கடந்த நூறு ஆண்டுகளில் இந்த வருடம் மழைப்பொழிவு அதிகம். தமிழகமெங்கும் வெள்ளப் பெருக்கு. குளங்கள், ஏரிகள் நிரம்பி உடைப்புகள் ஏற்பட்டன. நதிகளின் நாக்குகள் கட்டிடங்களையும், பாலங்களையும் ருசிபார்த்தன. தார்ச்சாலைகளை பாயை சுருட்டியது போல் சுருட்டிச் சென்றது. சில இடங்களில் மனிதர்களையும் விட்டு வைக்கவில்லை. அயராது பெய்த மழைப்பொழிவையும் பொருட்படுத்தாமல் தமிழகமெங்கும் கிளைத்து ஓடும் இலக்கிய நதிகள் சுந்தர ராமசாமியை நோக்கி ஓடின.
நம் யுகத்தில் இருந்து விடைபெற்றுச் சென்ற சுந்தர ராமசாமி என்னும் படைப்பாளியை இந்த யுகத்தின் குறியீடாக மாற்றும் அரசியல், பத்திரிக்கைகளின் பக்கங்களில் நிரம்பின. நமது எழுத்தாளர்களின் பேனா முனையில் இருந்து கிளம்பிய நினைவுப் பொறிகள் வானில் வர்ண வேடிக்கைகளாய் சிதறி மறைந்தன. ஒரே சமயத்தில் நமது எழுத்தாளர்களின் சிந்தனையில் இருந்து பெருகிய நதி தமிழகத்தை மூழ்கடித்தது. 30 ஆண்டுகளாக தீவிரமான வாசிப்பு தளத்தில் இயங்கிவரும் எனக்கு இன்று இங்கே நடப்பவைகள் யாவும் திகைப்பை ஏற்படுத்தின. சுந்தர ராமசாமி என்பவர் யார்? தமிழ் நாட்டுக்கும், தமிழனுக்கும் அவர் என்னவாக இருந்தார்? என்ற கேள்வி இந்த புகைமூட்டத்திற்குள் திரும்ப திரும்ப என்னுள் சுடர்ந்து கொண்டிருந்தது. எனது நெருங்கிய இலக்கிய நண்பர்களுடன் இது குறித்த கேள்விகளை எழுப்பினேன். நீங்கள் நினைப்பதை கட்டுரையாக எழுதுங்கள் என்று ஒரு இலக்கிய நண்பர் சொன்னார். சலிப்பாய் இருப்பதாக அவருக்கு பதிலுரைத்தேன்.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக சுந்தர ராமசாமி பற்றிய கட்டுரைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இரங்கல் கூட்டங்களும் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. இன்னும் வெளிவராத கட்டுரைகள் தாள்களிலும், கணினி இயந்திரங்களிலும், நினைவு செதில்களிலும் தேங்கி கிடக்கின்றன. இதில் நானும் ஒரு கட்டுரை எழுதுவதா என்று யோசித்தேன்.
சுந்தர ராமசாமி ஒரு புரட்சியாளரோ அல்லது ஒரு தத்துவவாதியோ அல்ல. அவர் ஒரு தமிழ் படைப்பாளி. அவர் தமிழுக்கு சிறந்த படைப்புகளையும் தந்திருக்கிறார். இந்த கருத்தாக்கத்திற்கு மேலும் அவரை மிகையாக இந்த யுகத்தின் பிரதிநிதியாக காட்ட முயற்சிக்கும் அரசியல் வினோதமாக இருக்கின்றது.
1984-ல் நான் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஜே.ஜே. சில குறிப்புகள் வாசிக்க நேர்ந்தது. எனது முதல் வாசிப்பை இரண்டு மணி நேரத்தில் முடித்தேன். அந்த காலகட்டத்தில் மாணவர்கள், இலக்கியவாதிகள் மத்தியில் இடதுசாரி சிந்தனைகளை ஒட்டியே பெரும் விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன. எஸ்.வி. ராஜதுரை, அ. மார்க்ஸ், கோ. கேசவன் போன்றவர்கள் இவ்விவாதங்களுக்கும், உரையாடல்களுக்கும் மையப்புள்ளியாக இருந்தனர். அப்பொழுது கிரியா பதிப்பகத்தில் இருந்து நல்ல புத்தகங்கள் வெளிவந்துகொண்டிருந்தன. புத்திஜீவி இளைஞர்களிடம் ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றிய விழிப்புணர்வு இருந்தது. அவர் உளவியலை தத்துவமாக வைத்த தர்க்கத்தின் அடிப்படையில் உரையாடல்களையும் நடத்திக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட சில நண்பர்களிடம் ஜே.ஜே யின் சில குறிப்புகளை கொண்டு போய் சேர்த்தேன். ஜே.ஜே. சில குறிப்புகள் மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட்டு எங்களின் உரையாடல்களின் வழியே அதிர்ந்து கொண்டு இருந்தது.
ரமேஷ் என்று ஒரு நண்பர். இப்பொழுது சட்டம் பயின்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கின்றார். ரமேஷ் ஜே.ஜே.யின் தீவிர விசிறி. ஜே.ஜே. எழுதிய (!) கொந்தளிப்பின் தத்துவம் என்ற நூலை வாங்குவதற்காக மதுரை நகரமெங்கும் அலைந்து புத்தகம் கிடைக்காமல் இறுதியில் என்னிடத்தில் வந்து புத்தகம் எங்கு கிடைக்கும் என்று வினவினார். அன்றைய இளைஞர்களை இந்த அளவிற்கு சுந்தர ராமசாமி ஆளுமை செய்தார்.
பின்னர் நான் புளியமரத்தின் கதையை தேடிப் படித்தேன். பசுவைய்யாவின் நடுநிசி நாய்கள் கவிதை தொகுப்பு பெரிய அதிர்வை ஏற்படுத்தவில்லை. அதே சமயத்தில் நான் வாசிக்க நேர்ந்த மனுஷ்ய புத்திரன் கவிதைகள் மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தின.
ஜே.ஜே.சில குறிப்புகள் எழுதிய பின்பும் சுந்தர ராமசாமி தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழக இலக்கிய தளத்தில் இயங்கி வந்திருக்கின்றார். நன்கு வளர்ந்து அடி பெருத்து இருக்கும் மரத்தில் சில சமயம் நரை ஏற்பட்டுவிடும். அது போலவே சுந்தர ராமசாமியின் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் நாவலும் ஆகிவிட்டது. இந்த நாவல் வந்த தருணத்தில் காலச்சுவடின் மூலம் நிறுவனமயமாகிவிட்ட சுந்தர ராமசாமிக்கு பல இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டும் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இரண்டாம் முறையாக காலச்சுவடு ஆரம்பித்து வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இன்றைக்கு பிரபலமாக விளங்கக்கூடிய பல எழுத்தாளர்களை காலச்சுவடு இனம் காட்டியது. மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் அங்கே கடுமையாக உழைத்தார்கள். எந்த விதமான பொருளாதார நெருக்கடியும் இன்றி வெளிவந்த காலச்சுவடின் மூலம் சுந்தர ராமசாமி ஒரு அதிகார மையமாக மாறிப்போய்விட்டார்.
சுந்தர ராமசாமி கட்டி எழுப்பிய சாம்ராஜ்யத்தை காக்கும் தளபதியாக அவரது மகன் கண்ணன் விளங்குகின்றார். சுந்தர ராமசாமியிடம் இருந்து கசப்பின் சுவையோடு வெளியே வந்தவர்கள் ஏனோ குற்ற உணர்வெனும் கிணற்றில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கின்றனர். சுந்தர ராமசாமிக்கு சொந்தமான நிலத்தின் விளைச்சலுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். அவர் தமிழ் நிலத்தில் விட்டுச்சென்ற புரட்சிகர கருத்துக்களை (!!) தொடர்ந்து எடுத்துச்செல்லும் சேவகர்களாக தங்களை அடையாளப் படுத்திக்கொள்கிறார்கள். சுந்தர ராமசாமியிடம் இருந்து வெளியேறியவர்களும், சுந்தர ராமசாமியோடு இருந்தவர்களும் அவரை இந்த யுகத்தின் மகா புருஷராக சித்தரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
இன்றைக்கு சுந்தர ராமசாமியின் நினைவுகளை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் தோட்டங்களில் கொய்த மலர்களால் கட்டப்பட்ட மாலைகளில் இருந்து பரவும் பார்ப்பணீய - திராவிடப் பண்பாட்டின் கூட்டுமணம் (திராவிடக் கட்சிகள் தமிழுக்கு கொடையாக வழங்கிய பண்பாட்டையே திராவிட பண்பாடு என குறிப்பிடுகின்றேன்) தமிழக இலக்கிய உலகில் விஷமென பரவிக்கொண்டு இருக்கின்றது. இவைகளையெல்லாம் என்னைப்போன்ற சுந்தர ராமசாமியை ஒரு படைப்பாளியாக மட்டுமே அறிந்த பிரிவினர் மௌனமாக, ‘கூத்து எதுவரைக்கும் நடக்கும்’ என்று பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
ஒரே ஒருமுறை சுந்தர ராமசாமியை திருச்சியில் பார்த்திருக்கின்றேன். அமுதன் அடிகள் அறக்கட்டளையில் இருந்து எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு விருது வழங்கும் விழா திருச்சி புனித வளனார் கல்லூரியில் நடைபெற்றது. அந்த விழாவில் சுந்தர ராமசாமி சிறப்புரை ஆற்றினார். அவர்களுடன் மனுஷ்யபுத்திரன், சல்மா ஆகியோர் வந்திருந்தனர்.
நான் தொலைவில் இருந்து சுந்தர ராமசாமியை பார்த்துக்கொண்டு இருந்தேன். தமிழின் முக்கிய படைப்பாளி மிக எளிமையாக அனைவரிடத்திலும் உரையாடிக்கொண்டு இருந்தார். எனக்குப் பிடித்த, எனக்கு ஆதர்சமாக திகழ்ந்து கொண்டு இருப்பவர்களை பொது இடங்களில் காண நேரும்போது என்னை பற்றி ஏதும் பிரஸ்தாபிக்காமல் அவர்களை நெருங்கிச் சென்று அவர்களது கரங்களைப் பற்றி அன்பை தெரிவித்து அவ்விடம் விட்டு அகன்றுவிடுவேன். ஆனால் நான் சுந்தர ராமசாமியை தூரத்தில் இருந்து வெறுமனே கண்ணுற்றபடி இருந்தேன்.
நிகழ்சி முடிந்து சுந்தர ராமசாமி புறப்பட்டு சென்ற பிறகு மனுஷ்யபுத்திரன் என்னிடம் ‘உனக்கு சுந்தர ராமசாமியை அறிமுகப்படுத்த மறந்துவிட்டேன்’ என்றார். அது முக்கியமல்ல என்றேன். என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான சாமான்ய தமிழ் வாசகர்களுக்கு சுந்தர ராமசாமியின் பிம்பம் இவ்வளவுதான்.
ஒரு படைப்பாளிக்கு அவருக்குரிய அங்கீகாரம் தேவைதான். உரிய இடத்தை உரிய காலத்தில் ஒரு படைப்பாளிக்கு கண்டிப்பாய் கொடுக்க வேண்டும். சி.சு. செல்லப்பா எழுத்து பத்திரிகையை தொடர்ந்து நடத்திட பட்ட துன்பங்கள் சொல்லி மாளாதவை. சி.சு. செல்லப்பா தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவை அபாரமானது. எந்தவிதமான நிறுவனங்களின் ஒத்துழைப்பும் இன்றி, பெரும் கனவான்களின் கண்களில் இருந்து விரியும் கருணையின் ஒளி அவர்மீது படியாமலேயே எழுத்து பத்திரிக்கையை நடத்தினார். கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன் போன்றவர்களை வறுமையின் தீ நாக்குகள் சுட்டெரித்துக் கொண்டே இருந்தன. இன்றைக்கும் எழுத்தாளர்களை, ‘வறுமை’ மரணம் வரைக்கும் இழுத்து செல்கிறது என்பதை கோபி கிருஷ்ணனின் மறைவு காட்டுகின்றது.
பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய வேதநாயகம் பிள்ளையில் துவங்கி இன்றைக்கு தனுஷ்கோடி ராமசாமி முடிய உள்ள நீண்ட பட்டியலில் கொண்டாடப்பட வேண்டிய படைப்பாளிகள் நிறைய இருக்கின்றனர். சுயம்புலிங்கத்தின் ஒரு கவிதைக்கு ஈடாக சுந்தர ராமசாமி தன் வாழ்நாளில் ஒரு கவிதை கூட எழுதியதில்லை. ஆனால் இன்றைக்கு அவரின் எதிரிகளும், நண்பர்களும் நிறுவ முயல்வது உண்மைக்கு புறம்பான அதர்மமான ஒன்றை. சுந்தரராமசாமியின் அமெரிக்க மோகம் குறித்து யாரும் அதிகம் பதிவு செய்யாதது அதிசயமே. அவர் ஒரு இந்திய தமிழனாக இருப்பதை விடவும் அமெரிக்க தமிழனாக இருப்பதையே அதிகம் விரும்பினார். பல நாடுகளில் தனது நிழலை படரவிட்டு வெளிச்சத்தை விரட்டிய அமெரிக்கா சுந்தர ராமசாமியின் மீது ஒரு கனவென படிந்து இருந்தது.
எப்படி இருப்பினும் அவர் தலையில் சூட்ட முயற்சிக்கும் மணி மகுடம் மிகையானது. சுந்தர ராமசாமி என்னும் படைப்பாளி மக்களின் மனங்களின் வழியாக பயணம் மேற்கொள்ளாதவர். அவர்களின் துன்பங்கள், இயலாமைகள், வாழ்வின் கொடூரங்கள், அடக்குமுறையின் துயரங்கள், அடைந்த எளிய மகிழ்சிகள் ஆகியவற்றை சுந்தர ராமசாமி என்றைக்குமே தரிசித்ததில்லை. இன்று சுந்தர ராமசாமியின் படைப்புகளின் மேல் கட்டப்படும் மாய மாளிகை காலத்தால் கரைந்து போகும். இது வரலாறு நமக்கு சொல்லிக்கொடுத்த தர்மம்.
கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும், மன்னருக்கு உரியதை மன்னருக்கும் கொடுங்கள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
இந்த வருடம் மழை அதிகம்
- விவரங்கள்
- சுதீர் செந்தில்
- பிரிவு: புதுவிசை - ஜனவரி 2006