எதிர் முகாமில் இருந்த காந்தி, அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களை தூக்கிப் பிடிக்கிற நாடகம், கிருஷ்ணசாமி போன்றவர்களை விழுங்கும் பலம், முகமதியர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கட்சியிலும் ஆட்சியிலும் பதவி கொடுத்து ஏய்க்கிற மாய்மாலம், தன்னிடம் சிறுபான்மை எம்எல்ஏக்கள் இருந்தாலும் பெரும்பான்மையாக்கி சில மாநிலங்களை ஆளுகிற மோசடி, பரம எதிரியானாலும் சந்தர்ப்பவாதமாக சில விசயங்களில் வெளிப்படையான அல்லது ரகசிய கூட்டு, திராவிடக் கட்சிகளில்லா தமிழகம் என்பது போல் சிலவற்றை முன்னறிவித்துவிட்டே அக்கட்சிகளை மிரட்டி உடைக்கிற தைரியம் - உறவாடி கெடுக்கிற தந்திரம், 'டிஜிட்டல் இந்தியாவில்' பேசிவிட்டு பேசவில்லை - செய்துவிட்டு செய்யவில்லை எனக் கூறுகிற அயோக்கியத்தனங்கள், எது ரகசியம் - மதிப்பு - மாண்பு என இருக்கிறதோ அத்தனையையும் காலில் போட்டு மிதித்துக் கொண்டே மறுபுறம் சிலவற்றில் மட்டும் அதே ரகசியம் - மதிப்பு - மாண்பு பற்றி பேசுகிற பித்தலாட்டம், நடுநிலை - அரை விசுவாசி - காலரைக்கா விசுவாசி என வேடதாரிகள் கொண்டு எதிர்முகாம் போல் கருத்து பரப்புகிற கயமைத்தனம், அன்னா ஹசாரே - ஜல்லிக்கட்டு போன்ற போராட்டங்களை கட்டமைப்பது பின் தமக்கு எதிராக மாறியதும் தாக்கி அழிப்பது, எதிர் மதம் - தன்னார்வலர் - பகுத்தறிவு - அறிவியல் -  கம்யூனிசம் என எல்லாவற்றிலும் ஒற்றர்களையும் ஐந்தாம்படையினரையும் உருவாக்குவது.... என இவ்வளவையும் செய்கிற ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் சபரிமலையில் பெண்கள் அனுமதி விஷயத்திலும் அரசியல் நோக்கத்தில்தான் தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனுமதித்திருக்கும்.
 
protest in Palani against Sabarimala judgementஇந்தத் தீர்ப்பே அக்கும்பலின் சதி என்பதற்கு ஆதாரம் இல்லை என்பதால் இப்படித்தான் குறிப்பிட வேண்டியுள்ளது. உச்ச நீதிமன்றம் வரை வந்த வழக்குகள் (சில தவிர) எல்லாம் இயல்பானவையே; ஆனால் அதை நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் காட்டப்பட்ட பாரபட்சம் தீபக் மிஸ்ராவின் தனிப்பட்ட முடிவல்ல; ஆளுங்கட்சியின் தலையீடுடையது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
 
ஆடு-புலி ஆட்டத்தில் எதிரியின் காயை நகர்த்த விட்டுக்கொடுத்து பிறகு வெட்டுவது ஒரு அணுகுமுறை என்பது போல், ஏன் சபரிமலை முற்போக்குத் தீர்ப்பும் இருக்கக்கூடாது? இத்தீர்ப்பிற்கு எதிரான தற்போதைய எதிர்ப்புகள் சங்பரிவாரங்களால் தூண்டப்படுவதும் - கட்டமைக்கப்படுவதும் அதைத்தானே நிரூபிக்கிறது?
 
ஒன்று, எதிர்ப்பின் வழி கேரள ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து இந்துக்களைப் பிரித்து ஓட்டுவங்கியைப் பெருக்குவது அல்லது கட்டமைக்கப்படும் எதிர்ப்பு பயனின்றி தோல்வியை சந்தித்தால் மசூதிக்குள்ளும் பெண்களை அனுமதி என்கிற அடுத்த நகர்வுக்கு அடித்தளமாக்கிக் கொள்வது என்பது ஆர்எஸ்எஸ் கும்பலின் திட்டமாக இருக்கலாம்.
 
******
 
பாடகி சின்மயி குறிப்பிட்ட மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு வைரமுத்துவிற்கு எதிராக மட்டுமே பாலியல் குற்றச்சாட்டு விவாதம் தமிழகத்தில் பாஜக-வால் கட்டியமைக்கப்படுவதையும் மேலுள்ள கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டியுள்ளது. மற்றவர்களுடன் வைரமுத்து வலிந்து சேர்க்கப்பட்டாரா அல்லது வைரமுத்துவிற்காக மற்றவர்கள் சேர்க்கப்பட்டார்களா அல்லது வைரமுத்து பட்டியலில் சின்மயி தவிர வேறு எவரும் உள்ளனரா என்பவை ஆய்வுக்குரியவை.
 
ஊடகவியலாளர் கேள்விகளுக்கு இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க சட்ட ரீதியாக என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொன்ன சின்மயி, வைரமுத்துவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களை ஆலோசித்து முடிவெடுப்பேன் என்று பதிலளித்தது வெறும் டிப்ளோமெட்டிக் அணுகுமுறை மட்டும்தானா?
 
எந்த சம்பவத்திற்குள் (புற்றுக்குள்) ஆர்எஸ்எஸ் (பாம்பு) இருக்கிறது அல்லது நுழைகிறது என அவதானித்து பார்த்துதான் எதிர்க்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 
********
 
மக்களை ஆள்வது சட்டமன்றம்-நாடாளுமன்றம் என்பதை முதன்மையாகக் காட்டி வந்த காங்கிரசு, மாநில அரசை கலைக்கும் செயல் என்பதைத் தவிர மற்ற நேரங்களில் குடியரசு தலைவர் - ஆளுநர் என்கிற துருப்புச் சீட்டை பெரிதாகப் பயன்படுத்தவில்லை; அதனால் இரட்டை ஆட்சி முறையில் அதிகார வர்க்கம் மறைந்திருந்தது; பெரிதாகப் பேசப்பட்டதில்லை. அப்படியே பேசினாலும் ரப்பர் ஸ்டாம்ப் அல்லது ஆட்டுக்குத்தாடியும் நாட்டுக்கு கவர்னரும் எதற்கு என்றே எதிர்க் கட்சியினர் பேசினர்.
 
ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க் கட்சிகள் ஆளும் மாநில கவர்னர்களின் ஒவ்வொரு அரசு - அரசியல் நிகழ்வுகளின் தலையீட்டால், அதிகார வரம்பு மீறல்களால் அவர்கள் வேறுவிதமாகப் பேசும் பொருளாகியுள்ளனர். எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் எல்லாம் கவர்னர்களை வைத்து காங்கிரசைப் போல் ஆட்சிக் கவிழ்ப்பு என மிரட்டாமல், சட்டமன்ற அதிகாரத்தை சிறுமைப்படுத்தி அல்லது கவர்னர் அதிகாரத்தை மேலானதாக நிலைநிறுத்தியாவது அம்மாநில அரசியலில் காலூன்ற பாஜக முயல்கிறது. அதில் பின்னடைவு - சிக்கல் ஏற்பட்டால் வித்யாசாகர் போன்று அம்மாநிலங்களிலிருந்து திரும்பப் பெற்று வேறு ஒருவரை வைத்து அதே முயற்சியை செய்கிறது.
 
ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பலுக்கு இரட்டை ஆட்சி முறை அல்லது அதிபர் ஆட்சி முறை அல்லது நேர்மறை அரசியல், எதிரி முகாம் நபர்கள், எதிர்க் கருத்து என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது; காவி ஆட்சி வருவதற்காக ஆளும்வர்க்கம் சொல்கிற மாண்பையும் சிதைப்பார்கள், எந்த முறையையும் ஏற்பார்கள் - எதிர்ப்பார்கள். அவர்களைப் பொருத்தவரை கவர்னர் - ஜனாதிபதி, முதல்வர் - பிரதமர், நீதிபதி எல்லோரும் அவர்களுக்கு சேவகர்களே. சபரிமலை விவகாரம், பன்வாரிலால் புரோகித் -  நிர்மலா தேவி - நக்கீரன் கோபால் கைது, சின்மயினுடைய பாலியல் குற்றச்சாட்டு எல்லாம் அவர்களுக்கு துருப்புச்சீட்டுகளே.
 
*******
 
நிர்மலா தேவி விவகாரத்தில் தாமே முன் வந்து விசாரணை கமிட்டி அமைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பல்கலைக் கழகத் துணைவேந்தர் நியமனத்தில் முன்பு ஊழல்கள் நடந்ததாக கூறியதற்கு ஏன் ஒரு விசாரணை கமிட்டி அமைக்கவில்லை? மாணவி சோபியா, எம்எல்ஏ கருணாஸ், நக்கீரன் கோபாலையும் கைது செய்த போலீசு எஸ்.வி.சேகரையும், எச்.ராஜாவையும் ஏன் இதுவரை கைது செய்யவில்லை?.... இதுபோன்ற முரண்பாடுகளை நாம் பலவாறாக கேள்வி எழுப்பினாலும் எவ்விதப் பயனும் இருக்கப் போவதில்லை.
 
ஏனெனில் இத்தகைய முரண்பட்ட நடவடிக்கைகள் மூலம்தான் இந்துத்துவ இந்தியாவையும் அகண்ட பாரதத்தையும் அடைய முடியும் என ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலுக்கு தெரியும்; தெரிந்தே அதை செய்கிறது.
 
எதிர்மறை அரசியல் வழியானாலும் ஒவ்வொரு நகர்வில் தோல்வியானாலும் பாஜக தமிழகத்தில் எல்லோரும் அறிந்த கட்சி என்பதை முதலில் உருவாக்கி,  பின்னர் ஏதோ ஒரு நெருக்கடியில் அல்லது மத நம்பிக்கை பிரச்சினையில் அல்லது மதக் கலவரச் சூழலில் வேறு வழியில்லாமல் தாமாக மக்களை பாஜக பக்கம் வந்து நிற்க வைப்பது என்பதே அவர்களது திட்டம்.
 
- ஞாலன்
Pin It