கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். அது உலக நடப்புகளை நன்றாக கற்று கல்வியில் தேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல் ஊழல் செய்து, ஊரை அடித்து உலையில் போட கற்றுத் தேர்ந்தவர்களுக்கும் நன்றாகப் பொருந்தும். அதிலும் அதிமுக குற்றக்கும்பலுக்கு இன்னும் நன்றாகப் பொருந்தும். கட்சி நடத்துவதே கொள்ளையடிப்பதற்குத்தான் என்ற சித்தாந்தத் தெளிவோடும், எதற்கும் அஞ்சாத ஆன்ம பலத்தோடும் கட்சி நடத்திக்கொண்டிருப்பவர்கள் அவர்கள். எத்தனை முறை சிறைக்குப் போனாலும், எத்தனை முறை வருமான வரி சோதனைகளை எதிர்கொண்டாலும், அவை அனைத்தையும் தங்களது தேர்ந்த கொள்ளையடிக்கும் திறனுக்குக் கிடைத்த வெகுமதியாக கருதி இன்னும் முன்னைவிட திறமையாக நூதனமான முறையில் கொள்ளையில் ஈடுபடக்கூடியவர்கள். ஒரு தொழிற்முறை திருட்டுக்கும்பலுக்கு உள்ள எல்லா வகையான தகுதியும் திறமையும், தந்திரமும் அதிமுக குற்றக் கும்பலுக்கு உள்ளது. அது தான் மட்டும் கொள்ளைக்கார கும்பலாய் இருப்பதுடன் தன்னைச் சார்ந்தவர்களையும் தன் ஜோதியில் அய்க்கியப்படுத்தி  யாருமே தன்னைப் பார்த்து “நீ என்ன யோக்கியமா?” என்று கேள்வி கேட்கபடாதபடிக்குச் செய்வது.

sasikala natarajan

   உச்ச நீதி மன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என தீர்ப்புக் கொடுத்தது. இந்தத் தீர்ப்பை பெற நடத்தப்பட்ட சட்டப் போராட்டம் என்பது உலக வரலாற்றில் வேறு எங்காவது எந்த வழக்குக்காவது நடந்திருக்குமா என்று தெரியாது. வாய்தா மேல் வாய்தா வாங்கி, சாட்சிகளை மிரட்டி, வழக்கறிஞர்களை மிரட்டி, நீதிபதிகளை மிரட்டி, வழக்கு ஆவணங்களைத் திருத்தி, இறுதியாக உயர்நீதி மன்ற நீதிபதியையும், உச்சநீதி மன்ற நீதிபதியையும் விலைக்கு வாங்கி இந்திய சட்ட அமைப்பையே கேலிக்கூத்தாக்கி சிரிப்பாய் சிரிக்க வைத்தவர்கள் ஜெயலலிதாவும், சசிகலாவும். ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி பிஜேபி அதிமுக இடையேயான அதிகாரப் போட்டியில் அதிமுகவை கபளீகரம் செய்யும் நோக்கத்துடன் சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டார்.  நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பை உச்சநீதி மன்றம்  சசிகலா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருந்த சமயத்தில் உறுதி செய்தது. இதன் மூலம் நீதித்துறையில் பாப்பாத்தி ஜெயலலிதாவுக்கு இருந்த செல்வாக்கு மேலும் ஒரு முறை உறுதிசெய்யப்பட்டது.

 தன்னை பிஜேபி அரசு திட்டமிட்டுப் பலிவாங்கியதை ஜீரணிக்க முடியாத சசிகலா ஜெயலிதாவின் சமாதியில் ஓங்கி அடித்து, சபதம் ஏற்றுச் சிறைக்குச்சென்றார். ஆனால் அவர் என்ன சபதம் செய்தார் என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் என்ன சபதம் செய்தார் என்பது இப்போது வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கின்றது. “இத்தனை நாள் தமிழகத்தைக் கொள்ளையடித்து ஆயிரக்கணக்கான கோடிகள் சொத்து சேர்த்து, கொட்டம் அடித்துக்கொண்டிருந்த என்னை சிறையில் போட்டால் திருந்திவிடுவேன் என்று நினைக்கின்றார்கள். ஆனால் பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்கள். அதே போல நான் எங்கு சென்றாலும் அந்த இடத்தையும் ஊழல்மயமாக்கி ஜெயலலிதாவின் உண்மை சகோதரி நான்தான் என்பதை நிரூபிப்பேன்” என்று ஜெயலிதாவின் சமாதியில் அடித்துச் சத்தியம் செய்துள்ளார் போலும்.

 சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட நாள்முதல் அவருக்குச் சிறப்புச்சலுகைகள் வழங்கப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.  ஆனால் கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் அதைத் திட்டவட்டமாக மறுத்து வந்தார். இந்நிலையில் பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல பரப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு மேற்கொண்ட சிறைத்துறை டிஐஜி ரூபா டி.மவுட்கில் சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வதை அம்பலப்படுத்தி இருக்கின்றார். சசிகலாவிற்கு நவீன சமையலறையும், அதில் உணவு சமைத்துக் கொடுக்க சக கைதிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். மேலும் பார்வையாளர் சந்திக்க வரும் இடத்தில் சோஃபா, நாற்காலிகள், மேஜை, ஏசி போன்ற வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கின்றன. இத்தனை சொகுசு வசதிகளையும் செய்துகொடுக்க சசிகலா கும்பலிடம் இருந்து சத்தியநாராயண மற்றும் சிறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதையும் ரூபா அம்பலப்படுத்தி உள்ளார். சசிகலா சிறையில் இருந்தாலும் போயஸ்தோட்டத்தில் எப்படி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாரோ அதற்குச் சற்றும் குறைவில்லாத வகையில் சிறையில் வாழ்ந்திருக்கின்றார்.

 தற்போது வெளிவந்திருக்கும் ஆதாரங்கள் படி சிறையில் மட்டும் சொகுசுவாழ்க்கை வாழாமல் சிறைத்துறையின் அனுமதியுடன் சிறையைவிட்டு வெளியே போய் ஜாலியாக ஊர்சுற்றிவிட்டுத் தனது சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கிவரும் வீடியோ காட்சிகளும் வெளியாகி இருக்கின்றது. இப்போதுதான்  தெரிகின்றது பல்வேறு கொடும் வழக்குகளில் சிறைக்குச் செல்லும் நபர்கள் ஏன் மிக மகிழ்ச்சியாக ஊடகங்களுக்குக் கைகாட்டி ஆரவாரம் செய்து செல்கின்றார்கள் என்று. சாதாரண ஏழை எளிய மக்களுக்கும், அவர்களுக்காகப் போராடும் போராளிகளுக்கும் தான் சிறை என்பது  தண்டனை. ஆனால் அதிகார ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கும், ஊரை அடித்து உலையில் போட்ட பேர்வழிகளுக்கும் சிறை என்பது ஒரு சுற்றுலாத் தளம். வெளியே இருப்பதைவிட உள்ளே இன்னும் பாதுகாப்போடு அனைத்து வசதிகளோடும் வாழமுடியும் என்ற நம்பிக்கைதான் இது போன்றவர்களை மிக மகிழ்ச்சியாக சிறைக்குப் போக வைக்கின்றது. எலும்புத்துண்டுகளுக்கு ஆசைப்படும் நாய்கள் இருக்கும் வரை எஜமானர்கள் எதற்கும் கவலைப்பட்டுக்கொள்ள அவசியமில்லை என்பதைத்தான் சசிகலாவின் சிறை சொகுசு வாழ்க்கை காட்டுகின்றது.

 சிறையில் சசிகலா மட்டும் அல்லாமல் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதான தெல்கி அங்கே எப்படி சொகுசாக மசாஜ் உட்பட சகல சுகபோகங்களுடனும் வாழ்கின்றார் என்பதற்கான வீடியோவும் வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் நீதியைப் பெறுவதற்கும் ஒரு விலை இருக்கின்றது. அப்படி பெறப்பட்ட நீதியை குப்பைத்தொட்டியில் வீசி எறியவும் ஒரு விலை இருக்கின்றது. சாமானிய மனிதனுக்குத் தான் சட்டம் என்பதும் சிறைச்சாலை என்பதும் கொடூர கனவுகள். ஆனால் அதிகாரபலமும், அரசியல்பலமும், பணபலமும் உடைய மனிதர்களுக்கு அவை எல்லாம் மயிருக்குச் சமம் என்பதை மீண்டும் மீண்டும் நீதித்துறையும், சிறைத்துறையும் நிரூபித்துவருகின்றன.

  ராம்குமார்கள் சிறையில் மர்ம மரணம் அடைவதற்கும் சசிகலா, இளவரசி, தெல்கி போன்றவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கும் இடையேயான இடைவெளியில் தான் இந்திய ஜனநாயகத்தின் போலி முகம் மறைந்துகிடக்கின்றது. நீதி மன்றம், சிறைச்சாலை, காவல்துறை, ராணுவம் போன்ற அரசு அமைப்புகள் அனைத்தும் ஆளும்வர்க்கத்தின் கைப்பாவையாக, கூலிப்படையாக மாற்றப்பட்டுள்ளன. ஊழல் அதிகார முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு எந்தவகையிலும் சளைக்காமல்  ஈடுபடுபவர்கள்தான் அரசு ஊழியர்கள். அப்படிப்பட்ட அமைப்பில் அதை மாற்றாமல் அதற்குள்ளாகவே சீர்திருத்தம் செய்ய முடியும் என நம்பும் உமாசங்கர், சகாயம் போன்றவர்களும், ரூபா போன்றவர்களும்  எப்படி எல்லாம் தூக்கி பந்தாடப்படுவர்கள் என்பதைதான் அரசு நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றது.

டிஐஜி ரூபா அவர்கள் சசிகலா உட்பட கைதிகள் சிறையில் எப்படி எல்லாம் லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார்கள் என அம்பலப்படுத்தியவுடன் நடவடிக்கை எடுப்பது போல நாடகமாடிய சித்தராமையா அரசு, இறுதியில் குற்றவாளிகளை விட்டுவிட்டு முறைகேடுகளை அம்பலப்படுத்திய ரூபா அவர்களை பணியிட மாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளது. ரூபா போன்றவர்களை அதே துறையில் இன்னும் சில வருடங்கள் இருக்கவிட்டால் ஒட்டுமொத்த சிறைத்துறையின் முடை நாற்றத்தையும் ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடுவார் என்ற பயமே ரூபா போன்றவர்களை உடனே பணியிட மாறுதல் செய்ய வைத்துள்ளது.

 இங்கே மக்கள் முன் அனைத்தும் சரியாக இருப்பதுபோல ஒரு போலியான பிம்பம் கட்டமைக்கப்படுகின்றது. சட்டம் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்த்தெல்லாம் வழங்குவது கிடையாது என திரும்ப திரும்ப நம்ப வைக்கப்படுகின்றது. ஆனால் ஆளும்வர்க்கம் கட்டமைக்கும் இந்தப் போலியான பிம்பத்தைக்கூட அதனால் ஒழுங்காக நிலைநிறுத்த முடிவதில்லை. அது அம்பலப்பட்டு, தோற்று, அசிங்கப்பட்டு நிர்வாணமாக நிற்கின்றது. ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய ஊழல்கள் வெளிப்படுவதும், பின்பு அது கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே விடப்படுவதும் நாம் பார்த்துதான் வருகின்றோம். அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் வீட்டிலும், நத்தம் விஸ்வநாதன் வீட்டிலும், மற்றும் ராமமோகன் ராவ் வீட்டிலும், சேகர் ரெட்டி வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனையின் முடிவுகள் என்ன  ஆனது என்று யாருக்காவது தெரியுமா? நிச்சயம் தெரியாது. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் குடியரசு துணைத்தலைவர் தேர்தலிலும் எந்தவித நிபந்தனையும்  இன்றி காவி பயங்கரவாதிகளுக்கு அதிமுக குற்றக்கும்பல் ஆதரவு அளித்ததில்தான் அந்த வருமான வரி சோதனையின் சூட்சமம் ஒளிந்து கிடக்கின்றது. அதைச் சாமானிய மக்கள் உணருவதில்லை.

 நாம் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கலாம், இந்தியை திணிக்கக்கூடாது என சொல்லலாம், மீத்தேன் திட்டத்தையும், ஹைட்ரோகார்பன் திட்டத்தையும் எதிர்த்துப் போர்குரல் எழுப்பலாம். ஆனால் இவை எல்லாம் அதனால் பாதிக்கப்பட போகும் நமக்குத்தான் பெரிய பிரச்சினைகள். அதிமுக குற்றக் கும்பலுக்கோ கொள்ளையடித்த சொத்துக்களை எப்படி பாதுகாப்பது, மேலும் மேலும் எப்படி ஆட்சி முடிவதற்குள் தமிழ்நாட்டை மொட்டை அடிப்பது, அதற்குப் பிரச்சினை வராமல் எப்படி பிஜேபியின் காலை நக்குவது என்பதுதான் பிரச்சினை. அதற்குப் பரிசாக அவர்களுக்கு ஆட்சி நடத்த அனுமதி கிடைக்கலாம், அதன் மூலம் இன்னும் ஒரு மூன்று ஆண்டுகள் தனது கொள்ளையைத் தொடரலாம். ஆனால் நமக்குத் தடியடியும், குண்டர் சட்டமும் தான் பரிசு.

 சசிகலாவை இப்படி சிறையில் சும்மானாச்சுக்கும் அடைத்து வைத்து ஊரை ஏமாற்றுவதைவிட இனி அரசு வெளிப்படையாக இவ்வளவு பணம் கொடுத்தால் இனி குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை கிடையாது என அறிவித்துவிடலாம். இதனால் அரசுக்கு ஒரு பக்கம் பெரிய வருமானம் கிடைக்கும். எப்படி  நாட்டில் நோய்கள் அதிகமானால் மருத்துவருக்கு வருமானம் கொட்டுமோ, அதே போல இனி நாட்டில் குற்றங்கள் அதிகரித்தால் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும். அதற்காக அரசே கூலிப்படைகளை வைத்து நாட்டில் குற்றங்களைப் பெருக்கலாம். தேவையில்லாமல் மக்களுக்கு சிறைக்குப் போய்வரும் தியாகிகளுக்குச் சிலை வைக்கும் பணமும் நேரமுமாவது மீதியாகும். அரசு சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த வசதியாவது செய்து தர வேண்டும்.

- செ.கார்கி

Pin It