எவர் ஒருவரையும் பிறப்பால் மதிப்பிடுவது அறஉணர்வற்றது. வருணாச்சிரமப் பார்வையுடையவர்களே அனைவரையும் பிறப்பைச் சுட்டி மதிப்பிடுகின்றனர். தங்களை இருபிறப்பாளர்கள் என்று ஆரியப் பார்ப்பனர்கள் மதிப்பிட்டுக் கொள்கின்றனர்..
சுப்பிரமணிய பாரதியை நாம் பிறப்பால் மதிப்பிடவில்லை. எட்டயபுரம் எனும் சிற்றூரில் சனாதனக் குடும்பத்தில் பிறந்து, அவ் வழக்குகளை மீறித் தன் 39 அகவைக்குள் எண்ணற்ற அளவில் எழுதியும், தம்மால் முயன்ற அளவில் போராட்ட உணர்வோடு ஈடுபட்டும் வாழ்ந்திருக்கிறார். அவர் குலத்தைக் கருதி அவரை மட்டுமின்றி எவரையும் மதிப்பிடுவதும் புறக்கணிப்பதும் சரிஅன்று.
ஒருவரின் எழுத்துகள், கருத்துகள், எவ்வகைக் கருத்துகளுக்காக அவர் தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டார், எவற்றில் எல்லாம் உறுதியாக நின்றார் என்பவையே பாரதியை மட்டுமின்றி அனைவரையும் அளவிடுவதற்கான வரையறையாக இருக்க முடியும்.
ஆங்கில வல்லாட்சியை எதிர்த்துப் போராடியவர்கள் பல தரத்தினர். பகத்சிங்கையும், காந்தியையும், நேதாஜியையும், வ. உ. சி.யையும், ஐதர்அலியையும், திப்பு சுல்தானையும், பட்டேலையும், கோக்கலேயையும், திலகரையும், சவார்க்கரையும் ஒரே அளவில் அனைவரும் ஆங்கிலேயே வல்லாட்சி அதிகாரத்தை எதிர்த்துப் போராடியவர்கள் என்று அடையாளப்படுத்திவிட முடியாது.
ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்தை எதிர்த்த நிலையிலும் ஒவ்வொருவரின் இலக்கும் நோக்கமும் செயல்பாடுகளும் வெவ்வேறு வகையின. ஒவ்வொருவரின் ஈகமும் வலிமையும் வெவ்வேறு தரத்தின. அப்படி வகைப்படுத்துவதால் எவர் ஒருவரைக் குறைத்து மதிப்பிடுவதாகவும், புறந்தள்ளுவதாகவும் கருத முடியாது.
ஒருவரை அவர் கொண்ட கொள்கையிலும் அவரின் செயல்பாடுகளிலும் அவரை மதிப்பிடுகிறோம். அவ்வாறு மதிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக அனைவரையும் அடையாளப்படுத்தி நிறுத்துவது சமூக அக்கறையுள்ள மதிப்பீடாக திறனாய்வாகக் கருத முடியாது. அந்த அளவிலேயே பாரதியாரின் கருத்துகளையும் செயல்பாடுகளையும் திறன்களையும் மதிப்பிட்டாக வேண்டும்.
பிறரை எல்லாம் பெரிதும் பேசாத நிலையில், பாரதி பற்றியான உயர் மதிப்பீட்டைச் செய்து உயர்த்திக் காட்டிய பொழுது, பாரதியைப் பற்றிய திறனாய்வுகள் அதிகம் எழுதத் தொடங்கின. அவ்வாறு பாரதியை உயர் மதிப்பீட்டைச் செய்தவர்கள் ஆரியப் பார்ப்பனியக் கருத்தாளர்களாகவும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினராகவுமே இருந்தனர்.
பார்ப்பனர் அல்லாதார் இயக்கக் கருத்துகளை, செயல்பாடுகளை ஏற்க முடியாத நிலையிலேயே ஆரியப் பார்ப்பனர்களுள் சிறந்த செயல்பாட்டாளர்களை, கருத்தாளர்களைப் பொதுவுடைமைக் கட்சியினர் அடையாளப்படுத்த வேண்டிய தேவை அன்றைக்கு ஏற்பட்டது. எனவே, பாரதி குறித்த மதிப்பீடுகளை இயங்கியல் மதிப்பீடு கொண்ட அறப் பார்வையில் உரையாடியாக வேண்டும்.
பாரதியாரைச் சிலர் கொச்சைப்படுத்தித் திறனாய்வதாக மார்க்சிய இலெனினியத் தோழர்கள் சிலர் வருந்தியும் கண்டித்தும் எழுதுகின்றனர்.
பொதுவுடைமை இயக்கங்கள், அவற்றின் ஆய்வாளர்கள் முறைப்படி ஆய்வு செய்திருந்தால் பிறர் பாரதியாரைக் கொச்சைப்படுத்தி ஆய்வு செய்ய வேண்டிய தேவை இல்லை.
வேத, புராணங்களையும், மனுதர்ம, அர்த்த சாஸ்திரங்கள் உள்ளிட்ட ஆரிய இலக்கியங்களையும்கூட அவற்றின் கால அளவுகளையும் உள்ளடக்கங்களையும் முறையாக மார்க்சியர்கள் ஆய்வு செய்யவில்லை.
வேதங்களை உச்சி முகர்ந்து 'வேதங்களின் நாடு' என்பதாகக்கூட பெருமைப்பட்டுக் கொண்டனர் மார்க்சியர்கள் சிலர். பழந்தமிழ் இலக்கியங்களை, இலக்கிய வரலாற்றை டி. டி. கோசாம்பியும், நம்பூதிரிபாடும் குறைவுபடுத்தியே எழுதியுள்ளனர். அவற்றைத் திறனாய்வதற்குத் தமிழ்நாட்டு மார்க்சியர்களுக்குத் துணிவில்லை.
இந்த நிலையில்தான் மார்க்சிய ஆய்வாளர்கள் முறையாகப் பாரதியையும் திறனாயவில்லை என்று நாம் குறைபட வேண்டியிருக்கிறது.
வல்லரசிய எதிர்ப்பு கொண்டிருந்தார்கள் என்பதற்காகவே ஒருவரை முற்றிலும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. புரட்சிவயக் குமுக மாற்றத்திற்கு வல்லரசிய எதிர்ப்பு மட்டுமே அளவுகோல் அன்று.
பகத்சிங்கை காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை, திப்பு சுல்தானை, ஐதர் அலியை ஆரியப் பார்ப்பனியக் கருத்தாளர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
சவார்க்கர், திலகர் பிரித்தானிய எதிர்ப்பு கொண்டவர்கள் என்பதற்காக முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.
மார்க்சிய இலெனினியத் தோழர் ஒருவர் இப்படி எழுதுகிறார்:
“பாரதி பற்றி எழுப்பும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அவர் ஏகாதிபத்திய சகாப்தத்தில் வாழ்ந்தார். மார்க்ஸ் காலமான முதலாளித்துவ வரலாற்றுக் கட்டத்தில் வாழவில்லை.
ஏகபோக நிதி மூலதன ஆதிக்கம் செய்யும் வரலாற்றுக் கட்டத்தில் வாழ்ந்தார். தனது வரலாற்றுக் கடமையைச் சரியாக நிறைவேற்றினார். அதாவது நாட்டின் அனைத்து இழிவுகளுக்கும் காரணம் ஏகபோக நிதி மூலதனம் என்பதைப் புரிந்து கொண்டிருந்தார். உமர் முக்தார் இஸ்லாமிய வேதத்தைக் கையில் ஏந்திக் கொண்டுதான் இத்தாலிய ஏகாதிபத்திய ஆதிக்கத்தை எதிர் கொண்டார்.
நமக்கு ஏகாதிபத்தியம் என்றால் என்ன? என்பதை லெனின்தான் விளக்கியுள்ளார்."
என்பது அவர் கருத்து.
பாரதி அவரின் வரலாற்றுக் கடமையைச் சரியாகச் செய்துள்ளார் என்று அவர் நிறைவடைகிறார்.
பாரதி முற்றிலும் தவறானவர் என்றோ அவருக்கு வல்லரசு எதிர்ப்புப்ணர்வு இல்லை என்றோ எவரும் பேசவில்லை.
அந்த அளவில் மட்டுமின்றி எளிய தமிழில் எழுதியது, தமிழை, தமிழ் இலக்கியங்களை, தமிழ்நாட்டைச் சில இடங்களில் பாராட்டி எழுதியது, உருசியப் புரட்சியை வரவேற்றது, தென் ஆப்பிரிக்காவின் கரும்புத் தோட்டத்தில் நடந்த கொடுமைகளைக் கண்டித்தது உள்ளிட்ட அவரின் சிறப்புகளை ஏற்கவும் பாராட்டவுமே செய்கிறோம்.
அதே வேளையில் அவரிடம் இருந்த ஆரியப் பார்ப்பனிய அதிகார வெறிக் கருத்துகளைச் சுட்டிக் காட்டாமல் விலகிப் போவது மார்க்சிய நெறிக்குரியது அன்று.
இசுலாமிய வேதப் புத்தகத்தைக் கையில் ஏந்திக் கொண்ட உமர் முக்தாருக்கும், மூச்சுக்கு மூச்சு வேதங்களை பற்றி, ஆரியப் பார்ப்பனிய பாரதம் பற்றி, தெய்வபாஷையாகச் சமஸ்கிருதம் ஏற்கப்பட வேண்டும் என்பது பற்றி, சேதாரமில்லாத இந்துஸ்தானைப் படைப்பது குறித்துக் கருத்து கொண்டிருந்த பாரதிக்கும் வேறுபாடுகள் உண்டு.
மார்க்சிய ஆய்வுகள் அடிப்படையில் நேர்மையைக் கடைபிடிக்கப்பட வேண்டும். அந்த வகையில் பாரதி மட்டுமல்லர், அனைவருமே திறனாய்வுக்கு உரியவர்கள்தாம்.
சுப்பிரமணிய பாரதி வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் ஆயினும் அவர் பாடல்களும் கட்டுரைகளும் எழுதிய காலம் 17 ஆண்டுகளே..
ஏறத்தாழ 310 பாடல்கள் எழுதி இருக்கிறார். அவற்றுள் 53 பாடல்கள் தேசம் பற்றிய பாடல்கள். புதிய பாடல்களுக்குள்ளும் சில பாடல்கள் தேசம் பற்றியவை.
பாரதியின் கட்டுரைகளின் எண்ணிக்கையும் கணிசமானவை. சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, ஞானபானு, இந்தியா, விஜயா, சூரியோதயம், பாரதமாதா உள்ளிட்ட இதழ்களில் அவர் கட்டுரைகள் எழுதினார்.
இந்தியாவை பாரதம் என்று அழைப்பதே அவரின் விருப்பம் மட்டும் அன்றி நோக்கமாகவும் இருந்தது.
தேசபக்திப் பாடல்கள் தலைப்புகளிலும் பிற தலைப்புகளிலும் அவர் எழுதிய பாடல்கள் பெரும்பாலானவற்றில் பாரத நாடு, பாரத தேசம், பாரத தேவி, பாரதமாதா, பாரதப் பொன்னாடு, பாரதமாதேவி, பாரத ஜனங்கள், போகின்ற பாரதம், வருகின்ற பாரதம், பாரத சமுதாயம், பாரத மணித்திருநாடு, பாரதவாசி - என்ற வகையில்தான் அடையாளப்படுத்துகிறார். இந்தியா - என்று தம் பாடல்களுள் மூன்று இடங்களில் மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்..
செந்தமிழ்நாடு, தமிழ்த்தாய், தமிழ், தமிழ் மொழி வாழ்த்து, தமிழ் சாதி, வாழிய செந்தமிழ் என்று ஆறு பாடல்கள் மட்டுமே தமிழ் குறித்து எழுதி இருந்தாலும் அந்தத் தமிழும் உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் என்றுமே குறிப்பிடுகிறார்.
மொழி குறித்து முழுக்க முழுக்கச் சமஸ்கிருதத்தையும் இந்தியையுமே முதன்மையாக எண்ணுகிறார். ஆர் எஸ் எஸ் இன் பாஜகவின் திட்டத்தை 1906 ஆம் ஆண்டிலேயே அவர் வலியுறுத்தி இருப்பது கவனத்திற்குரியது.
“சமஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டு அன்று. மற்ற சாதாரண பாஷைகளை எல்லாம் மனித பாஷை என்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனி பெயர் ஒன்று வேண்டும் அல்லவா? அதன் பொருட்டே அதை தெய்வ பாஷை என்கிறோம்.”
என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
“ஆதி சிவன் பெற்று விட்டான்- என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேலும் இலக்கணம் செய்து கொடுத்தான்”
என்று தமிழ் இலக்கணத்தை ஆரிய மைந்தன் செய்து கொடுத்ததாக எழுதி இருக்கிறார்.
“தமிழ் பாஷைக்கோ இலக்கணம் முதல் முதலாக அகத்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரனதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே அமைத்துக் கொடுக்கப்பட்டது என்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே அமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் மெய்யே”
என்றும் எழுதியுள்ளார்.
சமசுக்கிருதக் கல்வெட்டு கிபி முதல் நூற்றாண்டுக்குப் பிறகே உள்ளது என்பதும், சமக்கிருதம் எழுத்து வழி முதலில் கிபி ஐந்தாம் நூற்றாண்டில் வட்டெழுத்துகளிலும், 14ஆம் நூற்றாண்டு அளவிலேயே தேவநாகரி எழுத்திலும் எழுதப்பட்டுள்ளது என்பதும் உலகறிய நிறுவப்பட்ட நிலையில் சமஸ்கிருத இலக்கணத்திலிருந்துதான் தமிழ் இலக்கணம் எழுதப்பட்டது என்பது மிகப்பெரும் இட்டுக்கட்டல்.
சாதி்கள் ஒழிப்பு பற்றி ஒரு பக்கம் பேசிக்கொண்டே, மறுபக்கம் சாதி்கள் தேவைகள் என்று வலியுறுத்துவதோடு, தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிப்பாக பறையர்களை, புலையர்களை ஈனர் என்றும் தீயர் என்றும் இழிவுப்படுத்தி பல இடங்களில் எழுதி இருக்கிறார்..
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது என்று அறிவித்து எழுதிவிட்ட அதே போது, ஆரியம் என்கிற சமஸ்கிருதமே உயர்வானது தெய்வ பாஷையானது என்று பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.
யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் யாரும் பிறந்ததில்லை என்று ஓர் இடத்தில் அறிவித்து விட்டு, எண்ணற்ற இடங்களில் வேத புராணங்களையும், சாஸ்திரங்களையுமே உச்சி மீது வைத்துக் கொண்டாடுகிறார்.
தமிழ்நாட்டில் சாஸ்திரங்கள் இல்லை, எனவே தான் தமிழர்கள் இந்த அளவு இருக்க வேண்டும் என்பது ஈசனுடைய விதி - என்று வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார்.
சேதாரமில்லாத இந்துஸ்தானைத் தெய்வம் என்று கும்பிட வேண்டுமென ஒரு விளையாட்டு பாப்பாவிற்கு அறிவிப்பு கொடுத்திருக்கிறார்.
ஆக, அடிப்படையில் அவர் ஆரியப் பார்ப்பனிய அதிகாரத்தை நிறுவுவதற்கான நோக்கம் கொண்டவர் என்பதும் அந்த நோக்கத்திலிருந்தே ஆங்கிலேயர்களை மிலேச்சர்கள் என்று எதிர்த்தார் என்பதும் மிக வெளிச்சமானது.
இத்தகைய விளக்கங்களில் இருந்து பாரதியார் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமேயன்றி, அவரைப் பெரும் புரட்சியாளர் போன்றும் வல்லரசு எதிர்ப்பாளர் போன்றும் மதிப்பிடுவது அறியாமை ஆனதும், ஆரியப் பார்ப்பனிய அடிமை உணர்வுடையதுமே ஆகும்.
- பொழிலன்