செ.சத்தியசீலன், கிழவன் ஏரி

தேசிய நதிநீர் இணைப்பு சாத்தியப்படாது என்ற ராகுல் காந்தியின் கருத்து...?

சரிதான், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்கிறார். அரசியல் சூழலும் பாதிக்கப்படும். பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்த நாட்டில் நதிகளை இணைப்பது சாத்தியமல்ல. நதியை வைத்துக் கொள்கிறார்கள், தண்ணீரை மட்டும் தாருங்கள் என்றாலே மறுக்கிறார்கள். இதிலே நதியையே கேட்டால் தருவார்களா? ஒரு மாநிலத்தில் உள்ள சிறு நதிகளை இணைக்கலாம். இதிலே பிரச்சனை வராமல் பார்த்துக் கொண்டாலே பெரிய விஷயம்.

ப.சிவக்குமார், திருப்பூர்-6

பொது இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் இருக்கலாமா?

கூடாது. ஒரு குறிப்பிட்ட மத வழிபாட்டுத்தலம் அமைந்தால் அது எப்படிப் பொது இடம் ஆகும்? தனி இடம் ஆகிப்போகும். சகல மத வழிபாட்டுத்தலங்களையும் அமைப்பது எனக் கிளம்பினால் அதற்கு முடிவு இருக்காது, மோதலில் போய் முடியும். அதனால்தான் அரசு அலுவலகம், பொது நிறுவனம் போன்றவற்றில் வழிபாட்டுத்தலம் இருக்கக்கூடாது என்கிறோம். மத நம்பிக்கை தனிநபர் விவகாரம் அதைக் கொண்டுவந்து பொதுமக்கள் பணத்தில் நடக்கும் அமைப்புகளில் நுழைத்தால் மதச்சார்பின்மை என்பது அர்த்தமற்றுப்போகும். மதத்திலிருந்து அரசைப் பிரித்தது என்பது உலக முதலாளித்துவம் செய்த ஒரு உருப்படியான காரியம். அதுகூட இந்தியாவில் இன்னும் ஒழுங்காக நடைபெறவில்லை என்பது இந்த நாட்டு முதலாளித்துவத்தின் கையாலாகத் தனத்தைக் காட்டுகிறது.

எழுத்தாளர் கவிஞர் பாலாவின் மறைவு பற்றி...?

அவருடைய "சர்ரியலிசம்" நூல் மூலம்தான் அவர் எனக்கு அறிமுகம். இசங்கள் பற்றி பிரமாதமாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்த காலத்தில் தமிழில் இப்படியொரு நூல் கிடைத்தது எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. அதைத்தொட்டு பின்பு நேரடிப் பழக்கம் ஏற்பட்டது. அன்பானவர், அடக்கமானவர். தமிழில் இலக்கிய விமர்சகர்களே குறைவு. சாவு அந்த எண்ணிக்கையை இன்னும் குறைக்கிறது. அதுசரி, அதற்கு ஏது அறிவு?

தொண்டன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?

தொண்டன் எனும் வார்த்தையே அசிங்கமானது. தொண்டரடிப்பொடி, அடியார் என்பவை எல்லாம் நிலப்பிரபுத்துவ காலத்து சொல்லாடல்கள். இவர்கள் முதலில் யஜமானனுக்கு அடிமைகளாக இருந்தார்கள். இதே கருத்தியலை கடவுளுக்கு ஏற்றினார்கள். இப்போது அரசியல் தலைவர்களுக்கு ஏற்றுகிறார்கள். ஜனநாயக யுகத்தில் யாரும், யாருக்கும் தொண்டனாக இருக்க முடியாது. மெய்யாலும் வெகு மக்களுக்கு உழைப்பவர்கள். தங்களுக்கிடையில் உயர்வுதாழ்வு கற்பிக்க மாட்டார்கள்.

சமீபத்தில் நீங்கள் ரசித்துப் படித்து வியந்த புத்தகம் எது?

மேக்ஸ் ஆர்தர் மேக்கலிஃப் என்கிற ஐரீஸ்காரர் இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்து பஞ்சாபில் வேலை பார்த்தார். பல்லாண்டுகள் அங்கே வேலை பார்த்ததில் அந்த மக்கள் மீதும், அவர்களது மதம் மீதும் ஒரு தனி ஈடுபாடு வந்தது. அதை ஆராய்வதற்காகவே தனது பதவியை ராஜினாமா செய்தார். 16 ஆண்டுகள் உழைத்து ஆறு பகுதிகளாக "சீக்கிய மதம்" எனும் பெரு நூலை எழுதினார். இந்த நூலின் சிறப்பு என்னவென்றால், குருமார்களின் அவர்களுக்கு முந்தைய கபீர் போன்ற மெய்ஞ்ஞானிகளின் வரலாறு மட்டுமல்ல அவர்கள் யாத்த பாடல்களும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. சர்தார்ஜி ஜோக்குகள் என்று சொல்லி அந்த மக்கள் கேலியும் கிண்டலும் செய்யப்படுகிறார்கள். அவர்களோ ஒரு மகத்தான பாரம்பரியத்தை உடையவர்கள். பிராமணிய மதம்- இஸ்லாம் மதம் இரண்டையும் விமர்சித்து, உள்வாங்கி, தாண்டி ஒரு புதிய மார்க்கத்தை கண்டறிய முயன்றவர்கள். சீக்கிய மதத்தின் மெய்யான சாரத்தைப் புரிந்து கொள்ள இந்தப் பெரு நூலைப் படித்தாக வேண்டும். அந்த நூலுக்கு இப்போது சரியாக நூறு வயது. ஆம், அது வெளி வந்த அண்டு 1909.

போத்தனூர் புலிச்சோழன், கோவை

பிரம்மாண்டமாக ராமர் கோவிலைக் கட்டுவதே என் லட்சியக்கனவு எனக் கொக்கரிக்கிறாரே அத்வானி?

ராமருக்கு கோயில் கட்டுவதை யாரும் எதிர்க்கவில்லை. அத்வானி தன் சொந்த இடத்திலோ அல்லது பிறர் இடத்தை காசு கொடுத்து வாங்கியோ கட்டட்டும். யார் வேண்டாம் என்றது? 450 ஆண்டுகளாக இருந்த பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கே கட்டுவேன் ராமருக்கு கோயில் எனும்போதுதானே வருகிறது பிரச்சனை. ஏ.ஜி.நூரானி தொகுத்த "பாபர் மசூதி பிரச்சனை 1528-2003" எனும் நூல்தான் நினைவுக்கு வருகிறது. அதிலே பிரபல வரலாற்றாளர்கள் ஆர்.எஸ்.சர்மா, எம். அதர் அலி, டி.என்.ஜா, சுரஷ்பான் ஆகியோர் வழங்கிய "தேசத்திற்கு வரலாற்றாளர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கை" உள்ளது. அதிலே விஸ்வ இந்து பரிஷத்தின் வாதங்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு ஆதாரப்பூர்வமாக தகர்த்தெறிந்திருக்கிறார்கள். பாபர் மசூதி இருந்த இடம்தான் ராமர் பிறந்த இடம் என்பதற்கோ, அங்கே அவருக்கு கோயில் இருந்தது என்பதற்கோ, அதை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதற்கோ எவ்வித வரலாற்றுச் சான்றும் இல்லை என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியும் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அங்கேதான் கட்டுவேன் என்று கொக்கரிக்கிறார். பிரதமராக மட்டுமல்ல எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கும் அருகதை இல்லாதவர் அத்வானி என்பது நிச்சயம்.

செ.சத்தியசீலன், கிழவன் ஏரி

"நான் வன்முறை தவிர்த்த ஒரு கம்யூனிஸ்ட்" என்று காந்தி கூறியுள்ளார். வன்முறைதான் கம்யூனிசத்தின் வழிமுறையா?

"வன்முறை தவிர்த்த கம்யூனிஸ்ட்" என்று கூறியதன் மூலம் வன்முறையானது கம்யூனிசத்தின் மையக்கோட்பாடு அல்ல என்று காந்தியே ஒப்புக்கொண்டதாக அர்ததம். வன்முறையை வன்மையாக எதிர்ப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆனால் உலகில் வன்முறை எங்கும் நிறைபொருளாக இருக்கிறது என்பதுதான் பிரச்சனை. காந்திஜி காலத்திலும் வன்முறை இருந்தது. இப்போதும் இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளை வன்முறையாளர்கள் என்று அநியாயமாய்க் குற்றம் சாட்டுகிறவர்கள். ஈராக்-ஆப்கன் மீது படையெடுத்த அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளை, மதக்கலவரங்களைத் தூண்டுகிறவர்களை, தனிமனிதக் கொலை புரியும் பயங்கரவாதிகளை, இனப்படுகொலையில் ஈடுபடும் ஆட்சியாளர்களை என்ன பெயரிட்டு அழைக்கப்போகிறார்கள்.?

அ.சேதுராமன், திருச்சி-1

மக்களின் கஷ்டங்களுக்கு மத்திய மந்திரிகளின் சிக்கன நடவடிக்கைகள் ஒரு தீர்வாகுமா?

"காந்திஜியைப் பரம ஏழையாகக் காட்ட நாங்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது" என்று அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட ஒரு பிரபல வாக்கியம்தான் நினைவுக்கு வருகிறது.

கே.இராகவன், சென்னை-10

அறிவிக்கப்பட்டிருக்கும் உலகத்தமிழ் மாநாடு உண்மையில் தமிழுக்கு நன்மை சேர்க்கும் என எதிர்பார்க்கலாமா?

சேர்க்க வேண்டும். அப்படி அதை நடத்த வேண்டும். தமிழைச் செம்மொழியாக மத்திய அரசு அங்கீகரித்த பிறகு நடக்கிற மாநாடு என்பதால் இது தனித்த முக்கியத்துவம் உடையது. இன்றைக்குத் தமிழுக்கு ஆபத்து இந்தியால் வரவில்லை, ஆங்கிலத்தால் வந்திருக்கிறது. ஆங்கிலத்திற்கு ஈடு கொடுக்கிற அளவுக்கு அறிவியல் மொழியாகத் தமிழை உயர்த்த வேண்டும். தொழில்நுட்பக்கல்வி உள்ளிட்ட உயர்கல்வியில் தமிழ்வழி வரவேண்டும். தமிழ்வழி படித்தோருக்கு என்றேவேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். பள்ளிக்கல்வி தொட்டுச் செய்ய வேண்டியது என்னவென்று மாநாடு விவாதிக்க வேண்டும். உருப்படியான திட்டங்களை வகுத்தளிக்க வேண்டும். மாநாட்டிற்கு அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்தது நியாயமே. கூடவே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் போன்ற அமைப்புகளையும் அழைக்க வேண்டும். எழுத்தாளர்கள், கலைஞர்களிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெற வேண்டும். ஒரு பரந்துபட்ட அணிவகுப்பே தமிழை அதன் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.

க.விசுவநாதன், புதுக்கோட்டை

திரைத்துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து...?

இரு தரப்பாருமே விளம்பரப்பிரியர்கள். இந்த மோதலால் அவர்களுக்கு நட்டம் ஏதுமில்லை. கிடைத்தது எல்லாம் விளம்பரமே. காலாவதியாகிப் போயிருந்த நடிகைகள் பற்றிய பரபரப்பான பேச்சுக்களால், அவற்றை வெளியிட்டு விற்பனையைப் பெருக்கிக்கொண்ட சில பத்திரிகைகளால் வெகு மக்களுக்கு என்ன பயன்? டி.வி. ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் இதெல்லாம் ஒரு தந்திரமோ என்றுகூட யோசிக்கத் தோன்றுகிறது. அடிப்படையான பிரச்சனை சினிமாவிலும், பத்திரிகைகளிலும் வரும் ஆபாசக் காட்சிகளும், சிந்தனைகளும், செய்திகளும். சீரழிக்கப்படும் பண்பாடு பற்றி சினிமா கலைஞர்களும் பேசவில்லை. பத்திரிகையாளர்களும் பேசவில்லை. எப்படிப் பேசுவார்கள்? பல சினிமாக்காரர்கள், பல பத்திரிகைளின் பிழைப்பே அதை வைத்துத்தான் ஓடுகிறது!

ஆ.பழனிமுத்து, கடலூர்-7

இலங்கை சென்றுவந்த எம்பிக்கள் குழுவினால் ஏதேனும் பயன் ஏற்படுமா?

ஏற்படுமா என்ன? ஏற்பட்டிருக்கிறது-ராஜபக்சே அரசுக்கு. அவரை இவர்கள் எல்லாம் சந்தித்து குலாவியது-குறிப்பாக திருமாவளவன் அதில் சேர்ந்திருந்தது-இலங்கை அரசுக்குக் கிடைத்த பெரும் பயன்தானே!

எஸ்.ராஜேஷ், புதுச்சேரி

அன்றைய சோவியத்தில் ரஷ்ய மொழியிலிருந்து இந்திய மொழிகளுக்கும், இந்திய மொழிகளிலிருந்து ரஷ்ய மொழிக்கும் இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றன. அத்தகைய பரிமாற்றம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ளதா?

ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள். இந்தியா முன்னாள் ஆங்கிலேய காலனி நாடு மட்டுமல்ல, இந்நாளிலும் இங்கே ஆங்கிலமே கோலோச்சுகிறது. ஆகவே, மொழி பெயர்ப்பு பிரச்சனையே இல்லை. அமெரிக்க நூல்கள் எப்போது சலுகைப் பதிப்பாக வருமென்று எதிர்பார்க்கிறார்கள். வந்தவுடன் வேகவேகமாக வாங்கிப் படிக்கிறார்கள். ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அமெரிக்கா பற்றிய ஆய்வு மையம் உள்ளது. அமெரிக்க இலக்கியங்கள் மற்றும் அதைப்பற்றிய ஆய்வு நூல்கள் எல்லாம் அங்கே தாராளமாகக் கிடைக்கின்றன. அவற்றை அங்கேயே தங்கிப் படிக்கவும் விடுதி வசதி உண்டு. அங்கே போய் ஒருமாதம் இருந்தால் ஓர் ஆய்வு நூலை எழுதிவிடலாம் எனும்நம்பிக்கை உள்ளது. தாங்களது தேசத்தை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் எடுத்துக்கொண்டுள்ள இந்த முயற்சியில் பத்தில் ஒரு பங்குகூட இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளைத் தம் தேசத்தவருக்கு அறிமுகப்படுத்த அவர்கள் எடுத்ததில்லை. சோவியத் ரஷ்யா எங்கே, இவர்கள் எங்கே? ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி வைத்துக்கொள்ள வேண்டியதுதான். 

Pin It