“தேவதாசி முறை என்பது இந்த பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது மிகச் சிறந்த சிஸ்டம். அதை சிதைத்ததால் நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்”

இவ்விதம் பேசியிருக்கிறார் சின்மயி-யின் தாயார் பத்மஹாசினி (மீ டூ மூலம் வைரமுத்து மீது குற்றம் சுமத்திய பெண்ணின் தாயார் என்றால் உங்களுக்குத் தெரியும்).

Devadasi 1920sகாலங்காலமாக கோவில்களில் பெண்களை தேவதாசிகளாக வைத்திருந்து, அவர்கள் அந்தத் தொழில் செய்வது மிகுந்த புண்ணியம் என்று அவர்களையே நம்ப வைத்த கொடுமைகள் நடந்தேறின.

இதனைக் கண்டு வெகுண்டெழுந்தார் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. 1927 முதல் 1930 வரை அவர் சென்னை மாகாணத்தின் சட்டமேலவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் இருந்போது, கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பொட்டு கட்டி இறைவனுக்கு மனைவியாக்கும் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதாவை முன்மொழிந்து, அதற்கென வாதிட்டார். இதனை எதிர்த்த சத்தியமூர்த்தி, "இது புனிதமான பணி" என்றார்.

அதற்குப் பதிலளித்த முத்துலெட்சுமி "அப்படியானால் இதுவரை எங்கள் பெண்கள் புனிதப் பணி செய்ததுபோதும்... உங்கள் வீட்டுப் பெண்களை இந்த புனிதப் பணியில் ஈடுபடுத்துங்கள்" என்று பதிலடி தந்தார்.

இதன் பின்னர் இந்த மசோதாவே 1947 சென்னை தேவதாசிச் சட்டம் என்ற பெயரில் சட்டமானது. இதன் மூலம் தேவதாசிகள் திருமணம் செய்து கொள்ள சட்ட உரிமை கிடைத்தது. இதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெரியார் 'விடுதலை'யில் எழுதினார். அதனைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்து மசோதாவை நிறைவேற்றினார்கள்.

இந்தியா டுடே பத்திரிக்கையில் வாசந்தி என்று ஓர் ஆசிரியர் இருந்தார். அவர் தேவதாசிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையில் " ஆடல் கலை வளர்ந்தது, பாடல் கலை புத்துயிர் பெற்றது, ஒழுக்கமாக வாழ வித்திட்டது" என்றெல்லாம் தேவதாசி முறையைப் புகழும் விதமாக எழுதியிருந்தார்.

இதனைக் கண்ட கலைஞர் மறுநாள் முரசொலியில் அக்கட்டுரையைக் குறித்து இப்படி எழுதினார்... "ஒரு எழுத்தாளரோ, பத்திரிகை ஆசிரியரோ எழுதியது போல அல்லாமல், தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல உள்ளது" என்று.

இதனைப் படித்ததும் வாசந்தி துடித்துப் போனார். வெறும் வார்த்தைக்கே துடித்துப் போன வாசந்தி அரசியல் பிரமுகர்களிடம் எல்லாம் ஒப்பாரியும் வைத்துள்ளார். அனைவருமே "ஒரு சமுதாயத்துப் பெண்களை கட்டாயப்படுத்தி செய்ய வைக்கப்பட்ட கொடுமையை நீ பாட்டுக்கு புகழ்ந்து இருக்க... உன்னால் ஒரு வார்த்தையைக் கூட தாங்கிக்க முடியலையே? அவரை சந்தித்து மன்னிப்பு கேள்" என ஆலோசனை கூறினார்கள்.

கலைஞரை நேரடியாக சந்திக்க முயற்சிக்காமல், தானே அக்கட்டுரைக்கு எதிர்மறையாக தேவதாசி முறையின் கொடுமைகளை எழுதினார்.

இப்போது மீண்டும் அதே கருத்தை ஒரு பெண்ணே வலியுறுத்துகிறார் என்றால், பெண்ணடிமைத்தனம் ஆண்களைவிட பெண்களிடம் எவ்வளவு ஆழமாக பதிய வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் உணரலாம்.

தேவதாசி முறையை ஆதரித்து சட்டப்பேரவையில் பேசிய சத்தியமூர்த்தியும் ஒரு பார்ப்பனர், வாசந்தியும் பார்ப்பனர், இப்போது ஆதரித்துப் பேசிய பத்மஹாசினியும் ஒரு பார்ப்பனர்.

ஒரு அடிமையிடம் தான் அடிமையாக இருக்கிறோம் என்பதை உணர்த்தி விட்டால் போதும், அதனை எதிர்த்து களம் காண்பதற்கான போராட்ட வியூகத்தை அவரே வகுத்துக் கொள்வார்.

பெரியார் தன் வாழ்நாளெல்லாம் செய்தது அதைத்தான்...

அடிமைத்தனங்களை கழித்துக் கட்டுவோம், சொல்லிலும் செயலிலும் சிந்தனையிலும் சுதந்திர மனிதனாக வாழ்வோம். அதற்குத் தடையாக இருக்கும் அனைத்தையும் அடித்து விரட்டுவோம்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற நன்னூலின் வாக்குப்படி இந்த புத்தாண்டை எதிர்கொள்வோம்.

- சஞ்சய் சங்கையா

Pin It