சுந்தரராமசாமி பிறக்கவுமில்லை
இறக்கவுமில்லை
இடைப்பட்ட காலத்தில்
பூமிக்கு வந்துபோயிருந்தார்.
வந்துபோன காலத்தில்
மசால்தோசை சாப்பிட்டார்
இலக்கியவாதிகளுடன்
கொஞ்சமாய்ச் சரக்கடித்தார்.
பிதாமகன் போஸ்டரை வெறித்துப் பார்த்தார்,
(ஷகீலா போஸ்டரை
வெறித்தது குறித்த குறிப்புகள் கிடைக்கவில்லை.)
பிறகு பழைய பருப்புசாம்பார் சாப்பிட்டு
திசையதிர குசுவிட்டார்.
தமிழ்நாட்டிற்கு
இரண்டு இலக்கியப் பத்திரிகைகள் கிடைத்தன.

- சில்வியாகுண்டலகேசி ( இருளின் நிறம் வெண்மை தொகுப்பிலிருந்து...)

ஒரேநேரத்தில் காலச்சுவடையும் உயிர்மையையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உயிர்மையில் வெளியான நகுலன் குறித்த அஞ்சலிக் கட்டுரைகள் நெகிழ வைத்தன. குறிப்பாக சாருநிவேதிதாவின் கட்டுரை. ஒருவேளை 'என் முதல் சந்திப்பில் நகுலன் என்னைப் பார்த்து கேட்ட கேள்வி 'நீங்கள் பார்ப்பானா' என்பது. நான் இல்லை என்றதும் அவர் முகத்தில் ஏன் அப்படி ஒரு திருப்தி என்று தெரியவில்லை' என்றும் 'தன் பேச்சினிடையே அவ்வப்போது சுந்தர ராமசாமியைத் திட்டிக் கொண்டிருந்தார்' என்றும் சாரு எழுதியதும் எனக்குப் பிடித்துப் போனதற்கான காரணங்களாக இருக்கலாம். ஆனால் சாருவின் மீது எவ்வளவு விமர்சனங்கள் இருந்தபோதும் சாருவின் நடையிலுள்ள சுவாரஸ்யம் மறுக்க முடியாதது.

அதே நேரத்தில் காலச்சுவடில் சுந்தர ராமசாமியைப் பற்றிய ஸ்டீவர்ட் சதீஷ் என்பவரின் கட்டுரையையும் படித்துத் தொலைக்க நேர்ந்தது. சு.ரா இறந்து ஓராண்டு ஆகிறது. திவசம் கொடுக்கப் போகும் நேரத்திலும் அவரின் ஆவி தமிழ் இலக்கிய உலகைச் சுற்றிச் சுற்றி வருகிறது.

சு.ரா இறந்தவுடன் தமிழ் எழுத்தாளர்கள் செய்த அட்டகாசம் சொல்லி மாளாது. அவர் புத்தகத்தை முகர்ந்து பார்ப்பார், எல்.எல்.பி மைதானத்தில் வாக்கிங் போவார் என்றெல்லாம் வரலாற்றுத் தகவல்களை அள்ளித் தெளித்தனர். அதில் உச்சபட்சம் ஜெயமோகன் ஆற்றிய இலக்கியச்சேவை.

பத்திரிகையுலகில் ஒரு வதந்தி உன்டு. ஒரு பார்ப்பனப் பத்திரிகை கலைஞர் கருணாநிதி குறித்த வாழ்க்கைக் குறிப்புகளைத் தயார் செய்து வைத்திருக்கிறது, கலைஞர் சாக வேண்டியதுதான் தாமதம், தேதியைப் போட்டு பத்திரிகையை வெளியிட்டுவிடும். அப்புறம் என்ன? கலைஞரின் மரணச் செய்தியை முதலில் வெளியிட்டது அந்தப் பத்திரிகைதான்.

அதேபோல சு.ரா இறுதிச் சடங்கு முடிந்து ஒரு வாரத்திலேயே ஜெயமோகனின் சு.ரா குறித்த புத்தகம் வெளியாகிவிட்டது. சு.ரா குறித்த சூடான செய்திகளைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு முதலில் தந்தவர் ஜெயமோகன் தான் என்ற பெருமை உண்டு.

இந்த புனிதவட்ட வரிசையில் தினத்தந்தி ஆதித்தனார் நினைவு பரிசுப் போட்டி நடத்துவதைப்போல காலச்சுவடு சு.ரா நினைவு பரிசுப்போட்டி நடத்துகிறது. ஏற்கனவே பாரதி 175, புதுமைப்பித்தன் 100, சு.ரா 75 என்று பீடத்தின் வரிசைகளில் சொருகியாயிற்று. அடுத்து என்ன?

மெரினாவில் சு.ரா சிலை வைக்கவேண்டியது, சு.ராவிற்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டியது, அப்புறம் காலச்சுவடு ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின் போதும் ஒரு கூத்து நடத்தும். தினம் ஒரு எழுத்தாளர் காலச்சுவடு ஸ்டாலில் நின்று வாசகர்களுக்குப் புத்தகங்களில் கையெழுத்து போட்டுத் தருவார். அதேபோல எழுத்தாளர்களுக்கென்று ஓட்டப் பந்தயம், மாறுவேடப்போட்டி, காஞ்சி ஜெயேந்திரன் தலைமையில் ஈட்டிங் ரேஸ் ஆகியவை நடத்தும் எண்ணமும் இருப்பதாகத் தெரிகிறது. இனிமேல் ஆட்டோகிராப்பிற்குப் பதிலாக வரும் வாசகர்களுக்கு சுந்தரராமசாமியின் பெயரைக் கையில் பச்சை குத்தலாம். சரி ஹியூபர்ட் சதீஷின் கட்டுரைக்கு வருவோம்.

"கடவுள் இல்லாதவர்களுக்குப் பெரும் எழுத்தாளர்களே புனிதர்கள்" என்னும் சற்றும் சுயமரியாதையற்ற கேவலமான மேற்கோளோடு தொடங்கும் கட்டுரை,

'எஸ்.எல்.பி. பள்ளிக்கூடத்திற்கு வாக்கிங் போனோம். ஒருமுறை சிறிது தூரம் நடந்துவிட்டு அங்கு கட்டடப் பணிக்கெனப் போடப்பட்டிருந்த ஆற்றுமணலில் வந்து உட்கார்ந்து கொண்டோம். பேசும்போது மணலைக் கைகளால் மெதுவாகத் தடவிச் சமன்செய்து உங்கள் கைகளைப் பதித்தீர்கள். அதை நான் மிகவும் ரசித்துக் கொண்டே இருந்தேன். இவ்வாறு பல நேரங்களில் உங்கள் உடல் மொழியை, கண்களில் தென்படும் கருணையை, கண்களிலும் உதட்டிலும் தோன்றும் குறும்போடு கூடிய புன்னகையை மிகுதியாக ரசித்திருக்கிறேன். உங்கள் அனைத்துப் படைப்புகளையும்விட உங்கள் ஆளுமையே என்னை மிகவும் கவர்கிறது' என நீள்கிறது.

மைதானத்தில் மணலைப் பரப்பி உட்கார வேண்டும் என்பதை உலகத்தில் முதன்முதலில் கண்டுபிடித்தவர் சுந்தர ராமசாமி என்பதை அறியும்போது புல்லரிக்காமல் இருக்க முடியவில்லை.

"1999 ஆம் வருடம் நீங்கள் அமெரிக்கா சென்றபோது 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழைப் பார்க்க வேண்டும் என விரும்பினேன். உலகின் தலை சிறந்த நாளிதழ்களில் ஒன்றாகக் கருதப்படும் அதன் வடிவமைப்பு, உள்ளடக்கம் போன்றவற்றைக் கண்டறிய விரும்பினேன். எனவே, ஒரு நாளிதழ் வாங்கி வர முடியுமா எனத் தொலைபேசியில் கேட்டேன். நம் ஊர் 'எக்ஸ்பிரஸ்', 'இந்து' நாளிதழ்கள் போல் 24 முதல் 30 பக்கங்கள் இருக்கலாம், இல்லை குறைவாகவும் இருக்கலாம் என எண்ணியிருந்தேன்.

நீங்கள் வாங்கி வந்த பிறகுதான் அதன் எடை கிட்டத்தட்ட அரை கிலோ என்று தெரிந்தது. சில வருடங்கள் சென்ற பின்னர் நீங்கள் வாங்கிவந்த நாளிதழ் பற்றி நான் குறிப்பிட்டபோது, தைலாவின் கணவர் ராம், எடை அதிகமாக இருப்பதால் இதில் உள்ள சில முக்கியமான பக்கங்களை மட்டும் எடுத்துச் சென்றால் போதும் என்று கூறியதாகவும் ஆனால் நீங்கள் அதை முழுமையாகக் கொண்டு வருவதற்கு விரும்பியதாகவும் சொன்னீர்கள். இவ்வாறு நீங்கள் பலருக்குச் செய்த பல செயல்கள் மென்மலர்கள்போல் மணம் வீசுகின்றன"

என்ன கொடுமை சதீஷ் இது? அமெரிக்காவிலிருந்து அரைகிலோ நியூஸ்பேப்பர் கொண்டு வருவது பெரும் மனிதாபமான சேவையா? அதுவும் சு.ரா என்ன பரதனைப்போல தலையிலேயே சுமந்து கொண்டு அமெரிக்காவிலிருந்து நடந்தா வந்தார்? இன்னும் கூத்து முடியவில்லை.

'தமிழ் இனி 2000' மாநாட்டில் மறக்க முடியாத இன்னொரு இனிய அனுபவம் நிகழ்ந்தது. எனக்கும் நண்பர் நந்தனுக்கும் எழுத்தாளர் வனமாலிகையோடு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பெரும் வசதிகள் இல்லை என்றாலும் அறை நன்றாக இருந்தது. மாநாட்டின் முதல்நாள் அறை ஒதுக்கப்பட்ட சிறிது நேரத்தில் உங்களை வழியில் சந்திக்க நேர்ந்தது. 'அறை சவுகரியமாக இருக்கிறதா?' என மிகுந்த அக்கறையோடு கேட்டீர்கள். 'இல்லாவிட்டால் என் அறையிலே தங்கிக் கொள்ளலாம், இடம் இருக்கிறது' என்றீர்கள். என் உள்ளத்தில் பெரும் உவகை ஏற்பட்டது'

உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் 'நல்லாயிருக்கீங்களா, சாப்பீட்டீங்களா என்றுகேட்டால் அது சாதாரண விருந்தோம்பும் பண்பாகிறது. ஆனால் அதையே எழுத்தாளர்கள் செய்தால் அது மாபெரும் வரலாற்று நிகழ்வாக மாறிவிடுகிறது.

எழுத்தாளன் என்பவன் யார்? பிள்ளை பிடிப்பவர்கள், பிக்பாகெட் அடிப்பவர்கள், பிச்சைக்காரர்கள் - இவர்களைப் போல அவனும் ஒரு சமூகப் பிராணி, அவ்வளவுதான். என்ன, அவர்கள் எல்லாம் விதவிதமாய்ப் போட்டோ எடுத்துக் கண்காட்சி நடத்துவதில்லை, புத்தகத்தின் பின்னட்டையிலோ, தன் கட்டுரையின் வலது (அ) இடது மூலையிலேயோ போட்டுகொள்வதில்லை. ஆனால் எழுத்தாளர்கள் போட்டுக் கொள்கிறார்கள்.

பிக்பாக்கெட் அடிக்கும் நண்பனின் வாழ்க்கையிலாவது ரிஸ்க் இருக்கும். ஆனால் எழுத்தாளனுக்கு ஒரு ரிஸ்க்கும் கிடையாது. ஒருவேளை அவன் எழுத்தாளனாக இருப்பது சமூகத்திற்கு வேண்டுமானால் ரிஸ்க்காக இருக்கலாம்.

நீங்கள் இலக்கியவாதியான இரண்டு வருடத்தில் போலீஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், ஜவுளிக்கடை அதிபர்கள், ஸ்வீட் ஸ்டால் நடத்துபவர்கள் என்று பலரின் அறிமுகம் கிடைத்துவிடும். மேலும் பெரும்பாலான எழுத்தாளர்கள் வேலைக்குப் போவது கிடையாது அல்லது விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு 'இலக்கிய மற்றும் அறிவுத் தேடல்'களில் ஈடுபட்டு விடுவார்கள்.

அப்புறம் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்? இருக்கவே இருகிறார்கள், வேலைக்குப் போகும் அப்பாவி மனைவிகள், சொத்து சேர்த்து வைத்துள்ள (அ) பென்ஷன் வாங்கும் அப்பா அம்மாக்கள், இளிச்சவாய் நண்பர்கள், ஏமாந்த சோணகிரி வாசகர்கள். (இதில் பெண் எழுத்தாளர்கள்தான் பாவம். வேலைக்கும் சென்றுவிட்டு வீட்டுகாரருக்கு வத்தக்குழம்பு சமைத்து வைத்துவிட்டு அப்புறம் இலக்கியமும் 'சமைக்க வேண்டும்'. போதாதற்கு சில முட்டாள் ஆண் எழுத்தாளர்களின் விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வேண்டும்)

ஆண் எழுத்தாளர்கள் பெரும்புள்ளிகளின் சினேகிதத்தோடு ஸ்டார் ஓட்டல்களில் குடித்துவிட்டு பார்க் ஓட்டலில் பகார்டி ரம்மின் விலை, லீ மெரிடியனில் தகீலாவின் சுவை என்று படிக்கும் வாசகர்களை எச்சில் ஒழுக ஏங்க வைப்பார்கள். ஆனால் தனியாகக் குடிக்கப் போகலாம் என்று கூப்பிட்டுப் பாருங்கள், ஓல்டுமாங்கிற்கு 50 ரூபாய் குறைகிறது என்பார்கள். (ஓல்ட்மாங்கின் விலை 54). இத்தகைய எழுத்தாளர்கள்தான் சமூகத்தில் விசித்திரமான பிராணிகளாய் உலா வருகிறார்கள். அவ்வப்போது இவர்கள் சமூகம் தங்களை அங்கீகரிக்கவில்லை என்றும் கேரளாவில் எழுத்தாளர்களுக்கு மரியாதை அதிகமென்றும் புலம்பவும் தவறுவதில்லை.

நகுலனின் அஞ்சலிக் கட்டுரையில் யுவன் சந்திரசேகர் எழுதுகிறார், 'நான் நேரில் சந்திக்கப் பயந்த இரண்டு ஆளுமைகள் நகுலனும் பிரேமிளும்' என்று. மற்ற இலக்கிய ஆளுமைகளை எல்லாம் ஒரு சுற்று சந்தித்து விட்டார் போலும்.

எழுத்தாளன் எழுதுகிறான். எழுத்தை வாசகன் படிக்கிறான். இதைமீறி எழுத்தாளனை நேரில் சந்திக்க வேண்டிய அவசியமென்ன வந்தது? உதாரணமாக சென்னை தம்புசெட்டித் தெருவில் ஒரு எழுத்தாளர் வசிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு தம்புசெட்டியில் ஏதேனும் வேலை இருந்தால் அப்படியே எழுத்தாளரைப் பார்ப்பதிலே தவறொன்றுமில்லை. ஆனால் டவுன்பஸ் பிடித்து தம்புசெட்டி தெரு போய் எழுத்தாளனைப் பார்க்க வேண்டிய அவசியமென்ன? அவரென்ன மிருகக்காட்சி சாலையிலா வசிக்கிறார்? இந்த மனோநிலைக்கும் 'இளைய தளபதி' விஜய்யைப் பார்க்க ஊரைவிட்டு ஓடிவரும் பத்தாம் வகுப்பு மாணவிகளின் மனோநிலைக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?.

வாழ்வில் அன்றாடம் நிகழும் சாதாரண நிகழ்வுகளையும் பக்திப் பரவசத்தோடு விவரித்துக் கட்டுரைகள் எழுதுவதும் அதை எழுத்தாளர்கள் அனுமதிப்பது மட்டுமில்லாது ஊக்கப்படுத்தி வளர்ப்பதும் எங்குக் கொண்டுபோய் விடும்? இதற்குத்தான் நீங்கள் இவ்வளவு தடிமனான புத்தகங்களை வாசித்தீர்களா?

சு.ரா 'ஒரு இலை உதிர்வதை போலத்தான் தனது மரணமும்' என்றார். ஆனால் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. இலை உதிர்ந்து ஓராண்டாகியும் ஏகப்பட்ட சருகுகள் குப்பைகளாய்க் குவிந்து சூழலை நாறடிக்கின்றன. 

-
சுகுணா திவாகர்

Pin It