மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து ஆசிமானந்தா உட்பட 5 பேரை விடுவித்து ஹைதராபாத்தில் உள்ள நாம்பல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. நிச்சயம் இந்த வழக்கில் இருந்து ஆசிமானந்தா விடுவிக்கப்படுவார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஒருவேளை நீதிபதி நேர்மையாக நடந்து, ஆசிமானந்தாவுக்கு தண்டனை வழங்கி இருந்தால் நிச்சயம் அவர் மர்மமான முறையில் உயிரிழக்க நேர்ந்திருக்கும். காவி பயங்கரவாதிகள் சம்மந்தப்பட்ட வழக்கை விசாரிக்கும் ஒவ்வொரு நீதிபதியும் நீதியைக் காப்பாற்றப் போராடுகின்றார்களோ இல்லையோ, தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டி இருக்கின்றது. ஆசிமானந்தாவை மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவித்த என்ஐஏ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ரவீந்திரா ரெட்டி, தீர்ப்பு கொடுத்த சில மணி நேரங்களில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். அதுவும் தன்னுடைய ராஜினாமாவுக்கும், தான் கொடுத்த தீர்ப்புக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று குறிப்பிட்டு. இதில் இருந்தே இந்தத் தீர்ப்பு மிரட்டி வாங்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதை நாம் உணர்ந்து கொள்ளலாம். மனசாட்சிக்கு விரோதமாக ஒரு பயங்கரவாதியை விடுவித்த தன்னுடைய நிலையை எண்ணி மேற்படி நீதிபதி அவர்கள் குற்ற உணர்வின் காரணமாகவே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார்.
 
aseemanand நீதிபதிகளை காவி பயங்கரவாதிகள் நேரடியாக மிரட்டி தங்களுக்குச் சாதகமாக தீர்ப்புகளை வாங்குவது மட்டுமின்றி, தங்களுடைய கூலிப்படையாக உள்ள சிபிஐ, என்.ஐ.ஏ போன்றவற்றின் மூலமும் மிரட்டி நீதியை வாங்குகின்றார்கள். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான ராணுவ அதிகாரி கர்னல் புரோகித்துக்கு எதிராக, அரசுத் தரப்பில் ஆஜரான நீதிபதி ரோகினி சாலியன் தன்னிடம் இந்த வழக்கில் மென்மையான போக்கைக் கையாளுமாறு என்.ஐ.ஏ அதிகாரி வேண்டுகோள் வைத்தாக குற்றம் சாட்டினார். இதனால் இந்த வழக்கில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால் புரோகித்துக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. ஒருவேளை பிணை வழங்காமல் இருந்திருந்தால் நீதிபதி லோயாவுக்கு ஏற்பட்ட கதிதான் நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கும், ஏ.எம். சாப்ரிக்கும் ஏற்பட்டிருக்கும்.
 
 காவி பயங்கரவாதிகள் மீது என்.ஐ.ஏ நீதிமன்றங்களில் நடந்த அனைத்து வழக்குகளிலும் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதுதான் கடந்தகால வரலாறாக உள்ளது. 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்து மூன்று பேர் கொல்லப்பட்டனர்,17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக ஆசிமானந்தா உட்பட 13 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இருந்தும் ஆசிமானந்தா உட்பட 7 பேரை ஜெய்பூர் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. 3 பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது. இன்னும் வழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று பேரை பத்து வருடங்களாக என்.ஐ.ஏ தேடிக்கொண்டே இருக்கின்றது. இதுதான் என்ஐஏ நீதிமன்றங்களின் நிலை. ஆசிமானந்தாவுக்கு மட்டும் அல்லாமல், பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் வழக்கிலும் என்ஐஏ இதே போலத்தான் நடந்துகொண்டது.
 
  மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தனது இறுதி அறிக்கையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஆறுபேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை திரும்பப் பெற்றது. பிரக்யா சிங் தாக்கூர் மீதான குற்றச்சாட்டை என்.ஐ.ஏ கைவிட்டது முதல் முறையல்ல ஏற்கெனவே இது நடந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்பவன் 2007 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பிரக்யா சிங் தாக்கூர் பின்னர் இந்த வழக்கில் இருந்து என்.ஐ.ஏ வால் விடுவிக்கப்பட்டார். இந்த சுனில் ஜோசியும் காவி பயங்கரவாதிகள் நடத்திய பல குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியாவான். இவன் பிரக்யா சிங் தாக்கூரிடம் தவறாக நடக்க முயன்றதால்தான் கொல்லப்பட்டதாக என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
 
 மேலும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு சம்மந்தமாக குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீது மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை நாசிக் நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு நாசிக் நீதிமன்றம் சொன்ன காரணம், மகாராஷ்டிரா குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும் என்றால் அந்த நபர் ஏற்கெனவே இரு முக்கிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் பிரக்யா சிங் தாக்கூர் மீது அப்படி எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாததால் அவரை மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என நாசிக் தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 
 2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மட்டுமே பிரக்யா சிங் தாக்கூர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் அதற்குமுன் 2006 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஏறக்குறைய 37 பேர் கொல்லப்பட்டனர். முதலில் இந்தக் குண்டுவெடிப்பு தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தால் நடத்தப்பட்டது என கூறி அப்பாவி முஸ்லீம்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஆசிமானந்தா கைது செய்யப்பட்ட போதுதான் காவி பயங்கரவாதிகள் எவ்வளவு அபாயமானவர்கள் என வெளி உலகத்திற்குத் தெரியவந்தது. ஆசிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் 2006 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு மட்டும் அல்லாமல், 2007 ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு போன்றவையும் காவிக் கூட்டத்தால் திட்டமிட்டே நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டான்.
 
 இதற்குப் பின்தான் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக அப்போது கருத்து தெரிவித்த ராவின் முன்னாள் தலைவர் பி.ராமன் "2006ம் ஆண்டு முதல் நடந்த அனைத்துத் தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளிலும் மதவாதமும், அரசியலும் புகுந்து விசாரணையையை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன. தவறான குற்றச்சாட்டின் பேரில்தான் பலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி முறையான உருப்படியான ஆதாரம் எதையும் விசாரணை அமைப்புகள் வைத்திருக்கவில்லை. மாறாக இந்தக் கைதுகளை அரசியல் மயமாக்கி அதன் மூலம் லாபம் அடையும் முயற்சிகள் தான் நடந்து வருகின்றன" என உண்மையைப் போட்டுடைத்தார்.
 
 தற்போது மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிமானந்தா ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் மிக முக்கியமான நபர் அவர். முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் இன் கொலைவெறியை இவர் மூலமாகவே ஆர்.எஸ்.எஸ் தீர்த்துக்கொண்டது. அதனால் தான் நீதித்துறையை மிரட்டி பணியவைத்து அவரை விடுவித்திருக்கின்றது மோடி அரசு.
 
 மேற்கு வங்கத்தில் இருக்கும் ஹூக்ளி மாவட்டத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்த ஆசிமானந்தாவின் இயற்பெயர் நாபாகுமார் சர்க்கார் என்பதாகும். முதுகலை இயற்பியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது ஈடுபாடு கொண்ட ஆசிமானந்தவை இப்படி கொலைவெறியனாக மாற்றியது விவேகானந்தரின் சிந்தனைகள் தான். “ஹிந்துமதத்தை விட்டு வெளியே ஒருவன் செல்லும் போது ஒரு ஆள் குறைவது மட்டும் நடக்கவில்லை. எதிரிகள் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதும் நடக்கிறது” என்ற விவேகானந்தரின் இந்துத்துவா சிந்தனையைப் படித்த ஆசிமானந்தா தன்னை முழுவதுமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக ஒப்படைத்துக் கொண்டார். தன்னுடைய 31 ஆம் வயதில் சந்நியாசி ஆனார். அன்று முதல் தன்னுடைய நாபாகுமார் சர்க்கார் என்ற பெயரை ஆசிமானந்தா என்று மாற்றிக்கொண்டார். 
 
‘ஆசிமானந்தம்’ என்றால் எல்லையற்ற ஆனந்தம்’ என்று பொருளாம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பழங்குடியின பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற அமைப்பில் தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவர். இதன் மூலம் பழங்குடியின மக்கள் மதம் மாறாமல் தடுத்ததாகவும், கிறித்தவ மிஷனரிகளின் செல்வாக்கை தான் குறைத்தாகவும் அவரே பெருமை பட்டுக் கொள்கின்றார். இவரின் அடிப்படையான நோக்கம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது கிடையாது. அவர்கள் வேறு மதம் நோக்கி செல்லக்கூடாது என்பதுதான்.
 
 இப்படி வனவாசி கல்யாண் ஆசிரமத்தில் சேர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த ஆசிமானந்தா ‘கார்வாப்சி’ செய்வதில் புகழ்பெற்றவர். ஆயிரக்கணக்கான மக்களை இவர் தாய்மதம் திரும்புதல் என்ற பெயரில் இந்து மதத்திற்கு மாற்றியிருக்கின்றார். இதனால் இவர் பெயர் ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்தில் மிகப்பிரபலம். வெறும் மதத்தைப் பரப்புதல் என்ற எல்லையில் இருந்து முஸ்லிம் மக்களைப் பழிவாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரீஷத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரக்கியா சிங் தாகூர், இந்தூர் மாவட்ட முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுனில் ஜோஷி ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினார். இதன் படி 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று டெல்லியில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்ட சம்ஜெளதா விரைவு வண்டியில் குண்டு வைத்தனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். அடுத்து 2007 ஆம் ஆண்டு மெக்கா மசூதி அருகே இவர்கள் வைத்த குண்டுவெடித்து 11 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்க்காவில் வெடித்த குண்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2008 இல் மாலேகானில் நடந்த இரு தாக்குதல்களில் மொத்தம் 37 பேர் உயிழந்தனர். 
 
 இந்தக் குண்டுவெடிப்புகள் அனைத்தும் மோகன் பகவத்தின் ஒப்புதலோடு செய்யப்பட்டது என்பதை கேரவன் ஆங்கில இதழுக்கு அளித்த தன்னுடைய பேட்டியில் ஆசிமானந்தா கூறியிருக்கின்றார். மோகன் பகவத் தன்னைச் சந்தித்து “நீங்கள் இதைச் செய்தால் நாங்கள் சற்று இளைப்பாறுவோம். எந்தத் தவறும் அதன் பின் நடக்காது. அது கிரிமினல் வழக்காக மாறாது. இதை நீங்கள் செய்தால் அதன்பின் ‘ஒரு குற்றத்திற்காகவே நாம் இந்தக் குற்றத்தைச் செய்தோம் என்று மக்கள் கூற மாட்டார்கள். இது நமது தத்துவத்தோடு இணைக்கப்பட்டது. இது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. தயவு செய்து இதைச் செய்யுங்கள். உங்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள் உண்டு ” என்று தன்னிடம் கூறியதாக ஆசிமானந்தா தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் இன் ஆசியுடன் நடத்தப்படும் கலவரங்களும் குண்டு வெடிப்புகளும் ஒருநாளும் சட்டப்படி தண்டிக்க முடியாதவை என்பதைத்தான் ஆசிமானந்தவின் விடுதலை காட்டுகின்றது. எப்படி மோடி குஜராத் கலவர வழக்கில் இருந்து பல அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தும் மோசடியான முறையில் விடுவிக்கப்பட்டாரோ, அதே போலத்தான் தற்போது ஆசிமானந்தாவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
 இந்திய நீதித்துறைக்கு இது போதாத காலம். மிக முக்கியமான வழக்குகளை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மட்டுமே விசாரிக்கின்றது அவை மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்கப்படுவதில்லை, வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகின்றது. அவர் தனக்கு விருப்பமான அமர்வுக்கே வழக்குகளை ஒதுக்குகின்றார் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். பார்ப்பன ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு கூட அப்படித்தான் மாற்றப்பட்டதாக நீதிபதி செலமேஸ்வர் பகிரங்கமாக குற்றச்சாட்டினார். இந்திய நீதிமன்றங்கள் அனைத்தும் பார்ப்பன பாசிசத்துக்கு இரையாகிவிடும் பெரும் அபாய சூழல் நிலவுகின்றது. அரசியல் அமைப்புச் சட்டப்படி, தேர்ந்தெடுக்கப்படும் அரசு செயல்படுவதை உத்திரவாதப் படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. ஆசிமானந்தாவை நீதிமன்றம் விடுவித்தது வெட்கக் கேடான செயலாகும். இதன் மூலம் காவி பயங்கரவாதம் சட்டப்பூர்வமான அனுமதியை இந்தியாவில் பெற்றுவிடும் அபாயம் மேலோங்கி இருக்கின்றது. உண்மையில் ஜனநாயக மதிப்பீடுகளை காக்க விரும்பும் ஒவ்வொருவரும் இந்திய நீதித்துறையை சூழ்ந்திருக்கும் காவி பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டிய சூழ்நிலையை இதுபோன்ற நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
 
- செ.கார்கி
Pin It