கடந்த சனவரி மாதம் நடந்த சல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களையொட்டி தமிழர்களிடையே பொதுவெளிகளிலும் அரசியல் மேடைகளிலும் சமூக வலைதளங்களிலும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் A2 பால் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் பற்றிய கருத்தாங்களைப் பற்றிய அலசலாக இந்த தொடர் கட்டுரையை ஆரம்பித்து இருக்கிறேன்.

 Amit Shah H Rajaமுதலில் சல்லிக்கட்டு விளையாட்டிற்கு எதிரான அமைப்புகள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களைப் பற்றிப் பார்ப்போம். சல்லிக்கட்டுக்கு எதிராக அரசியல், அதிகார மற்றும் நீதிமன்ற வட்டாரங்களில் ஆகப்பெரிய ஆதாய பரப்புரை செய்யும் நபர்களின் பின்னணியை ஆராய்ந்தால் அவர்கள் அனைவரும் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அடிப்படைவாதிகளின் கைக்கூலிகளாக இருக்கிறார்கள்.பாசக,காங்கிரஸ் என்ற கட்சி பாகுபாடின்றி இவர்கள் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறார்கள்.இவர்களின் நோக்கம் மாடுகளுக்கு பச்சாதாபப்படுவதில்லை, சல்லிக்கட்டுக்கு தடை வாங்கி அதை அப்படியே பசுவதை தடுப்பு சட்டம் என்று முன்னேறி மாட்டுக்கறி தடை என்பதை நாடு முழுவதும் ஒரே சட்டமாக்கி அதன் மூலம் அசைவம் சாப்பிடும் இந்துமத உழைக்கும் வர்க்க மக்களையும் மாற்று மத மக்களையும் ஒரு சேர வஞ்சிப்பதே ஆகும்.

 இந்துத்துவ அடிப்படைவாதிகள்  தங்களுடைய அடிப்படைவாத கோட்பாடுகளை நிறைவேற்ற கட்சி, ஆட்சி, அதிகார, வியாபார, சமூக வலைதளம் மற்றும் படிப்பாளிகள் என எல்லா துறைகளிலும் தங்களுக்கான ஆதாய பரப்புரைகளைச் செய்து முடிக்க ஆட்களை வைத்து இருக்கிறார்கள். அடி மேல் அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கேற்ப பசு புனிதம்,மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் கீழ்த்தரமானவர்கள் என்ற மனுதர்ம கோட்பாடுகளை எல்லா தளங்களிலும் சொல்லிக்கொண்டே இருப்பதுதான் ஆதிக்க அடிப்படைவாதிகளின் நோக்கம். அதன் மூலம் இந்தியாவின் பேரவலமான சாதிய அமைப்பு முறைகளை நீர்த்து போகாமல் காப்பாற்றுவதும் மாற்று மதத்தை சார்ந்த மக்களை ஒருவித பயத்தோடும் அச்சத்தோடும் இந்த நாட்டில் வைத்திருப்பதும் அவர்களின் நோக்கம். மாட்டுக்கறி தடை என்ற ஒரு கல்லைக் கொண்டு சாதிய அமைப்பு கட்டுமானம் மற்றும் இந்து-முஸ்லீம் மத துவேசம் என்ற இரு மாங்காய்களை அடிப்பதே இவர்களின் இலக்கு. வர்ண பேர,மனு தர்ம சாதிய அடுக்குகள் குலையாமல் இருந்தால்,நான்கு வர்ண அமைப்பு முறை நீடித்தால் அதில் உயர்ந்த மக்களாக தமக்கு தாமே சொல்லிக்கொள்ளுபவர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும். சாதிய அமைப்புமுறை நீடிப்பது உயர்சாதியினருக்கு ஆதாயம் தருவது. அந்த சாதிய அமைப்புமுறையை நீடிக்க வைக்க அதிகாரம் அவர்கள் கைகளுக்குள் இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை தக்க வைக்க இந்து-முஸ்லீம் துவேசம் அவர்களுக்கு உதவி புரியும். மக்களை எப்போதும் மத உணர்விலேயே, மத துவேச உணர்விலேயே வைத்திருந்தால் அவர்கள் அதைத்தாண்டி வேறெதுவும் சிந்திக்க மாட்டார்கள். எல்லா தேர்தல்களிலும் இந்த மத துவேசமே தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். அதன் மூலம் அவர்கள் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிலே இருக்கலாம்.

 ஆக, இவர்களின் மாட்டரசியல் என்பது உயர் சாதியினருக்கான தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் முன்னிறுத்தப்படும் கோட்பாடே தவிர மாடுகள் மீதான உயிர்ப் பாசமோ,உயிர் நேயமோ கிடையாது. அப்படி இவர்கள் “வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற உண்மையான உயிர் நேசம் பேசிய வள்ளலாரைப் போல உயிர்கள் அனைத்தையும் சமமாக கருதுவோராக இருந்தால் பசுவிடமிருந்து பாலைத் திருடி அதை வெண்ணெய்,தயிர் மோராக்கி குடிப்பதை நிறுத்த வேண்டும். காளைகளை விளையாட்டில் பயன்படுத்துவது வதை என்றால்,மாடுகளை இறைச்சிகளுக்காக கொல்வதும் வதை என்றால் மாட்டிடமிருந்து அதன் பாலை கறப்பதும் வதையே ஆகும். மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் தங்களுடைய குட்டிகளுக்காக மட்டுமே பால் சுரக்கின்றன.அப்படிப் பார்த்தால் பசுவையும் அதன் கன்றையும் ஏமாற்றி மனிதன் பசுவின் பாலை குடிப்பதே ஒருவகை திருட்டுதான். மாட்டை இறைச்சிக்காக கொல்லும்போது கூட அந்த மாடு மட்டும்தான் வதைக்கப்படுகிறது,ஆனால் பாலுக்காக அந்த மாட்டோடு சேர்த்து அதன் கன்றும் வதைக்கப்படுகிறது. பசுவதை என்போர் முதலில் “பசுவின் பாலை குடிக்க மாட்டோம்” என்று முடிவெடுத்துவிட்டு அப்புறம் பசுவதை பற்றி பேச வேண்டும்.

 இந்த மாட்டரசியலை வட நாட்டில் இந்த அடிப்படைவாதிகளால் நேரடியாக செய்ய முடிகிறது. முக்கியமாக இந்தி பேசும் மக்களை இவர்களால் சமசுகிருத கிறுக்கல்களைக் காட்டி வெகு எளிதாக அவர்களை மனு தர்மத்திற்கு ஆதரவாக திருப்பிவிட முடிகிறது. பசுவதை தடைச் சட்டம் என்பதை உலகின் மிகப்பெரிய மாட்டுக்கறி ஏற்றுமதி மையமான மும்பை இருக்கும் மகாராட்டிரம்,உபி,மபியில் வெகு எளிதாக கொண்டு வர முடிகிறது. அனுமதி இல்லை என்ற காரணத்தை சொல்லி இறைச்சிகடைகளை வெகு எளிதாக மூட முடிகிறது. இந்தி பேசும் மாநிலங்களில் இன்னமும் சாதிய கட்டுமானம் சீர்குலையாமல் இருப்பதும் இந்து முஸ்லீம் மத கலவரங்களை  வெகு எளிதாக உருவாக்கவும், பரப்ப முடிவதும் இவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கிறது.. மாட்டுக்கறி வைத்திருந்ததாக வதந்தியை பரப்பி முஸ்லீம் மக்களை கூட்டுக்கொலை செய்யவும் பால் பண்ணைக்கு மாட்டை வாங்கி செல்லும் சொந்த மத சகோதரனை கொல்லவும் முடிகிறது. இப்படி வட இந்திய மக்கள் எளிதில் இந்த மாட்டரசியலில் சிக்கிக் கொள்ள அவர்களின் குறைவான கல்வியறிவும் அரசியல் விழிப்புணர்வு இல்லாமையும் காரணிகளில் சிலவாக இருக்கின்றன.

 இந்த சாதிய ஆதிக்க,மதவாத அடிப்படைவாதிகளால் வடநாட்டில் வெற்றி பெற முடிவதைப் போல தென்னாட்டில் குறிப்பாக தமிழ் நாட்டில் அரசியல் செய்ய முடிவதில்லை. வடநாட்டில் மதக்கலவரங்களைத் தூண்டுவது போல இங்கே அவர்களால் மத அரசியல் செய்ய முடிவதில்லை.திராவிட இயக்க அரசியலும் தமிழ் மொழியும் இந்த அடிப்படைவாதிகளுக்கு பெருந்தடைக் கற்களாக இருக்கின்றன. ஆதலால் இங்கே அவர்கள் மூன்று வழிகளில் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.மொழி மீதான தாக்குதல்,கல்வி மீதான தாக்குதல் மற்றும் உணவு உள்ளிட்ட பழக்கவழக்கங்கள் மீதான தாக்குதல்.ஆதலால்தான் மறைமுக இந்தித் திணிப்பும் சமசுகிருத திணிப்பும் இங்கே நடக்கிறது. இந்தியைத் திணித்து,சமசுகிருத கிறுக்கல்களை தமிழ் மக்களின் மூளையில் புகுத்தி அதன் மூலம் மீண்டும் மனுதர்ம கோட்பாடுகளை இங்கே முன்னிறுத்துவது இவர்களின் ஒரு வழி. இன்னொரு வழி நாட்டு மாடு பாதுகாப்பு என்று ஆரம்பித்து பசு புனிதம்,பசுவதை தடை என்று சொல்லி மாட்டுக்கறிக்கு தடையை உருவாக்கி அதை மீறும் இஸ்லாமியர்களை தேசத் துரோகிகள் என்றும் சொந்த மதத்தவருக்கு “தான் மாட்டுக்கறி தின்னும் தாழ்ந்த சாதிக்காரன்” என்ற குற்ற உணர்ச்சியை உருவாக்குவதும் அதன் மூலம் உயர் சாதிக்கார்கள் பயனடைவதுமே ஆகும்.

 தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தலை தூக்கிய பின்னர் தான், மிகப்பெரிய அளவில் அனைத்து நிலை மக்களுக்கும் சமூக நீதி வழங்கப்பட்டு கல்வியறிவு பெற்றுள்ளனர். அந்த கல்வியறிவுவும் ஒரு சாராருக்கு மட்டுமில்லாமல் பரவலான கல்வியறிவாக உள்ளது.அதற்கு மிகப்பெரிய காரணியாக இருப்பது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீடு முறை. உலகில் எங்கும் இல்லாதவகையில், சமூகத்தில் திட்டம் போட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கென்று அவர்களின் முன்னேற்றத்திற்கென்று 69 சத இட ஒதுக்கீடு இருப்பது பெரியாரின் இந்த தமிழ் மண்ணில்தான்.இப்படி ஆதிக்க சக்திகளை தமிழ்நாட்டில் அண்ட விடாமல் செய்யும் மூன்று காரணிகள் தமிழ்மொழி,இட ஒதுக்கீடு மற்றும் திராவிட இயக்கங்கள் . இந்த மூன்றும் தான் இப்போது அவர்களின் குறிக்கோள். இந்த வகையிலான ஒரு வகை மறைமுக தாக்குதலே வெறும் திருவிழா கால கொண்டாட்டமான சல்லிக்கட்டு விளையாட்டுக்கு காளைகள் துன்புறுத்தப் படுகின்றன என்று சொல்லி தடை கோருவது அதே நேரத்தில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாட்டு மாடுகள்,பாரம்பரியம் என்றும் கோர்த்து விடுவது. இரண்டில் எது வென்றாலும் அவர்களுக்கு ஆதாயமே.இன்று பாரம்பரிய மாடு என்பார்கள் நாளை பாரம்பரிய பழக்க வழக்கங்கள் என்று சாதிய மத அடக்குமுறைகளை கொண்டு வருவார்கள். எண்ணிக்கையில் மிக சொற்பமான ஆனால் மூளை பலத்தில் மிகவும் சாமர்த்தியமான மக்களாகிய தங்களின் மத,பண்பாட்டு,உணவு பழக்க வழக்கங்களை தங்களால் திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த பெரும்பான்மை மக்களின் பண்பாடாக திரித்து காட்டுவதுதான் இந்த சனாதன அடிப்படைவாதிகளின் கொள்கை. அதன் மூலம் ஒட்டுமொத்த மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கையை கட்டுப்படுத்தும் வேதகாலத்திற்கு இழுத்துச் செல்வது அவர்களின் நோக்கம்.அதாவது பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதே இவர்களின் நோக்கம். இடையிடையே தமிழ்மொழி,கலாச்சாரம் என்று சொல்லி நடிப்பார்கள் ஆனால் கடைசியில் “தமிழர்கள் கருப்பர்கள்” என்று சொல்லி தங்கள் சுயத்தை தங்களை அறியாமலே வெளிக்காட்டி விடுவார்கள்.

 ஆக தமிழ் மக்கள் தங்களின் பகுத்தறியும் திறன் கொண்டு, “ஆடு நனைகிறது என்று அழும் ஓநாய்களை” அடையாளம் கண்டு, எப்போதும் அவர்களிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். தமிழ் மொழி,கல்வி, சுயமரியாதை இம்மூன்றையும் மீட்டுத் தந்த திராவிட இயக்கங்கள், இந்த சமுதாய அரசியல் இயக்கங்கள் நல்கிய பகுத்தறிவு,சாதி,மத பேதமற்ற சகோதரத்துவம் இவற்றை தங்கள் அரண்களாக போற்றி எப்போதும் பாதுகாத்திட வேண்டும். திராவிட இயக்க ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் சில தவறுகளை செய்து அதன் மூலம் மக்களிடையே அதிருப்தி தலை தூக்கி இருந்தாலும் அந்த இயக்கங்கள் தந்த சமூக நீதி, இட ஒதுக்கீடு இவற்றால் படித்து சமுதாயத்தில் மேல் நிலைக்கு வந்த தலைமுறையினர் இந்த இயக்கங்கள் செய்த தவறுகளை சரி செய்து திரும்பவும் சமூக நீதியினை நிலை பெறச் செய்ய வேண்டும்.

 இங்கிருக்கும் இந்துவும் முஸ்லீமும் கிறித்தவரும் வேறு எங்கோ இருந்து வந்த மக்களில்லை. எல்லோரும் ஓரினத்தின் பிள்ளைகள். ஆதித் தமிழினத்தில் சாதியில்லை மதமில்லை ஆதலால் பேதமும் இருந்ததில்லை. இடையில் தமிழன் மேல் திணிக்கப்பட்ட சனாதன மதமும் அதன் பிரிவினைகள் உருவாக்கிய பேதமும் பாதிக்கப்பட மக்களை மாற்று மதங்களை நோக்கி திருப்பின.ஒரே இனத்தின் பிள்ளைகள் தங்கள் மீது திணிக்கப்பட்ட மத அடக்குமுறைகள் மற்றும் அதன் பாதிப்பிலிருந்து மீள வேறு மதத்தை தழுவியவர்கள். ஆகவே வடக்கில் நடக்கும் இந்து மத மோதல்களை “கைபர் போலன் கணவாய்களின் வழியாக வெவ்வேறு காலகட்டத்தில் இந்த மண்ணில் ஊடுறுவிய ஆக்கிரமிப்பு சகோதரர்களுக்கிடையே நடக்கும் பங்காளிச் சண்டையாக நினைத்து” விட்டுவிட வேண்டும். அவர்கள் இன்று அடித்து கொள்வார்கள் நாளை வேறொரு புதிய பங்காளி வந்தால் அவனை எதிர்க்க இவர்களிருவரும் சேர்ந்து கொள்வார்கள். சைவமா வைணவமா என்று மோதிக் கொண்டவர்கள் மொகலாயர்கள் வந்த பின்பு இந்து என்று சேர்ந்தது போல நாளை இந்து-முஸ்லீம் சேர்ந்து இந்துலாம் என்று கூட கூடிக் கொள்வார்கள். ஆகவே தமிழர்கள் நாம் இவர்களின் பங்காளிச் சண்டையில் தலையைக் கொடுக்காமல் தள்ளி இருந்து கல்வி,வளர்ச்சி,முன்னேற்றம் என்று இருக்க வேண்டும்.

 மேலே காவிகளின் அரசியல் ரீதியிலான அத்துமீறல்களைப் பார்த்தோம். அடுத்தடுத்து அவர்களின் அறிவியல் ரீதியிலான தாக்குதல்களை பார்ப்போம். இந்தியாதான் இப்போது உலகின் பால் உற்பத்தியில் முதல் நிலை வகிக்கும் நாடு. அந்த இந்தியாவில் குஜராத் தான் பால் உற்பத்தியில் முதல் நிலை வகிக்கும் மாநிலம். அங்கிருக்கும் மாடுகளில் பெரும்பான்மை சதவீதம் ஜெர்சி உள்ளிட்ட கலப்பின மாடுகள். ஆனால் வடக்கில் எழாத “பாரம்பரிய நாட்டு மாடுகளைக் காப்போம்” என்ற கோட்பாடு இங்கே ஓங்கி ஒலிக்கக் காரணம் என்ன? இதில் நம் தமிழ்த் தேசியவாதிகள் கூட அந்த மத அடிப்படைவாதிகளுக்கு நிகராக முழக்கமிடும் காரணம் என்ன? நாட்டு மாடு,A1 vs A2 பால்,பால் நலம், இயற்கை உணவு,இயற்கை விவசாயம் என்று சீமான் முதல் கடைக்கோடி கோமான் வரை எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் ? இவற்றில் ஒளிந்திருக்கும் அரசியல் காரணம் என்ன? இவர்கள் சொல்லும் கதைகள் அறிவியல் பூர்வமாக நிருபிக்கப் பட்டுள்ளதா என்பதை இனி வரும் இதழ்களில் அடுத்தடுத்து பார்ப்போம்.

தொடர்வோம்!

கோ

Pin It