அரிஸ்டாட்டில் ஒருமுறை தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து ஒரு இளைஞன் சென்று கொண்டிருந்தான். தன்னை ஒரு இளைஞன் எதற்காகப் பின்தொடர்ந்து வருகின்றான் என்று அவருக்குப் புரியவில்லை. சரி எதற்காக நம்மைப் பின்தொடர்கிறான் என்பதை அவனிடமே கேட்டுவிடுவோம் என்று நின்று, "ஏனப்பா என்னைத் தொடர்ந்து வருகிறாய்?" என்று கேட்டார்.

thiruvalluvarஅந்த இளைஞனோ, "ஐயா உங்களிடம் ஒரு சில கேள்விகள் கேட்க வேண்டும். அதனால்தான் உங்களைப் பின்தொடர்கிறேன்" என்றான்.

அரிஸ்டாட்டில், "சரி நீ கேள்களைக் கேட்கலாம். அதற்கு முன்னால் நான் உன்னை மூன்று கேள்விகள் கேட்பேன். அதற்கு நீ பதிலளிக்க வேண்டும்" என்றார். அதற்கு அந்த இளைஞன் ஒப்புக்கொண்டான்.

அவனைப் பார்த்து, "இப்போது நீ என்னிடம் கேள்வி கேட்கப் போகிறாய் என்றாயே அதனால் உனக்கு ஏதேனும் பயன் இருக்கிறதா?" என்று கேட்டார் அரிஸ்டாட்டில்.

அதற்கு அவ்விளைஞன், "இல்லை" என்றான்.

"சரி உன் கேள்விகளுக்குப் பதில் கூறுகிற எனக்கு இந்தக் கேள்விகளால் பயன் இருக்கிறதா?" என்று அரிஸ்டாட்டில் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

அதற்கும் அவன் ‘இல்லை’ என்று பதில் கூறினான். அவனை அரிஸ்டாட்டில் விட்டுவிடாது, "தம்பி நீயும் நானும் தெருவில் நின்று பேசிக் கொள்வதை மற்றவர்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்களே மற்றவர்கள். அவர்களுக்கு நீ கேட்கும் கேள்விகளால் ஏதேனும் பயன் இருக்கிறதா?" என்று கேட்டார். அந்தக் கேள்விக்கும் அந்த இளைஞன், "இல்லை" என்று பதிலளித்தான்.

அதனைக் கேட்ட அரிஸ்டாட்டில் "இவ்வாறு யாருக்கும் பயன் தராத வினாக்களைக் கேட்டு என் நேரத்தையும் உன் நேரத்தையும் மற்றவர்கள் நேரத்தையும் வீணடிக்காதே. வேறு ஏதாவது பயனுள்ள வேலைகளைச் செய்" என்று கூறிவிட்டுச் சென்றார்.

இதனைப் போன்று பலர் தாங்கள் என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம், ஏன் பேசுகிறோம் என்று தெரிந்து கொள்ளாமலேயே அவர்கள் மனம் போனவாறு பேசிக் கொண்டே இருப்பார்கள். இதனால் அவருக்கோ அவர் சார்ந்த மற்றவர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. எந்தப் பயனும் இல்லை என்றாலும் அவர்கள் எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்களால் பேசாமல் இருக்கவே முடியாது. இவ்வாறு பயனில்லாத பேச்சுக்களைப் பேசுபவர்களை, "வெட்டிப் பேச்சுக்காரர்கள்" என்றும், "வீண் பேச்சுக்காரர்கள்" என்றும் வழக்கத்தில் கூறுவர்.

இத்தகையவர்களை, "திண்ணைப் பேச்சு வீரர்கள்" என்று பட்டுக்கோட்டையார் கூறுகின்றார். வள்ளுவப் பெருந்தகை வீண்பேச்சுப் பேசும் இம்மனிதர்களை மக்களில் பதர் என்று குறிப்பிடுகின்றார்.

நெல்லிலே உள்ளீடு இல்லாததை பதர் என்று மக்கள் குறிப்பிடுவர். இப்பதரால் எவ்விதமான பயனும் இல்லை. அதைப் போன்று தேவையில்லாத பேச்சுக்களைப் பேசி வீணாகக் காலங்கழிப்பவர்கள் மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனிதர்கள் இல்லை. அவர்கள் மனிதப் பதர்கள். இக்கருத்தினை,

"பயனில்சொல் பாராட் டுவானை மகன் எனல்
மக்கட் பதடி எனல்"(குறள் எண், 196)

என்று வள்ளுவர் எடுத்தியம்புகின்றார்.

"தமக்கும் பிறருக்கும் அறம்பொருள் இன்பம் ஆகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை"(பரிமேலழகர் உரை, ப., 79) என்று பயனில சொல்லாமை என்பதற்கு பரிமேலழகர் உரை வகுக்கின்றார். மேலும் மேற்குறித்த குறட்பாவிற்கு, "பயன் இல்லாத சொற்களைப் பலகாலும் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க. மக்களுள் பதர் என்று சொல்லுக. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின் ‘மக்கள் பதடி’ என்றார்" (பரிமேலழகர் உரை, பக்., 80-81) என்று உரை வரைகின்றார்.

அறிவாகிய உள்ளீடு இருந்தால் ஒருவன் எந்தக் காலத்திலும் பயன்தராத சொற்களைப் பேசமாட்டான். அறிவில்லாதவன் எதையாவது கூறிக்கொண்டே இருப்பான். அவன் பேசுவதற்கும் நடைமுறைக்கும் எவ்வகையிலும் ஒவ்வாது. உள்ளீடு இல்லாத பதர் எவ்வாறு நெல்லைவிட்டு விலகி குப்பையில் கிடக்கின்றதோ அதைப்போன்று வெட்டிப் பேச்சுப் பேசுபவர்கள் எப்போதும் மக்களால் தனித்துவிடப்பட்டு அவர்கள் விலகியே இருப்பார்கள். அவர்கள் மக்களிடையே வாழ்ந்தாலும் மக்கள் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதி அவரோடு கலந்து பழகமாட்டார்கள்.

இத்தகைய மனிதர்களைப் பட்டுக்கோட்டையார்,

"திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி"

என்று திண்ணைப் பேச்சு வீரர் என்று குறிப்பிடுகின்றார். திண்ணைப் பேச்சு வீரர்களாகிய மக்களில் பதர் போன்ற மனிதர்களை விலக்கி சமுதாயத்திற்கு ஆக்கம் தரும் வகையில் வாழ்வோம். அப்போதுதான் மனிதம் வாழும். மனிதர்களும் வாழ்வார்கள்.

(தொடரும்.)

- முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத் தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்.), புதுக்கோட்டை.

Pin It