ஒரு கட்சியின் சித்தாந்தமே அந்தக் கட்சியின் தொண்டர்களை வழி நடத்துகின்றது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் ஒரு தொண்டனுக்கும் கார்ப்ரேட் கட்சியில் இருக்கும் ஒரு தொண்டனுக்குமான வித்தியாசத்தை குறைந்தபட்ச அரசியல் அறிவு உள்ளவர்கள் கூட கண்டுபிடித்து விடுவார்கள். ஒரு கம்யூனிஸ்ட் எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலையிலும் சாமானிய மக்களுக்கு எதிரான செயலை செய்யத் துணிய மாட்டான். தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டையும் கட்சியோடு இணைத்தே மதிப்பீடு செய்வான். தன்னுடைய தவறுகளால் எந்த வகையிலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பான். காரணம் கட்சி சாமானிய மக்களின் சமூக, அரசியல், பொருளாதார விடுதலையை மையமாகக் கொண்டு செயல்படுவதால், கட்சிக்குள்ளும் பொதுச் சமூகத்திலும் கண்ணியத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுதான். அதே சமயத்தில் பொறுக்கிகளையும், மக்கள் விரோதிகளையும், லும்பன்களையும், உத்தமன் வேசம் போட்டு ஊரை ஏமாற்றும் கழிசடைகளையும் சமரசமின்றி எதிர்ப்பார்கள்.

ஆனால் பொறுக்கித் தின்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் கார்ப்ரேட் கட்சிகளில் நிலைமை இதற்கு எதிர்நிலையில் இருக்கும். மாஃபியாக்களும், கந்துவட்டிக் கும்பலும், கள்ளச் சாராய பேர்வழிகளும், இன்னும் எவன் எவன் எல்லாம் ஊரை அடித்து உலையில் போடுகின்றானோ அது போன்றவர்களின் நிரந்தரப் புகலிடமாக கார்ப்ரேட் கட்சிகளே இருக்கின்றன.

ஒரு கம்யூனிஸ்ட் கையில் கிடைக்கும் அதிகாரம் என்பது மக்களுக்கு சேவை செய்வற்காக கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரம். ஆனால் ஒரு கார்ப்ரேட் கட்சியைச் சேர்ந்தவனுக்கு கிடைக்கும் அதிகாரம் என்பது ஊழல் செய்வதற்கும், அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு சொத்து சேர்ப்பதற்கும், மக்களை மிரட்டி அதிகாரம் செய்யவும் கிடைத்த வாய்ப்பு. அதனால்தான் நாட்டில் நடக்கும் அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்யும் மிகப் பெரிய குற்றக் கும்பலாக கார்ப்ரேட் கட்சிகளும், அதன் தொண்டர்களும் உள்ளனர்.

schoolgirl burnt aiadmk killersஅதிகார பலமும், பணபலமும் ஒன்றாகச் சேரும் போது அது கேடுகெட்ட அயோக்கியர்களை உருவாக்குகின்றது. அந்தக் கேடுகெட்ட அயோக்கியர்கள்தான் பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்முறை செய்பவர்களாகவும், தமிழ்நாட்டுப் பெண்களை விபச்சாரத்துக்கு அழைத்து அரசியல்வாதிகள் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் பாலியல் வக்கிரம் பிடித்த மிருகங்களுக்கு கூட்டிக் கொடுக்கும் நிர்மலா தேவிக்களாகவும், ஜெயஸ்ரீ போன்ற சிறுமிகளை எரித்துக் கொல்லும் சைக்கோ கொலையாளிகளாகவும் உள்ளனர்.

ஜெயஸ்ரீ கொடுத்த மரண வாக்குமூலம் மனிதாபிமானம் உள்ளவர்களின் ரத்தத்தை எல்லாம் உறையச் செய்திருக்கின்றது. எத்தனை வன்மமும், வக்கிரமும் இருந்தால் கை கால்களைக் கட்டி, வாயைப் பொத்தி, பெட்ரோல் ஊற்றி ஒரு 14 வயது சிறுமியை எரிக்கும் மிருகத்தனமான எண்ணம் உருவாகி இருக்கும்!? இது சம்மந்தமாக அதிமுக கவுன்சிலர் முருகன் என்பவரையும், அதிமுக கிளைச் செயலாளர் கலியபெருமாள் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக காலிகள் பெண்களை உயிரோடு எரித்து புளகாங்கிதம் அடைவது இது முதல் முறை அல்ல... பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு 2000ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி ஒராண்டு சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட போது, தமிழ்நாடு முழுவதும் அதிமுக குண்டர்கள் பேருந்துகளை எரித்தல், பொதுச் சொத்துக்களை நாசப்படுத்துதல் போன்ற செயல்களை செய்து முடித்தனர். உச்சபட்ச அயோக்கியத்தனமாக கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் வந்த பேருந்தை தர்மபுரி மாவட்டத்தில் தடுத்தி நிறுத்திய அதிமுக குண்டர்கள், மாணவிகள் முழுமையாகப் பேருந்தை விட்டு இறங்குவதற்கு முன்பாக பேருந்தில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து எரித்தனர். இதில் சென்னையைச் சேர்ந்த ஹேமலதா, விருதாசலத்தைச் சேர்ந்த காயத்ரி, நாமக்கல்லைச் சேர்ந்த கோகிலவாணி ஆகிய மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்; 16 மாணவிகள் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் 2007 டிசம்பர் 5-ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் 25 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு துவக்க விழாவை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி அரசால் விடுதலையும் செய்யப்பட்டனர்.

மூன்று மாணவிகளை உயிருடன் திட்டமிட்டு எரித்துக் கொன்ற அதிமுக குண்டர்களை விடுவிக்க எடப்பாடி அரசு சொன்ன அரிய காரணம், இந்தக் கொலைகளில் எந்தவித சதியோ, உள்நோக்கமோ இல்லை என்பதுதான். அம்மாவுக்குத் தண்டனை கொடுத்தால் தமிழ்நாட்டில் அப்பாவிகள் கூட நிம்மதியாக உயிர் வாழ முடியாது என்பதை நிரூபிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் அம்மாவின் நிழலில் தண்டால் வசூல் செய்தும், கந்துவட்டிக்கு விட்டும், சந்துக்கடைகளையும், பார்களையும், ரவுடிப் படைகளையும் நடத்தும் குண்டர்களுக்கே இருந்தது. காரணம் இவர்கள்தான் அதிமுகவின் கடைநிலைப் பதவிகளை வகிப்பவர்களாக இன்று வரையிலும் இருந்து வருகின்றனர். இது போன்ற குண்டர்களுக்கு கட்சி அளிக்கும் அதிகாரம் என்பது உள்ளூர் காவல் நிலையத்தில் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்கள்வரை எப்போதுமே இருக்கும்.

இப்படி பணபலத்தையும்., அதிகார பலத்தையும், அடியாள் பலத்தையும் எந்தக் குற்றத்தை இழைத்தாலும் கட்சி காப்பாற்றிவிடும் என்ற தைரியமும்தான் இது போன்ற குண்டர்களை கொடூரமான கொலைகள் செய்யத் தூண்டுகின்றது. கட்சியும் ஒருபோதும் தனக்காக பாடுபட்ட குண்டர்களைக் கைவிடுவதில்லை. காரணம் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதைவிட குண்டர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது கார்ப்ரேட் கட்சிகளுக்கு முக்கியம். இல்லை என்றால், கட்சிக் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதில் இருந்து, கலவரம் செய்வது வரை நடக்காமல் போகும். அப்படி நடக்காமல் போனால் மக்கள் மத்தியில் கட்சியைப் பற்றிய பிரமிப்பை ஏற்படுத்த முடியாமல் போகும், இதனால் தேர்தலில் வெற்றி பெற்று ஊரை அடித்து உலையில் போட முடியாமல் போகும். அதனால் கட்சியின் தூண்களாக விளங்கும் குண்டர்கள் ஒருபோதும் கைவிடப்படுவது கிடையாது. அந்த அடிப்படையில்தான் மூன்று மாணவிகளை உயிருடன் துடிதுடிக்க கொலை செய்த அயோக்கியர்கள் கொலைச் செயலில் சதியோ, உள்நோக்கமோ இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்கள்.

இப்போது ஜெயஸ்ரீயை துடிதுடிக்க எரித்துக் கொன்ற அதிமுக கவுன்சிலர் முருகன், கிளைச்செயலாளர் கலியபெருமாள் போன்றவர்களும்கூட நாளை இதே போன்றே தண்டனையில் இருந்து காப்பாற்றப்படுவர்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்கள்தான் கார்ப்ரேட் கட்சியின் முகங்கள். இவர்கள் தங்களின் செயலால் கட்சியின் பெயர் கெட்டுவிடும் என்றெல்லாம் ஒருபோதும் யோசிக்க மாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை கொலை செய்வதும், கொள்ளை அடிப்பதும், கட்சியில் தங்களின் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள இருக்கும் ஒரு வழி. அந்த வழி மட்டுமே தங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தங்களுக்கு மேல் உள்ளவர்கள் எல்லாம் எத்தனை குடும்பங்களின் தாலி அறுத்து இந்த உயர்ந்த இடத்திற்கு வந்தார்கள் என்பதும் தெரியும். நாளை கவுன்சிலர் முருகனோ, இல்லை கிளைச்செயலாளர் கலியபெருமாளோ கூட தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர வாய்ப்பு உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.

மக்கள் கம்யூனிஸ்ட்களை நம்பாமல் காலிப் பயல்களை எல்லாம் நம்பி ஓட்டுப் போடும்வரை இது போன்ற அவலங்கள் நிலவுவதை ஒருபோதும் தடுக்க முடியாது. பெண்களை ஒரு பொருளாக, பண்டமாக, விற்பனை சரக்காக, நுகர்வுப் பொருளாக கருதும் கார்ப்ரேட் கட்சிகளால் ஒருபோதும் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுத்து நிறுத்த முடியாது.

- செ.கார்கி

Pin It