அழுகி நாறிக் கொண்டிருக்கும் இந்திய தேர்தல் அரசியல் மீதான மக்களின் கோபத்தைத் தணிப்பதற்கு தேர்தல் ஆணையமும், உச்சநீதி மன்றமும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றன. எதைத் தின்றால் பித்தம் தீரும் என்ற நிலைக்கு இந்திய ஆளும்வர்க்கத்தை இந்தியாவின் கொந்தளிப்பான சூழல் மாற்றியிருக்கின்றது. இந்திய மக்களை சுரண்ட வேண்டும், பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவின் வளங்களை தாரை வார்க்க வேண்டும், அதன் மூலம் அதற்கு மாமா வேலை பார்த்த ஒவ்வொரு அரசியல்வாதியும், அவனுக்கு நல் ஆலோசனைகளை கொடுத்த அதிகாரவர்க்கமும் கோடிகளில் கொழுக்க வேண்டும், ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் இதற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி மட்டும் செய்யும் நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது. அதற்காக அவ்வப்போது சில அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது போல பாவ்லா செய்து மக்களின் கோபத்தைத் தணிக்க வேண்டும், இல்லை என்றால் பிரச்சினையின் கவனத்தை வேறு திசையில் மடைமாற்ற வேண்டும். இந்த உத்தியைத்தான் சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடித்து வருகின்றது.
குற்றப்பின்னணி உடைய எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த பாஜகவின் செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபத்யாய் என்பவர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் இந்த முடிவை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்த அஸ்வின்குமார் உபத்யாய் பாஜகவைச் சேர்ந்தவர் என்பது மிகப்பெரிய முரண்நகை. அவரின் கோரிக்கை என்பது குற்றப்பின்னணி உடைய நபர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்பது மட்டும் அல்லாமல், அப்படிப்பட்ட நபர்கள் அரசியல் கட்சி நடத்தவோ, இல்லை கட்சிப் பதவி வகிக்கவோ அனுமதிக்கக்கூடாது என்பதும்தான். அப்படிப் பார்த்தால் ஒருவர் கூட பிஜேபியில் மிஞ்சமாட்டார்கள். அப்படி இருந்தும் இப்படி ஒரு வழக்கை தொடுக்க அஸ்வின்குமார் உபத்யாய்க்கு எப்படி எண்ணம் உதித்தது என்றால் நமது அரசு கட்டமைப்பின் மீது உள்ள அபரிமிதமான நம்பிக்கைதான்.
மோடி, அமித்ஷா, பிரக்யாசிங் தாகூர், அசீமானந்த் போன்றவர்கள் எப்படி தங்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் இருந்து விடுதலையானர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அரசு கட்டமைப்பு முழுவதும் காவிமயமாக்கப்பட்டு நெடு நாட்கள் ஆகிவிட்டது. இப்போது அதன் முழு நேர வேலை என்னவென்றால் இந்தியாவில் காவிப் பயங்கரவாதம் வளர்வதற்குத் தடையாக உள்ள அனைவரையும் ஒழித்துக் கட்டுவதுதான். அப்படி ஒழித்துகட்ட ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் நடத்தும் அனைத்து அக்கிரமங்களுக்கும் சட்ட பாதுகாப்பு வழங்கும் பணியை அரசு இயந்திரங்கள் முழுவதும் செய்துவருகின்றன. அவர்களின் பணி முற்றுப் பெற்றுவிட்ட தைரியம்தான் அஸ்வின்குமார் உபத்யாய்யை வழக்கு தொடங்க வைத்திருக்கின்றது. பிஜேபி ஆளும் மகாராஷ்டிரா சட்டசபையில் 50 சதவீத உறுப்பினர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள் என்பதை பார்க்கும் போது வழக்கு தொடுத்தவரின் யோக்கியதையை நாம் தெரிந்துகொள்ளலாம்.
இது எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் தேர்தலில் குற்றப்பின்னணி உடையவர்கள் வாழ்நாள் முழுவதும் போட்டியிட தடைவிதிக்கப்பட்டால், தேர்தல் அரசியல் புனிதமாகிவிடுமா என்ற கேள்வியும் எழுகின்றது. கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் ஈடுபடும் நபர்கள் குற்றவாளி என விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலே அவர்களின் எம்.பி., எம்.எல்.ஏ பதவிகள் உடனே ரத்தாகும் என்று ஏற்கெனவே உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவியை இழந்தார். மக்கள் பிரநிதித்துவ சட்டம்8(4) பிரிவைப் பயன்படுத்தி அதாவது விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்டாலும், தண்டணை அறிவிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் மேல்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து பதவியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றிருந்த வழியை உச்சநீதி மன்றம் லோக்பிரஹாரி என்ற தன்னார்வ அமைப்பின் செயலாளர் எஸ்.என்.சுக்லா மற்றும் லில்லி தாமஸ் தொடர்ந்த வழக்கில் மேல் முறையிட்டு மனு நிலுவையில் இருந்தாலும் வழக்கு முடியும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டாலே எம்.பி, எம்.எல்.ஏ பதவி தானாகவே ரத்தாகும் என்று தீர்ப்பளித்தது.
2 ஆண்டுகளுக்கு மேல் குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது போன்ற விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே வைத்திருக்கின்றது. அப்படி இருந்தும் தேர்தலில் குற்றப்பின்னணி உடைய நபர்கள் போட்டியிடுவது குறைந்திருக்கின்றதா என்று பார்த்தால் உண்மையில் அதிகரித்துதான் இருக்கின்றது. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நபர்களில் 462 பேர் மீது குற்றவழக்குகள் இருந்தது. இது 2009 ஆம் ஆண்டு 1158 ஆகவும், 2014 ஆம் ஆண்டு 1398 ஆகவும் உயர்ந்தது. இப்போதுள்ள நாடாளுமன்றத்தில் 542 எம்பிக்களில் 185 மீது குற்ற வழக்குகள் உள்ளது. தமிழக சட்டசபையில் உள்ள எம்.ஏல்.ஏக்களில் 30 சதவிதத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றவழக்குகள் உள்ளன. எனவே குற்றவழக்குகள் ஒருவர் மீது உள்ளதாலேயே அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைவந்தால் இந்தியாவில் அனேகமாக ஒருவருமே தேர்தலில் நிற்கமுடியாத சூழ்நிலைதான் வரும்.
பொறுக்கி, ரவுடி, சாதிவெறியர்கள், மதவெறியர்கள் மட்டும்தான் அரசியலில் போட்டியிட முடியும் என்ற சூழ்நிலை இந்தியாவில் ஏற்பட்டு நெடுநாட்கள் ஆகிவிட்டன. மக்களையும் இந்த ஊழல் அரசியல்வாதிகள் தங்களுடன் சேர்த்தே ஊழல்மயப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். ஒரு மாற்று அரசியலை நோக்கி செல்லவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இந்த மக்கள் மனதில் இருந்து அனேகமாக மறைந்துவிட்டன. அவர்கள் கோபம் குறைவாக இருந்தால் காங்கிரசை தேர்ந்தெடுப்பார்கள். கோபம் கொஞ்சம் அதிகமாக இருந்தால் மோடி போன்ற பாசிஸ்ட்டுகளைத் தேர்ந்தெடுத்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்வார்கள். பிறகு கோபத்தில் கொலைசெய்துவிட்டு துக்கப்படும் ஒரு சராசரி மனிதனைப் போல மோடியைத் தேர்தெடுத்து மிக மோசமான தவறை செய்துவிட்டோமே என்று வருத்தப்படுவார்கள். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டும் ஆதரிக்க மாட்டோம் என்பதில் மிகத் தெளிவாக இருப்பார்கள். இந்திய மக்களுக்கு எப்போதுமே பாசிசத்தின் மீது ஒரு ஆழமான பிடிப்பு இருந்துகொண்டேதான் இருக்கின்றது.
அதனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொண்டுவரப்படும் எந்தத் தேர்தல் சீர்திருத்தமும் பெரிய அளவிற்கு மாற்றத்தைக் கொண்டுவரமுடியாது என்பதுதான் உண்மை. ஒரு அரசியல்வாதியின் மீது உள்ளூர் காவல்நிலையத்தில் புகார்கொடுக்கவே முடியாது. அப்படியே புகார்கொடுத்தாலும் அது நீதிமன்றத்திற்குப் போய் வழக்கில் தீர்ப்பு வருவதற்குள் வழக்கு தொடுத்த நபரோ, இல்லை வழக்கில் சம்மந்தப்பட்ட நபரோ செத்துவிடும் சாத்தியம்தான் மிக அதிகமாக உள்ளது. உண்மையில் தேர்தல் ஆணையத்திற்கும், உச்சநீதி மன்றத்திற்கும் தேர்தலை நேர்மையாக நடத்தவேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமாவது இருந்தால் மக்கள் பிரதிநிதிகள் சரியாக தங்கள் கடமையைச் செய்ய தவறும் பட்சத்தில் அவர்களைத் திருப்பி அழைக்கும் உரிமையை என்றோ கொடுத்திருக்கும். ஆனால் அதை ஒருநாளும் இந்தத் தேர்தல் ஆணையமோ, இல்லை உச்சநீதிமன்றமோ, இல்லை பாராளுமன்றமோ செய்யப்போவதில்லை. காரணம் அதன் வர்க்கத்தன்மை. இது பெருமுதலாளிகள் என்ற குற்றக்கும்பலுக்கான ஆட்சி. அவர்களின் நலன் காக்கும் ஆட்சி. அப்படிப்பட்ட ஆட்சியைக் காப்பாற்ற தேர்ந்த குற்றவாளிதான் தேவைப்படுகின்றார்கள். ஒரு யோக்கியனுக்கு இந்த அமைப்பு முறையில் வேலையே இல்லை என்பதுதான் உண்மை.
எனவே தேர்தல் ஆணையம் செய்யும் எந்த ஒரு சீர்திருத்தமும் உண்மையில் நெருக்கடியை சமாளிக்கச் செய்யும் தந்திரமே ஒழிய உண்மையில் ஜனநாயக விழுமியங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தெல்லாம் செய்வதில்லை. ஒட்டுமொத்த அமைப்பும் குற்றக்கும்பலால் சூழ்ந்திருக்கும் போது அரசியல்வாதிகளை மட்டும் தனியே பிரித்து, குற்றப்பின்னணி உடையவர்கள் என்று முத்திரைகுத்த முயற்சிப்பது ஏமாற்றும் வேலையே ஆகும். அதுமட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் சண்டித்தனமாக ஆளும் பிஜேபியின் பினாமி குற்றக்கும்பலுக்கு ஆதரவாக ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கும் குற்றக்கும்பலின் எடுபிடி அமைப்பான தேர்தல் ஆணையத்திற்கு இதை சொல்லக் கூட யோக்கியதை இல்லை என்பதுதான் நமது கருத்து.
- செ.கார்கி