ஊரகப் பகுதிகளில் ஏழைப் பெண்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம், சிறுநிதி நிறுவனங்களில்தான் அதிகம் கடன் வாங்குகின்றனர். கொரோனாவால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளச் சூழலில், தவணைகளைச் செலுத்துவது அவர்களால் இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டே, ஏற்கனவே இருந்த கடன் தவணை செலுத்தும் காலத்தை, மத்திய ரிசர்வ் வங்கி, ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இதற்குப் புறம்பாக பல சிறுநிதி நிறுவனங்கள் கடன் தவணையைச் செலுத்தச் சொல்லி மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றன; கண்ணியமற்ற வகையில் தரக்குறைவாக ஏசுவதும் நடக்கிறது. இதனால், மக்களின் எதிர்ப்புக் குரலும் ஆங்காங்கே எழும்பி வருகின்றது.

கோயம்பத்தூரில், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாத காலத்திற்கு, சிறுநிதி நிறுவனங்கள் வட்டி கேட்டு பல்வேறு விதமாக தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக, மாவட்டத்தின் சிறப்பு அலுவலரைச் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மதுரை யானைமலை ஒத்தக்கடைப் பகுதியில் செயல்படும் சிறுநிதி நிறுவனங்கள், கடன் தவணை கேட்டு, தங்களுக்கு கடும் அழுத்தம் கொடுப்பதாக பெண்கள், காவல் நிலையத்தில் புகார்கள் அளித்தனர் என்றும், நடவடிக்கை ஏதுமில்லை என்பதால், கடந்த ஜூன் 11 ஆம் தேதி, காலை 10 மணியளவில் சுமார் 150 பேர், மதுரை-மேலூர் சாலையை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் என்றும் அந்தப் பகுதியின் செயற்பாட்டாளர்கள் மூலம் அறிய வருகிறோம். இந்தப் போராட்டத்திற்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் மற்றும் அபே ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

மறியலில் ஈடுபட்ட பெண் தலைவர்களையும், போராடிய பல செயற்பாட்டாளர்களையும் தாசில்தார் முன்னிலையிலேயே, காவல்துறை துணை கண்காணிப்பாளரின் ஆணையின்படி, காவலர்கள் கைது செய்து கண்ணியமற்ற முறையில் தரக்குறைவாக நடத்தியுள்ளனர்.

குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் வழக்கறிஞர் காந்திவீரன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் வழக்கறிஞர் அகராதி, ஜெகன், கருமுகிலன், சுரேஷ், மாரி மற்றும் அபே ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர் ராஜேஷ் ஆகியோரும், சுய உதவிக் குழுக்களின் பெண் தலைவர்களும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். பிறகு, ஒரு சமுதாயக் கூடத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டிருந்த ஏறத்தாழ 100 பெண்கள் தாமாகவே முன் வந்து கைதாகினர்.

காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே, காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு, ஒத்தக்கடை காவல்நிலைய ஆய்வாளர் மாடசாமி, உதவி ஆய்வாளர்கள் செந்தூரபாண்டியன், உமாதேவி மற்றும் பிற காவலர்கள், செயற்பாட்டாளர்கள் காந்தி வீரன், ஜெகன், சுரேஷ், கருமுகிலன், ராஜேஷ் ஆகியோரையும், அகராதி, முத்துலட்சுமி, சோலையம்மாள், கெளரி, முத்துமாரி போன்றவர்களையும் கடுமையாகத் தாக்கியதாகவும், தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாகவும், அவர்களை அப்பன் திருப்பதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பிறகும், தரையில் அமர வைத்தும், போதுமான உணவு, குடிநீர் தராமல் வைத்திருந்ததாகவும், சமுதாயக் கூடத்திலிருந்த 40-50 பெண்களும் அச்சுறுத்தப் பட்டதாகவும் செயற்பாட்டாளர்கள் மூலம் அறிய வருகிறோம்.

குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் வழக்கறிஞர் ராஜா, தென்னிந்திய திரைத்துறை பெண்கள் இயக்கத்தின் செயலர் வழக்கறிஞர் ஈஸ்வரி மற்றும் ஒத்தக்கடை பகுதியைச் சார்ந்த முற்போக்கு சனநாயக அமைப்புகளின் செயற்பாட்டாளர்களின் தீவிர முயற்சிக்குப் பின்னரே, கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா காலமாக இருந்தாலும், நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து போராடிய மக்களிடமும், செயற்பாட்டாளர்களிடமும் கண்ணியமாக நடந்து கொள்ளாமல், அடக்குமுறையைக் கையாண்டிருக்கும் மதுரை காவல்துறையின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. எனவே, பியூசிஎல் பின்வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறது.

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இந்தக் காவல்துறை அத்துமீறல் குறித்து உரிய விசாரணை நடத்தி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு, ஒத்தக்கடை காவல்நிலைய ஆய்வாளர் மாடசாமி, உதவி ஆய்வாளர்கள் செந்தூரபாண்டியன், உமாதேவி மற்றும் பிற காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும், மதுரை மாவட்ட காவல்துறை திரும்பப் பெற வேண்டும்.

சிறுநிதி நிறுவனங்களால், பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தமிழக அரசு, அனைத்து மாவட்டங்களிலும் இதற்கென சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்து புகார்களை விசாரிக்க வேண்டும்.

மத்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி, கடனைச் செலுத்தச் சொல்லி, மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அனைத்து நிதி நிறுவனங்களின் மீதும், அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர் & க.சரவணன், மாநிலப் பொதுச் செயலர், பியூசிஎல்

Pin It