குரங்கு கையில் கிடைத்த பூமாலையைக் கூட மீட்டு விடலாம், ஆனால் முட்டாள்களிடம் மாட்டிய நாட்டை சேதாரம் இல்லாமல் மீட்பது மிகக் கடினம். கடவுள் நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ ஒருவன் தன்னளவில் கடைபிடிக்கும்போது அது பெரிய தீய விளைவுகளை ஏற்படுத்தி விடுவதில்லை. ஆனால் தன்னுடைய நம்பிக்கைகளை ஒட்டுமொத்த சமூகமும் நம்ப வேண்டுமென அவன் கட்டாயப்படுத்தும்போதுதான், சமூகத்தின் அறிவு வளர்ச்சியின் மீது அவன் வன்முறை செலுத்த ஆரம்பிக்கின்றான். அந்த வன்முறை மாறிவரும் சமூக அமைப்பின் மீதும், அது கடந்து போகத் துடிக்கும் பழமையின் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இது நாள்வரை தன்னை சீர்படுத்திக் கொண்டு சுழல் ஏணியில் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டு இருக்கும் சமூகத்தை மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது. அது போன்ற சமயங்களில் சமூகத்தை பழமையின் புதைகுழியில் தள்ள முற்படும் பிற்போக்குவாத, அராஜக சக்திகளின் ஆதிக்கத்தை முறியடிக்க முற்போக்கு சக்திகளின் இடையீடு தேவைப்படுகின்றது.

varuna yagnaஒரு தனிமனிதன் அறிவியலுக்குப் புறம்பான, நிரூபிக்க வழியற்ற பிற்போக்குத்தனத்தை சமூகத்தின் மீது திணிப்பதே அயோக்கியத்தனம் என்கின்றபோது, மக்களை நல்வழிப்படுத்தி அவர்களின் சிந்தனையை அறிவியல் ரீதியில் வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, தன் சொந்த மக்கள் மீது ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையைத் திணிப்பது கேடு கெட்ட செயலாகும். அரசை வழிநடத்துபவர்கள் எல்லா மக்களுக்குமானவர்களாய் தன்னை வைத்துக் கொள்வது மிக முக்கியமானது. அப்படி இல்லாமல் தான் சார்ந்த மத நம்பிக்கையை அரசின் நம்பிக்கையாக வெளிப்படுத்துவது என்பது அப்படி வெளிப்படுத்தும் சக்திகள், திட்டமிட்டே மற்ற மதத்தைச் சார்ந்த மக்களின் நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துகின்றார்கள் என்பதைத் தாண்டி, நாட்டில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி மக்களின் கவனத்தைத் திசை திருப்பி அவர்களை முட்டாள்களாக்க முயற்சிக்கின்றார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடைந்தெடுத்த பிற்போக்குவாத பார்ப்பன அடிவருடி அரசு அதைத்தான் தற்போது செய்து கொண்டு இருக்கின்றது. தமிழகம் முழுக்க தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது. அதைத் தீர்த்து வைப்பதற்கு இந்த அரசிடம் எந்த உருப்படியான திட்டமிடலும் இல்லை. மக்கள் குடத்துடன் சாலையில் அமர்ந்து தர்ணா செய்வது அன்றாட செய்தியாகி உள்ளது. ஒரளவுக்கு பொருளாதாரத்தில் வலிமையாக உள்ளவர்கள் பணம் கொடுத்து தங்களின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும்போது, சாமானிய உழைக்கும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் குடிப்பதற்கும், குண்டி கழுவதற்கும் தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றார்கள். தேர்தலின் போது ஓட்டு கேட்டு சென்ற பல இடங்களில் இந்த அமைச்சர்களையும், எம்பி, எம்எல்ஏக்களையும் மக்கள் முற்றுகையிட்டதே பெரும்பாலும் குடிநீர் பிரச்சினைக்காகத்தான். ஆனால் மக்கள் எக்கேடு கெட்டு நாசமாய்ப் போனால் நமக்கென்ன, கொள்ளையடித்த பணத்தையும், அதைக் காப்பாற்ற ஆட்சியையும் தக்க வைத்துக் கொண்டால் போதும் என்ற முடிவோடு இந்த அரசு இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

அதனால்தான் இந்த 'அறிவாளிகளால்' ஆளப்படும் அரசு மழை பெய்ய அனைத்துக் கோயில்களிலும் யாகம் நடத்த இந்து அற‌நிலைத் துறையின் மூலம் உத்திரவிட்டுள்ளது. இதுகுறித்து இந்து அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர், செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "வரும் 2019-2020 ஆம் ஆண்டு விகாரி வருடத்தில் நல்ல பருவமழை பெய்து நாடு செழிக்க இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கிய கோயில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளை தத்தம் பிரிவில் உள்ள கோயில்களில், அந்தந்த கோயில்களின் பழக்கவழக்கத்திற்கு உட்பட்டு நடத்திட அனைத்து செயல் அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பர்ஜன்ய சாந்தி வருண ஜெபம், வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல், நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல், ஓதுவார்களைக் கொண்டு சுந்தர மூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமுறை ஓதுதல், திருஞான சம்பந்தர் இயற்றிய 12 ஆம் திருமுறையில் தேவார மழை பதிகத்தை கேரா குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல்.

நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு செய்தல். சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாரா பாத்திர நீர் விட்டு செய்தல், சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல், மகா விஷ்ணுவுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல், மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல், மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தல், நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருப்புன்கூர் சிவன் கோயிலில் உள்ள மகா நந்திக்கு மகாபிஷேகம் செய்தல், வருண சூக்த வேதமந்திர பாராயணம் செய்தல், வருண காயத்ரி மந்திரம் பாராயணம் செய்தல்.

மேற்கண்டவாறு அந்தந்த கோயில்களின் பழக்கவழக்கத்திற்கு உட்பட்டு சிறப்பாக நடத்திட, இந்த நிகழ்வு தொடர்பான கற்றறிந்தவர்களைத் தேர்வு செய்து மழை வேண்டி யாகம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோயில் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், தங்கள் மண்டலத்தில் எந்தெந்த கோயில்களில் எந்த தேதியில் மழை வேண்டி யாகம் செய்யப்பட உள்ளது என்பதற்கான விவரத்தை பட்டியலிட்டு தொகுத்து உடன் மே 2 ஆம் தேதிக்குள் அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் தெரிவிக்கவும், அவ்வாறு யாகம் நடத்தப்பட்ட விவரத்தையும் யாகம் முடிந்தவுடன் தனியே தெரிவிக்கவும் அனைத்து மண்டல இணை ஆணையர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது"(நன்றி விடுதலை)

யாகம் செய்தால் மழைவரும் என்பது மனித நாகரிகம் அறிவு வளர்ச்சியில் கீழ்நிலையில் இருந்த காட்டுமிராண்டி கால நம்பிக்கையாகும். அதிமுக கும்பல்களுக்கும், அறிவியலுக்கும் வானத்துக்கும் பூமிக்கும் உள்ள தூரம் என்பது நாம் கடந்த காலங்களில் இருந்து பார்த்து வரும் ஒன்றுதான். ஏ1 குற்றவாளி உயிரோடு இருந்தபோதே கோயில்களில் காவடி தூக்குவது, மண்சோறு தின்பது, அலகு குத்திக் கொள்வது, மீசையை மழித்துக் கொள்வது, மொட்டை அடிப்பது போன்ற எல்லாக் கூத்துக்களும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அதன் வழிவந்த அடிமைகள் இன்னும் ஒருபடி மேலே சென்று சிந்தித்து இருக்கின்றார்கள்.

யாகம் செய்தால் மழைவரும் என்று நம்முடைய கிராமத்தில் படிப்பறிவில்லாத மக்கள் கூட நம்புவது கிடையாது. அவர்களுக்கு மழை என்பது கடவுளால் உண்டாக்கப்படுவது என்ற நம்பிக்கை இருந்தாலும் அதையும் கூட மிக இயல்பாக கொச்சை வழக்கிலேயே புரிந்து வைத்திருக்கின்றார்கள். மழை பற்றிய ஒரு நாட்டுப்புற கதை இப்படி இருக்கின்றது.

“ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி பரமேஸ்வரனும் பார்வதியும் இந்த உலகத்த படச்சாங்க. உலகத்தப் படச்சி உசிரயும் படச்சாங்க. ஒவ்வொரு உயிரும் எங்கெங்க இருக்கணும் எத எத தின்னு உயிரு வாழனுமின்னு எல்லா விவரத்தையும் பிரம்மாவை விட்டுத் தலையில எழுதச் சொன்னாங்க.

edappadi palanisamy on templeஉயிர்கள் எல்லாம் உலகத்துல வந்து ரொம்ப நாள் வரக்கியும் மழ தண்ணியே கிடையாது. அதனால் ஆடு மாடு எல்லாம் புல்லு பூண்ட தின்னு எல்லாத்தயும் அழிச்சிடுச்சி. மிருகங்க ஒன்னோட ஒன்னு சண்ட போட்டு ஒன்ன ஒன்னு திங்க ஆரம்பிச்சது.

தண்ணி இல்லாம உயிரு எல்லாம் அழியறத கண்டோன்ன பரமேஸ்வரனுக்கும் பரமேஸ்வரிக்கும் கவல ஜாஸ்தியா போயிடுச்சு. உடனே பரமேஸ்வரி பரமேஸ்வரனைப் பார்த்து இந்த உலகத்து உயிர்கள் எப்படிக் காப்பாத்தப் போறீங்கன்னு கேட்டா. இத கேட்டோன்னா பரமேஸ்வரன் சிரிச்சாரு. அந்த பல்லு ஒளியிலேந்து மின்னல் உண்டாச்சு. அவருக்கு வாயி பிரிஞ்சிது, உடனே புசல் காத்தும் இடியும் உண்டாச்சு. ஒன்னுக்குப் போனாரு உடனே மழ கொட்ட ஆரம்பிச்சது. பின்னால் எல்லாரும் சந்தோஷமா வாழ ஆரம்பிச்சாங்க (நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்-சாகித்திய அகாதெமி வெளியீடு)

இந்தக் கதையை சொன்னவருக்கு இருக்கும் குறைந்த பட்ச அறிவு கூட இந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் கும்பலுக்கு இல்லை என்பது எவ்வளவு இழிவானது. இப்படிப்பட்ட கடைந்தெடுத்த 'அறிவாளி'கள் நாட்டை ஆட்சி செய்தால் அந்த நாட்டில் இருக்கும் மக்களின் நிலை என்ன ஆவது?. இந்தக் கருமத்தை எல்லாம் பார்த்து வரும் குழந்தை நாளை ஐன்ஸ்டீனாக வருமா? பரதேசியாக வருமா?

நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் நாசம் செய்தது போதாது என்று மக்களின் அறிவு வளர்ச்சியையும் குழி தோண்டிப் புதைக்க இந்த கும்பல் முயன்று கொண்டு இருக்கின்றது. யாகம் செய்தால் மழை வரும் என்பது உண்மையானால் இந்த அரசு எதற்காக இருக்க வேண்டும்? மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் யாகம் செய்தே நிறைவேற்றிக் கொள்வார்களே!. கொஞ்சமாவது மூளையில் பகுத்தறிந்து சிந்திக்கும் ஆற்றல் இருக்கும் யாருமே இது போன்றவர்கள் நாட்டை ஆட்சி செய்வதை விரும்ப மாட்டார்கள்.

நம்முடைய ஆசை எல்லாம் மழை எப்படி வரும் என்பதை இந்த கும்பல் தெரியாமலேயே ஆட்சியை இழந்து போய்விடக்கூடாது என்பதுதான். “மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது”

தயவு செய்து எடப்பாடி பழனிசாமிக்கு பக்கத்தில் யாராவது சிந்திக்கும் திராணியுள்ள நபர்கள் இருந்தால் இதைச் சொல்லி விளங்க வைக்க முயற்சிக்கவும். ஒரு மனிதன் அறிவு வளர்ச்சியின்றி பிறக்கலாம் ஆனால் தன் வாழ்வில் கடைசிவரை அப்படியே இருந்துவிட்டு சாவது எவ்வளவு இழிவானது.

- செ.கார்கி

Pin It