மாநிலங்களில் இருந்து மத்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்கில் “இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என உச்ச நீதிமன்றம் கருதுகிறது" எனத் தீர்ப்பளித்து, மாநில உயர்நீதி மன்றங்களை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் கூறி இருக்கின்றது.

supreme court 600மாநிலங்களில் இருந்து இளங்கலை மருத்துவப் படிப்பிற்கு 15 சதவீதமும், முதுகலை மருத்துவப் படிப்பிற்கு 50 சதவீதம் இடங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இடங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில அரசுகள் தரும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மத்திய அரசால் நிச்சயம் இடங்களை நிரப்ப முடியும்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் இங்கே 69 சதவீத இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு வழங்கப் படுகின்றது. மத்திய அரசில் 27 சதவீதம் வழங்கப் படுகின்றது. இதில் எதையுமே பின்பற்றாமல் மாநிலங்களில் இருந்து பெறப்படும் இடங்கள் முழுவதையும் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்வதன் மூலம் சமூக நீதி என்ற கோட்பாட்டிற்கே ஆப்பு வைத்திருக்கின்றது மத்திய அரசு. ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கப்படும் 10 சதவீத இடங்கள் முழுமையாக நிரப்பப் படுகின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை என உச்சநீதி மன்றத்தில் சொன்ன மத்திய அரசு, மிகச் சிறப்பாக ‘உயர்சாதி ஏழைகளை’ மட்டும் அடையாளம் கண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றது.

அதுமட்டுமல்ல எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் கூட 27 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகின்றது. ஆனால் மாநிலத் தொகுப்புகளில் இருந்து பெறப்படும் இடங்களுக்கு மட்டும்தான் அந்தப் பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என மத்திய அரசால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை!.

உச்சநீதி மன்றத்திற்கு மட்டுமல்ல சாமானிய மக்கள் மத்தியிலும் கூட இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற கருத்து நிலவி வருவது நாம் அறிந்ததுதான். அதுவும் நன்கு படித்த இளைஞர்கள் கூட இட ஒதுக்கீடு வழங்கப் படுவதால் தகுதி, திறமை எல்லாம் பாதிக்கப் படுகின்றது, தகுதி இல்லாத நபர்களைக் கொண்டு இட ஒதுக்கீடு மூலம் இடங்களை நிரப்புவதால் வேலையின் தரம் குறைகின்றது, மேலும் தகுதி இருந்தும் இடம் கிடைக்காத பலர் பாதிக்கப் படுகின்றார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப் படுகின்றன.

ஆனால் இப்படி குற்றச்சாட்டு வைப்பவர்கள் யாரும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் தகுதி, திறமை எல்லாம் பாதிக்கப்படாதா என ஒரு போதும் கேள்வி எழுப்பியதில்லை. அவர்களைப் பொருத்தவரை தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட மக்களும் இட ஒதுக்கீட்டில் வருவதால்தான் தகுதி, திறமை பாதிக்கப்படுமே தவிர, உயர்சாதி ஏழைகள் இட ஒதுக்கீட்டில் வருவதால் அல்ல.

அதுமட்டுமல்ல, இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் ஆண்டாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்ட சமூகத்திற்கு வழங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. அது எந்த வகையிலும் பொருளாதார முன்னேற்றத்தின் பாற்பட்டு கொண்டு வரப்பட்டதல்ல என்பதால், உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்றோ, அப்படி கேட்பது முறையற்றது என்றோ ஒரு நாளும் உச்சநீதி மன்றம் சொல்லாது.

பொதுப்பட்டியலில் உள்ள இடங்களையும் ஆதிக்க சாதிகள் ஆக்கிரமித்துக் கொள்வார்கள், தனியாக 10 சதவீத இட ஒதுக்கீட்டையும் பெற்றுக் கொள்வார்கள் என்பதால் நீதிமான்களுக்கு அதில் இரட்டிப்பு மகிழ்ச்சியே இருக்கும். இந்த நாட்டின் உயர் அரசுப் பதவிகள் அனைத்திலும் தங்கள் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்துக்கு மாறாக பல மடங்கு, ஏறக்குறைய 60 சதவீத்திற்கு மேல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன பனியா மற்றுமுள்ள ஆதிக்க சாதிகள் மொத்தமாக அரசு உறுப்புகளை கைப்பற்றிக் கொண்டு ஒரு பார்ப்பனிய ராமராஜியத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் ஆளும் வர்க்கத்தின் பார்ப்பனியக் கனவாகும்.

ஆனால் இதிலே பெரிய நகைச்சுவை என்னவென்றால் உயர்சாதி ஏழைகள் எல்லாம் இட ஒதுக்கீடு வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கும் போது, ஒரு பக்கம் கிருஷ்ணசாமி போன்றவர்கள் தாங்கள் ஆண்ட பரம்பரை, தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் எனச் சொல்வதும், இன்னொரு பக்கம் பல சூத்திர சாதி வெறியர்கள் தங்களை ஆண்ட பரம்பரை என சொல்லிக் கொண்டு தலித்துகள் மீது சாதியத் தீண்டாமையையும், சாதி ஆணவப் படுகொலைகளையும் தினம் தினம் நிகழ்த்திக் கொண்டே இட ஒதுக்கீட்டு சலுகை கேட்பதும் தொடர்ந்து நடந்து வருகின்றது.

இன்றும் எந்தவிதப் பொருளாதார முன்னேற்றமும் இன்றி, மிக வறிய நிலையில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் மிக மோசமாக பாதிக்கப் பட்டிருக்கும் சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது. ஆனால் அவர்களை எல்லாம் 'நாம் ஆண்ட பரம்பரை, சத்திரியப் பரம்பரை' எனச் சொல்லி சாதி வெறியைத் தூண்டிவிட்டு, தலித்துகளை படுகொலை செய்வதையும், சாதிய ஆணவப் படுகொலை செய்வதையும், வழக்கறிஞர் கூலிப் படையை வைத்து காதலர்களைப் பிரிப்பதையும் ஊக்குவிக்கும் ஒரு கட்சி எதற்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டும்? ஆண்ட பரம்பரைக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் என்ன சம்மந்தம்? ஆண்ட பரம்பரை பட்டம் வேண்டுமா? இட ஒதுக்கீடு வேண்டுமா? என உச்சநீதி மன்றம் கேட்காது என்ற தைரியம்தானே!

நாம் ஒரு பக்கம் சமூக நீதி அரசியலை முன்னெடுக்கின்றோம் என்று சொல்லி, சூத்திர சாதி மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கப் பாடுபடுகின்றோம். ஆனால் அப்படி இட ஒதுக்கீடு மூலம் இன்று பெரும்பயன் அடைந்திருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள்தான் சமூகவெளியில் தீவிரமான சாதிய அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள். சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு சலுகையைப் பயன்படுத்திக் கொண்டே சமூக வெளியில் தாங்கள் ஆண்ட பரம்பரை எனச் சொல்லி தலித்துகள் மீது பெரும் வன்முறையை செலுத்துகின்றார்கள். பிற்படுத்தப்பட்ட சாதி மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் எனச் சொல்லும் கட்சிகள் எதுவும் அவர்களது சாதியைச் சேர்ந்தவர்கள், தலித்துகளைத் தாக்கும்போது கண்டிப்பதில்லை. மாறாக அதுபோன்ற சாதிவெறி பிடித்த அயோக்கியர்களுடன் கூட்டணி அமைத்து அவர்களை வளர்த்து விடவே பார்க்கின்றனர்.

இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் சாரமே முற்றிலும் அழிந்து விட்டது என்பதுதான் இதன் பொருள். ஆண்ட பரம்பரை சாதிகள் யார், யார் எனப் பட்டியல் தயார் செய்து அவர்களின் இட ஒதுக்கீடு முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும். இதில் எந்தவித கருணைக்கும் இடமிருக்கக் கூடாது. “இல்லை எங்கள் சமூகம் இன்னும் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிதான் இருக்கின்றது, நாங்கள் எல்லாம் ஆண்ட பரம்பரை கிடையாது, மனிதர்களை மனிதர்களாக மதிப்போம்” என சூத்திர சாதி மக்கள் நினைத்தால், சாதிவெறியைத் தூண்டிவிடும் அயோக்கியர்களை ஊருக்குள் விடாமல் செருப்பாலே அடித்து விரட்ட வேண்டும். இதில் ஏதாவது ஒன்று நிச்சயம் நடந்தாக வேண்டும்.

இத்தனை ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீடு, சாதி ஒழிப்பு என்ற பெரும்பாதையில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வந்து விடவில்லை என்பதையே நடப்பு நிலைமைகள் காட்டுகின்றன..

தற்போது மத்திய தொகுப்பிற்கு வழங்கப்பட்ட மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாதது போன்று, வரும் காலங்களில் ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டுக்கே வேட்டு வைக்கும் சூழ்நிலை நிச்சயம் ஏற்படும். இன்று எப்படி மத்திய அரசின் உயர்பதவிகளில் 60 சதவீதத்திற்கும் மேல், உயர்சாதியினர் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டம் உட்கார்ந்திருக்கின்றதோ, அப்போது 100 சதவீதமும் அதே கூட்டம் உட்கார்ந்து இருக்கும். அப்போது ஆண்ட பரம்பரை கதையில் மூழ்கிப் போய் அருவாளோடு திரிந்த கூட்டம் எல்லாம் கல்வி நிலையங்களிலும், வேலைவாய்ப்பிலும் சேருவதற்கு வக்கற்றுப் போகும் ஒரு நிலை ஏற்படும். அப்போதுதான் இவர்களுக்கு பெரியாரும், அம்பேத்கரும் என்ன செய்தார்கள் என்பதும், ஏன் தேவைப்படுகின்றார்கள் என்பதும் புரியும். தங்களை ஆண்ட பரம்பரை என்று சொல்லிச் சொல்லி கையில் அருவாளோடு திரிய விட்டுவிட்டு தன் குடும்பத்தின் பொருளாதாரத்தை கோடிகளில் கொழிக்க வைத்துக் கொண்ட சுயநலம் பிடித்த கேடி கூட்டத்தின் நோக்கமும் புரியும்.

- செ.கார்கி

Pin It