‘அச்சம் வரும் முன்னே, தேர்தல் முடிவு வரும் பின்னே' என்பதுபோல் ஆகிவிட்டது அதிமுகவின் நிலை. வரும் மே 23 ஆம் நாள் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் - அதிலும் குறிப்பாக 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் எப்படியிருக்கும் என்று உளவுத்துறை அரசுக்குச் சொல்லாமலா இருக்கும்? சரியாகச் சொல்லிவிட்டது போலும். அதனால்தான், அடுத்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க இப்போது முடிவு செய்துள்ளனர்.

eps and sengottaiyanகள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் மீதும் கட்சித் தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, அதிமுக அரசின் சட்ட அமைச்சர் சண்முகமும், கொறடா ராஜேந்திரனும் அவைத்தலைவர் தனபாலிடம் கூறியுள்ளனர்.

அவர்களது கோரிக்கையை அலசி ஆராய்ந்து நியாயப்படி நடக்கக்கூடிய அவைத்தலைவரா தமிழகத்தில் உள்ளார்? இந்நேரம், பாட்டுக்குத் தகுந்த ஆட்டத்தை அவர் முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கியிருப்பார்.

அரசுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் வாக்களித்த, இன்றைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 மீது எந்தவிதமான கட்சித் தாவல் நடவடிக்கையும் இன்று வரையில் இல்லை. ஆனால் வேறு 18 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகாலம் அந்தத் தொகுதிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளே இல்லாத நிலை இருந்தது. இப்போதுதான் அவற்றுக்குத் தேர்தல் நடந்துள்ளது. ,ஏற்கனவே 97 உறுப்பினர்களைக் கொண்டுள்ள (88+8+1) திமுக தலைமையிலான கூட்டணி, இப்போது 22 இடங்களிலும் வெற்றி பெற்று விட்டால், 119 இடங்களைப் பெற்று ஆளுங்கட்சியாகி விடும். அதைத் தடுக்க, இப்போது மூன்று பேரைத் தகுதி நீக்கம் செய்து, மீண்டும் அந்தத் தொகுதிகளில், தேர்தலைத் தள்ளிவைத்து, அதுவரையில், சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல், ஆட்சியைக் காப்பாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர்.

இவர்களின் 'நாணயமான' இந்த வழிமுறைகளைப் புரிந்துகொண்ட, எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற அவைத்தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார். அதனைச் சட்டமன்றத்தில் எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

பெரும்பான்மை அற்ற ஓர் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள இன்னும் என்னென்ன வழிகள் உண்டோ அனைத்தையும் இவர்கள் சிந்திப்பார்கள். ஆனால் அனைத்துக்கும் தலையாட்டிய மத்திய அரசு இனி தில்லியில் இருக்காது என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து போனார்கள்!

Pin It