ஒழுக்கத்தை உயிரெனக் கருதி வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒழுக்கம் தவறி அவர்கள் வாழ மாட்டார்கள். அவ்வாறு வாழ்ந்தால் அது அவருக்குப் பெரும் பழியை ஏற்படுத்தும், அவமானம் வரும். மானம் இழந்து அவர் வாழ மாட்டார். உயிரை விட்டுவிடுவார். "பழியெனின் உலகுடன் பெறினும் வேண்டாத" தன்மானம் மிக்கவர்களாக நமது முன்னோர்கள் வாழ்ந்தனர்.

thiruvalluvarஆனால் அவர்களின் வழிவந்த நமது நிலைமை இன்று தலைகீழாக உள்ளது. ஒழுக்கமின்மையே ஒழுக்கமாகக் கொண்டு நமது வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளோம். இதனை ஊடகங்களும் முன்னெடுத்துச் சென்று தவறான வழிகாட்டுகின்றன. கிராமப் புறங்களில் இருவருக்கிடையே சண்டை சச்சரவு ஏற்பட்டால், "ஒனக்கு மானம், வெக்கம், சூடு, சொரணை ஏதாவது இருக்கா? மானங்கெட்டவனுக்கு எதுக்குடா வேட்டி?" என்று இழிவாகப் பேசி ஒழுக்கம் கெட்டவரை அல்லது நேர்மை தவறி நடப்பவரைக் கேட்பர்.

அவ்வாறு ஒருவரை மற்றொருவர் கேட்டுவிட்டாலே அவர் மானம் பறி போய்விட்டதெனக் கருதி இறந்துவிடுவார். தன்னிடம் உள்ளது தன்மானம். பிறரிடம் இருந்து வருவது அவமானம். சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் விசாரணை செய்யாமலேயே கோவலன் கள்வன் எனக் குற்றம்சாட்டி அவனைக் கொன்று விடுகிறான்.

கோவலன் கொலையுண்டு இறந்த பின்னர் அவனது மனைவி கண்ணகி பாண்டிய மன்னனிடம் வந்து தன் கணவன் கள்வன் அல்லன் என்று தன்னுடைய சிலம்பைக் காட்டி வாதிடுகிறாள். மன்னன் கேட்கிறான். சிலம்பைக் கண்ணகி உடைத்து மன்னன் நீதி தவறி விட்டதைச் சுட்டிக் காட்டுகிறாள். மன்னன் அதனைப் பார்த்து, நடுநடுங்கி, "என்னுடைய குலம் என்னால் கெட்டது. யானோ அரசன்! யானே கள்வன்! கெடுக என் ஆயுள்" என்று கூறி உயிர் விடுகின்றான். தான் தவறிழைத்து விட்டதை உணர்ந்து தன்னால் பாண்டியர்களின் குலப்பெருமைக்குப் பங்கம் வந்து விட்டது என்பதை அறிந்தவுடன் உயிர்விட்டானே பாண்டிய மன்னன் அவனால் பாண்டியர்களின் குலப்பெருமை நிமிர்ந்தது.

இன்று, தான் தவறு செய்தாலும் அதனைத் தவறே இல்லையென்று வாதிடுகின்றவர்கள்தான் அதிகம். நீதிமன்றம் குற்றவாளி எனச் சுட்டிக் கூறினாலும் அதனை ஏற்காது தான் தவறிழைக்கவில்லை என்று வாதிடுவோர் அதிகம்பேர் இருக்கின்றனர். தவறினை ஏற்றுக் கொள்ளுகின்ற மனப்பக்குவம் இன்று யாரிடமும் இல்லாமல் போனது.

குற்றமிழைத்தவர்கள் இன்று தலைநிமிர்ந்து வெளியில் திரிகின்றார்கள். குற்றம் செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வே அவர்களிடம் சிறிதும் இல்லை. தாங்கள் குற்றம் செய்ததை ஏதோ பெரிய சாதனை செய்ததைப் போன்று நினைத்துக் கொண்டு ஊர்களுக்குள் அவர்கள் வலம் வருகின்றனர். இத்தகையவர்கள் இன்றுதான் உள்ளனர் என்று நாம் நினைக்கலாம்.

அது தவறு. அன்றும் இருந்தார்கள். அதனாலேயே வள்ளுவர் இத்தகையவர்களை தனது குறட்பாவில் அடையாளம் காட்டுகின்றார். இத்தகைய ஒழுக்கக் கேடர்களை வள்ளுவர் தலையிலிருந்து உதிர்ந்து போன மயிர் போன்ற மனிதர்கள் என்று குறிப்பிடுகின்றார். என்னது வள்ளுவரே மனிதர்களைப் பார்த்து மயிர் போன்றவர்கள் என்று கூறியுள்ளாரா என்று நாம் வியக்கலாம். வள்ளுவர்தான் கடுமையான கோபத்துடன்,

"தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்த கடை" (கு.எண்.,964)

என்று கூறுகின்றார். தலையில் மயிர் இருக்கும்போது அதனைப் பேணிப் பாதுகாத்து அழகுற வைத்துக் கொள்வர். அத்தலைமயிரே தலையிலிருந்து உதிர்ந்த பின்னர் அதனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். "ஐயோ இத்தனை நாள் என் தலையில் இருந்து எனக்கு அழகு தந்தாயே! இப்போது கீழே உதிர்ந்து விழுந்துவிட்டாயே!" என்று யாரும் புலம்புவதில்லை. அவர்கள் உதிர்ந்த மயிருக்காக எள்ளளவு கூட வருந்த மாட்டார்கள்.

"குடிப்பிறந்த மாந்தர் தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்றும் தாழ்ந்த வழி தலையை விட்டு அதனின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர். அந்நிலையை விடாது நின்றவழி பேணப்படுதலும், விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்" என்று (பரிமேலழகர் உரை, ப., 383) பரிமேலழகர் இக்குறட்பாவிற்கு உரைவகுத்துள்ளார்.

மக்கள் தங்களின் உயர்வுக்குரிய ஒழுக்க நிலையிலிருந்து தாழ்கின்றபோது தலையிலிருந்து கீழே விழுகின்ற மயிரினைப் போன்று கருதப்படுவர். ஆதாவது மானத்தை இழந்து வாழ்வதைவிட வாழாமல் இருப்பதே சிறந்தது ஆகும். ஒழுக்கத்தோடு பிறர் போற்ற வாழ்வது மானத்தோடு வாழ்வதாகும். அது உயர்ந்த நிலை. அந்நிலையிலிருந்து தாழாமல் மனிதன் வாழ்தல் வேண்டும். அவ்வாறு வாழ்கின்ற வாழ்க்கைதான் உண்மையான உயர்ந்த வாழ்க்கையாகும்.

ஆனால் மானம் போனாலும் பரவாயில்லை. எனக்குப் பணம், பட்டம், பதவி, பொருள் ஆகியவை கிடைத்தால் போதும் என்று எண்ணுகின்ற மனநிலையை உடைய மாந்தர்கள் பெருகிவிட்டார்கள். அவர்களைப் பார்த்தே வள்ளுவர் மயிர் மனிதர்கள் என்று குறிப்பிடுகின்றார். முடி, கூந்தல் என்று மயிருக்கு வேறு பெயர்கள் இருந்தாலும் மயிர் என்பது இழிவான பொருளைத் தருவதாக மக்கள் இன்றும் கருதுகின்றனர். இதைத்தான்,

"மானம் இழந்து வாழாமை முன்னினிது" என்று இனியவை நாற்பது குறிப்பிடுகின்றது.

ஒழுக்கத்தோடும், நேர்மையோடும் நீதி தவறாமல் வாழுகின்ற வாழ்க்கையே மானத்தோடு வாழும் வாழ்க்கையாகும். அவ்வாறு வாழ்பவர்களே நல்ல மனிதர்கள் என்று அனைவராலும் போற்றப்படுவர்கள். அவ்வாறு வாழாது இழிந்த நடத்தை உடையவராய், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு வாழும் பிறழ் நடத்தை உடையவர்களாகிய மானமிழந்த மனிதர்கள் மயிர் போன்ற மனிதர்களாவர். இத்தகைய மனிதர்களையே வள்ளுவப் பேராசான் இக்குறட்பா வழி நமக்குக் காட்டுகின்றார். வள்ளுவர் காட்டும் மனிதர்களை ஒதுக்கி மானமிக்க ஒழுக்கம் நிலையில் உயர்ந்த மனிதர்களுடன் நாம் இணைந்து வாழ்வோம். வாழ்வில் உயர்வோம்.

(தொடரும்)

- முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்.), புதுக்கோட்டை

Pin It