உலகில் தோன்றிய முதல் கலை ஓவியக் கலை என்பது ஆய்வறிஞர்களின் முடிவு. அதற்குச் சான்றாகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட பாறை ஓவியங்களை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
காலம், ஓவியக் கலையை வெவ்வேறு சிகரங்களுக்கு உயர்த்தி விட்டிருக்கிறது. கலை நுட்பங்கள், வடிவங்கள், புதிய பரிசோதனைகள் என்ற நீண்ட பயணம் அக்கலையை ஈர்க்கத்தக்கதாக உருமாற்றி உள்ளது. மாற்றங்களை உள்வாங்கி அவற்றைத் தன் மயமாக்கிக் கொண்டவர்களே காலத்தை வென்ற கலைஞர்களாகத் திகழ்கின்றனர்.
மரபான ஓவியத்தோடு மட்டும் தேங்கி நின்று விட்டவரல்ல ஓவியர் மருது அவர்கள். கோட்டோவியம், உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட நுண்கலை (Abstract Art) கணினி வரைகலை (Computer Graphics) எனப் பல்வேறு கூறுகளையும் கற்றறிந்து, அதன் வழியாகத் தனது ஓவியத்தை நவீனமாக்கிக் கொண்டார் அவர். அதிலும் பல்லூடக வெளிப்பாட்டில் (Multimedia) வித்தகராகவும் திகழ்கிறார். ஏனெனில், "பல்லூடகம் என்பதே ஒரு தனித்துவமான மொழி" என்பது அவரது நிலைப்பாடு ("Multimedia itself is a language"). அதனால்தான் உலக அளவிலான சிறந்த படைப்புகள் பலவற்றில் இவரது ஒவியங்களும் இடம் பெற்றுள்ளன.
இப்படித் தனது கலைக் கிடங்கில் பல்வேறு அம்புகளை அணியமாக வைத்துள்ளவர் ஓவியர் மருது. தனது கலையை நவீனமயமாக்கிக் கொண்டவர்கள் இவரைப் போல பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து வேறுபடும் ஒரு புள்ளி மருதுவிடம் உள்ளது. அந்தக் குறிப்பான கூறு என்ன? அதுதான் பிடிவாதமாகத் தனது மரபைக் கைவிட மறுக்கும் கலை வைராக்கியம்.
மரபையும் நவீனத்துவத்தையும் சரிவிகிதத்தில் கலந்து தமிழ் அடையாளத்தைத் தன் படைப்பில் அடர்த்தியாக வெளிப்படுத்துவது ஓவியர் மருதுவின் தனித்தன்மை. அவரது அனைத்து ஓவியங்களிலும் இந்தச் சுவட்டினை எளிதாக நீங்கள் அடையாளம் காண முடியும்.
தவிரவும், உருவத்தைப் போலவே உள்ளடக்கத்திலும் கூடுதல் கவனம் செலுத்தக் கூடியவர் அவர். அரசியலைச் சுமக்கும் கூலியாளாகக் கலையை மாற்றி விடாதீர்கள் எனச் சில புனிதவாதிகள் கூக்குரல் எழுப்பக் கூடும். ஆனால் இந்தச் சலசலப்பு உண்மையான மக்கள் படைப்பாளிகளிடம் எடுபடாது. ஏனெனில் கருத்திற்கும் கலை நுட்பத்திற்கும் இடையேயான இயங்கியல் உறவை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
கலைநேர்த்திக்கு ஊனம் விளைவிக்காமலும், தான் முன்னிறுத்த விழையும் அரசியலை விட்டு விலகி விடாமலும் இருக்கக் கூடிய படைப்பு ஒழுக்கம், இந்தத் தூரிகைப் போராளியிடம் மேலோங்கி நிற்கிறது.
தனது சொந்த வாழ்வு அல்லது சமூகத்தின் வாழ்வு போன்றவற்றில் ஏற்படும் ஒரு நிகழ்வு, ஒரு படைப்பாளியின் கச்சாப் பொருளாக (Raw material) அமைகிறது. செம்மைப் படுத்தப்படாத இந்த அனுபவத்தை ஆழ்மனதில் தேக்கி, ஒரு தவம் போல அதைச் சிறிது சிறிதாகச் செழுமைப்படுத்தி, அழகானதோர் படைப்பாக வெளிப் படுத்துவதுதான் படைப்புச் செயல்பாடு எனப்படுவது. இதில் வேதனை இருந்தாலும், மகழ்ச்சியும் கூடவே இருக்கிறது.
"பட்டுப்புழு, பட்டை உருவாக்குவது போன்ற செயல்பாடுதான் கலைப்படைப்பாக்கம்" எனப் பேராசான் மார்க்ஸ் இதைத்தான் குறிப்பிடுகிறார்.
சிப்பியிலிருந்து முத்து உருவாவதும், சேற்றிலிருந்து நெல் விளைவதும் கூட இப்படிப்பட்ட செயல்பாடுகள்தான் எனக் கூற முடியும்.
கடந்து சென்று விடக் கூடிய ஓர் அனுபவத்தை நிரந்தர அனுபவமாக மாற்றுகிறது கலை.
தனி மனித அனுபவமாக இருந்தாலும், அதைச் சமூகச் சொத்தாக விரிவாக்குகிறது கலை.
ஆனால் இந்தப் பரிணாமத்தை அடைய ஓர் அறிதுயில் (Hybernation) தேவைப்படுகிறது. பிறகு இடம், பொருள், காலம் அறிந்து அது பாய்ச்சலுடன் பீறிட்டு வெளியே வருகிறது.
அத்தகையதோர் காத்திருப்புக்குப் பிறகு வந்திருக்கும் ஓவியத் தொகுப்புத்தான் மருதுவின் "மாவீர நடுகற்கள்" எனும் கலை ஆவணம். இதைத் தனது முன்னுரையில் ஓவியர் மருதுவே தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
"மாவீரர்களின் உயிர்க்கொடையும், முள்ளிவாய்க்கால் துயரமும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்படுத்திய அழுத்தத்தின் வெளிப்பாடே இந்த ஓவியங்கள்" என்பது அவரது வாக்குமூலம்.
114 பக்கங்களில் 91 ஓவியங்களைத் தாங்கி வந்துள்ள இந்நூல் அச்சு நேர்த்தியோடும், கலைவடிவோடும் நமது கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் அவலம், ஓவியர் மருது அவர்களின் தனித்துவமான கோட்டோவியப் பாணியில் இந்நூலில் பரிணமிக்கின்றன. "கோட்டோவியம், ஓர் ஓவியத்தின் முதுகெலும்பு போன்றது" என்பது அவரது நிலைப்பாடு.
முள்ளிவாய்க்காலின் அவலத்தைச் சித்தரிப்பதன் ஊடாகப் போர் எதிர்ப்பு ஓவியங்களாகவும் இவை திகழ்கின்றன. ஓவிய வரலாற்றில் இதற்கு நிறைய முன் உதாரணங்கள் உள்ளன.
போர் எதிர்ப்பு ஓவியங்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டது பிக்காசோவின் "குவெர்னிகா" ஓவியம். (GUERNICA - 1937) பாசிச இத்தாலி மற்றும் நாஜி ஜெர்மனி ஆகியவற்றின் இராணுவம், ஸ்பெயின் நாட்டின் குவெர்னிகா கிராமத்தின் மீது நடத்திய கொலை வெறித் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் - குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் - எண்ணற்றோர் படுகொலை செய்யப்பட்டனர். பிக்காசோவின் காலத்தில் குவெர்னிகாவுக்கு ஏற்பட்ட கொடிய நாசத்தை எதிர்த்து அவர் வரைந்த ஒரே வரலாற்றுக் குறியீட்டு ஓவியம் அது.
போரின் கொடூரத்தை இந்த ஓவியம், மனதைக் குலுக்கும் வண்ணம் வெளிப்படுத்துவதால், ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் இது தொங்க விடப்பட்டது. ஆனால் ஈராக் போரின் பொழுது இந்த ஓவியத்தைக் காணச் சகிக்காமல், அமெரிக்க வல்லரசு அதை மூடி வைக்க உத்தரவிட்டது வரலாறு.
ஸ்பானிய ஓவியர் பிரான்சிஸ்கோ கோயாவின் "மே மூன்றாம் நாள்" (The Third of May - 1808) எனும் ஓவியம், சிறந்ததோர் போர் எதிர்ப்பு ஓவியமாக இன்றும் கருதப்படுகிறது.நெப்போலியனின் படைகள் ஸ்பெயின் மக்களைக் கொன்று குவித்ததை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. இதைப் போல சர்வதேச அரங்கில் பல்வேறு போர் எதிர்ப்பு ஓவியங்கள் காணக் கிடக்கின்றன.
தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை 27 ஒற்றை வண்ண ஓவியமாகவும், 64 பல் வண்ண ஓவியமாகவும் மருது நம் முன் படைக்கிறார். இதில் போரில் மக்கள் படும் துயரம், மகளிரின் அவலம், காணாமலடிக்கப்பட்ட குடும்பங்களின் கையறு நிலை, போரைத் தடுக்க முனையாமல் ஆண்ட, ஆளும் கட்சிகளின் திசை திருப்பல், ஒருவர் மற்றொருவர் மீது குற்றஞ்சாட்டிக் கொண்டே மக்களை ஏமாற்றியது, மாவீரர்கள் மகளிருக்குத் தந்த முன்னுரிமை மற்றும் பாதுகாப்பு, மாவீர நடுகற்களின் பெருமை, இடப்பெயர்வின் சோகம் எனப் பல்வேறு பரிமாணத்தில் போரின் கொடூரத்தை மருதுவின் ஓவியங்கள் துலக்கமாக வெளிப்படுத்துகின்றன.
இந்த ஓவியங்கள், செவ்வியல் மரபையும், நாட்டுப்புற மரபையும் சரிவிகிதத்தில் கரைத்து கொண்டு சமாதானத்தின் இன்றியமையாமையைப் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிவு செய்கின்றன.
நவீன ஓவியமாக இருந்தாலும், மரபின் வேர்களை இழக்காமலிருக்கத் தொன்மங்களையும் தனது படைப்பில் இணைத்தே நெய்துள்ளார் ஓவியர் மருது. "எனது ஸ்கெட்ச் புத்தகங்களில் நிரம்பி இருக்கும் சித்திரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சித்திரக் கோவையே இப்புத்தகம்" என்பது அவரது விளக்கம்.
சமகாலத்தின் ஆவணமாகத் திகழும் இப்படைப்பு, ஒரு மாற்றுக் காட்சிக் கலாச்சாரத்தை நம்முள் விதைக்கிறது. எங்கெல்லாம் போரின் அவலங்களாலும், இனப்படுகொலையின் கொடூரத் தாலும் மானுடம் துன்பத்தில் உழல்கிறதோ, அங்கெல்லாம் மருதுவின் ஓவியங்கள், ஒரு படைக்கலனாகப் பயன்படும். தமிழர்களுக்கோ அவரது படைப்புகள், மரப்பொந்திடை பொதித்து வைத்த அக்னிக் குஞ்சாகக் கனன்று கொண்டிருக்கும்.
- கண.குறிஞ்சி