'தி.மு.க'வில் சில ஆரிய எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது.

ambedkar periyar 301இன்றைய காலகட்டத்தில் பொது எதிரியை வீழ்த்த சனநாயக சக்திகளின் கைகள் ஒரு சேர வலுப் பெற வேண்டும் என்பது முக்கியமான விடயம் தான்.

இங்கே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்பது தலித்தியம் பேசுபவர்களின் நோக்கம் அல்ல. சிலரின் பதிவுகள் அப்படி இருக்கலாம், அது பிளவுபடுத்தும் ஆபத்தான கருத்தாக கூட இருக்கலாம். அவர்கள் கண்டனத்திற்குரியவர்களே.

இதனாலே பெரும்பான்மையாக ஒரு சமூக விடுதலையைப் பேசுபவர்கள் ‌அனைவரையும் பிரிவினைவாதிகள் என்று பழி சுமத்துவது சரியல்ல. இதுவும் ஒருவகையான‌ நவீன ஒடுக்குமுறையே.

நாங்களும் கேள்விகளை சனநாயக ரீதியாகத்தான் வைக்கிறோம். நீங்கள் சொல்லும் சனநாயகவாதிகள், கொள்கைவாதிகள் எல்லாம் வெறும் பார்ப்பனீய (பார்ப்பனர்) எதிர்ப்பாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

மேடைகளில் பெரியாரியத்தை, திராவிடக் கொள்கையை, ஆரிய எதிர்ப்பைப் பேசும் இவர்களால் அல்லது பாராளுமன்றத்தில் பேசும் இவர்களால், உள்ளூரில் இவர்கள் கொண்டாடும் திராவிட மண்ணில் தினம்தோறும் நடைபெறும் சாதியப் படுகொலைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும், சேரிகள் சூறையாடப்படுவதற்கும் கள்ள‌ மௌனம் காப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

குறைந்தபட்சம் அத்தகைய நிகழ்வைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட விடுவது இல்லை. அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூட சொல்லுவதில்லை. இத்தகைய ஒரு சார்பு நிலையைதான் நாங்கள் எதிர்க்கிறோம்.

இவர்கள் எப்படி சிறந்த கொள்கைவாதிகள் ஆவார்கள்? இவர்கள் எப்படி பெரியாரியவாதிகள் ஆவார்கள்?? என்று நாங்கள் கேள்விக்கு உட்படுத்துகிறோம்.

மிகச் சிறந்த கொள்கைவாதிகள் என்று இங்கு போற்றபடுகின்ற‌ ஆ.ராசா, திருமதி. கனிமொழி உட்பட.

தேர்தல் அரசியலில் எல்லா சூழ்நிலைகளிலும், சமரசம் இல்லாமல் ஒரு அரசியல் கட்சி செயல்பட இந்த சமூகச் சூழல் எதார்த்தில் அவர்களை அனுமதிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் எப்பொழுதும் இத்தகைய நிலையை நீங்கள் கடைபிடிப்பதனால்தான் எதிர்க்குரல் கேட்கின்றன.

ஒரு காலத்தில் பார்ப்பனீய எதிர்ப்பை மையப்படுத்தி இலக்கியங்கள், கவிதை, நாவல்கள், நூல்கள் என்று‌ முற்போக்கு புரட்சிகர மாற்றங்கள் கலை, இலக்கியத் துறையில் ஏற்பட்டன. பிற்காலத்தில் தலித் இலக்கியம், தலித் கவிதைகள், தலித் நூல்கள், தலித் சிறுகதைகள், நாவல்கள் என்று வரத் தொடங்கின. இத்தகைய மாற்று நிலைக்கு உங்களின்‌ போலி முற்போக்குத்தனங்கள்தான் காரணம்.

உங்களின் குரல்கள் உங்களின்‌ குரலாக மட்டுமே ஒலிக்கிறது, எங்களின்‌ குரலாக ஒலிப்பதில்லை. அதனால் ஏற்பட்ட மாற்றங்கள்தான் இவை அனைத்தும்.

இத்தகைய விடயங்களை கேள்விக்கு உட்படுத்தும் தலித்துகளை நீங்கள் பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்தி, புறம்தள்ள நினைப்பது மீண்டும், மீண்டும் எங்களின் குரல்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் ஒரு செயல்பாடாகத்தான் எங்களுக்குத் தெரிகிறது.

எங்களை விறகுறகட்டைகளாக எரித்து அதில் நீங்கள் அதிகார குளிர் காய்வது ஆதிக்கத்தனம்தான்.

எங்களின் குரலாக உங்களின் குரல்கள் ஒலிக்க வேண்டும். அந்தக் குரலின் மூலம் சம அதிகாரப் பகிர்வு ஏற்பட வேண்டும். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் ‌யாவரும் ஒன்றிணைய வேண்டும். சனாதனத்தை வேரறுத்து இந்த சமூகத்தில் சமத்துவம், சகோதரத்துவம் ஏற்பட வேண்டும் என்பதுதான் எங்களின்‌ நோக்கம், எதிர்பார்ப்பு.

இதுவே அண்ணலின் கனவு.

இதுவே பெரியாரின் கனவு.

இந்தக் குரலை எதிர்க்குரலாக நீங்கள் கட்டமைத்தால், அது விடுதலைக் குரலாக உங்களை கேள்விக்கு உட்படுத்தி ஒலித்துக் கொண்டே இருக்கும்.

- அம்பேத் கோகுல்

Pin It