ராமராஜ்யம் எப்படியாவது இந்தியாவில் வந்து விடாதா என பல நூற்றாண்டுகளாக நிறைவேறாத ஆசையோடு இறந்து போன பழைய சங்கிகளின் ஆன்மாக்கள் இன்னும் பாரத நாட்டை சுற்றிக் கொண்டே இருக்கின்றன. அவர்களின் வழித்தோன்றல்களான இன்றைய சங்கிகளுக்கும் அந்த ஆசை இல்லாமல் இல்லை. பழைய பிதுர் சங்கிகளுக்கு இஸ்லாமியர்கள், தலித்துகள் இல்லாத ராமராஜ்யம் கனவாக இருந்து என்றால், இன்றைய சங்கிகளுக்கு கம்யூனிஸ்ட்கள், முற்போக்குவாதிகள், சிறுபான்மையினர் இல்லாத ராமராஜ்யம் கனவாக உள்ளது. ஆனால் பாவம் ஒரு பிச்சைக்காரனின் ராஜா கனவு எப்படி நடைமுறையில் பலிப்பதில்லையோ, அதே போல எப்போதுமே சங்கிகளின் கனவும் பலிப்பதேயில்லை.
சீனா ஓர் ஏகாதிபத்திய அரசு முதலாளித்துவ நாடாக இருந்தாலும், சங்கிகளால் அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எப்போதுமே சனாதனத்திலேயே உறைந்து கிடக்கும் சங்கிகள் ஒரு போதும் இன்றைய நிலைகளைப் பார்ப்பதே இல்லை. அவர்கள் இன்னும் குலக்கல்வி, குலத்தொழில், மநுதர்மம், சேரிகள், சதி, தேவதாசி முறை, சமஸ்கிருதம் - இவற்றைத் தாண்டி சிந்திப்பதேயில்லை. அவர்கள் இன்னமும் சீனாவில் மாவோ காலத்து கம்யூனிசம் நிலவுவதாகவும், அவர்கள் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நிதி கொடுத்து சனாதன பார்ப்பனிய இந்து மதத்தை வீழ்த்தி, இந்தியாவில் புரட்சி ஏற்பட நிதி உதவி செய்து வருவதாகவும் உறுதியாக நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். அதனால்தான் தொடர்ச்சியாக சீனாவின் மீது வெறுப்பை உமிழும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றார்கள்.
சீனாப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று தற்போது தீவிரமாகப் பரப்புரை செய்யும் சங்கிகள் யாரும் இந்தியாவின் உற்பத்தித் துறை வளர வேண்டும் என்றோ, மக்கள் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றோ அப்படி பரப்புரை செய்வது இல்லை. இவர்களின் முதன்மையான இலக்கு 'சீனா ஒரு கம்யூனிச நாடு, கம்யூனிசம் சனாதன பார்ப்பனியத்துக்கு எதிரானது. அதனால் அதை எதிர்க்க வேண்டும்' என்பதுதான். சங்கிகளின் இஸ்லாமிய எதிர்ப்பும், பாகிஸ்தான் எதிர்ப்பும் கூட இந்த அடிப்படையில் இருந்து உருவாவதுதான்.
அதுமட்டுமல்லாமல் எப்பொழுதெல்லாம் இந்திய ஆளும் வர்க்கம் மிகப் பெரிய எதிர்ப்பை மக்கள் மத்தியில் சந்திக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, தன்னுடைய அத்தனை தோல்விகளையும் தேசிய வெறியில் மூழ்கடிக்க இது போன்ற உத்திகளைக் கையாள்வதை ஒரு வாடிக்கையாகவே கொண்டிருக்கின்றது. இந்திய ராணுவ வீரர்களை தன்னுடைய தோல்வியை மூடி மறைக்க தொடர்ச்சியாக பகடைக்காயாக இந்திய அரசு பயன்படுத்தி வருகின்றது.
இந்திய - சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இரு நாட்டு ராணுவங்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டதில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும், 76 பேர் காயம் அடைந்ததாகவும் இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சீனா ராணுவத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்து விட்டதாகவும், சீனத் தரப்பில் உயிர்ச் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் இந்திய அரசின் சார்பில் தெரிவிக்கப் பட்டிருந்தாலும், சீன அரசு இதுவரை அதை உறுதிப் படுத்தவில்லை.
இந்தச் சூழ்நிலையில் சங்கிகளின் ஒரு அதிதீவிர பிரிவு (கோ கரோனோ கோஷ்டிகள்) சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்று சொல்லி டிவி ரிமோட், செல்போன் சார்ஜர் போன்ற 'விலை உயர்ந்த' பொருட்களை எல்லாம் கொளுத்தி, தங்களுடைய தேச பக்தியை வெளிக்காட்டி இருக்கின்றார்கள். ஆனால் தேசத்தின் இரும்பு மனிதனின் சிலையைப் பற்றி மறந்தும் கூட அவர்கள் வாய் திறக்கவில்லை. ஒரு வேளை அது காங்கிரசு ஆட்சியில் வைக்கப் பட்டிருந்தால், ஒரு வேளை அது நேருவின் சிலையாகவோ, இல்லை அம்பேத்கர் சிலையாகவோ இருந்திருந்தால் இந்நேரம் சங்கிகளுக்கு பீறீட்டுக் கொண்டு வந்த தேசபக்த வெறியில் அதற்குக் கடப்பாரை அபிசேகம் செய்திருப்பார்கள்.
சங்களின் கண்முன்னால் தெரியும் டிவி ரிமோட்டும், செல்போன் சார்ஜர், டிவிடி பிளேயர்கள், பொம்மைகள் போன்றவை மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனும் காலையில் கண் விழித்ததில் இருந்து இரவு தூங்கப் போகும் வரை பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் சீனாவின் ஏதாவது ஒரு பங்களிப்பு இருந்து கொண்டே இருக்கின்றது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கான உதிரிப் பாகங்களில் 10 - 30% சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப் படுகின்றன. இதில் ஒரு சதவீதம் குறைந்தால் கூட ஒட்டுமொத்த இந்திய வாகன உற்பத்தித் துறையும் பெரிய அளவில் வீழ்ச்சி அடையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்போது பயன்பாட்டில் உள்ள மருந்துப் பொருட்கள் 67% சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2016 - 17ல் 1,827 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துள்ள நிலையில், அதில் சீனாவில் இருந்து மட்டும் 67% இறக்குமதி செய்துள்ளது. 2017-18ல் 2,055 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்தில் 69% சீனாவில் இருந்தும், 2018 -19ல் 2,401 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்து இறக்குமதியில் 68% சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவ் மருந்துப் பொருட்கள் (ஏபிஐ) என அழைக்கப்படும் மருந்தின் மூலப்பொருள்கள் சீனாவிலிருந்து 70 சதவீதம் இறக்குமதி செய்யப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதி என்று எடுத்துக் கொண்டால் கேர் ரேட்டிங்ஸ் அறிக்கையின் படி, 2016 - 17ல் 45,550 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதியில், 53.9% சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2017 - 18ல் 55,574 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களில் 56.6% சீனாவில் இருந்தும், 2018 - 19ல் 60,219 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களில் 68% சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன
டிவியில் பயன்படுத்தப்படும் உதிரிப் பாகங்கள், ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் உதிரிப் பாகங்கள், ஏசிகளுக்கான உதிரிப் பாகங்கள் போன்றவற்றில் 75 சதவீதத்தில் இருந்து 85 சதவீதம் வரை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.
சீன நிறுவனமான அலிபாபா, இந்தியாவின் பிக் பாஸ்கெட், பேடிஎம், ஸ்னாப்டீல் மற்றும் ஜொமோட்டோ போன்ற நிறுவனங்களில் சுமார் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. அதேபோல, பைஜு, ப்ளிப்கார்ட், ஓலா, ஸ்விகி ஆகிய இந்திய நிறுவனங்களில் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்திற்கு பங்கு உள்ளது. விவோ, ஒப்போ, சியோமி போன்ற மொபைல்போன் நிறுவனங்களுக்கு இந்தியா மிகப் பெரிய சந்தையாக இருந்து வருகின்றது.
2000 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மூன்று பில்லியன் டாலர்கள் மட்டுமே இருந்தது. இது 2008இல் 51.8 பில்லியன் டாலராகவும், 2018 ஆம் ஆண்டில் 95.54 பில்லியன் டாலர்களாகவும் உயர்ந்தது. 2019இல் சற்று குறைந்து, 92.7 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதியான பொருட்களின் மதிப்பு வெறும் 18.84 பில்லியன் டாலர்கள் மட்டுமே.(நன்றி:Goodreturns & BBC).
எனவே சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற சங்கிகளின் பரப்புரை எந்த வகையிலும் நாட்டு நலன் பாற்பட்டதல்ல. ஒருவேளை சீனா இந்தியாவின் மீது இன்றைய நிலையில் பொருளாதாரத் தடைகளை விதித்தால் அது ஏற்கெனவே குற்றுயிரும் குலை உயிருமாக போராடிக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை நிரந்தரமாக சவக்குழிக்கே அனுப்பி விடும்.
இன்று இந்தியாவில் உற்பத்தித் துறை மிகப் பெரிய சரிவை சந்தித்து இருக்கின்றது. கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்திருக்கின்றார்கள். இந்தச் சூழ்நிலையில் சீனப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் சங்களின் பொருளாதார அறிவு இந்திய நாட்டின் மீது நிகழ்த்தப்படும் அடிமுட்டாள்களின் தாக்குதலாகவே இருக்கும். சங்கிகளின் இந்தப் பரப்புரை எந்தவித பொருளாதார அறிவும் இல்லாத, இன்னும் சொல்லப் போனால் கடுங்கோட்பாட்டுவாதிகளை திருப்திபடுத்த மட்டுமே பயன்படும்.
ஆட்சி அவர்களின் கையில்தான் இருக்கின்றது. சீனப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் அவர்களால் அதை மிக எளிதாக செய்ய முடியும். ஆனால் அப்படி செய்தால் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆட்சியில் இருக்கும் அறிவிலிக் கூட்டத்திற்கு தெரியுமோ என்னவோ, அவர்களை வழி நடத்தும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அதை ஒரு போதும் இந்திய ஆளும் வர்க்கம் செய்யாது. மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த திராணியின்றி, தோல்வி அடைந்து, தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக பலியாகிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் அரசின் மீதான மக்களின் கோபத்தை திசை திருப்ப மட்டுமே இது போன்ற வெற்று தேசபக்தக் கூச்சல்கள் பயன்படும்.
இந்தியாவின் உண்மையான நிலை என்னவென்றால், அது இப்போது சீனாவிடம் கையேந்தும் நிலையில் உள்ளது என்பதுதான். சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த சுமார் 750 மில்லியன் டாலர் அளவிலான கடனைக் கொடுத்துள்ளது. ஏற்கெனவே கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியாவிற்கு 500 மில்லியன் டாலரை இந்த வங்கி கடன் கொடுத்திருக்கின்றது. இந்தியாவிற்கு AIIB வங்கி இதுவரை சுமார் 3.06 பில்லியன் டாலர் அளவிலான நிதியைக் கடனாகக் கொடுத்துள்ளது.எந்தவித மறுப்பும் இன்றி இந்தக் கடனை மோடி தலைமையிலான ‘சீனப் பொருட்கள் பகிஸ்கரிப்பு குழு’ வாங்கிக் கொண்டது என்பதுதான் தற்போதைய 'மானமுள்ள' சங்களின் வரலாறாக உள்ளது.
சாவர்க்கரில் இருந்து இன்றைய சங்கிகள் வரை அவர்களின் வரலாறு எவ்வளவு கேவலமாக தன்னைத் தானே எழுதிக் கொள்கின்றது. இந்த உலகில் எந்த இழிவான மனிதர்களோடோ, எந்த ஒரு இழிவான துரோகத்தோடோ, நீங்கள் சங்கிகளை ஒப்பிடவே முடியாது. காரணம் சங்கிகளுக்கு நிகர் சங்கிகள்தான்.
- செ.கார்கி