணக்கான பள்ளிக்கூடங்கள், நூற்றுக் கணக்கான கல்லூரிகள் நிறுவி அங்கெல்லாம் ஆர்எஸ்எஸ்-இன் பரிவாரங் களைக் கொண்டு ஒருங்கிணைப்பது,

• திருவள்ளுவரை ஏற்றிப் போற்றுவதாக ஒரு நாடகமாடி 2015-இல் தமிழ் இல்லாமல் தமிழ்நாடு இல்லாமல் இந்தியா முழுமை ஆகாது - என்று பசப்புப் பேசிய ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் களில் ஒருவரும், ஆர்எஸ்எஸ் இந்தி இதழ் பஞ்சசன்யாவின் ஆசிரியருமான தருண்விஜயை வைத்து 2015-இல் கன்னியா குமரியில் தொடங்கி தமிழ்நாட்டில் திருவள்ளுவர் தொடர்புடைய இயக்கங்களை எல்லாம் இணைத்து ஆர்எஸ்எஸ்-சோடு தொடர்பு படுத்தியது... ஆனால், கடைசியாகத் திருவள்ளுவர் சிலை ஒன்றை அரித்துவாரில் நிறுவுவதற்காக என்று தொடங்கி ஊர்வலமாக எடுத்துச் சென்று அரித்துவாரில் பிராமணர்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்பதாகக் கூறி சாக்குப்பையில் சுற்றி வீசப்பட்ட நிலையில் திருவள்ளுவரை இழிவு படுத்தியது...

• திருக்குறள், வேதங்களின் அர்த்தசாஸ்திரத்தின் சாரம் என்ப தாகக் கதை கட்டி நீண்டகாலமாக ஆரியப் பார்ப்பனியம் செய்து வரும் புரட்டல்களை, ஆர்எஸ்எஸ், இப்போது நாகசாமி, எச். ராஜா, ஓம்காரனந்தா, இலங்கை ஜெயராஜ் போன்றவர்களைக் கொண்டு பரப்பி வருகிறது.

• கங்கையில் புஷ்கரணி என்கிற யாகம் செய்து அதில் பல இலக்கம் மக்களை ஈர்த்து மூடநம்பிக்கையில் ஆழ்த்தி அறிவு இழக்கச் செய்யும் முறையில் 2018 அக்டோபர் 11ஆம் நாள் தாமிரபரணியில் புஷ்கரணி என்று பொருநை ஆற்றைப் புனித படுத்துவதாகக் கூறிச் செயல்படுத்தியது...

• மருத்துவர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் உள்ளிட்ட பள்ளர் குலத் தலைவர்களை மக்களை எல்லாம் ஆர்எஸ்எஸ்-இன் வழி ஆரிய அடிமைத் தன்மையில் மூடநம்பிக்கையில் மூழ்கடிக்கிற வேலையைச் செய்தது...

• திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், கிழமை இதழ் உள்ளிட்ட எல்லா வகை ஊடகவியலிலும் அவர்கள் திட்டமிட்டு இயக்கமாய் இணைந்து செயல்பட்டு வருவது...

• கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் ஏபிவிபி மாணவர்களைக் கொண்டு, பார்ப்பனிய எதிர்ப்புக் கருத்துடைய, பகுத்தறிவுக் கருத்துடைய, குமுக மாற்றக் கருத்துடைய மாணவர்களை, ஆசிரியர்களைக் கண்டறிந்து அவர்களை எதிர்த்திட அல்லது கல்லூரி - பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேற்றிட சூழ்ச்சி செய்திடுவது... (அண்மையில் சென்னை, ஐ.ஐ.டி-யிலும், சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பெரியார் அம்பேத்கர் வாசகர் மன்றம் அமைத்ததற்காக மாணவர்களைத் தாக்கியதும், கரிகாலன் என்ற மாணவரை நீக்கியதையும் தமிழகம் அறியும்). (தமிழ்நாட்டில் பெரியார், அம்பேத்கருக்கு மன்றம் வைக்க முடிய வில்லை. அப்படி வைத்ததற்கு நடவடிக்கை என்றால் வேறென்ன இழிவு இதற்குமேல் வேண்டும்...)

• அகில இந்தியக் கட்சி என்கிற பெயரில் நடக்கிற வைதீகப் பார்ப்பனிய வெறித்தனம்தான், மாநில உரிமைகளைப் பறிக்கிறது. மொழி உரிமைகளை நசுக்குகிறது. தனித்தனிப் பண்பாட்டுச் சிறப்பை, வரலாற்றைத் தேய்த்து அழிக்கிறது.

• ஒட்டுமொத்த இந்தியாவை வெளிநாட்டுப் பணமுதலாளிகளிடம் விலை பேசுகிறது. அப்பணமுதலைகள் உள்நுழைந்து கொள்ளை யடிக்கத் திறந்து விடுகிறது.

• சாதி ஒழிப்பு அரசியலிலும் தமிழ்த்தேச அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்ட பலர் அந்தந்த இயக்கங்களில் சிக்கல் ஏற்பட்டுச் சற்று ஒதுங்கும்போது அவர்களை ஆர்எஸ்எஸ் பயன்படுத்திக் கொண்டு ஏதாவது சிறு சிறு இயக்கங்களாக அறிவித்து ஆரியப் பார்ப்பனியக் கருத்தைப் பரப்பி வருகிறது. தடா பெரியசாமி, தங்கமணி, ஏர்போர்ட் மூர்த்தி போன்ற பறையர் குலத் தலைவர்களையெல்லாம் விலைபேசி தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற ஒருங்கிணைப்புக் குழுவுக்குள் முரண்களை ஏற்படுத்தவும், ஒற்றுமை ஏற்படாத வகையில் எதிர்த்துப் பேசிடவுமான நிலையில் வளர்த்து வருகிறது.

• முள்ளிவாய்க்கால் கொடுமை நடந்த சூழலில் அதை மறைத்திடும் நோக்கத்தோடு 2009 தொடங்கி இந்து ஆன்மீகக் கண்காட்சி என்கிற பெயரில் விரிந்த ஏற்பாட்டைச் செய்து வெகுமக்களை மயக்கி ஏமாற்றி வருகிறது. ஒரு கிழமை நடத்தப்படும் அக் கண்காட்சியை இலக்கக்கணக் கானவர்கள் பார்க்கும்படிச் செய்து வருகிறது. அதற்குள் அடைக்கப்பட்டுள்ள அரங்குகளில் ஆரியப் பார்ப்பனிய வைதிக வெறி உணர்வை ஊட்டும்படி காட்சிப் படுத்துவது மட்டுமன்றி, பிராமணர் சங்கம், சௌராஷ்டிரர் சங்கம், தேவேந்திர குல சங்கம், வைசியர் சங்கம், விஸ்வகர்மா சங்கம் எனத் தமிழ் நாட்டில் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட எல்லா சாதிச் சங்கங்களுக்கும் அரங்கங்கள் ஒதுக்கி ஒவ்வொன்றையும் தங்களுக்குச் சார்பாய் உருவாக்கி வைத்தனர். இந்தியாவை இந்து நாடு என்று அழைக்க வேண்டும் என்று துண்டறிக்கைகள் கொடுக்கப்பட்டன.

• ஐயா வைகுண்டர் வழி, வள்ளலார் வழி மற்றும் தமிழ் முறையிலான வழிபாட்டை முதன்மைப்படுத்தித் தமிழ் அமைப்புகளுக் கெல்லாம் தனித்தனி அரங்குகள், அமைத்து அவர்கள் அனை வரும் இந்து மதத்திற்குள் அடக்கம் - என்கிற வகையில் செய்தது...

சமஸ்கிருத மொழி பயில வழி அமைத்தல் தொடர்பான அரங்கம்; அந்தக் கண்காட்சியில் பெரிய அளவில் முழுக்கப் பதாகைகள் :

உலகிற்கே பண்பாட்டைச் சொல்லித் தந்தது இந்து தர்மம்..
இந்து தர்ம சாஸ்திரங்களின் தொகுப்பே திருக்குறள்..
எனது பாரத தேசம், எனது பாரதமாதா, எனது பாரத தர்மம் - மூன்றும் ஒன்றின் வடிவமே என்று துதிப்பேன்..
கோதானம் செய்தால் கோடி புண்ணியம்..
ஹைதர் அலி, திப்பு சுல்தான் மணி மண்டபம் தமிழனுக்கு அவமானம்.

• புனித யாத்திரை சுற்றுலா ஹோமங்கள் செய்ய இலவசம், இந்து முறைப்படி அடக்கம் செய்யும் முறை, ராசிக்கல் மோதிரம் விற்பனை இப்படியாகப் பல கடைகள்...

• இவையன்றி பழங்குடியின மக்கள் இந்துப் பண்பாட்டைப் பாதுகாப்பது பற்றிய திட்டம், அவர்களை இந்து அரங்கத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பது பற்றிய செயல்பாடுகள் ...

• இராமாயண புத்தகங்களை வீடுதோறும் கொண்டு செல்வது ...

• தெருக்களில் ராமாயணம் படிக்க ஏற்பாடு செய்தல் ...

• இராம பக்தர்களை ஒருங்கிணைத்து தேசபக்தியை ஊட்டுதல் ...

• நாளும் ஸ்ரீ ராம ஜெயம் 108 முறை எழுதப் பழக்குவது ...

• ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாய் சேர்த்து இராமாயண மகோத்சவத்திற்குத் தர முடிவு செய்தல் ...

- ஆக, இப்படியாகவெல்லாம் கல்வியால், அறிவியலால் மேம்பட்டு வாழ்கிற இந்தக் காலத்திலேயே ஆரியப் பார்ப்பனியம், இந்தியம் எனும் பெயரில், இந்து எனும் பெயரில் தமிழர்களை அடக்கி அடிமைப்படுத்தியிருக்கிறது - அடிமைப்படுத்தி வருகிறது என்றால் அதைவிட மிகப்பெரும் வெட்கக் கேடு வேறென்ன?

o ஒரே மொழி கூடாது - எல்லா மொழிகளுக்கும் உரிமை வேண்டும் அவரவர் தேசத்தில் அவர்கள் மொழியே ஆட்சிமொழி, கல்வி மொழி, ஞாயமொழி, வழிபாட்டுமொழி என்கிற நாம்..

o ஒரே பண்பாடு இல்லை - ஒவ்வோர் இன மக்களுக்கும் தனித்தனி பண் பாடும் வாழ்வியல் முறைகளும் உண்டென்கிற நாம்...

o ஒரே வரலாறு என்பது பொய் - அவரவர் மொழி இனத்திற்கும் எனத் தனித் தனி நீண்ட வரலாறு உண்டு என்கிற நாம்...

o ஒரே அரசியல், ஒரே பொருளியல் இல்லை; இந்தியாவெங்கும் ஒரே பங்கீட்டு அட்டை(ரேசன் கார்டு), ஒரே அடையாள அட்டை (ஆதார்), ஒரே வரி - இவையெல்லாம் பிழை என்கிற நாம்...

o ஒரே கட்சி என்பதும் வெறி பிடித்த உணர்வுடையது என்று உணர்ந்தாக வேண்டும்... அதேபோல் பல்வேறு இன மக்கள், தனித்தனி அரசு கொண்டிருந்ததையெல்லாம் சிதைத்து ஒரே நாடென்பதும் - அடிப்படை யில் பிழையானதும், அதிகார வெறிபிடித்ததும் என்று அறிந்தாக வேண்டும். ஒரே நாடென்பவர்கள் ஒரு நாட்டின் மக்கள் - ஒரே மக்கள் என்பதற்கான முயற்சியில்தான் மேற்படி அனைத்துக் கருத்துகளையும் உருவாக்கித் தலையசைக்க வைக்கின்றனர். இந்தியாவை ஒரே நாடு என்கிற அதிகார வெறியில்தான், சுரண்டல் வெறியில்தான் அகில இந்திய அளவில் ஆட்சி அதிகாரத்தை உருவாக்குகிறார்கள்.

o இந்திய அளவிலான ஒரே ஆட்சி அதிகாரத்தை அகில இந்திய ஆட்சியதிகார அமைப்பை ஏற்க முடியாது என மறுக்கவும், அத்தகைய கட்சியை ஏற்காமல் விரட்டியடிக்கவும் வேண்டும்...

o பார்ப்பனிய இந்தியமும் - பாரத வெறியாடல்களும் - பன்னாட்டுச் சுரண்டல் கூட்டங்களும் ஒரே நேர் கோட்டின... இவற்றில் ஒன்றை விலக்கி மற்றதை எதிர்த்து வீழ்த்திட முடியாது.

o ஒவ்வொன்றின் அதிகார வெறித்தனங்களையும், சூழ்ச்சிகளையும் ஆழ உணரும்போதே அவற்றை அடிசாய்க்கும் அரசியலிலும், நடைமுறையிலும் தெளிவடைய முடியும். அந்த வகையில் பன்னெடுங்காலமாய் ஆர்.எஸ்.எஸ். எனும் பெயரிலும், அதன் 40-க்கும் மேலான கிளை நிறுவனங்களின் பெயரிலும் நடந்துவரும் சூழ்ச்சிகளையும், உள்ளடி வேலைகளையும் ஆழ்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழக அளவில் பார்ப்பனியத்தை - இந்தியத்தை - வல்லரசியத்தை எதிர்த்திடும் சாதிஒழிப்பு இயக்கங்கள், தமிழ்த்தேச இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள், அம்பேத்கரிய இயக்கங்கள், மார்க்சிய இயக்கங்கள் அனைத்தும் நேர்கோட்டில் நின்றாக வேண்டிய காலகட்டமிது. இதற்குள் குறுக்குச் சால் ஓட்டு வோரைப் புறந்தள்ளி நிறுத்திவிட்டு அனைவரும் கைகோர்த்தாக வேண்டும். எனவே, அந்நிலை நோக்கித் திட்டமிட்ட அடித்தளங்களும், அரண்களும் அமைத்து ஆழ்ந்து செயல்பட்டால்தான் ஆரியம் பார்ப்பனியத்தின் அடங்கா அதிகாரப் போக்குகளை தமிழ் அடக்கிட முடியும்... தேச மக்கள் உரிமை பெற்றாக முடியும்...

o ஊர்தோறும் களங்கள் அமைத்து மக்களிடையே காலூன்ற வேண்டும்... படிப்பகங்கள், மன்றங்கள், இளைஞர் இயக்கங்கள், மகளிர் அமைப்புகள், முதியோர் இல்லங்கள் அமைத்துப் பயிற்று விப்பது, அறிவு விழாக்கள் நடத்துவது, பகுத்தறிவை விதைப்பது, விளையாட்டுகளை நடத்துவது - எனப் பல வடிவங்களில் செயல்பட்டாக வேண்டும்...

o நாளிதழ், கிழமை இதழ், தொலைக்காட்சி ஊடகம் - எனப் பல்வகைச் செய்தி, பொழுதுபோக்கு ஊடகங்களையும் தமிழ் நாட்டுத் தன்னரசு அதிகாரக் கண்ணோட்டங்களில் நடத்தியாக வேண்டும்...

- பொழிலன்