தமிழ் சினிமாவில் முற்போக்குக் கருத்துக்களைக் கூறும் இயக்குநர்களும், நடிகர்களும் மிகக் குறைவு. அவர்கள் தமிழகத்தின் பல முற்போக்கு இயக்கங்களின் மேடைகளிலும், தங்கள் சினிமாக்களிலும் தங்களின் கருத்துக்களை சத்தமின்றி வெளிப்படுத்தி வருகின்றனர். இயக்குநர்கள் ராம், சுசீந்திரன், ஜனநாதன் ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். இவர்களின் கருத்துக்களை சமூகமும், ஊடகங்களும் உற்றுநோக்குவது இல்லை. ஏனெனில் இங்கு பிரபலமானவர்கள் வாயைத் திறந்து என்ன பேசினாலும் அது பெரிதுபடுத்திக் காட்டப்படுகிறது. மற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
உதாரணத்திற்கு இயக்குநர் சங்கரின் ஜென்டில்மேன், சிவாஜி, முதல்வன் படங்களில் ஒருவித மேட்டுக்குடி அரசியலை வெளிப்படுத்தியிருப்பார். வெறும் ஓட்டு போட்டு நாட்டை முன்னேற்றி விடலாம் என்பதைத்தான் சொல்லியிருப்பார்; இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசியிருப்பார். இந்தப் படங்களை தமிழ்ச்சமூகம் கொண்டாடியது.
இயக்குநர் ஜனநாதனின் "புறம்போக்கு" திரைப்படத்தில் ஆளும் வர்க்கம் எவ்வாறு நரித்தனத்துடன் செயல்படுகிறது என்பதையும், மரண தண்டனைக்கு எதிரான கருத்துக்களையும், சமூகநீதி கருத்துகளையும் சிறப்பாக காட்டியிருப்பார். ஆனால் அத்திரைப்படம் பெருமளவுக்கு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பிரபலமானவர்கள் பேசும் அரைகுறை அரசியலையும், மேட்டுக்குடி அரசியலையும் நம் சமூகம் செவிகொடுத்துக் கேட்டு அப்படியே ஏற்றுக்கொள்வது ஆபத்தான ஒன்று. சமீபத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சில நடிகர்கள் தங்களை பெரும் ஆளுமை போல காட்டிக் கொண்டு தங்களின் உணர்ச்சி அரசியலையும், அரைகுறை அரசியலையும் இளைஞர்களிடம் வெளிப்படுத்தினர். நடிகர்கள் சிலம்பரசன், ஆர்ஜே பாலாஜி, ராகவா லாரன்ஸ் ஆகியோரை உதாரணம் சொல்லலாம். இறுதிநேரத்தில் மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து விட்டு, அரசின் அடக்குமுறையைக் கண்டிக்காமல் ஓடிவிட்டனர். தேசியகீதம் பாடினால் காவல்துறையினர் அடிக்க மாட்டார்கள் என்பதுதான் இவர்களின் அரசியல் புரிதல். இவர்களைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை.
ஆனால் பிரபல நடிகர் ஒருவர் சமூகவலைத்தளங்களில் சில நாட்களாக தமிழக அரசியல் குறித்துப் பேசி மக்களைக் குழப்பி வருகிறார். அவர் வேறு யாருமில்லை, நடிகர் கமல்ஹாசன்தான். பிரபலங்களின் பேச்சுக்கள் வெகுமக்களை சென்று அடைவதால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு ஜெயா அம்மையாரின் சமாதியில் தியானம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென ஞானோதயம் வந்தது. சில ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் அவரை ரட்சகராக மக்களிடம் எடுத்துச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அந்த வரிசையில் நடிகர் கமலும் இணைந்துகொண்டார்.
பிப்ரவரி 8 முதல் சசிகலா-பன்னீர் பதவி போட்டி குறித்து கமலுக்கு அதிகம் அக்கறை வந்துவிட்டது. டிவிட்டர் சமூகவலைத்தளத்தில் சற்று அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு சில குழப்பமானக் கருத்துக்களைப் பகிர்ந்தார். உண்மையில் அவை கமல் கூறியதா? அல்லது அவரது கணக்கை வேறு யாரும் முடக்கிவிட்டார்களா? என சந்தேகம் பலருக்கு வந்தது. பின்னர் கமல் விளக்கம் கொடுத்தார். பதிவுகளைப் பகிர்ந்து அவர்தான் என்பதையும் உறுதிப்படுத்தினார்.
அவரது சில குழப்பங்களைப் பார்ப்போம்.
1. பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்துவருகிறோம். அவர்களைக் குறைகூறுவதை நிறுத்துவோம். நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா?
நம் பதில்: இதுதான் அக்மார்க் மேட்டுக்குடி அரசியல். அதாவது ஆளும் வர்க்கத்தை நோக்கி கேள்விகளை எழுப்பாமல் மக்களிடம் வந்து அறிவுரை கூறுவது. ஊழல் அரசியல்வாதிகள் சுதந்திரத்தை வைத்து சூதாடுகிறார்கள் என்கிறார், பின்னர் மக்கள் குற்றமறக் கடமை செய்வோம் என்கிறார். அப்படியானால் ஊழல் அரசியல்வாதிகள் தொடர்ந்து தங்கள் ஊழலைத் தொடர வேண்டும், மக்கள் கண்டும் காணாமல் செல்ல வேண்டும் என்கிறாரா கமல்?
2. தமிழ்நாட்டைத் தனிநாடாகப் பிரித்து விடாதீர். அப்படி செய்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் அகிம்சை முறையில் தமிழ்நாட்டுக்காகப் போராடும்.
நம் பதில்: நடந்து கொண்டிருப்பது சசிகலா-பன்னீர் பதவிச் சண்டை. அவர்கள் என்ன தனிநாடு கோரிக்கையை வைத்தா சண்டை போடுகிறார்கள்? பின்னர் ஏன் இந்நேரத்தில் தனிநாடு கோரிக்கை குறித்து பேசுகிறார் கமல்? இந்தப் பதிவைப் படிக்கும் இந்தியர்கள் தமிழர்கள் குறித்தும், தனிநாடு கோரிக்கை குறித்தும் தவறாக எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழ்த்தேசிய இனம் தங்களின் இறையாண்மையுடன் கூடிய நாட்டை அமைத்துக் கொள்ள உரிமை உள்ளது என்பதையும், இந்திய ஒன்றியத்தின் பிடியிலிருந்து தமிழ்நாடு தனித்துச் செல்ல ஆயிரம் காரணங்கள் உள்ளது என்பதையும் கமலுக்கு இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
3. "சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம, இந்த நேரத்துல ஒரு வீடியோவாவது போட வேண்டாமா.? நாம் முதலில் மனிதர், பின்னர்தான் நடிகர்கள்"
நம் பதில்: இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் கமல்? தான் கருத்து சொன்னால் உடனே சத்யராஜும் கருத்து சொல்லிட வேண்டும் என்கிறாரா? அது இருக்கட்டும், சசிகலா-பன்னீர் சண்டையில் சத்யராஜ் ஏன் கருத்து சொல்ல வேண்டும்? சத்யராஜ் என்ன அரசியல் கட்சி எதுவும் நடத்துகிறாரா?
கமல் அவர்களே, நடிகர் சத்யராஜ் அவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஈழ விடுதலை, விடுதலைப்புலிகள், பெரியாரியம், பெண் விடுதலை என பல தலைப்புகளில் பேசுபவர். ஆனால் நீங்கள் குறிப்பிட்டு பெரியார் பற்றி வாய்கிழிய பேசுகிறார் என்பதை மட்டும் குறிப்பிட காரணம் என்ன? பெரியார் மீது ஏதேனும் வெறுப்பா? இருந்தால் நேரடியா சொல்லி விடுங்கள். ஒளிவுமறைவு வேண்டாமே!
இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு செய்தி அறிந்தேன். காதலர் தினத்தை முன்னிட்டு அரண் அமைப்பு நடத்தும் நிகழ்வில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு சாதிமறுப்பு காதல்/திருமணம் குறித்து பேசவுள்ளாராம். ஆனால் கமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்? "சபாஷ் நாயுடு" என்னும் பெயரில் படம் எடுத்து சாதிவெறிக்கு தீனிபோட்டுக் கொண்டிருக்கிறார். சத்யராஜைக் குறைகூற கமலுக்கு என்ன தகுதி உள்ளது?
4. நடிகர் மாதவன் அவர்களே தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்துப் பேசுங்கள். மோசமான அரசியலுக்கு நீங்கள் எதிராக இருப்பவர், அதுகுறித்து பேசுபவர். அதையே சற்று அதிகமாக உரக்கப் பேசுங்கள்?
நமது பதில்: பொதுப் பிரச்சினைகள் குறித்து நடிகர் மாதவன் அவர்கள் இதுவரை எந்தக் கருத்தும் கூறியதாக நினைவில்லை. அவரை ஏன் கமல் இழுக்கிறார் என்றும் புரியவில்லை. சசிகலா-பன்னீர் பதவிப் போட்டி என்ன அவ்வளவு பெரிய பிரச்சினையா? சாதியப் படுகொலைகள், கல்விக்கூடத்தில் மாணவிகள் கொலை, பஞ்சத்தால் விவசாயக்குடிகள் தற்கொலை என பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் எல்லாம் சிறிது கூட கவலை கொள்ளாமல் ஒரு கட்சியின் பிரச்சினை பற்றிப் பேச கமல் என் வரிந்துகட்டி வருகிறார்? அவரின் உண்மையான நோக்கம் என்ன?
சமூக வலைத்தளங்களில் குழப்பமான கருத்துக்களைப் பகிர்ந்ததோடு நிறுத்தவில்லை கமல். இந்தியா டுடே தொலைக்காட்சியில் பேட்டி அளித்திருந்தார்.
"நாங்கள் அரசியலுக்கு வந்தால் துப்பாக்கியோடு வருவோம். அகிம்சைக்கு பெயர் போன இந்த நாட்டில் நாங்கள் அதனை விரும்பவில்லை" என்றார்.
நம் பதில்: கொள்கைப் பிடிப்பில்லாத ஒரு கட்சியில் பதவிச்சண்டை முற்றிப்போகிறது, அரசு இயந்திரம் செயல்படாமல் நின்றுவிடுகிறது. இதனைக் கண்டு ஏன் கமலுக்கு இவ்வளவு ஆதங்கம்? அதுவும் ஆயுதம் ஏந்தக் கூடிய அளவுக்கு ஆதங்கம்? நாங்கள் ஆயுதம் ஏந்தி வருவோம் என்கிறார். யார் அந்த 'நாங்கள்'? கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடுகளை நம்பி ஆயுதம் ஏந்துகிற அளவுக்கு தமிழர்கள் என்ன மடையர்களா?
ஓ.பன்னீர்செல்வம் குறித்து பின்னர் கமல்ஹாசன் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. "ஓ.பன்னீர்செல்வம் சிறந்த ஜனநாயகவாதி. ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் திறமையாக செயல்பட்டார். அவர் முதல்வர் பதவிக்கு திறமையானவர்." என பாராட்டினார். ஆனால் மீனவ மக்கள் வாழும் ரூதர்புரம், நடுக்குப்பம் பகுதிகளில் பன்னீர்செல்வத்தின் காவல்துறை நடத்திய வன்முறை பற்றி கமல்ஹாசன் போன்றவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். இவர்களின் அரசியல் மக்களுக்கானது அல்ல, ஆளும் வர்க்கத்திற்கானது.
சென்னை வெள்ளத்தில் தமிழக அரசு சரியாக செயல்படாதபோது கமல் அவர்கள் "அரசு நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து விட்டது. மக்களின் வரிப்பணமெல்லாம் எங்கே போகிறது" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஜெயா அமைச்சரவையிலிருந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்: "எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமலஹாசன், இந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்".
அதாவது கமல்ஹாசனுக்கு உரிய பதில் அளிக்காமல், அவரது கருத்து சுதந்திரத்திற்கு எதிராகப் பேசினார். அந்தப் பன்னீர்செல்வம்தான் இப்போது கமலின் கண்ணுக்கு சிறந்த ஜனநாயகவாதியாகத் தெரிகிறார்.
கமல் அவர்களுக்கு சிறு அறிவுரை: "ஓ.பன்னீர்செல்வம் போல பல ஆயிரம் நபர்கள் தமிழகம் முழுக்க உள்ளார்கள். அவர்கள் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பார்கள். ஆகவே தாங்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்கிற அளவுக்கு ஆதங்கப்படவேண்டாம்."
"சசிகலா அவர்கள் முதல்வர் பதவிக்குத் தகுதியானவர் அல்ல. ஜெயலலிதாவிடம் இருந்தார் என்பது எப்படி தகுதியாகும்?" என்றும் கருத்து கூறியிருந்தார். மிகவும் வரவேற்கத்தகுந்த கருத்து.
ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்கிற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு தீபா என்பவர் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். மேலும் கமலின் ஆதரவு பெற்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தீபாவுக்கு அழைப்பு விடுத்தார். தீபாவும் பன்னீர்செல்வமும் இரு கரங்களாக செயல்படவுள்ளார்களாம். இதுபற்றி கமல் ஏன் வாய்திறக்கவில்லை? இன்னும் இந்த செய்திகள் அவரின் காதுகளுக்கு போய்ச் சேரவில்லை என நம்புவோம்.
மோடியின் "தூய்மை இந்தியா" திட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து பாஜகவினரோடு ஒரு ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். உண்மையில் தூய்மை மீது கமல் அவர்களுக்கு அக்கறை இருந்தால் எண்ணெய்க் கழிவுகளால் சென்னைக் கடல் மாசுபடுத்தப்பட்டபோது, அதனை அகற்றும் பணியில் தோல்வியடைந்த அரசு இயந்திரத்தைக் கண்டித்திருக்க வேண்டும். அதையெல்லாம் கமல் போன்றோரிடம் எதிர்பார்க்க முடியாது. ஆக இவர்களின் அக்கறை எல்லாம் விளம்பரங்கள் மீதும், மோடி, பன்னீர்செல்வம் போன்ற ஆளும் வர்க்கத்தினருக்கு துணைபோவது மட்டும்தான்.
இதனை இளைஞர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் செய்யும் விளம்பர, மேட்டுக்குடி, வலதுசாரி அரசியலுக்கு இரையாகிவிடக் கூடாது.
(உரிமைத் தமிழ்த்தேசம் - பிப்ரவரி 2017 இதழுக்காக எழுதியது)
- குருநாதன்