கட்டலோனியா மக்களின் போரட்ட வரலாறு :

கட்டலோனிய மக்கள் தங்கள் மீதான ஒடுக்குகுமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்துள்ளனர். தங்களது வளமான மொழியையும் தொன்மையான பண்பாட்டையும் காக்கும் பொருட்டு தங்கள் இன்னுயிர் ஈந்துள்ளனர். ஸ்பெயினின் காலனி நாடாக இருந்த காலத்தில் 1913 ஆம் ஆண்டிலேயே நான்கு கட்டலோனியா மாநிலங்கள் இணைந்து தமக்கென பொது நல அவையத்தை அமைத்துக் கொண்டன.

catalonia agitation

1922 ஆம் ஆண்டில் கட்டலோனியா விடுதலை இயக்கம் தோன்றுகிறது. ஸ்பெயின் ராணுவத்தில் பணியாற்றிய பிரான்சிஸ் மாசி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஸ்பானிய அரசிடமிருந்து விடுதலை பெறுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கியது. பின்னாட்களில் பல இயக்கங்கள் சேர்ந்து கட்டலோனியா குடியரசு இயக்கத்தை உருவாக்கினர்.

1930 ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இந்த இயக்கம் பெரு வெற்றி பெற்றது. தனிநாடு கேட்டு வந்த இந்த இயக்கம் ஸ்பெயின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தன்னாட்சி பெற்ற கட்டலோனிய குடியரசு அமைத்துக் கொண்டது.

சர்வதிகார ஆட்சி அமைந்த பின்பு தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டதையும் 1980 ம் ஆண்டு மீண்டும் தன்னாட்சி அதிகாரம் மீட்டுப்பெறப்பட்டத்தைையும் ஏற்கனவே பார்த்தோம்.

1980 ம் ஆண்டில் அமைக்கப் பெற்ற நாடாலுமன்றம் ஸ்பெயின் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. கேட்டலோனியா மக்களின் சமூக, அரசியல் பொருளாதாரத் திட்டங்களை தாங்கள் நினைத்தது போல் நிறைைவேற்றிக் கொள்ள முடியவில்லை. இதனால் கட்டலோனியா மக்கள் வீரியமிக்க போராட்டங்களை நடத்தினர். இதனால் ஸ்பெயின் அரசு 'தேசத்தகுதி' கொண்ட தன்னாட்சி உரிமை கொடுக்கப்படும் என்று அறிவித்தது.

அந்த அறிவிப்பு வெளியான உடன் ஸ்பெயின் உயர்நீதிமன்றம் 'தேசத்தகுதி' கொண்ட தன்னாட்சி உரிமை என்பது அரசிலமைப்புக்கு புறம்பானது என்று கூறி இதனைத் தடை செய்தது. இது தான் இன்று கட்டலோனியா விடுதலைப் பிரகடனம் வரை கொண்டுவந்து சேர்த்துள்ளது.

கட்டலோனிய தனி நாட்டு கோரிக்கைக்கு ஏன் சென்றது?

2008 ல் அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி ஐரோப்பிய யூனியனைக் கடுமையாகப் பாதித்தது. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் கடன்களால் திணறின. அயர்லாந்து, போர்ச்சுக்கல், கிரீஸ் நாடுகள் திவாலாகிப் போனது . அந்நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராாஸ் ஐரோப்பிய நாட்டு நிதி அவையத்தின் மூலம் கடன் பெற்றுத் தான் நாட்டையே ஆண்டு கொண்டிருக்கிறார். அந்நாடுகளை தொடர்ந்து இத்தாலியும் ஸ்பெயினும் கடன் நெருக்கடியில் சிக்கின.

ஸ்பெயினை பொருளாதார நெருக்கடி கடுமையாகத் தாக்கியது வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. வறுமையும் தாண்டவமாடியது. 55 விழுக்காடு இளைஞர்கள் வேலையில்லாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். 22 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டு நுழைவாயிலிலும், 25 விழுக்காடு மக்கள் அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. தொழிற்சாலைகள் மூடப்பட்டு பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஓய்வுதியம் குறைக்கப்பட்டுள்ளது. நலதிட்டங்கள் பெருமளவில் நிறுத்தப்பட்டுவிட்டன மக்கள் நல நிதிகள் பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டன. தொழிலாளர் சம்பளங்கள் வெட்டபட்டு விட்டன. வரி உயர்த்தப்பட்டுள்ளது. இப்படியாக ஸ்பெயின் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் ஸ்பெயினுக்கு கட்டலோனியா முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்பெயினுக்கு கிடைக்கும் பொருளாதரத்தில் 25 விழுக்காடு கட்டலோனியாவில் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால் வரி குறைவாக செலுத்தும் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு தான் கட்டலோனியாவிற்கும் கிடைக்கிறது. எனவே கட்டலோனியாவும் நெருக்கடியை சந்திக்கிறது.

ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் வெளியேறியது கூட கட்டலோனியாவிற்கும் ஒரு உந்துதலைக் கொடுத்துள்ளது. ஐரோப்பா யூனியனில் நீடித்தால் நாமும் நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்வோம் என்று நினைத்த பிரிட்டன் பிரிக்சிட் தேர்தல் நடத்தி வெளியேறியது போல ஸ்பெயினிலிருந்து நாமும் விலகிக் கொண்டால் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கட்டலோனியா நினைக்கிறது. இதனால் தான் பொருளாதார நெருக்கடி தொடங்கிய 2008 க்கு பிறகு கட்டலோனியா மக்கள் தனி நாட்டுக் கோரிக்கையை வலுவாக வைத்து வருகின்றனர்.

2009 ஆண்டு முதல் 2011 வரை பல லட்சக்கணக்காண மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினர் 2010 ஜூலை 10ஆம் தேதி பார்சிலோனா நகரத்தில் கட்டலோனிய கலாச்சார அமைப்பு நடத்திய பேரணியில் 10 லட்சம் மக்கள் பங்கெடுத்து கொண்டனர்.

இப்போது நடந்ததைப் போலவே இதுக்கு முன்பாக ஒரு வாக்கெடுப்பு கட்டலோனியாவில் நடத்தப்பட்டது. 2014இல் இப்போது நடந்தது போலவே தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் 81 விழுக்காடு மக்கள் கட்டலோனியா விடுதலையை ஆதரித்தனர். ஆனால் 35 விழுக்காடு மக்கள் மட்டுமே ஆதரித்தாகக் கூறி இந்த வாக்கெடுப்பை ஸ்பெயின் நிராகரித்தது. இதனால் ஸ்பெயின் மீதான கோபம் கட்டலோனியா மக்களுக்கு அதிகரித்தது. அது தற்போது அக்டோபர் 1ந் தேதி தேர்தலில் வந்து முடிந்துள்ளது.

தற்போது நடந்த தேர்தலில் 92 விழுக்காடு மக்கள் ஸ்பெயினில் இருந்து பிரிந்து விடுவதற்காக ஆதரவாக வாக்களித்துள்ளதால் கட்டலோனியா அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் தனி நாடாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

அடுத்து என்ன...?

(தொடரும்)