இரண்டு மலையாள நாவல்களையும் ஒரு சில உலகக் கவிதைகளையும் மட்டுமே தமிழில் மொழிபெயர்த்துள்ள சு.ரா. அதை வைத்தே தன்னை ஒரு முக்கியமான மொழிபெயர்ப்பாளராக மற்றவர்களைச் சித்தரிக்க வைத்தார். இதுபோக, தமிழக, கேரள இலக்கியக் கூட்டங்களிலும், வாய்ப்புக் கிடைக்கும்போது அகில இந்திய அளவிலான கூட்டங்களிலும் கலந்து கொண்டார். கவிதை படிக்க பாரீசுக்கும், விருது வாங்க கனடாவுக்கும் சென்றார். இதன்மூலம் தன் பெயர் எப்போதும் இலக்கியச் செய்திகளில் அடிபடுமாறு பார்த்துக் கொண்டார். தனது தூய கலை இலக்கிய சிந்தனையுலகின் ஆதாரவிதிகளை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பல இளைஞர்களை எழுத வைத்து எழுத்தாளராக்கியிருக்கிறார். இன்றைய சிறு பத்திரிக்கை உலகின் பெரும்பான்மையான எழுத்தாளர்கள் சு.ரா. குருகுலத்தில் பயின்றவர்கள்தான். அதில் யாரெல்லாம் சு.ராவின் ‘தன்னெழுத்து தற்காதல்’ என்ற ஆளுமையைப் பெற்றார்களோ அவர்கள் அதனைப் பெற்ற மாத்திரத்தில் சு.ரா.விடமிருந்து உடன் விலகியும் இருக்கிறார்கள்.
“அவர் நவீனத்துவக் காலத்தைச் சேர்ந்தவர்; அவருடன் சண்டை போட்டவர்கள் பின்நவீனத்துவக் காலத்தைச் சேர்ந்தவர்கள்” என்று இந்த பாரதப் போருக்கு கீதைப் பேருரை எழுதுகிறார்கள் ஜெயமோகனும் இன்ன பிறரும். இது ஈகோ சண்டைக்கு கொள்கை முலாம் பூசும் மேட்டிமைத்தனமேயன்றி வேறல்ல. வாழ்வின் புரியாமையை, போதாமையை, நிலையாமையை மற்றும் இன்ன பிற ஆமைகளைத் தர்க்கபூர்வமாக அடைய வேண்டும் என்று சு.ரா. கருதினாராம்; அந்த ‘ஆமை’களை அடைய தர்க்கம் உதவாது, அதீத மனத்தாவல் மூலம் மட்டுமே தரிசிக்க வேண்டும் என்று ஜெயமோகன் வகையறாக்கள் கருதுகிறார்களாம். இதில் கொள்கை வெங்காய வேறுபாடு எங்கே வருகிறது? முடிவு சூனிய ‘ஆமை’ என்றாகும் போது வழிகளில் நடுவழி, குறுக்கு வழி, நேர்வழி, சுற்றுவழி என்றிருப்பதில் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது?
சு.ரா. தன் எழுத்தையும், எழுத்தாளர் என்ற தனது பிம்பத்தையும் ஸ்தாபிக்க நாசூக்கான இலக்கியச் சாமர்த்தியங்களை, தேர்ந்த விளம்பர நிறுவனங்களை விஞ்சும் வகையிலான வேலைகளை, தனிநபராகவே நின்று செய்து முடித்தார். இவரைப் போன்று ஒரு சில புனைகதைகள் மட்டும் எழுதிய எழுத்தாளர் எவரும் இவர் அடைந்த இடத்தை கற்பனையில் கூட தரிசனம் செய்ய முடியாது. சு.ரா. என்ற நிறுவனம் மாபெரும் பள்ளம் தோண்டி நிரப்பிய அஸ்திவாரத்தின் மீதுதான் தமிழிலக்கியத்திற்கு ஐ.எஸ்.ஐ. மற்றும் ஐ.எஸ்.ஓ. முத்திரை தரும் காலச்சுவடு நிறுவனம் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.
இன்று எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கான மூடு வாய்க்கப் பெறுகிறதா இல்லையா என்பதை விட காலச்சுவடின் பெருங்கருணை வாய்க்கப் பெறுமா என்ற தவிப்பே பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. அதனாலேயே பின்நவீனத்துவவாதிகள், தலித்தியவாதிகள், பெண்ணியவாதிகள், கதைசொல்லிகள், கவிஞர்கள், விமரிசகர்கள் முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரை எழுத்தால் பெயர் பெற்றவர்களும் பெறவிரும்புகிறவர்களுமாகிய அனைவரும் சு.ராவின் மரணச் செய்தி கேட்ட மாத்திரத்தில் எழுதுகோலை எடுத்து அஞ்சலிக் குறிப்பைத் தீட்டி பதிவு செய்ய போட்டி போட்டார்கள். அமெரிக்கா ஈராக்கிலும், இந்து மதவெறியர்கள் குஜராத்திலும் மக்களை வெட்டிச் சாய்த்தபோதெல்லாம் இலேசாகக் கூட இதயத்தை வாடவிடாதவர்கள், சு.ரா.வுக்காக தங்கள் இதயத்தைக் கசக்கிப் பிழிந்து அழுதார்கள்.
இலக்கியவாதிகளை பொதுச் சோகத்திற்காகவெல்லாம் இப்படி அழவைத்து விட முடியுமா? பொது நீரோட்டத்தில் இருந்து தங்களை வெட்டிப் பிரித்துக் கொண்ட மிக உயர்வான தனித்துவமிக்க அபூர்வப் பிறவிகளாகத் தங்களைச் சித்தரித்துக் கொள்கிற இந்தக் காரியவாதிகளின் அற்பத்தனத்தைத் தனது மரணத்தின் மூலம் அம்பலமாக்கிய பெருமையை நாம் சு.ரா.விற்கு வழங்கத்தான் வேண்டும். போகட்டும், மறைந்துபோன ஒரு தமிழ் எழுத்தாளனுக்காக இரங்கற் கல்வெட்டில் இத்தனைப்பேர் செதுக்கியிருப்பது இதுவே முதல்முறை. இலக்கிய வெளியை இப்படி மாற்றிய அப்பாவின் ஆளுமையை மட்டும் முதலீடாக வைத்து காலச்சுவடை ஆல் போல் தழைக்கச்செய்த பெருமை மகன் கண்ணனையே சாரும். அப்பா நிலப்பிரபுத்துவ மகானைப் போல சிற்றிலக்கிய உலகத்தை ஆதிக்கம் செய்து ஆசி வழங்கினாரென்றால், மகன் முதலாளித்துவ நிர்வாகத்திறனால் சிற்றிலக்கியச் சந்தையை சற்றே உப்ப வைத்திருப்பதோடு கடிவாளத்தையும் கையில் வைத்திருக்கிறார். திரையுலகில் எம்.ஜி.ஆரின் சாதனை ஆதிக்கத்திற்கு நிகரானது, சு.ரா.வின் சிறு பத்திரிக்கை ஆதிக்கம்.
எழுபதுகளின் இறுதியில் புரட்சித்தலைவரின் ஃபார்முலா அதன் தர்க்கபூர்வமான நீட்சியில் புளித்துப்போய் கசந்த நேரத்தில் அவர் புதுப்புது இளம் நாயகிகளுடன் கலர்ஃபுல்லாகக் கட்டிப்புரண்டு காமரசத்தைக் கட்டவிழ்த்து விட்டுப் பார்த்தார். ஒருவேளை அவர் அரசியலுக்கு மாறியிருக்காவிட்டால் அவரது பொற்காலச் சினிமா வாழ்க்கை காமெடியாய் முடிந்திருக்கும். இருபத்தியோராம் நூற்றாண்டில் கண்ணன் காலச்சுவடை நிலைநிறுத்தியிராவிட்டால் சு.ரா.வின் கதியும் அதோகதியாய் முடிந்திருக்கும். வெகுகாலம் முன்னரே சு.ரா.வின் படைப்புச் சிந்தனை கெட்டிதட்டித் தேங்கிப் போயிருந்தது. சிந்திப்பதற்கோ, எழுதுவதற்கோ, எழுதுவதுபோல் பாவனை செய்வதற்கோ, அவரிடம் ஏதுமில்லை என்ற நிலை ஏற்பட்டிருந்தது.
மகன் தந்தைக்காற்றும் உதவியாய் கண்ணன் வந்தார், காலச்சுவடைக் கட்டி எழுப்பினார். அப்புறமென்ன, சு.ரா.வின் பழைய படைப்புகள் புற்றீசல் போல வடிவில் புதிது புதிதாகப் படையெடுத்தன. அவரது மூன்று நாவல்களும் முப்பது விதமான அட்டைகளில் செம்பதிப்பாக வெளிவந்து குவிந்தன. அவரது சிறுகதைகளும், கவிதைகளும், தனித்தும், பிரிந்தும், கூட்டணி வைத்துக் கொண்டும் அழகழகாய்ப் பாய்ந்தன. மற்றவர்களைப் பற்றிய அவரது நினைவுக் குறிப்புகள் அகராதியின் துணை கொண்டு நினைவோடை நூல்களாகக் உப்பின. அவரது கட்டுரைகள், நேர்காணல்கள், கேள்விபதில்கள், மதிப்பீடுகள், நூல் அறிமுகங்கள், விமரிசனங்கள், பயண அனுபவங்கள், கோட்டயத்தில் அவர் பிறந்து வளர்ந்த வீட்டைக் கண்டுபிடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம், இலக்கியக் கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகள், நேரம் போகாமல் அவர் மொழிபெயர்த்த கவிதைகள், நானும் அரசியல் சமூகப் பிரச்சினைகளைப் பார்க்காமலில்லை என்பதான அபூர்வமான எழுத்துக்கள், கவிதைகளை அடித்து அடித்துத் திருத்தித் திருத்தி எழுதிய படைப்பின் அவஸ்தைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதிகள், அப்புறம் ‘மனதை எப்படிக் கட்டவிழ்த்து விடுவது’ என்பது குறித்து அவர் எழுதிய தமாசான டயரிக் குறிப்புகள்... (காலச்சுவடு அறிவாளிகள் இதையெல்லாம் கவித்துவத் தெறிப்புகள் என்று அடைமொழியிட்டுப் பிரசுரித்திருக்கிறார்கள். அதற்காக இப்படியா?) அத்தனையும் அச்சிலேற்றப்பட்ட அம்புகளாய்ச் சீறிப் பாய்ந்தன.
இப்படி சு.ரா. எழுதிய, எழுத நினைத்த அனைத்தும் அவரது மூளை உட்பட எல்லா இடங்களிலும் தோண்டிப் பார்த்து, தேடி எடுத்து வழித்துத் துடைத்து ஒரு துளி மிச்சம் விடாமல் தாள்களில் அச்சிடப்பட்டு விட்டன. அதோடு விட்டார்களா, சிந்திக்கும் திறனை இழந்திருந்த சு.ரா.வை நாகர்கோவில் பகுதிகளில் பத்து நாட்கள் சுற்ற விட்டு மகத்தான ஞானியாக செட்டப் செய்து புதுவை இளவேனில் உருவாக்கிய புகைப்படங்களைக் கொண்டு நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி, நாடகங்களாக மாற்றப்பட்ட சிறுகதைகள், அவரது கவிதைகள் வாசிக்கப்பட்ட கவிதா நிகழ்வுகள், இன்னும் புதிய மொழிகளில் பெயர்க்கப்பட்ட அவரது நாவல்கள், இப்படி மிகப் பழைய சு.ரா.வை, சிந்தனையில் திகட்டியிருந்த சு.ரா.வை, படத்துக்குப் படம் கெட்அப்பை மாற்றும் கமல்ஹாசனைப் போல அவர் சாகும் வரை மாற்றி மாற்றி ரிலீஸ் செய்து வந்தார்கள். மொத்தத்தில் சிவப்பு வண்ண கோல்கேட் டூத் பேஸ்ட்டைப் போல சு.ரா.வின் பிம்பமும் இலக்கிய உலகில் வம்படியாய்ப் பதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பிம்பத்தின் வீச்சு காரணமாக சு.ரா.வின் பிற்கால ஆண்டுகளில் பெரிய அல்லது வணிகப் பத்திரிக்கைகளில் எழுதுமாறு அழைப்பு வந்தது. சு.ரா.வும் ஏனைய சகல சிறு பத்திரிக்கையாளர்களும் வணிகப் பத்திரிக்கைகளை இலக்கியக் கற்பூரத்தின் வாசனை தெரியாத தடித்த மூக்கைக் கொண்ட கழுதைகள் என்றே எப்போதும் வசை பாடி வந்தனர். ஆனால், உண்மையில், அனைத்துச் சிறுபத்திரிக்கையாளர்களும் பெரிய பத்திரிக்கைகளில் எழுத வாய்ப்பு வராதா அதன் மூலம் சினிமாவுக்கு எழுத அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கத்தை இதயத்திலும், அதற்கேற்ற தந்திரங்கள் மற்றும் காரியவாதக் கண்ணோட்டத்தை மூளையிலும் கொண்டு செயல்படுபவர்கள்தான். பெரிய பத்திரிக்கைகளுக்கோ இவர்களைப் பற்றி பெரிய மதிப்பு எதுவும் அப்போதுமில்லை, இப்போதுமில்லை. தமிழ் மக்களின் வாசிப்பு நேரத்தை தொலைக்காட்சிகள் மொத்தமாக அள்ளிக் கொண்டுவிட, மிச்சமிருக்கும் சிறுபான்மை வாசகர்களின் வெரைட்டியான தாகத்தைத் தீர்க்கவேண்டும் என்ற அளவில் சிறியவர்கள் பெரியவர்களுக்குத் தேவைப்பட்டார்கள்.
சிறியவர்களின் குழுச்சண்டைகள், கிசுகிசுக்கள், போன்றவை சினிமாத் துணுக்குகளுக்கு இணையான நொறுக்குத் தீனியாகப் பயன்பட்டன என்பது ஒரு துணை விசயம். மற்றபடி இவர்களுடைய வரலாறு என்பது புதுமைப்பித்தன் தொடங்கி பாலகுமாரன் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் ஜெயமோகன் வரை பெரியவர்களிடம் சிறியவர்கள் சரணாகதியடைந்ததைத்தான் காட்டிக் கொண்டிருக்கிறது. இதில் சு.ரா.வுக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்பது அவரே ஒத்துக் கொண்டிருக்கிற ஒரு பெரிய ஏமாற்றமாகும். இருந்தாலும் காதல்கோட்டை திரைப்படத்தில் அவரது காலச்சுவடு இதழின் அட்டை ஒரே ஒரு சீனில் நடித்திருப்பது சற்றே ஆறுதலளிக்கும் விசயமாகும்.
இதைத்தவிர சு.ரா. என்ற தனிநபர் நிறுவனமும், அவரது வாரிசால் வெற்றிகரமாக நடத்தப்படும் காலச்சுவடு என்ற வணிக நிறுவனமும், சு.ரா. என்ற பிம்பத்தை விசுவரூபமாய்க் காட்சிப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளும், சவால்களும் பகீரதப் பிரயத்தனங்களும் யாரையும் மலைக்க வைப்பவைதான், சந்தேகமில்லை.
நன்றி: புதிய கலாச்சாரம்
இப்புத்தகம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
16, முல்லை நகர் வணிக வளாகம் 2வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 83,
விலை: ரூ.60