admk mlas

கடந்த ஆண்டு ஆளும் கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், ஆளுநரைச் சந்தித்து, முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அப்படிக் கோரிக்கை வைத்ததே தவறு என்று கூறி, அவர்கள் அனைவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அவர்களுள் ஒருவர் (ஜக்கையன்) வருத்தம் தெரிவித்தவுடன், அவர் புனிதமாகி விட்டார் என்று கூறி, அவர் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.

முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, அரசுக்கு எதிரானது என்று கூறித் தகுதி நீக்கம் செய்த சபாநாயகர், ஆட்சிக்கு எதிராகவே வாக்களித்த

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவர்களில் ஒருவருக்குத் துணை முதல்வர் பதவியும், இன்னொருவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

தப்பிப் பிழைத்த ஜக்கையன் தவிர மற்ற 18 பேரும் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்றம் சென்றனர். விசாரணை முடிந்து, கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

ஏறத்தாழ 5 மாதங்களுக்குப் பிறகு, சில நாள்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘முன்னால் பார்த்தால் செட்டியார் குதிரை, பின்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை’ என்பார்களே, அப்படி ஒரு தீர்ப்பு. இரண்டு நீதிபதிகளும், ஆளுக்கொரு தீர்ப்பு சொல்லியுள்ளனர். சபாநாயகருக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை என்கிறார் ஒரு நீதிபதி. அவருக்கு உள்நோக்கம் இருக்கிறது என்கிறார் இன்னொரு நீதிபதி.

இப்போது மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட உள்ளது. அதன்பிறகு உச்ச நீதிமன்றம் செல்வார்கள். ஆக மொத்தம், வழக்கு இப்போதைக்கு முடியாது. போதுமான ஆதரவு இல்லாதபோதும், எடப்பாடி முதல்வராகத் தொடர்வார். 18 தொகுதிகளுக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள்.

2019 ஜனவரியில் காட்சிகள் சட சடவென மாறும். எடப்பாடி ஆட்சிக்கு ஒரு முடிவு வரும். 2019 ஏப்ரல் மாதம், சட்டமன்றம், நாடாளுமன்றம் இரண்டுக்கும் சேர்த்து ஒன்றாகத் தேர்தல் வரும்.

கதைச் சுருக்கம் இவ்வளவுதான்.

இடையில் பல காட்சிகள் வரும். இப்போது ஒரு நீதிமன்றக் காட்சி வந்து போயிருக்கிறது.

Pin It