நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவே காவல் துறை இருப்பதாக சாமானிய மக்கள் நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து குட்டிச்சுவராய் போவதற்கும், சமூக விரோதிகள் தாங்கள் நினைத்த குற்றச்செயல்களை எந்தவிதத் தடையும் இன்றி நடத்தி முடிக்கவுமே காவல்துறை எப்போதும் பயன்பட்டு வருகிறது. தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க காவல்நிலையத்திற்கு வாழ்க்கையில் ஒரு முறை சென்று வந்தவர்கள் மீண்டும் எப்போதுமே அந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டார்கள். வேட்டியைக் காணோம் என்று புகார் குடுக்கச் சென்றால் கோவணத்தையும் உருவிக்கொண்டு விடும் குற்றக்கும்பல்தான் காவல் துறையினர் என்பதை அவர்கள் நிச்சயம் தங்களின் அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்வார்கள். எந்தவித மனித விழுமியங்களும் அற்ற, பண வெறி பிடித்த கூட்டமாக தமிழக காவல்துறை மாறியிருக்கின்றது. டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து தெருவுக்குத் தெரு அதிமுக காலிகள் தமிழகம் முழுக்க காவல் துறையின் ஆசியுடன் விற்று, கல்லா கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். இதுதவிர கஞ்சா விற்பனை, குட்கா விற்பனை, மணல் கடத்துவது என அனைத்து சட்டவிரோதக் குற்றங்களும் தமிழக காவல்துறையின் துணையுடன் தான் நடந்து வருகின்றது. இதில் கிடைக்கும் கொழுத்த கமிசன் தொகையானது அவர்கள் வாங்கும் சம்பளத்தைவிட பல நூறு மடங்கு அதிகமாகும்.

dharmapuri victim motherஇப்படி கொழுத்த வருமானத்துடன் அதிகாரக் கொழுப்பும் சேர தலைகால் தெரியாமல் இந்த நாடே தங்களின் குண்டாந்தடிகளுக்கு அடிமை என்ற எண்ணத்தில் ஆட்டமாய் ஆடிக்கொண்டு இருக்கின்றார்கள் காவல் துறையினர். இன்றைய தேதிக்கு நாட்டில் மிகப் பெரிய தேசவிரோதிகள் யார் என்றால், அது காவல் துறையினர்தான் என்று சொல்லும் அளவிற்கே அவர்களின் செயல்பாடுகள் உள்ளன. நம்ப முடியாதவர்கள் தர்மபுரி செளமியாவிற்கு நடந்த அநீதியைத் தெரிந்து கொண்டால் தமிழக காவல்துறை மீது காறி உமிழ்வார்கள். தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி சிட்லிங் மலைகிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அண்ணாமலை-மலர் ஆகியோரின் மகள் செளமியா பாப்பிரெட்டிப்பட்டியில் தங்கி, அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார்.

கடந்த 5 ஆம் தேதி தீபாவளி விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருக்கின்றார். அன்று இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சதீஷ்(22), பெருமாள் மகன் ரமேஷ் (22) ஆகிய இருவரும் சேர்ந்து மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடியிருக்கின்றனர். இது பற்றி மாணவி தனது பெற்றோர்களிடம் சொல்லியிருக்கின்றார். உடனே கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் அண்ணாமலை புகார் அளித்திருக்கின்றார். ஆனால் அவரின் புகாரை காவல்துறையினர் வாங்க மறுத்திருக்கின்றார்கள். பின்னர் அவர்களே தயார் செய்த ஒரு புகாரில் அந்த அப்பாவி பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி இருக்கின்றார்கள். மேலும் நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டி இருக்கின்றார்கள். அதுமட்டும் அல்லாமல் அவர்களை மிரட்டி ரூ 6 ஆயிரம் பணத்தையும் வாங்கி இருக்கின்றார்கள்.

மறுநாள் 6 ஆம் தேதி அவர்கள் காவல்நிலையத்திற்குச் சென்றபோது பாலியல் பலாத்காரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செளமியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் தர்மபுரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்திருக்கின்றார்கள். 7 ஆம் தேதி செளமியாவின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் அவரது பெற்றோர்கள் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார்கள். அப்போதும் கூட செளமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதை சொல்லக்கூடாது என காவல்துறையினர் கட்டாயப்படுத்தி இருக்கின்றார்கள். இதனால் அங்கு இரண்டு நாட்களாக வைத்திருந்தும் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் செளமியா மரணமடைந்திருக்கின்றார்.

இதையடுத்து மாணவி செளமியாவை பலாத்காரம் செய்த இருவரையும் கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ளிருப்புப் போராட்டத்திலும், மாணவியின் சொந்த கிராமமான சிட்லிங்கிலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதற்குப் பிறகே கலெக்டர் மலர்விழி மற்றும் எஸ்பி(பொ)மகேஷ்குமார் ஆகியோர் சிட்லிங் சென்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். குற்றவாளிகளைப் பிடிப்பதாக மொத்தம் ரூ.9,000 லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களைத் தப்பவிட்ட கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசாரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்; மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என அவர்களிடம் மலைக் கிராம மக்கள் வலியுறுத்தினர். அதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கின்றார். ஆனால் இது எல்லாம் மக்களை சமாதானப்படுத்த எப்போதுமே ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் தந்திரம் என்பது அந்த மக்களுக்குத் தெரியவில்லை. காரணம் உள்ளூர் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தால், உண்மை வெளிவராது. வெளியூரில் இருந்து டாக்டர்கள் வந்து பரிசோதனை செய்ய வேண்டும் என அந்த மக்கள் வைத்த கோரிக்கையை கலெக்டர் மற்றும் எஸ்பி இருவரும் மறுத்திருக்கின்றார்கள். இதில் இருந்தே அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இதில் அடிப்படையாக எழும் கேள்வி நாளை காவல்துறையைச் சார்ந்தவர்களின் மகளோ, சகோதரியோ இப்படி பாலியல் வன்முறைக்கு உள்ளாகி நீதி வேண்டி, காவல் நிலையத்திற்கு வந்தால் கூட அவர்களிடமும் இப்படித்தான் இவர்கள் நடந்துகொள்வார்களா என்பதுதான். அவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படும் சம்பளம், ஆடம்பர வாழ்க்கைக்குப் போதாமல் இருந்தால் தனது குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் அரசியல்வாதிகளுக்கும், கார்ப்ரேட்டுகளுக்கு கூட்டிக்கொடுத்து பிராத்தல் செய்து பணம் ஈட்டலாம். இல்லை, வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் மாறுவேடம் போட்டு பிச்சை எடுக்கலாம். இல்லை என்றால் வழிப்பறியில் ஈடுபடலாம். பணம் ஈட்ட ஆயிரம் வழிகள் உள்ளன. மானமுள்ள மனிதர்கள் எப்போதுமே நேர்மையான வழிகளிலேயே பணம் சம்பாதித்து சாப்பிட விரும்புகின்றார்கள். அப்படி இல்லாத வழிகளில் வரும் பணத்தில் உண்பதை மலத்தைவிட கேவலமாகவும், அருவருப்பாகவுமே உணர்வார்கள். அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் ஒரு காவல்துறை அதிகாரியாவது மிஞ்சுவாரா என்பதே சந்தேகம்தான். ஒவ்வொரு காவல்நிலையமும் கொள்ளைக் கூட்டத்தினரின் கூடாரமாக மாறியிருக்கின்றது. பாலியல் வன்புணர்வில் ஈடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாய் ஜம்பம் அடிக்கும் வீராதி வீரர் கூட்டம் ஒன்றுகூட, இப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் இருந்து வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவுமே இல்லாமல் மிரட்டி பணம் பறித்த கும்பலைத் தூக்கில் ஏற்ற வேண்டும் என ஒருபோதும் கேட்பதில்லை.

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்நிலையத்திற்கு வந்து புகார் கொடுப்பதற்கு அஞ்சுவதற்கு முதன்மைக் காரணம் பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையை சமூகம் மோசமாகப் பார்க்கும் என்பதை எல்லாம் தாண்டி காவல்துறை புகார் கொடுத்த பெண்களை எப்படி நடத்தும் என்ற அச்சம்தான் அவர்களை புகார் கொடுக்கவிடாமல் தடுக்கின்றது. வெளியே இருக்கும் பாலியல் குற்றவாளிகளைவிட காவல்துறை என்ற போர்வையில் இருக்கும் குற்றக்கும்பலின் வன்முறைக்குப் பயந்தே பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை சகித்துக்கொண்டு சென்று விடுகின்றார்கள். செளமியாவைக் கொன்றதில் அவரை பாலியல் வன்முறை செய்தவர்களுக்கு ஐம்பது சதவிதம் பங்கு இருக்கின்றது என்றால், மீதி ஐம்பது சதவீதம் அவரின் பெற்றோரிடம் மிரட்டிப் பணம் பறித்ததோடு அவருக்கு போதுமான சிகிச்சையும் கிடைக்காமல் செய்த காவல்துறை என்ற போர்வையில் இருந்த பொறுக்கிகளுக்கும் இருக்கிறது. செளமியாவை காவல்துறைதான் திட்டமிட்டு சாகடித்திருக்கின்றது. இனி எந்தப் பெற்றோராவது பாதிக்கப்பட்ட தங்கள் வீட்டுப் பெண்களுக்கு நியாயம் வேண்டும் என்று காவல்நிலையத்திற்குச் செல்வார்களா?

மக்களிடம் அடித்துப் பிடுங்கி பொறுக்கித் தின்பதற்கு என்றே இருக்கும் ஒரு துறையை மக்களின் வரிப்பணத்திலேயே நடத்திக்கொண்டிருக்கும் இந்த அரசும்தான் முதன்மைக் குற்றவாளி. இந்த அரசையும் அது சோறு போட்டு வளர்க்கும் வெறி நாய்களையும் நம்பினால் நிச்சயம் ஒருநாளும் நீதி கிடைக்கப் போவதில்லை. அரசு தனது பாத்திரத்தை செய்ய மறுக்கும் போது அதை மக்கள் கையில் எடுத்துக்கொண்டால் மட்டுமே ஆளும் வர்க்கத்திற்கு அச்சத்தை உண்டாக்க முடியும். குற்றவாளிகளை மக்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி மக்களே தண்டிக்க வேண்டும். அந்த நிலை ஏற்படும் போது மட்டுமே செளமியா போன்றவர்களுக்கு நீதி கிடைக்கும்.

- செ.கார்கி

Pin It