சிறுபத்திரிக்கை உலகைப் பொறுத்தவரை சு.ரா. ஒரு வரலாறு மட்டுமல்ல, ஒரே ஒரு வரலாறுங்கூட. வாழ்வின் போதாமை குறித்துச் சிந்தித்ததாகப் பாவனை செய்த ஒருவரது இலக்கிய வாழ்க்கை இப்படிச் சகல சௌபாக்கியங்களுடன் பூர்த்தியடைந்திருப்பது ஒரு முரணாகத் தோன்றலாம். ஆனால், உண்மை முரணில் இல்லை, அதன் ஒத்திசைவில்தான் மறைந்திருக்கிறது. வாழ்வின் நிலையாமை மற்றும் போதாமை குறித்துச் சிந்தித்து எழுதுவதையே தன் வாழ்வின் மையமான நோக்கமாகக் கற்பித்துக் கொண்ட ஒருவரது சொந்த வாழ்க்கையும் இலக்கிய வாழ்க்கையும் சகலவிதமான திருப்திகளையும் வழங்க முடியும் என்றால், வாழ்வின் போதாமை குறித்து அவர் என்ன உணர்ந்திருக்க முடியும். அவருக்கு என்ன தெரிந்திருக்க முடியும்? எதுவும் தெரியாது என்பதோடு அப்படித் தெரிந்தது போல் காட்டிக் கொள்வதில்தான், வாழ்க்கை குறித்த பெரும் திருப்தியே அவரிடம் நிலவியிருந்திருக்கிறது. இதுதான் சு.ரா.வின் இலக்கிய வாழ்க்கையை உந்தித்தள்ளிய உணர்ச்சி. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் சு.ரா. தனக்காக தன் எழுத்தையும், தன் எழுத்திற்காகத் தன்னையும் நேசித்த ஒரு எழுத்தாளர். அவர் ஒரு தன்னெழுத்து தற்காதலியவாதி. தத்துவ உலகில் இவர்கள் அற்பவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

Jeyamohanசு.ரா.வின் கருத்தியல் உலகில் நுழைந்து சற்று மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை சட்டெனப் புரிந்துவிடும். சு.ரா.வின் சிந்தனை உலகம் இலக்கியவாதிகளின் மொழியில் சொன்னால் மிகவும் தட்டையானது. அவரது படைப்புகள், எழுத்துக்கள் அனைத்தையும் கசக்கிப் பிழிந்து பார்த்தால் உலகைப் பற்றியும், மனித சமூகத்தைப் பற்றியும், மனித மனத்தைப் பற்றியும் அவர் வெளியிட்டிருக்கும் முழுக் கருத்துக்களையும் மொத்தம் ஒரு பத்து எண்களுக்குள் அடக்கிவிடலாம்.

“தமிழ்ச் சமூகப் பண்பாட்டுச் சூழல் கெட்டுக் குட்டிச் சுவராகிவிட்டது; மந்தைகளைப் போன்ற மக்களுக்கு தனது சிந்தனைத் திறத்தால் திசைகாட்டும் எழுத்தாளனுக்கு இங்கே எந்த மதிப்பும் இல்லை; ஒரு எழுத்தாளனுக்கு இந்தச் சூழல் மூச்சுத் திணற வைக்கிறது; எல்லா இயக்கங்களும் எல்லா நம்பிக்கைகளும் தோற்று வாழ்வே நிலையாமை என்றாகி விட்டது; இந்த நிலையாமையைப் புரிந்து கொள்வதில் அல்லது புரியமுடியாததன் தவிப்பிலேயே ஒரு எழுத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது....” என்பன போன்ற சின்னச் சின்ன வேறுபாடுகள் அடங்கிய பொத்தாம் பொதுவான கருத்துக்கள்தாம் அவை. சு.ரா. தன் எழுத்தை நிறுவும் பொருட்டுத்தான் இந்தப் பத்துக் கருத்துக்களைக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்தாரேயொழிய அவை மனித வாழ்வை நேசிப்பதால் ஏற்படும் சிந்தனையின் அவஸ்தையில் பிரசவிக்கப்பட்டவை அல்ல.

மேலும் இந்தப் பத்துக் கருத்துக்களும் மேற்குலகின் இலக்கியங்கள் மற்றும் சில சிந்தனையாளர்களை வாசித்து அரைகுறையாக ஜீரணித்து வெளிவந்தவைதான். இவற்றை சு.ரா.வின் சொந்தச் சரக்கு என்றும் சொல்லிவிட முடியாது. இவை வாழ்வின் கேள்விகளுக்கு விடையளிப்பவையும் அல்ல, புதிய சிக்கல்களை இனம் காட்டுபவையும் அல்ல. இந்த கருத்துக்களை வைத்துத்தான் சு.ரா. தன் வாழ்நாள் முழுவதையும் ஒப்பேற்றியிருக்கிறார். இந்த ஒப்பேற்றலைச் சுற்றி வளைத்து மூக்கைத் தொடும் சொல்லாடல்கள் மூலமும், இலக்கிய வகை பேதங்களை வைத்தும், காலச்சுவடின் அச்சு பலத்தை வைத்தும் அவர் நெடுந்தூரம் இழுத்து வந்திருக்கிறார். எனினும், ஒரு வரலாற்றுப் பார்வையின் மதிப்பீட்டில் இவையனைத்தும் புளித்துப் புரையோடிப் போனவையே. சு.ரா. இந்தப் பத்தைத் தாண்டி பதினொன்றாவதாக எதையும் சொல்லவில்லை.

எந்த ஒரு புனைகதை எழுத்தாளனுக்கும் எழுதுவதற்கான ஊற்று வாழ்வை வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதனால் வந்து விடுவதில்லை. புலனறிவு, யதார்த்தத்தில் ஒரு பத்து சதவீதத்தை மட்டும்தான் காட்டும். மீதியைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு மனித வாழ்வு குறித்த மாறாத நேசமோ அதனூடாக இடையறாமல் புதுப்பிக்கப்படும் தத்துவ நோக்கோ வேண்டும். அத்தகைய நேசமும், தத்துவக் கண்ணோட்டமும் கொண்டவர்களாலேயே உலகின் மாபெரும் இலக்கியங்களைப் படைக்க முடிந்திருக்கிறது. அந்தக் கண்ணோட்டம் கிஞ்சித்தும் இல்லாதவர்கள் குண்டுச் சட்டிக்குள் மட்டுமே ஓட்ட முடியும்.

தொடர்ந்து ஓட்ட நினைத்தால் கால்களோ சட்டியின் பகுதிகளோ உடைந்து விடும். அப்படி ஓட்டி உடைந்து போனவர்கள்தான் ஜெயகாந்தனும், சுந்தரராமசாமியும். சு.ரா. வாழ்வை வெறுமனே விதவிதமாக வேடிக்கை மட்டும் பார்த்தார். அந்த வேடிக்கையையும் தான் தன் வாழ்வு தன் சூழல் இவற்றை மட்டும் அடிப்படையாக வைத்துப் பார்த்தார்; அவற்றையே படைத்தார். அதனால் அவை வெறும் கண்காட்சிப் படைப்புகளாக மட்டுமே எஞ்சி நிற்கின்றன. சிற்றிலக்கிய உலகில் மிகவும் புகழ்பெற்ற சு.ரா.வின் இல்லமான சுந்தர விலாசம்தான் அவருடைய முழு உலகம். அந்த இல்லத்தின் மகிழ்ச்சி, அழுகை, துக்கம், சிரிப்பு, ஏக்கம், இரக்கம், கருணை, பச்சாத்தாபம் முதலியவைதான் அவருடைய தத்துவநோக்கைத் தீர்மானித்தன. அதைக் கீழ்க்கண்ட எடுத்துக்காட்டு எடுப்பாக விளக்கும்.

சு.ரா.வின் அப்பா, வீடு சுத்தபத்தமாக நேர்த்தியாக இருப்பதில் கறாராக இருப்பாராம். அதனால் வீடு உண்மையில் ஒழுங்காக இருந்தாலும் அப்பாவின் பார்வையில் ஒழுங்கற்று இருப்பதாக மற்றவர்களை நம்ப வைத்து விடுவாராம். இதுதான் சு.ரா.வுடைய தந்தையின் பலமாம். இந்த பலம் அவர் வேண்டுமென்றே செய்வதிலிருந்து தோன்றுவதில்லையாம், அது ஒரு கோணல் பார்வையிலிருந்து வருகிறதாம். இந்தக் கோணல் பார்வையோடு அதிகாரம் சேர்ந்து கொண்டால் சர்வாதிகாரிகள் தோன்றி விடுவார்களாம். ஹிட்லர், இந்திராகாந்தி எல்லாம் அப்படி உருவானவர்கள்தானாம். இதை சு.ரா. ஒரு உரையாடலில் கூறியதாகவும், இப்பேற்பட்ட தத்துவ முத்துக்களை அவர் பேசும்போது, அதை உள்வாங்கிக் கொண்டு பின்தொடர்வதற்கு பெரிய பயிற்சி வேண்டும் என்றும் ஜெயமோகன் தன் நினைவின் நதியில் புல்லரித்துப் புளகாங்கிதம் அடைந்து எழுதியிருக்கிறார். சர்வாதிகாரிகள் குறித்த சு.ரா.வின் இந்த அரிய கண்டுபிடிப்பைப் புரிந்து கொள்ளாத ஒரே காரணத்திற்காகத்தான் பல லட்சம் உலகமக்கள் ஹிட்லரால் கொலை செய்யப்பட்டார்கள் போலும்.

சு.ரா. தன் தந்தையின் வாழ்வை வைத்தே உலக சர்வாதிகாரிகளை எடை போட்டார் என்றால் முழு உலக மக்களின் வாழ்வை எப்படிப் பார்த்திருப்பார்? அநேகமாக அந்த முழு உலகமும் ஏன் பிரபஞ்சமும் கூட அவரது சட்டைப் பையிலோ அல்லது ஜட்டியின் இடுக்கிலோதான் சிக்கியிருந்திருக்க வேண்டும். சு.ரா. ஒரு குண்டுச்சட்டி எழுத்தாளர் என்பதற்கு இந்த ஒரு சோற்றின் பதம் போதும். சு.ரா. மட்டுமல்ல சிறு பத்திரிக்கை உலகமே பொதுவில் இப்படித்தான் இருந்தது. இருந்து வருகிறது. இலக்கிய உலகின் ஆதார இயங்கியல் விதி இதுதானென்றால் சு.ரா.வின் தலைமைச் சீடரான ஜெயமோகனின் கதி என்ன?

இவரும் வாழ்வை வேடிக்கை பார்க்கிறார். ஆனால் அதீத மனத்தாவலுடன். ஆகவே சட்டியும் சற்றே பெரியதுதான். ஜெயமோகனது தத்துவ நோக்கின்படி அவர் எழுத வேண்டியவற்றில் முக்கியமானவற்றை எழுதி முடித்து விட்டார். இனி புதிதாக ஒன்றுமில்லை என்ற நிலையில் ஏற்கெனவே எழுதியவற்றை இலக்கிய வகை பேதங்களின் உதவியால் இன்னும் கொஞ்ச காலம் இழுக்கலாம். சு.ரா.வைப் போன்று தன்னெழுத்தை வியந்தோதும் திருப்பணியை ஒரு நிறுவனம் போல உயிர்மை மற்றும் தமிழினி போன்ற காலச்சுவடின் போட்டி பதிப்பகங்களின் உதவியுடன் செய்யலாம். பாலகுமாரன், சுஜாதா போல பெரியவர்களின் பெருவெளியில் கரைந்து பெருங்காய டப்பாவாக மணம் வீசலாம். சு.ரா.விடம் பிரபஞ்ச இரகசியம் அவர் உடலில் இரண்டு இடங்களில் மட்டும் இருந்தது. அதே இரகசியம் ஜெயமோகனிடம் உடல் முழுவதும் இருக்கிறது. சீடருக்கும் குருவுக்கும் உள்ள வேறுபாடு அவ்வளவுதான்.

சு.ரா.வுக்கான அஞ்சலிக் குறிப்பில் அவரைப் பற்றி மற்றவர்கள் என்ன தரத்தில் எழுதியிருக்கிறார்களோ அதேதரத்தில்தான் அவரும் மற்றவர்களைப் பற்றிப் பேசியும் எழுதியுமிருக்கிறார். அதில் சு.ரா.வின் அந்த பத்துக் கருத்துக்களை உருவிவிட்டுப் பார்த்தால்... தீபம் நா. பார்த்தசாரதி தினமும் எட்டு வேளை குளிப்பார், குதிகாலில் என்னன்னமோ லோஷன் போட்டுப் பளபளப்பாக வைத்திருப்பார், ஈ.எம்.எஸ். வேட்டியை இறுக்கிக் கட்டினால் அவிழாது, செருப்புக்களை வாழைப் பழத்தோலால் தேய்த்து பளபளப்பாக மாற்றுவார், நாகர்கோவில் ஆனியன் ரவா தோசை க.நா.சு.வுக்குப் பிடிக்கவில்லை... இப்படித்தான் மிஞ்சுகின்றன. ஜீவாவின் மறைவையொட்டி சு.ரா. எழுதிய ‘காற்றில் கலந்த பேரோசை’ என்ற கட்டுரை இதை எடுப்பாகப் புரிய வைக்கும்.

நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் சுப்பையா பிள்ளை என்ற அப்பாவி ஒரு ஓட்டலை நடத்தி வருகிறார். அங்கே ஒரு நொண்டிக்குதிரை நிற்கிறது. சிறுவனாக இருந்த சு.ரா. ‘இந்தக் குதிரை ஏன் நொண்டுகிறது’ என்று ஜீவாவிடம் கேட்கிறார். உடனே ஜீவா சுப்பையாவை அழைத்து பதில் சொல்லுமாறு கட்டளையிடுகிறார். அந்த அப்பாவியோ “போங்க அண்ணாச்சி சும்மா ஆளுகளப் போட்டு பயித்தியக்காரனாக்குதீகளே” என்று மிக்க பணிவுடன் மறுக்கிறார். உடனே ஜீவா ஆவேசம் வந்தவராய் அந்த அப்பாவியைப் பார்த்து, “உலக வரலாறு, அறிவியல் தெரியுமா, சூரியன் கிழக்கே உதிப்பது ஏனென்று தெரியுமா, ஸ்விட்சைப் போட்டால் லைட் எரிவது ஏன் தெரியுமா, கடைசியில் இப்படி ஒண்ணுமே தெரியாத மண்ணாந்தைகளாகப் போய்விட்டோமே” என்று சுப்பையாவை உண்டு இல்லையெனப் பிச்சு உதறுகிறார்.

ஒரு அப்பாவியின் மீதான ஜீவாவின் இந்த மேட்டிமைத்தனமான உளறலை ஏதோ மாபெரும் அறிவொளியுக நடவடிக்கை போலப் பதிவு செய்த சு.ரா. அடுத்த வரியில் “ஜீவா நீங்கள்தான் எத்தனை அற்புதமான மனிதர்” என்று உருகுகிறார். நமக்கோ குமட்டுகிறது. இதையே அற்புதமான அஞ்சலி இலக்கியக் கட்டுரை என்று தாமரை பத்திரிக்கையில் போலி கம்யூனிஸ்டுகள் உருகுகிறார்கள். கலையிலும் சரி, கம்யூனிசத்திலும் சரி போலிகளிடையே என்ன ஒரு ஒற்றுமை! உண்மையில் ஜீவாவின் மறைவையொட்டி அப்போதைய தினத்தந்தியில் இதைவிட மேலான கட்டுரை நிச்சயம் வெளிவந்திருக்கும். காரணம், தினத்தந்தியின் உதவி ஆசிரியர்கள் சு.ரா.வை விட அறிவும் அனுபவமும் உள்ளவர்கள்.

நன்றி: புதிய கலாச்சாரம்
இப்புத்தகம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
16, முல்லை நகர் வணிக வளாகம் 2வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 83,
விலை: ரூ.60

Pin It