தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையைத் தமிழ்நாட்டுத் தமிழர்களைச் சென்று பார்க்க விடாதபடி ஆர்.எஸ்.எஸ்.இன் விவேகானந்தா கேந்திரா தொடர்ந்து தடை செய்து வந்தது.. படகுகளை அப்போது திருவள்ளுவர் சிலைக்கே அனுப்ப மறுத்தனர்..

திருவள்ளுவர் சிலை பாறைக்கும், விவேகானந்தர் மண்டபம் உள்ள பாறைக்கும் இடையில் கண்ணாடிப் பாலம் புதியதாக அமைக்கப்பட்ட பிறகு படகுக்கான கட்டணம் உரு. 100 வாங்கப் பெறுவதோடு அந்தப் பாலத்தில் செல்வதற்கு ஒவ்வொருவரிடமும் 30 உருபா வேண்டுமென விவேகானந்தா கேந்திரம் தனியாக வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது..

glass bridge in kanniyakumariகன்னியாகுமரியிலும் திருவள்ளுவர் சிலையிலும் அதிகாரங்களை இழந்து வருகிறது தமிழ்நாடு அரசு.

இந்நிலையில் நீண்ட காலமாக கன்னியாகுமரியையும் திருவள்ளுவரையும் விழுங்குவதற்கு ஆர்.எஸ்.எஸ். செய்து வருகிற முயற்சிகள் குறித்துச் சிலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்..

ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் வளர்வதற்குக் கன்னியாகுமரி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

1925 இல் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டு நெடுங்காலம் வரை தமிழ்நாட்டிற்குள் அது நுழைய முடியாத சூழலே இருந்தது. 1939-இல் பதினைந்துக்கும் மேற்பட்ட சித்த்பவன் பிராமணர்கள் தமிழ்நாட்டிற்குள் அனுப்பப்பட்டிருந்த நிலையிலும் அவர்கள் ஆரிய சமாஜம் உள்ளிட்ட தொடர்புடைய வழக்கறிஞர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு அந்த இயக்கத்தை அமைக்க முடிந்ததே அல்லாமல், ஆர்.எஸ்.எஸ்.-ஐ மக்கள் இயக்கமாக வளர்க்க முடியவில்லை.

1940 மார்ச்சு 23-இல் சாவர்க்கர் சேலத்தில் இந்து மகாசபை மாநாட்டை அங்குள்ள பார்ப்பன - மார்வாடி - சௌராட்டிரர் தொடர்பில் நடத்தத் திட்டமிட்டார். கூட்டமில்லாமலே மாநாடு நடந்தது. தொடர்ந்து மார்ச்சு 26-இல் சென்னையில் மராட்டிய சிவாஜி விழாவில் கலந்துகொண்டு பேசியதும், அந்த நான்கைந்து நாள்களாகத் தமிழ்நாட்டிலேயே அவர் தங்கியிருந்ததும் கவனத்திற்குரியவை.

1942-க்கு முன்பாக இந்தியாவில் வங்காளம், அசாம், ஒரிசா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளுக்குள் ஆர்.எஸ்.எஸ். நுழைய முடியவில்லை என ஆர்.எஸ்.எஸ். இன் குறிப்பேடு சொல்லுகிறது.

1948 சனவரி 30 ஆம் நாள் காந்தி கொலை செய்யப்பட்ட அன்று இரவு கோல்வால்கர் சென்னையில் தேநீர் விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்ததாகவும், அன்று மாலை தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது காந்தி கொலை செய்யப்பட்ட செய்தி அவருக்குத் தெரிந்ததாகவும் கோல்வால்கரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

1948-க்கு முன்பும் 1949-களிலும்கூட ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் கோல்வால்கர் சென்னைக்கு அடிக்கடி வந்து போயிருக்கிறாராம், விசுவ இந்து பரிஷத்தின் கலந்தாய்வுக் கூட்டங்களுக்கு அவர் வந்து சென்றதாகப் பதிவு உள்ளது.

1956-இல் மதுரைக்குக் கோல்வால்கர் வந்ததாகவும் அங்குப் பசும்பொன் முத்துராமலிங்கரைச் சந்தித்ததாகவும் விடப்பட்ட கதை முக்குலத்தோரை ஆர்.எஸ்.எஸ்.இன் ஆதரவாக்கும் நோக்கத்திற்கானதே தவிர, கோல்வால்கர் 1956-இல் பசும்பொன் முத்துராமலிங்கரைச் சந்திக்கவில்லை என்பதும், 1959-இல் தான் அவர் வந்ததாகவும் அறியமுடிகிறது.

தமிழ்நாட்டில் பிராமணர்களை, சௌராட்டிரர்களை, மார்வாடிகளைக் கொண்டே தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.-சும், அதன் அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. விவேகானந்தர் நூற்றாண்டினையொட்டித் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவிக் காலூன்றிட வேண்டும் எனத் திட்டம் விரிவாகப் போடப்பட்டிருந்தது..

1962-இல் கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரம் எனும் நிறுவனம் ஒன்றை நிறுவிடவும், கன்னியாகுமரி கடற்கரையில் இருக்கும் பெரிய பாறையில், 1892 நவம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாள்களில் விவேகானந்தர் ஊழ்கம் (தியானம்) செய்ததாகவும் சொல்லி (அவ்வாறு அவர் அந்தப் பாறையில் மூன்று நாட்கள் இருந்தது என்பதும், அந்தக் காலமும் இடமும் எந்த அளவு உண்மையானது என்பதும் எங்கும் பதிவில் இல்லை.. ஆர்.எஸ். எஸ். இதழில்தான் பிற்காலத்தில் எழுதியுள்ளனர்.) அந்தப் பாறையில் விவேகானந்தர் மண்டபம் அமைக்க விவேகானந்தா கேந்திரத்தின் மூலம் பெரும் முயற்சி எடுத்தனர்.

ஆர்.எஸ்.எஸ். மூத்தத் தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் இரானடேவை அங்கு முன்னிறுத்தி அதற்கான முயற்சிகளைச் செய்தனர்.

அதற்கு முன்னர், அந்தப் பாறையைக் கன்னியாகுமரி மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். அவர்கள் அனைவரும் அக்காலத்தில் கிறித்தவர்களாக இருந்ததால் கிறித்துமசு காலங்களில் குறுந்தட்டி வழிபாடும் செய்து வந்தனர். மீன் பிடி வலைகளை உலர வைக்கப் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அந்தப் பாறையை விட்டுத்தர அவர்கள் மறுத்துப் பெரிய அளவில் போராடவே முதலில் அப்போதைய தமிழக முதல்வர் காமராசரிடமும், பிறகு பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்தபோது அவரையும் சந்தித்து இசைவு கேட்க அவர்கள் "தாங்கள் செய்ய இயலாது" எனச் சொல்லி மறுத்துவிடவே, இரானடே அப்போதிருந்த இந்திய அரசின் கல்வி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் உமாயூன் கபீர்-ஐச் சந்தித்தபோது, அவர் அதற்கு "இது வீணாகக் கிறித்தவர்களிடையே முரண் உணர்வை உருவாக்கிவிடும், அது மட்டுமன்றி கடலின் இயற்கை அழகைக் கெடுத்துவிடும்" என்றும், "இதில் இந்திய அரசு தலையிட முடியாது" என்றும் "மாநில அரசை நீங்கள் அணுக வேண்டும்" என்றும் கூறியிருக்கிறார்.

உடனே, இரானடே குடியரசுத்தலைவர் இராதாகிருட்டிணனையும், அமைச்சர்கள் இலால்பகதூர் சாஸ்திரி, பட்டேல் மற்றும் சங்கராச்சாரி, இராமகிருஷ்ண மிசன் தலைவர் சுக்லா என அனைவரையும் சந்தித்திருக்கிறார். இலால் பகதூர் சாஸ்திரி நேருவிடம் தெரிவித்து இசைவு பெறுவதாகக் கூறினார்.

இதற்கிடையில் மேற்குவங்க முதல்வர், கேரள முதல்வர் மற்றும் 323 நாடாளுமன்ற உறுப்பினர்களின் இசைவுக் கையொப்பங்களையெல்லாம் பெற்று இறுதியாக நேருவின் பரிந்துரையையும் பெற்றுத் தமிழக முதல்வர் பக்தவச்சலத்தை மீண்டும் சந்தித்தார் இரானடே.

பின்னர், தமிழக அரசின் இசைவை 1964 செப்டம்பர் 24-இல் பெற்றார். வேடிக்கை என்னவென்றால் அதற்கான அமைப்புக் குழுவின் சிறப்புத் தலைவராகப் பக்தவச்சலமே அமர்த்தப்பட்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர் அண்ணாதுரையின் இசைவில் நெடுஞ்செழியனும் குழு உறுப்பினராக ஆக்கப்பட்டிருக்கிறார். பிற தலைவர்களும் அதில் உறுப்பினர்களாக்கப்பட்டனர். ம.பொ.சி.-யும் பிற தலைவர்களும் உறுப்பினராயினர் - என ஆர். எஸ்.எஸ். இன் இதழான 'ஆர்கனைசர்'இல் செய்தி பதிவாகியிருக்கிறது.

அதன்வழி, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு இல்லாத நிலையில் கேரள அரம்பர்(ரௌடி)களையும் கட்டுமானப் பணியாளர்கள் கொண்ட குழுவினரையும் வைத்துக்கொண்டு மண்டபம் கட்டத் தொடங்கினர்.

கேரள முதல்வர் நம்பூதிரிபாட்டின் வழிகாட்டலில் அச்சுத மேனன் குழுவிற்குத் துணை செய்தார், தமிழ்நாட்டில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிச் சார்பில் கல்யாணசுந்தரமும், மேற்குவங்கத் துணைமுதல்வர் ஜோதிபாசுவும் பெருமளவில் இரானடே-வுக்குத் துணை நின்றனர்.

ஆக, தமிழ்நாட்டில் விவேகானந்தர் கேந்திரா எனும் பெயரில் கன்னியாகுமரி பாறையைப் பறித்துக் கொண்டு விவேகானந்தர் பாறையாக மாற்றுவதற்கான ஆர்.எஸ்.எஸ். - இன் முயற்சிக்கு ஏறத்தாழ எல்லாக் கட்சியினரும் எந்த எந்த அளவு பின்னிருந்து செயல்பட்டனர் என்பதையும் கன்னியாகுமரியைத் தாரை வார்த்து வாங்குவதற்கு ஒவ்வொருவரையும் எந்த அளவு ஈடுபடுத்தினர் என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு அந்தக் கேந்திரத்தின் தலைவரும் செயலாளரும் பரமேசுவரன், ஏ. பாலகிருஷ்ணன் என்கிற கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஒருபக்கம் எனில், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் மூலம் 75 கல்விக்கூடங்களும் (அந்தமானில் 9, தமிழ்நாட்டில் 3, அசாமில் 18, அருணாசலப் பிரதேசத்தில் 35) மருத்துவமனைகளும் நடைபெற்று வருகின்றன என்பதும் அறிய வேண்டிய செய்தியாகிறது. விவேகானந்தா கேந்திராவின் பெயரில் பல மொழிகளில் சிறு வெளியீடுகள் அங்கு வருவோர் போவோர் அனைவருக்கும் கொடுக்கப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாகக் கேந்திரத்தின் முழு ஆதரவில் ஆந்திரத்தின் திருப்பதிக் கோயிலும், 2017-இல் பாரத மாதா கோயிலும், இராமாயண (தரிசன)க் காட்சிக் கூடமும், அனுமன் சிலையும், சிவன் சிலை கொண்ட நுழைவாயிலும் கட்ட 25 கோடி என இந்தியப் பாசிச அரசின் மோடி (யார் அப்பன் வீட்டுச் சொத்து!) செலவிற்குக் கொடுத்துள்ள நிலையில் அவை கட்டப்பட்டுத் திறக்கப்பட்டன.

ஆக, அவ்வகையில் ஆர்.எஸ்.எஸ்.-இன் கோட்டையாகச் செயல்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டின் முதற் பெரும் இடமாகக் கன்னியாகுமரியில் வலுவாகக் கால்பரப்பியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக அது செய்த, செய்து வருகிற வேலைகள் பல...

1970-இல் விவேகானந்தர் பாறை திறக்கப்பட்டதன்பின் திருவள்ளுவர் சிலையையும் தாங்களே நிறுவ இருப்பதாக அறிவிப்பு செய்துகொண்டனர்..

அதனால், அன்றைய சூழலில் தமிழ்நாட்டு அரசின் பொறுப்பிலும் விவேகானந்த கேந்திரப் பொறுப்பிலுமே சிலையைத் திறப்பதாக திட்டம் உருவாக்கப்பட்டது..

தமிழ்நாடு அரசு தனித்துத் திறந்துவிடாதபடி பல தகிடுதத்தப் பணிகளை ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து செய்தது.

"என் உயிர் இருக்கிறவரை விவேகானந்தர் கேந்திரா இணைப்பில்லாமல் தனித்துத் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு நான் துணை செய்ய மாட்டேன்" என எம்ஜிஆர் தன்னைச் சந்திக்க வந்த விவேகானந்தர் கேந்திரத்தினரிடம் (ஆர்எஸ்எஸ்-சினரிடம்) ஒப்புதல் கொடுத்ததாகச் சொல்லப் பெறும் வாக்குறுதியைத் தன் மறைவுக் காலம் வரை காப்பாற்றிக் கொண்டார்.

அந்த வகையில் 1979 ஏப்பிரல் 15 இல் கால்கோள் விழா நடைபெறுவதாகவும், அறிக்கை உருவாக்கப்பட்டு வேலைகள் நடந்தன. அந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் விவேகானந்தர் கேந்திரமும் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டது.

ஆனால், அதன் பிறகு, திருவள்ளுவர் சிலையைத் தமிழ்நாடு அரசு தம் பொறுப்பில் மட்டுமே பொறுப்பெடுத்து நிறுவுவதற்கு அருமுயற்சி செய்ய வேண்டி இருந்தது. விவேகானந்தா கேந்திரத்தை அதிலிருந்து விலக்கிவிடும் பணியைக் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபொழுது பெருமுயற்சி எடுத்து நிறைவேற்றினார். அவ்வகையில் திருவள்ளுவர் சிலை முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பொறுப்பில் 1990 செப்டம்பர் ஆறாம் நாள் தொடங்கப்பட்டு, ஏறத்தாழ 7000 கல்லெடை(டன்) எடையில் முழுக்க முழுக்கப் பாறைக் கற்களால் திரு. கணபதி பெருந்தச்சரின் பொறுப்பில் ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் பணிகள் நடைபெற்று கட்டமைக்கப்பட்டது.

தி.பி. 2000 சனவரி 1 ஆம் நாள் மிகப்பெரும் முயற்சிகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட பின், அதனைப் பெருமை இழக்கச் செய்வதிலும் அதன் ஆளுமைப் பணிகளில் தாங்களும் இணைந்து கவனிப்பதாய் அதை அழிக்கத் திட்டமிடுகிற முயற்சியிலும் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

திருவள்ளுவர் சிலை சிறப்புபெறாத வகையில் விவேகானந்தர் கேந்திரம் செய்கின்ற சூழ்ச்சிகள்:

மிகக் கடுமையான முனைப்பில் திறக்கப்பெற்ற திருவள்ளுவர் சிலையை எப்படியாவது தங்களின் அதிகாரத்திற்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதற்காகப் பல வேலைகளைச் செய்துவருகிறது விவேகானந்தர் கேந்திரம்.

2000 ஆண்டில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட பிறகு ஒரு சில ஆண்டுகளே தமிழ்நாட்டு அரசின் பூம்புகார் போக்குவரத்துக் கழகத்தினால் செலுத்தப்படும் படகுகள் திருவள்ளுவர் சிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தன..

இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிலைக்குப் படகு போக சரியான வகையில் சூழல் இல்லை.. நீர் அளவு குறைவாக இருக்கிறது, காற்று கடுமையாக இருக்கிறது, பாறைகள் மேலே தெரிகின்றன என்கிற வகையில் ஏதாவது காரணம் சொல்லித் திருவள்ளுவர் சிலைக்குப் படகு போக்குவரத்தை நிறுத்தினார்கள்..

கலைஞர் கருணாநிதியால் திறக்கப்பட்டது என்பதற்காக, பின்னர் முதலமைச்சராக வந்த செயலலிதா உள்ளிட்டவர்கள் அந்தச் சிலையைத் தூய்மைப்படுத்தாமலும் பூச்சு பூசிப் பேணிக் காக்காமலும் அப்படியே கிடப்பில் போட்டனர்..

அதனால், ஏறத்தாழ பத்து பதினைந்து ஆண்டுகள் அளவில் திருவள்ளுவர் சிலைக்கான போக்குவரத்து இல்லாமலேயே போய்விட்டது..

இறுதியாகக் கடந்த ஆட்சியின் போதுதான் திருவள்ளுவர் சிலையைப் போய்ப் பார்ப்பதற்கான கோரிக்கை வலுப்படவே விவேகானந்தர் மண்டபம் உள்ள பாறைக்கும் திருவள்ளுவர் சிலை பாறைக்கும் இடையில் கண்ணாடிப் பாலம் ஒன்றை திபி 2024 திசம்பர் 31 அன்று தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்துத் திறந்து வைத்தார்..

ஆனால், அப்போது அதாவது கண்ணாடி இழைப்பாலப் பணிகள் நடந்து கொண்டிருந்த 2023 ஆம் ஆண்டில், திருக்குறள் பேரவையத்தின் ஒருங்கிணைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட திருக்குறள் அமைப்புகள் எல்லாம் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு கண்ணாடிப் பாலத்தைக் கடற்கரையில் இருந்து நேராக திருவள்ளுவர் சிலை நோக்கி அமைக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டது. விவேகானந்தர் மண்டபம் உள்ள பாறை வழியாகப் போய்ப் பார்ப்பதால் திருவள்ளுவர் சிலையின் முழு கட்டுப்பாட்டையும் அந்த மண்டபத்தைச் சார்ந்த விவேகானந்தா கேந்திராவினரின் ஆளுகைக்கே செல்ல நேரிடும் என அறிவுறுத்தப்பட்டது..

ஆயினும், அன்றைய அமைச்சர் எ.வா. வேலு அக்கருத்தைச் செவி சாய்க்காமல், அந்த இரண்டு பாறைகளுக்கும் இடைப்பட்டே கண்ணாடிப் பாலத்தைக் கட்டமைத்து விவேகானந்தா கேந்திராவின் அதிகாரமே தாண்டவம் ஆடுகிற படி அமைத்து விட்டார்.. இது ஆர்.எஸ்.எஸ். க்கு மிகவும் வாய்ப்பாகப் போய்விட்டது.

ஏற்கனவே, திருவள்ளுவருக்கு என்ன உடை உடுத்துவது எப்படி அடையாளப்படுத்துவது என்று அதிகார வெறிபிடித்து ஆடுகின்றனர் ஆளுநர்கள்... வைதீக சனாதன உணர்வை பரப்பி வருகின்றனர்..

திருவள்ளுவரை ஆய்வு செய்கிற அறிஞர்கள் அல்லர் ஆளுநர்கள்.. வந்தேறி ஆளுநர்களின் மூளைக்குள் என்ன பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனுப்பப்படுகிறார்களோ.. அந்தப் பதிவுகளைத்தாம் அவர்கள் இங்கு வந்து கக்குகிறார்கள்..

அதேபோல், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட வைதீக சனாதனக் கருத்துடைய கட்சிகள் இயக்கங்கள் எல்லாம் தமிழ் இலக்கியங்களிலோ, திருக்குறளிலோ புலமைப் பெற்ற கட்சிகள் அல்ல..

அவர்களின் வைதீக சனாதன அரசியலைப் பரப்பல் செய்வதற்காகவும் மக்கள் தலையில் திணிப்பதற்காகவும் திருவள்ளுவரை ஒரு கருவியாக இன்னும் சொன்னால் காவி பூசப்பட்ட கருவியாகவே மாற்றப் பார்க்கிறார்கள்..

அதற்காக நீண்ட நெடிய திட்டமுடையவர்களாக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்..

தருண் விஜய் என்ற பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கன்னியாகுமரிக்கு வந்து அங்கிருந்து ஒரு திருவள்ளுவர் சிலையை எடுத்துக்கொண்டு போய்க் கங்கைக் கரையில் உள்ள ஹரிதுவாரில் பெரிய அளவில் நிறுவப்போவதாகச் சொல்லி எடுத்துச் சென்றவர், அங்குக் கொண்டு போன திருவள்ளுவர் சிலையைச் சாக்குப்பைக்குள் திணித்துச் சகதியில் வீசி எறிந்து இழிவுபடுத்தியதைத் தமிழகம் மறந்து விடாது..

அந்த நிகழ்ச்சி தொடங்கி, ஊரெல்லாம் போய்த் திருவள்ளுவரைப் பேசித் தங்களின் வைதீகக் காவிச் சகதிக்குள் தன்வயப்படுத்தி அடைத்து அடையாளப்படுத்திக் கொள்வதற்காக மோடி செய்து வருகிற வித்தைகள் வரை..

அவர்களின் நோக்கங்கள் எல்லாம் திருவள்ளுவ அறத்தை எப்படியாவது வைதீக சனாதனத்துக்குள் கரைத்து விட வேண்டும் என்பதே..

எனவே, அவர்கள் திருவள்ளுவரைக் காவிக்குள் கரைக்கப் பார்க்கின்றனர்..

ஆனால், திருவள்ளுவம் பொதுமை அற உணர்வு கொண்டதே என்பதை அடையாளப்படுத்துகிற பொறுப்பு நம்முடையது..

எனவே, அதைச் சிதைக்கிற வைதீக சனாதனத்தைத் திருவள்ளுவம் ஏற்க முடியாது..

தமிழர்களின் திருவள்ளுவத்தைக் காவிப்படுத்துவதற்கோ, வைதீக சனாதனப் புதைச்சேற்றுக்குள் புதைப்பதற்கோ அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது..

எனவேதான்.. தமிழ்நாடு.. வைதீக சனாதனத்தை வெறித்தனமாகப் பிடித்துக் கொண்டிருக்கிற ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டியிருக்கிறது.. பகைக்க வேண்டியிருக்கிறது..

திருவள்ளுவ அறத்தைக் கொண்டு அவர்களை இடித்துரைக்க வேண்டியிருக்கிறது..

இந்நிலையில்..

திருவள்ளுவர் அமைப்புகள் ஒன்று கூடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைகளாக இவற்றை முன் வைக்கின்றன.:

கன்னியாகுமரியின் திருவள்ளுவர் சிலைக்கான வழியைத் தமிழ்நாட்டரசின் பொறுப்புக்கே உரிமையுடையதாக மாற்ற வலியுறுத்துவோம்!

இப்போதுள்ள கண்ணாடிப் பாலத்தைப் பாதுகாப்பதற்கான செலவைத் தமிழக அரசே ஏற்றுக் கொள்வதோடு அதன் வழியான வரவையும் தமிழ்நாடு அரசே பெற வேண்டும். அதாவது படகு போக்குவரத்திற்காக வாங்கப்படுகிற சீட்டுத் தொகையைக் கொண்டே கண்ணாடிப் பாலத்தையும் பார்க்கிற படி செய்ய வேண்டும். விவேகானந்தா நிறுவனம் தனியே 30 உருவா வழிப்பறிச் செய்வதைத் தடை செய்ய வேண்டும்.

கடற்கரையில் இருந்து தனியே திருவள்ளுவர் சிலைக்குப் போக புதிய பாலம் ஒன்றை அமைக்க வேண்டும். அதுவரை திருவள்ளுவர் சிலைக்குத் தனியே படகு அனுப்புகிற நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கு திரும்பினாலும் திருவள்ளுவரை அடையாளப்படுத்துகிற வகையில் ஒவ்வொரு சாலையிலும் திருவள்ளுவர் சிலைகளை எழுப்புவதுடன் திருக்குறளை முதன்மைப்படுத்திப் பரப்பல் செய்ய வேண்டும்..

திருவள்ளுவர் குறித்துப் பல்வேறு மொழிகளில் குறுவெளியீடுகளைத் தமிழக அரசு வெளியிட்டு, சுற்றுலா வருவோர்க்கு அதை இலவசமாக வழங்க வேண்டும்.

அங்குத் திருவள்ளுவர் குறித்த ஒலி, ஒளிக் காட்சி காட்டப்படுகிற வகையில் அங்கு நிறுவப்பட வேண்டும்.

திருவள்ளுவர் குறித்த நூல்களைக் குறைந்த விலையில் தமிழக அரசே அங்கு விற்பனை செய்ய வேண்டும்.

விவேகானந்தர் மண்டபம் உள்ள பாறையின் முழு கட்டுப்பாட்டையும் தமிழக அரசே பொறுப்பெடுத்து நடத்த வேண்டும்.

- என்கிற வகையில் தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.

பொழிலன், தமிழக மக்கள் முன்னணி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.