காஷ்மீர் நகரம் எரிந்துகொண்டிருக்கும் போது, நீரோ மன்னன் சினிமா சூட்டிங்கிக்கு வாடகைக்கு விடுகின்றான்.

காஷ்மீர் என்று சொன்னவுடனையே குளிர் நிறைந்த தேசம், பள்ளத்தாக்குகள், மலைகள் நிறைந்த சுற்றுலாத்தலம் என்பதையெல்லாம் தாண்டி பெருன்பான்மையோருக்கு ஞாபகம் வருவது அது தீவிரவாத பூமி.

kashmir violenceஅங்குள்ள மக்கள் எல்லாம் இந்தியாவிற்கு எதிராக கல்லெறிந்து போராடுபவர்கள் - இந்தியாவின் இராணுவத்தோடு சண்டையிடுபவர்கள் என்கிற எண்ணம் தோன்றுகிறதா?

வெளியில் வருகின்ற செய்திகள், பிரச்சனைகளின் வேறு வடிவங்களை உங்களுக்குத் தந்து கொண்டிருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் ஒரே மொழி என்கிற கோஷங்கள் கேட்பதற்கு இனிமையாக தெரிந்தாலும், மண் - மக்கள் -நிலப்பரப்பு - கலாச்சாரம் எல்லாம் பரந்து விரிந்திருக்கும் இந்த பாரதத்தில் ஒற்றைக்குள் சுருக்குவது, தேசத்திற்கு எந்த வித நலனையும் கொடுக்கப்போவதில்லை.

ஆர்டிக்கிள் 370 என்பது இந்துக்களுக்கு எதிரானது போலவும், இந்தியாவுக்கு எதிரானது போலவும், சித்தரித்து கதைகள் எழுதிக் கொண்டிருக்கும் சங்கிகளுக்கு தெரியாது, ஆர்ட்டிக்கிள் 370 வது பிரிவை உருவாக்க முக்கிய காரணமான கோபாலசாமி அய்யங்கார் என்கிற தமிழனைப் பற்றி.

அம்பேத்கார் இதனை எழுத மறுத்துவிட, நேருவுக்கு நெருக்கமான, தஞ்சாவூரைச் சார்ந்த கோபாலசாமி அய்யங்கார்தான் இதனை எழுதத் துவங்கினார்.

ஆர்ட்டிக்கிள் 7 என்றால் என்ன?

1.இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர மற்ற துறைகள் தொடர்பாக மத்திய அரசு இயற்றும் சட்டங்கள் இம்மாநிலத்தின் சம்மதமின்றி இயற்ற முடியாது. அவ்வாறு இயற்றினாலும் அது இம்மாநிலத்திற்கு பொருந்தாது.

2. இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக் கொடி இருக்கின்றது. ஆனால் அது இந்தியக் கொடியுடன் சேர்த்தே ஏற்றப்படவேண்டும். இம்மாநிலத்திற்கென்று தனி அரசியல் சாசனம் உண்டு.

3. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம்.

4. இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க, முடியாது. ஆனால் ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டாலும், அவர்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம்.

5. மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது.

6. ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும்.

7. இம்மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது.

======= =====

1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்த கால கட்டத்தில், காஷ்மீரை ஆண்டது ஹரிசிங் ராஜா. அப்போதுள்ள பல சிற்றரசுகள், இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ அல்லது தனிநாடாகவோ விருப்பப்படி பிரிந்து கொள்ள ஒப்புக் கொண்டன..

1947 ஆம் ஆண்டு காஸ்மீரில் சுமார் 77% இசுலாமியர் வாழ்ந்து வந்தனர் மீதி 33 %பேர்கள் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள்.

காஷ்மீர் தனி நாடாக இருந்து கொள்ளலாமென நினைத்த ஹரிசிங் ராஜாவுக்கு, பாகிஸ்தானிய பழங்குடியினரால் ஆபத்து ஏற்பட, ஆளுனர் மவுண்ட் பேட்டன் பிரபுவை நாடினார். அப்பொழுது காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால் இந்தியா உதவ முன் வரும் என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.

அதிலும் இன்னொரு நாட்டை இந்தியாவோடு குறிப்பிட்ட ஒப்பந்தத்தோடு இணைத்துவிட்டு அவர்களுக்கு தனிக்கொடி, தனி சாசனம், என்ன திமிர் அவர்களுக்கு? அது எப்படி இஸ்லாமியர்களுக்கு என்று தனிப்பட்ட சிறப்பு கொடுக்கலாம்? என்று சங்கிகள் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள் வரலாறு தெரியாமல். அந்த சிறப்பு அந்தஸ்து இஸ்லாமியர்களுக்கானதல்ல, காஷ்மீரிகளுக்கானது

தனி மனிதன் ஒப்பந்தத்தை மீறினால் சட்டம் தண்டிக்கிறது. ஆனால் ஜனநாயகத்தை காக்க வேண்டியவர்களே காஷ்மீரின் சட்டசபையை கலைத்து, நாட்டின் ஒப்பந்தத்தை மீறி மக்களுக்கு எதிராக செயல்படுவது அநீதியானது.

தங்களைக் காக்க வேண்டிய அரசே, பெல்லட் குண்டுகளால், தங்கள் உடல்களைத் துளைத்தும், சுட்டுத்தள்ளியும், தீவிரவாதிகளாக சித்தரிக்கும்போது அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆயுதம் கற்கள்தான்.. கற்களை வீசுவது என்ன பொழுதுபோக்கா ?

அச்சமில்லாமல் வாழும், ஒரு அமைதியான வாழ்க்கையைத்தான் அவர்களும் வாழ ஆசைப்படுகின்றார்கள்.

காஷ்மீரின் வலி நிறைந்த கவிதை ஒன்று:

"முகவரியை
சட்டைப்பையில் எடுத்துச் செல்லுங்கள்
குறைந்தபட்சம்
அவனது உடலாவது வீடு வந்து சேரும்."

கடலுக்குள் சென்றவர்கள் எப்படி திரும்பி வருவது உத்தரவாதமில்லையோ அதுபோலத்தான் கடைவீதிக்குச் சென்றவர்களுக்கும் காஷ்மீரில் உத்திரவாதமில்லை.

தீவிரவாதிகளை கைது செய்து, விசாரித்து, சிறையில் அடைத்து, தூக்கிலிட்டு, சிலசமயம் எம்பி பதவி கொடுத்தும், அழகு பார்க்கின்ற இந்திய திருநாட்டில், கல்லெறிந்ததற்காக கண்ணெடுக்கும் கொடுமை எதனால் ?

kashmir boyஇருப‌து வ‌ருட‌ கால‌ங்க‌ளில் இங்கு 70,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

நாம் பாதுகாப்போம் என்று நம்பி வந்த மக்களை, பாதுகாக்கத் தவறிவிட்டு, அவர்களுக்கு அச்சத்தை மட்டுமே பரிசளித்துவிட்டு, அவர்களை தீவிரவாதிகள் என்று பொதுவாக பழி போட்டு விடுகின்றோம்...

இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கிறது எனத் தெரிந்தும், அவர்கள் ஏன் ஒவ்வொரு இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டும், இராணுவத்தின் மீது கல்லெறிந்தும் வருகின்றார்கள்?

இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட் மகனின் உடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் வயதான தந்தையின் எதிர்ப்பும் - ஆயுதமும், கண்ணீரும் கற்களும்தான்.

பிஜேபியில் எவன் எந்தக் காரணத்திற்காக செத்துப்போனாலும், அதனைப் பிரச்சனையாக்கி "மனம் உடைந்ததால் பேருந்து கண்ணாடி உடைந்தது" என்று எளிதாக தமிழிசை போன்றோர்களால் சொல்ல முடிகிறது,

ஆனால் தன் உறவினர்கள் சொந்த இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டாலும், அவர்கள் கற்கள் எறிவது தீவிரவாதத்தனமாகத் தெரிகிறதா ? அந்தக் கற்கள் எல்லாம் கண்ணீரால் உருவாக்கப்பட்டவை.

இராணுவத்தினர், கற்களை பாதுகாப்பு கவசம் அணிந்து, ஹெல்மெட் அணிந்து, கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி, எதிர்கொள்கின்றார்கள். கல்லெறிபவர்கள் நிராயுதபாணியாக நின்று கொண்டு பெல்லட் குண்டுகளை எதிர்கொள்கின்றார்கள்.

புவி ஈர்ப்பு விசையை விடவும், ஆகாயத்தில் குழந்தையை தூக்கி வீசி விளையாடும், தந்தையின் கைகள் பலம் வாய்ந்தது என்கிற குழந்தையின் நம்பிக்கையைத்தான், இந்திய இராணுவத்திடம் காஷ்மீர் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

ஆனால் நாம் அந்தக் குழந்தைகளை தரையில் விழவைத்து காயப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

காஷ்மீரில் 1989லிருந்து 2019 வரை 95,283 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 1,45,597 பொது மக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 11,111 பெண்கள் கூட்டுப் பலாத்காரத்திலும் கற்பழிப்பிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 109,205 வீடுகள் கட்டிடங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் அநாதைகளாக்கப்பட்ட பிள்ளைகள் 107,756. விதவையான பெண்கள் 22,898. இதில் பாதி விதவைப் பெண்கள் வேறு.

பாதி விதவைகள் (Half Widows) என்கிற சொல்லாடல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? கணவன் தொலைக்கப்பட்டானா இல்லை கொலை செய்யப்பட்டானா என்று தெரியாமல் இருக்கும் பெண்கள்.

குறிப்பாக 2016 ஜூலை மாதத்தில் இருந்து 25,265 பேர் காயப்பட்டுள்ளார்கள். 755 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இதுபோன்ற இந்திய ராணுவத்தின் அத்து மீறல்களுக்கெல்லாம், சாதாரண மனிதர்களின் வெறுப்பு, கல்லெறிவதாகத்தான் இருக்கின்றது

இந்த மன உளைச்சல்களையெல்லாம், வலிகளையெல்லாம், கண்ணீரையெல்லாம்தான் அவர்கள் கற்களின் மூலமாக நமக்குக் கடத்துகின்றார்கள்.

நிம்மதியான வாழ்க்கை வாழ அனுமதிக்காமல் அவர்களை பதட்டத்திலேயே வைத்துக் கொண்டு, அவர்கள் கல்லெறிவதைப் பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்.

இவ்வளவு வலிகளோடு இருப்பவர்களை புரிந்து கொள்ளாமல் தீவிரவாதக் குழுக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் கற்கள் எறிகின்றார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் வைக்கின்றீர்கள்.

தனது தம்பியை ஆயுதப்படை கைது செய்ததைக் கண்டு வண்டியின் பின்னாலேயே அழுதபடியே ஓடிய பெண் கற்களை எறியவில்லை. அவளது தம்பியின் உடல் அவன் விளையாடியத் திரிந்த பக்கத்து தெருவில், தோல்கள் எரிந்து, கனரச வாகங்கள் ஏறி நசுங்கி, அவனது பிறப்புறுப்பில் மின்சாரக் கம்பிகளுடன் கண்டெடுக்கப்பட்ட, கொடுரங்களைக் கண்ட பின், அவளுடைய எதிர்ப்பு கற்களாகத்தான் மாறியது. அவளா பணம் வாங்கிக் கொண்டு கல்லெறிய சம்மதிப்பாள்?

கணவன் கொல்லப்பட்டுவிட்டானா காணாமல் ஆக்கப்பட்டானா திரும்பி வருவானா மாட்டா என பல வருடங்களாக ஏங்கிக்கொண்டிருக்கும் பாதி விதவையான பெண்ணா பணம் வாங்கிக் கொண்டு கல்லெறிகிறாள்?

விளையாடச் சென்ற மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சோகத்தை கல்லெறிந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும், அந்த தாயா பணம் வாங்கிக் கொண்டு கல்லெறிகிறாள்?

மிருகங்களை வேட்டையாடப் பயன்படுத்தும் பெல்லட் குண்டுகளை, மனிதர்களை வைத்து வேட்டையாடுகின்றீர்கள்.

2016 மற்றும் 2017 ல் மட்டும் 3800 த்துக்கும் அதிகமான காஷ்மீரிகள் பெல்லட் குண்டுகளால் குருடாக்கப்பட்டுள்ளனர் 3 வயது குழந்தை உட்பட.

அவர்களின் மனக்குறைகளை, ஆயுதமேந்தியும் ஜீப்பின் முன்னால் மனித கேடயங்களாக கட்டியும், பெல்லட் குண்டுகளால் தாக்கியுமா கேட்பது?

பைக்கில் லைசென்ஸ் இல்லாமல், ஹெல்மெட் இல்லாமல் செல்லும் அப்பாவி மக்களை, மற்ற மாநில காவலர்கள் எப்படி அணுகின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அவர்களை மரியாதையில்லாமல் பேசுவது, அடித்து காயப்படுத்துவது, பைக்கில் எட்டி உதைத்து கர்ப்பிணிப் பெண்ணை கொலை செய்தது, லத்தியால் அடித்து பைக்கில் சென்றவரை தடுமாறி விழவைத்து, சாகடித்தது என்று காவலர்களின் அராஜகங்களை, அதிகாரத் துஷ்பிரயோகத்தை, நாம் நமது மாநிலத்திலேயே கண்டிருக்கின்றோம்.

ஆனால் அதிகமான அதிகாரத்தைக் கொடுக்கப்பட்ட காவலர்கள் காஷ்மீரில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று கூறத் தேவையில்லை.

பைக்கில் செல்லும் இளைஞர்களை தடுத்து அடித்து, அவர்களின் பைக்குகளை சேதப்படுத்துதல், அவர்களை தீவிரவாதிகளைப் போல நடத்தும் செயல்கள் எல்லாம் அவர்களுக்கு அவமானம் தராதா? அவர்களின் சுயமரியாதையை சீண்டுவது போல் ஆகாதா?

ஆனால் எல்லா சுயமரியாதைச் சீண்டல்களின் எதிர்வினைகளும் எல்லாருக்கும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. அவரவர்களின் குணங்களை, வளர்ப்பு முறைகளை பொறுத்து அவரவர்களுடைய எதிர்வினைகள் இருக்கின்றது.

'ஓ காஷ்மீர், உங்கள் அழகில் வலிகள் இருக்கின்றது
உங்கள் கண்களில் கண்ணீரும்,
கால்களில் சங்கிலிகளும் இருக்கின்றது.
நீங்கள் எங்கள் கண்களைப் பறிக்க முடியும்,
ஆனால் கனவுகளை பறிக்க முடியாது'

என்று பாகிஸ்தானும் ஆசாதி பாடல்களை, முழக்கங்களை ஏற்றி அந்த இளைஞர்களை உசுப்பேற்றுகிறது.

இந்த பிரச்சனையின் தீர்வு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு தெரியும். ஆனால் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்கிற கொள்கையில் அரசை வழிநடத்துபவர்கள் இல்லை.

1. அவர்களுக்குண்டான சிறப்பு அந்தஸ்தை அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டும்.

2. தினமும் ஒரு பதட்டமான போர் சூழ்நிலையில் பாதுகாப்பில் இருக்கும் நமது இந்திய படை வீரர்களின் மனச்சுமையை குறைக்க வேண்டும்

3. அதிகப்பட்ட அதிகாரத்தை நீக்கி மக்களுக்கும் இந்திய படை வீரர்களுக்கும் மன நிம்மதியை அளிப்பது

4. காஷ்மீர் பண்டிட்களுக்கு மீள் குடியேற்றம் செய்து பாதுகாப்பு அளிப்பது

5. பெல்லட் குண்டுகளால் துளைக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட அப்பாவி குடிமக்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளித்தல்

6. விதவைப் பெண்களுக்குண்டான சலுகைகள் அளித்தல்

7. இந்தியா உங்களின் தாய்நாடு என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கும் வகையில் நடத்துதல்

8. அங்குள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான நிதி ஊதவி செய்தல்

9.சுற்றுலாத்துறையை மேலும் வளப்படுத்தி அங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தல்

10. பாகிஸ்தானுக்குப் போ - மாட்டுக்கறி திங்காதே என்று அடித்துக் கொல்லப்படாமல் இருத்தல்

ஆகியவைகள்தான் அவர்களுக்கு தேவையான தீர்வுகள்..

kashmir boysபெரும்பாலும் ஜம்மு மற்றும் லடாக் பகுதி மக்கள் விடுதலையை ஆதரிக்கவில்லை. காஷ்மீர் மக்கள்தான் விடுதலையை வேண்டுகின்றார்கள்.

சிலர் தனியாக செல்லவேண்டும்,சிலர் பாகிஸ்தானோடு செல்ல வேண்டும் என்ற பலவிதமான கருத்துக்களுடன். ஆனால் விடுதலைக்கான போராட்டத்தை எல்லாரும் இணைந்து, மதச்சாயம் பூசிக் கொள்ளாமல் காஷ்மீரிகளாக போராட அவர்களுக்கு உரிமை உண்டு.

அமைதியை இழந்து, வாழ்க்கையை இழந்து, எதிர்காலம் பற்றி ஆசையில்லாமல், எதிர்காலம் நமக்கு நிச்சயமாய் இருக்காது என்கிற மன உளைச்சலுடன் 41 சதவிகித இளைஞர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு அமைதியைக் கொடுக்கும் பொறுப்பு ஜனநாயக இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆனால் இவர்களின் புதிய இந்தியாவில் இந்துத்வாக்களின் சிறுபான்மை வெறுப்பும், தாக்குதல்களும் அவர்களை மேலும் பயமுறுத்துகின்றது,

காஷ்மீரி ஆப்பிளைக் கடிக்கலாம், அங்கு நிலம் வாங்கலாம் என்று கோஷமிடும் சங்கிகளை கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அவர்கள் பைத்தியங்கள் அப்படித்தான் பேசுவார்கள்.

ஆனால் இந்த வலிகளையெல்லாம் உணராமல், பிரச்சனைக்குரிய அந்த பூமியை சினிமா சூட்டிங் கொடுப்பதற்கு பயன்படுத்தலாம் என்று பிரதமரே சொல்வது எவ்வளவு அநாகரிகமானது?

கல்லெறியும் காஷ்மீரிகளை தீவிரவாதிகள் என்றும், கேரளாவில் சபரிமலையில், பக்தர்கள் மீது கல்லெறியும் பாஜக சங்கிகளை, பக்தர்கள் என்றும் அழைக்கப்படும் புதிய இந்தியாவின் இந்த மதத்துவேஷ அணுகுமுறையால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது

அவர்கள் மன்னனை நம்பினார்கள், தலைவர்களை நம்பினார்கள் ஜனநாயக அரசியலை நம்பினார்கள். ஆனால் அவர்களுக்குண்டான நம்பிக்கையை, அமைதியை 73 வருடங்களுக்கும் மேலாக தர முடியாமல் அலைகழித்துக் கொண்டிருக்கின்றோம்.

அவர்களுக்குண்டான தீர்வை ஓட்டு போட்டுத்தான் எடுக்க வேண்டுமே தவிர, பெல்லட் குண்டுகளால் ஓட்டை போட்டல்ல

காஷ்மீர் முஸ்லிம்களுக்கானது, இந்து பண்டிட்களுக்கானது, பௌத்தர்களுக்கானது, சீக்கியர்களுக்கானது.

- ரசிகவ் ஞானியார்