modi and isro sivanஇந்திய வரலாற்றிலேயே மிகப் பெரும் மைல் கல்லாக அமைந்திருக்க வேண்டிய சம்பவம், மிகவும் துரதிஷ்டமான முறையில் தென்துருவத்திற்கு மிக சமீபமாக தரையிறங்க வேண்டிய நிலையில், 2.3 கிலோமீட்டர் இடைவெளியிருக்கும் வேளையில் லாண்டருக்கும் தகவல் தொடர்பு நிலையத்திற்கும் இடையே சிக்னல் துண்டாகியிருப்பது மிக வருந்தத்தக்க நிகழ்வு.

அதே சமயம் கடந்த 25 நாட்களாக இந்தியாவின் ஒரு மாநிலத்தில் அதன் சுயமரியாதையினை இரவோடு இரவாக பறித்துவிட்டு, அதனை எதிர்கொள்ள மனமில்லாது எந்த சாமானியனின் கருத்துக்களையும் செவிமடுக்காது, அவர்களின் ஜனநாயகக் குரலினை அமுக்கிடும் வகையில் தகவல் நுட்பங்களைத் தடுத்து, இந்தியாவின் ஏனைய மக்களான நம்முடைய ஆறுதலை அவர்கள் கேட்க விடாமலும், அவர்களின் கண்ணீரை நம்மைக் காணவிடாமல் ஆக்கிடும் வேலி திறம்பட பாஜக ஆட்சியாளர்களால் செய்யப்பட்டிருப்பது மிகவும் கொடுமையான நிகழ்வு.

காஷ்மீரத்து மக்ககளின் நிலையினை அறிவதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், திமுக போன்ற எதிர்க்கட்சிகள் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும் அவர்களை மாநிலத்தின் விமானத் தளத்தின் வாசலுக்குக்கூட செல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிடும் பணியினைத்தான் மத்திய அரசு செய்கின்றது.

அரசியல் ஆதாயத்திற்காகவே காஷ்மீரின் விஷயத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் செயல்படுகின்றன. தங்களின் நிர்வாகத் திறன் இன்மையை மறைக்க எப்படி புல்வாமா தாக்குதலை, பாகிஸ்தான் எதிர்ப்பு அரசியலைப் பேசி மீண்டும் ஆட்சிக்கு வந்தார்களோ, அது போன்றதே சரிவுகளை வரலாறு காணாத அளவில் கண்டு கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம் குறித்து எவரும் கேள்வி கேட்பதைம் தவிர்க்கவே காஷ்மீரின் அடக்குமுறை ஆயதம் பயன்படுத்தப்படுவதும், நாடாளுமன்றத்தினை நோக்கி ஆயுதமேந்தி வந்தவன் கைது என்ற நாடகமும், தீவிரவாதி மசூத் அசார் உட்பட மூவரை பயங்கரவாதி என அறிவித்தலும்.

ஆக, சந்திரனில் நீர் இருக்கின்றதா என்பதை அறிய அனுப்பப்பட்ட ’சந்திராயனின்’ தகவல் துண்டிப்பு குறித்து இஸ்ரோ தலைவர் சிவனின் கண்ணீரும், மோடியின் ஆறுதல் தட்டிக் கொடுப்பும் எப்படி ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக உருவாக்கப்படுகின்றதோ, அதுபோல சக காஷ்மீரிகளின் கண்ணீரும் தலைப்புச் செய்தியாக வேண்டும்.

- நவாஸ்

Pin It