கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

The Non-Brahmin movement took place only after the 1910s, but long before that non – Brahmins were protesting against the virtual monopoly of Brahmins in the educational and employment opportunities offered by the British, which as the traditional literati, the Brahmins found easier to avail themselves of. In 1840, 32 panchalars from Salem protested against offering Brahmins all the responsible public offices and prayed for employing all classes of men without distinction (See : Bower 1851 : 91-95)

- P.RADHAKRISHNAN

(Source Book : Caste, Its Twentieth Century Avatar, Edited and Introduced by M.N.Srinivas, Penguin Publication, 1997, Page 111).

மும்பையிலுள்ள Penguin Publications என்னும் புகழ்பெற்ற புத்தகப் பதிப்பு நிறுவனம், 1997ஆம் ஆண்டில் “Caste, Its Twentieth Century Avatar, Edited and Introduced by M.N.Srinivas” என்கிற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளது. இந்த எம்.என். சீனிவாசன் என்பவர் சமூகஇயல் அறிஞர்; மண்டல் குழுவினருக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார். இந்த நூலில் இந்தியாவின் பல மாநிலங்களின் இடஒதுக்கீட்டுப் போராட்ட வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுப் போராட்ட வரலாற்றைப் பற்றி சமூகஇயல் ஆய்வாளர் பி.இராதாகிருட்டிணன் என்பவர் எழுதிய கட்டுரையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. அந்தக் கட்டுரையில் அவர், 1840 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பாஞ்சாலர்கள், பொறுப்புமிக்க அரசாங்க வேலைகளைப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். பாகுபாடு காட்டாமல் அவ்வேலைகள் எல்லா வகுப்புகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும், என்று ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கோரிக்கையின் பின்னணி என்ன?

பாஞ்சாலர்கள் என்னும் சொல் இரும்பு, மரம், பொன், பஞ்ச உலோகம், கல் ஆகிய பொருள்களைக் கொண்டு ஐந்தொழில் செய்யும் கம்மாளர்களைக் குறிக்கும். இந்திய அளவில் விஸ்வகர்மா என்று அழைக்கப்படுகின்றனர்.

இன்றைய திருவண்ணாமலை மாவட்டம் (அன்றைய சித்தூர் மாவட்டம்) போளூர் வட்டம் சதுப்பேரி கிராமத்தில் 1814 ஆம் ஆண்டு கம்மாளர் வீட்டில் திருமணத்துக்குப் பந்தல்கால் நடும் நிகழ்வு. வழக்கம்போல் அவ்வகுப்பைச் சேர்ந்த அவ்வூரைச் சேர்ந்த பண்டித மார்க்கசகாய ஆச்சாரி அந்நிகழ்வை நடத்துகிறார். அவ்வூரிலுள்ள பார்ப்பனர் பஞ்சாங்கங் குண்டையன் அதைத் தடுக்கிறார். இந்தத் தகராறு ஊர்ப் பஞ்சாயத்துக்குச் செல்கிறது.

கம்மாளரின் திருமணத்தை நடத்தி வைக்கும் உரிமை யாருக்கு?

“கம்மாளர்களுக்குப் புரோகிதம் செய்யும் உரிமை இல்லை. அவர்கள் வீட்டுத் திருமணங்களில் வேதப்படியான மந்திரங்களை ஓதக்கூடாது. அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை; புராணப்படியான மந்திரங்களைத்தான் ஓத வேண்டும்” என்று பஞ்சாங்கங் குண்டையரும், “வேதப்படியான மந்திரங்களை நாங்களே ஓதி எங்கள் வீட்டுத் திருமணம் உள்ளிட்ட இன்ப, துன்ப நிகழ்ச்சிகளை நாங்களே இதுகாறும் நடத்திக் கொண்டு வருகிறோம். அப்படியே நடத்திக் கொள்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு” என்று பண்டித மார்க்கசகாய ஆச்சாரியும் ஊர்ப் பஞ்சாயத்தாரின் முன்னிலையில் சொற்போர் நிகழ்த்தினர்.

மார்க்கசகாய ஆச்சாரி புராணங்களின் பொய்யுரைகளை அம்பலப்படுத்தி, இதிகாசங்களின் கட்டுக் கதைகளைச் சுட்டிக்காட்டி பஞ்சாங்கங் குண்டையரின் வாதங்களை மறுத்தார்; தங்களுக்குரிய உரிமையை வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் எண்பித்தார். மார்க்கசகாய ஆச்சாரியின் வாதங்களை பஞ்சாங்கங் குண்டையரால் மறுக்க முடியவில்லை.

பஞ்சாயத்தார் தீர்ப்பு

பஞ்சாயத்தார் கம்மாளர்கள் தங்கள் வீட்டுத் திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளைத் தாங்களே நடத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறினார்கள்.

தீர்ப்புரையின் போது பஞ்சாயத்தார் தங்களுக்கு நேர்ந்த நிகழ்வு ஒன்றையும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். “அதாவது சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் இவ்வூர்ப் பார்ப்பனர்களை அணுகி வேதம் சொல்லிக் கொடுக்குமாறு கேட்டோம். அதற்கு அவர்கள் வேதத்தைச் சொல்லிக் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

சொல்லிக் கொடுத்தால், சொல்லிக் கொடுப்பவனும் நரகத்துக்குப் போவான்; கற்றுக் கொள்பவனும் நரகத்துக்குப் போவான் என்று கூறி மறுத்து விட்டார்கள். பிறகு நாங்கள் கம்மாளர்களை அணுகிச் சொல்லித் தருமாறு கேட்டோம். அவர்கள் வேதத்தை யாரும் படிக்கலாம்; யாருக்கும் சொல்லிக் கொடுக்கலாம். சொல்லிக் கொடுக்க மறுப்பவன்தான் நரகத்துக்குப் போவான்” என்று கூறி எங்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தார்கள் என்பதைத் தெரிவித்தார்கள்.

பஞ்சாயத்தாரின் தீர்ப்பைப் பஞ்சாங்கங் குண்டையன் ஏற்க மறுத்து அடியாட்களுடன் சென்று கலவரம் செய்து அந்நிகழ்வைத் தடுத்துவிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்பு

பண்டித மார்க்கசகாய ஆச்சாரி சித்தூர் சென்று மாவட்ட அதாலத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். நீதிபதி வழக்கின் விவரத்தை நீதிமன்றத்தின் இந்து மதப் பண்டிதருக்குத் தெரிவித்து வேதங்களும், சாஸ்திரங் களும் இதைப் பற்றி என்ன சொல்கின்றன என்று கருத்துக் கேட்டார். மார்க்க சகாய ஆச்சாரியின் வாதம் சரியானதுதான் என்று நீதிமன்றப் பண்டிதர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், வெள்ளைக்கார நீதிபதி ஜே.எச்.டெக்கார் (J.H.DECKOR) 15.12.1818இல், “மனுதாரர்கள் (அதாவது கம்மாளர்கள்) தங்கள் சமுதாயத்துக்குரிய மத சம்பந்தமான சடங்குகளை வேதத்தை அனுசரித்து இதற்கு முன் செய்து வந்ததைப் போலவே, இனிமேலும் செய்வதற்கு உரிமை உடையவர் ஆவர். பார்ப்பனர் அதில் தலையிடக் கூடாது” என்று தீர்ப்புக் கூறினார்.

வன்முறையும் எச்சரிக்கையும்

அத்தீர்ப்பை மதிக்காத பார்ப்பனர்கள் ‘கம்மாளர் சாதி தவிர மற்ற சாதிகளெல்லாம் எந்தத் தேசத்திலும் எந்த நாட்டிலும் தங்களுக்கு உபபலமாய் இருக்க, கவர்மெண்டு துரைத்தனத்தில் எந்தக் கோர்ட்டிலும் எந்த நாட்டிலும் தங்களுடைய வம்சத்தாராகிய பார்ப்பனர்களே சகலத்துக்கும் அதிகாரிகளாயிருக்கிறார்களாகையால் அவர்களைக் கொண்டு இந்தக் கம்மாளரை வெகு லேசாய் ஜெயிக்கலாம்’ என்று வஞ்சினம் கூறி, சித்தூர், சேலம், திரிசிபுரம், பெங்களூர், மைசூர், பெல்லாரி, பந்தர், விஜயநகரம், திருநெல்வேலி, மதுரை, கும்பகோணம், சீர்காழி, சிதம்பரம் முதலான ஊர்களிலும் மாவட்டங்கள் தோறும் கம்மாளர் குலத்தினரைத் தாக்கித் தொந்தரவு கொடுத்தனர்; கலகம் விளைவித்தார்கள்.

பார்ப்பனர்கள் தாக்கியதும் இப்படிப் பேசியதும் எச்சரிக்கையா? மிரட்டலா? மிரட்டல் அல்ல; எச்சரிக்கையே என்பதை 1836இல் திமிரி என்கிற ஊரில் அவர்கள் மெய்ப்பித்துக் காட்டிவிட்டார்கள்.

வேலூர் மாவட்டம், ஆர்க்காடு வட்டம் திமிரியில் 1836ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள் கம்மாளர் தாண்டவாச்சாரி வீட்டில் சிரார்த்தம் நடத்திக் கொடுக்கக்கம்மாள வாத்தியார் வெங்கடசுப்பாச்சாரியார் சென்றார். இதை அறிந்த அவ்வூர்ப் பார்ப்பனர் பஞ்சாங்கம் கிருஷ்ணமாச்சாரி, ‘பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர் பெயருக்குப் பின்னால் ஆச்சாரி என்று போட்டுக் கொள்வார்கள்’, அங்கு சென்று வெங்கடசுப்பாச்சாரியை வாதத்திற்கு அழைத்தார். இருவருக்கும் சொற்போர் நிகழ்ந்தது.

வெங்கடசுப்பாச்சாரி சாஸ்திரங்களின் வேதத்தின் அடிப்படையில் கம்மாளருக்கு உள்ள உரிமையை எடுத்துக் கூறி வாதிட்டார். அதை ஏற்காமல் பஞ்சாங்கம் கிருஷ்ண மாச்சாரி சிரார்த்தம் நடப்பதைத் தடுத்துவிட்டார். வெங்கடசுப்பாச்சாரி ஊர் மணியக்காரரிடம் முறையிட்டார். மணியக்காரர் பார்ப்பனர். அவர் தாசில்தாரிடம் உத்தரவு பெற்று வருமாறு கூறிவிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு

தாண்டவாச்சாரி அவ்வாறே தாசில்தாரின் உத்தரவு பெற்று வந்தபின் வெங்கடசுப்பாச்சாரி சிரார்த்தம் நடத்தினார். அவ்வேளை பார்ப்பன மணியக்காரரும் அப்புவையங்கார், சீனிவாசய்யங்கார், பஞ்சாங்கம் கிருஷ்ணமாச்சாரி முதலானோர் அங்கு சென்று அதைத் தடுத்து விட்டார்கள்.

வெங்கடசுப்பாச்சாரி தாசில்தாரிடமிருந்து பெற்று வந்த உத்தரவையும், சித்தூர் மாவட்ட அதாலத் நீதிமன்றம் 1818 திசம்பர் மாதம் 15ஆம் தேதி ‘கம்மாளர்கள் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளை இதுகாறும் தங்களுடைய வகுப்பாரைக் கொண்டே நடத்தி வந்ததைப் போலவே இனியும் தொடர்ந்து தங்கள் வகுப்பாரைக் கொண்டே நடத்திக் கொள்ளலாம். அதில் பார்ப்பனர்கள் தலையிடக் கூடாது’ என்று கூறிய தீர்ப்பின் நகலையும் காண்பித்தார். பார்ப்பனரான ஊர் மணியக்காரரும் மற்ற பார்ப்பனர்களும் தாசில்தாரின் உத்தரவையும் சித்தூர் அதாலத் நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் சிரார்த்தத்தைத் தடுத்து விட்டார்கள்.

வெங்கடசுப்பாச்சாரி வேலூர் குற்றவியல் நீதிமன்றத் தில் பஞ்சாங்கம் கிருஷ்ணமாச்சாரி மீது வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த வெள்ளைக்கார நீதிபதி J.A.BOURDHLLONG 1838 ஆம் ஆண்டு சூன் மாதம் 5ஆம் நாள் கூறிய தீர்ப்பில் பஞ்சாங்கம் கிருஷ்ணமாச் சாரிக்கு ரூ.20/- (ரூபாய் இருபது) தண்டத் தொகை விதித்துக், கட்டுமாறு உத்தரவிட்டார்.

எல்லா வகுப்புகளுக்கும் பங்கு கொடு

1814இல் சதுப்பேரி கிராமத்தில் நடந்த நிகழ்வு, 1818 திசம்பர் 15இல் அளிக்கப்பட்ட சித்தூர் மாவட்ட அதாலத் நீதிமன்றத் தீர்ப்பு, அதைத் தொடர்ந்து தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள், கம்மாளர்கள், மீது சித்தூரில் தொடங்கி தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் முதலான பகுதிகளில் பல ஊர்களில் நடத்திய தாக்குதல், அப்போது விடுத்த எச்சரிக்கை, 1836இல் திமிரியில் நடந்த நிகழ்வு, சித்தூர் நீதிமன்றத் தீர்ப்பையும் அதன் அடிப்படையில் தாசில்தார் கொடுத்த உத்தரவையும் மதிக்காமல் திமிரியின் மணியக்காரரான பார்ப்பனன் நடந்து கொண்டது ஆகிய இவற்றைப் பற்றித் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த கம்மாளர்கள் சிந்தித்துப் பார்த்தார்கள். அதன் விளைவு தான் “1840இல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 32 கம்மாளர்கள் வெள்ளைக்கார அரசிடம் அரசாங்க வேலைகளை எல்லாச் சாதிகளுக்கும் பங்கு போட்டுக் கொடுங்கள்” என்று கோரிக்கை மனு கொடுத்தார்கள்.

அயோத்திதாசர், பாவாணர், நா.வானமாமலை ஆகியோரின் பதிவுகள்

சதுப்பேரி நிகழ்வு, பண்டித மார்க்கசகாய ஆச்சாரிக்கும் பஞ்சாங்கங் குண்டையருக்கும் நடைபெற்ற 63 வினா-விடை அடங்கிய சொற்போர், பஞ்சாயத்தார் தீர்ப்பு, சித்தூர் மாவட்ட அதாலத் நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை சித்தூர் ஜில்லா அதாலத் கோர்ட் தீர்ப்பு என்ற பெயரில் சிறு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. திமிரி நிகழ்வும் அந்நிகழ்வில் நடைபெற்ற சொற்போரும் வேலூர் குற்றவியல் நீதிபதி அளித்த தீர்ப்பும், வேலூர்த் தீர்ப்பு என்ற பெயரில் சிறு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இவை கடைகளில் கிடைக்காது.

கம்மாளர் சமூகப் பெரியவர்களிடம் கிடைக்கும். இத்தீர்ப்பைப் பற்றி பண்டித அயோத்திதாசரும் தேவநேயப் பாவாணரும் மிகச் சுருக்கமாகவே தங்கள் நூலில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆய்வாளர் நா.வானமாமலையும் சிந்தனையாளன் வே.ஆனைமுத்து ஆகிய இருவரும்தான் அண்மைக் காலத்தில் இத்தீர்ப்பின் சிறப்பைப் பற்றி விரிவாகவே பதிவு செய்துள்ளார்கள்.

மார்க்சிய ஆய்வாளர் நா.வான மாமலை அவர்கள் கம்மாளர்களின் வீடுகளில் முடங்கிக் கிடந்த இந்த ஆவணங்களைத் தேடிப்பிடித்து, படித்து “தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டங்கள்” என்னும் தலைப்பில் நூலாக்கினார். முனைவர் மே.து.இராஜ் குமாரின் மக்கள் பதிப்பகம் இதைப் பதிப்பித்து வெளியிட்டது. இப்போது இந்நூலை அலைகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

வே.ஆனைமுத்துவின் அறிமுகம்

வே.ஆனைமுத்து, சிந்தனையாளன் 1997ஆம் ஆண்டின் பொங்கல் மலருக்கு இந்த வழக்கும் தீர்ப்பும் பற்றி என்னைக் கட்டுரை எழுதுமாறு செய்து அதை அம்மலரில் வெளியிட்டார். மேலும் அவர் தம்முடைய பெரியாரியல் நூலின் முதல் தொகுதியில், இந்தியச் சமுதாயச் சீர்திருத்த முன்னோடிகள் என்னும் தலைப்பில் சதுப்பேரி பண்டித மார்க்கசகாய ஆச்சாரி பற்றி ஒரு பக்கக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்துள்ளார்.

மேலும் இந்தத் தகராறு நிகழ்ந்த 200ஆம் ஆண்டின் நிறைவு விழா 15.12.2014இல் சதுப்பேரியில் நடைபெற்றபோது, அதில் சீனந்தல் அடிகளாருடன் கலந்து கொண்டு வே.ஆனைமுத்து தன்மான உணர் வூட்டும் “ஓர் எழுச்சிமிக்க உரையாற்றி” பண்டித மார்க்கசகாய ஆச்சாரி சுயமரியாதைக்காரர், தன்மான மறவர், “போராளி” என இன்றைய தலைமுறை யினருக்கு அவரை அறிமுகப்படுத்தினார். அவருடைய அந்த உரையின் இறுதிப் பகுதியுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன்.

வே.ஆனைமுத்து பேசியது வருமாறு:

“இந்தச் சதுப்பேரி கிராமத்தில் பண்டித மார்க்கசகாய ஆச்சாரி என்னும் பெரிய அறிவாளி பிறந்தார்; மனித உரிமைப் போராளி பிறந்தார்; ஒரு சமுதாயத்தினுடைய விசுவகர்மச் சமுதாயத்தினுடைய தன்மானத்தைக் காப்பாற்றிக் கொடுத்த ஒரு மேதை பிறந்தார். அந்த மேதை பிறந்த சதுப்பேரிக்கு இன்று நாங்கள் வந்திருக்கிறோம்.

என் வரலாற்றில் இது எனக்குப் பெருமை. நான் மார்க்கசகாய ஆச்சாரி பிறந்த சதுப்பேரிக்குப் போனேன் என்று பெருமையாக என் வரலாற்றில் எழுதுவேன். இனி ஆண்டுதோறும் மார்க்கசகாய ஆச்சாரியின் சாதனையைப் போற்றி, இந்த ஊரில் நீங்கள் விழா எடுக்க வேண்டும். விழாவுக்கு யாரை வேண்டுமானாலும் கூப்பிடுங்கள்; எங்களையும் கூப்பிடுங்கள்; மகிழ்ச்சியாக வருகிறோம்.

“மார்க்கசகாய ஆச்சாரியைப் போல் ஒவ்வொரு சாதிக்காரரும் தன்சாதியின் சுயமரியாதையைக் காப்பாற்றப் பாடுபட வேண்டும். எந்தச் சாதியும் இன்னொரு சாதிக்கு உயர்வானதும் இல்லை; தாழ்வானதும் இல்லை. அந்தந்தச் சாதிக்கும் அவரவர்களே குரு; பார்ப்பான் குரு அல்ல. அந்த நிலையைச் சமுதாயத்தில் உண்டாக்க நாம் பாடுபடுவோம்.

“பெரியாருக்கு முன்னமே இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தன்மான வீரர்” தன்மான மறவர், சுயமரியாதைக்காரர் பிறந்த ஊர் இந்தச் சதுப்பேரி. இந்த ஊர் மக்கள் தங்கள் ஊரில் பிறந்த அந்த மேதையை அறிவாளியைத் தெரிந்துகொள்ள வேண்டும்; புரிந்துகொள்ள வேண்டும்; படித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மறுபடியும் சொல்கிறேன். சதுப்பேரி மார்க்கசகாய ஆச்சாரி புகழ் ஓங்குக! சதுப்பேரி மார்க்கசகாய ஆச்சாரி புகழ் ஓங்குக!” (அவையினரும் உடன் ஓங்கி முழங்கினார்கள்)

- கலசம்