தமிழ் ஆய்வுலகில் அறிவுத் திருடல்கள்’ என்ற கட்டுரை மீதான திரு. உ.கருப்பத்தேவன் அவர்களின் பதிலுரை (கீற்று: 03-01-2017) சற்றுத் தாமதமாகக் கண்ணில் பட்டது. மேற்குறித்த என் கட்டுரை கீற்றில் வெளிவந்து (20-06-2016) ஏறத்தாழ ஆறு மாதங்கள் கழிந்துவிட்டன; ‘போலித் தமிழ் நூல்கள்: ஆய்வுலகில் சில கருத்துத் திருடல்கள்’ என்ற தலைப்பிலான எனது கட்டுரை காலச்சுவடு ஆய்விதழில் (நவம்பர், 2016) வெளிவந்து இரண்டு மாதங்கள் கழிந்து விட்டன. இவற்றிற்குத் திரு.  உ. கருப்பத்தேவன் தமது மௌனம் கலைத்து இப்போது பதிலுரை தந்துள்ளார் (03-01-2017). மேற்குறித்த இரண்டு கட்டுரைகள் மீதான பதிலுரை மற்றும் பின்னூட்டங்களை அவர் முறையே கீற்று மற்றும் காலச்சுவடு ஆகியவற்றில் உடனுக்குடன் பதிவு செய்து செயலாற்றியிருந்தால் அவரது நேர்மை பாராட்டுக்குரியதாகவும் நம்பகத்தன்மை உடையதாகவும் வெளிப்படையாகவும் அமைந்திருக்கும். எனினும், அவரது பதிலுரைக்கு மறுபதில் தரவேண்டியது எனது தார்மீகக் கடமையாகும். அதனை நேர்மையாகவும், உண்மையாகவும், வெளிப்படையாகவும் இங்கே பதிவு செய்வதில்  திருப்தியடைகிறேன்.

I

திரு. உ. கருப்பத்தேவன் தமது பதிலுரையில் அவர் ‘ஒப்பிலக்கியம்’ என்றொரு  நூலை 2007- ஆம் ஆண்டே வெளியிட்டுள்ளதாகவும்; நான் 2008-இல் வெளியான எனது ‘ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம்’ என்ற  நூலில் அவரது நூலிலிருந்து கருத்துக்களைப் பயன்படுத்தியிருப்பதாகவும் பதிவு செய்துள்ளார். முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்கும் வேலை இது. 2007- ஆம் ஆண்டு திரு. உ. கருப்பத்தேவன் ‘ஒப்பிலக்கியம்’ என்ற நூலை எழுதி வெளியிடவில்லை என்பது தமிழ் ஆய்வுலகத்திற்கும் ஒப்பிலக்கிய அறிஞர்களுக்கும் நன்கு தெரியும். ஒப்பிலக்கிய நூல்களில் இப்படியொரு நூல் வெளிவந்துள்ளதாக ஒரு பதிவுகூட இதுவரை காணப்படவில்லை. ஒப்பிலக்கிய ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்கள் யாரும் இந்த நூலைச் சான்று காட்டவும் இல்லை. அவ்வளவு ஏன், ஒப்பிலக்கியம் தொடர்பாக 2015-இல் திரு. உ.கருப்பத்தேவன் எழுதி வெளியிட்டுள்ள இரண்டு நூல்களிலும் (தமிழும் பிற துறைகளும்’, ஜூலை, 2015,  NCBH, ISBN: 978-81-2343-014-0, ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்: நோக்கும் போக்கும்’ ஜூலை, 2015, NCBH, ISBN:978-81-2343-041-6) இவரது இந்த ‘ஒப்பிலக்கியம்’(2007) என்ற நூல் குறித்த பதிவுகள் எதுவும் இல்லை. குறிப்பாக, மேற்குறித்த இவரது இரண்டு நூல்களிலும் ஏனைய ஒப்பிலக்கிய நூல்களையெல்லாம் துணைநூற்பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கும் திரு. உ. கருப்பத்தேவன் இந்த ‘ஒப்பிலக்கியம்’ (2007) என்ற தலைப்பிலான நூலைத் துணைநூற்பட்டியலில் இடம்பெறச் செய்யாதது ஏன் என்று தமிழ் ஆய்வுலகிற்கு விளக்க வேண்டும்.  

மொத்தத்தில், திரு. உ.கருப்பத்தேவனை ஆசிரியராகக் கொண்டு 2007-இல் ‘ஒப்பிலக்கியம்’ என்றொரு நூல் வெளியாகவில்லை என்பது நிரூபணமாகிறது. ஏற்கனவே அவர்மீதுள்ள  குற்றச்சாட்டை மறைத்துத் தாம் ஒரு நீதிமான் என்பதை நிறுவுவதற்காகக் கடந்த ஆறுமாத காலத்திற்குள் அவசரகதியில் அச்சிட்டு உருவாக்கியுள்ள “போலி நூல்” தான் இந்த ‘ஒப்பிலக்கியம்’ என்பது தமிழ் ஆய்வுலகத்திற்கும் ஒப்பிலக்கியத் துறையினருக்கும் நன்கு தெரியும். அவரது மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்.

பக்தி இலக்கிய ஆய்வில் நுழைந்து, ‘திருவாசகத்தில் இலக்கிய நலன்கள்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து, 2006 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற திரு. உ. கருப்பத்தேவன், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒப்பிலக்கியத்துறையில் 2010-ஆம் ஆண்டு உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளார். அதற்கு முன்னர் அதாவது 2010-ஆம் ஆண்டுவரை அவர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பள்ளியில் பணியாற்றியுள்ளார். பள்ளி ஆசிரியரான அவர் தாம் 2007- ஆம் ஆண்டிலேயே ‘ஒப்பிலக்கியம்’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி ஒப்பிலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியிருப்பதாகவும்; இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒப்பிலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றைப் பதினைந்து ஆண்டுகளாகச் சேகரித்து வைத்துள்ளதாகவும் கூறிப் பெருமைப்படுகிறார். பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றிக்கொண்டு, அக்காலகட்டத்தில் பக்தி இலக்கியத்தில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வும் செய்துகொண்டு இந்தியப் பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வரும் ஒப்பிலக்கியத் துறை குறித்துக் கள ஆய்வு செய்து செய்திகள் சேகரிப்பது என்பது சாத்தியமான ஒன்று அல்ல; மட்டுமன்றி, ஒப்பிலக்கியம் என்ற தலைப்பில் முன்னறிவு, பயிற்சி எதுவுமின்றி நூல் எழுதி வெளியிடுவது நடைமுறைச் சாத்தியமே அல்ல.

வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை, இளமுனைவர், முனைவர் பட்டங்களுக்காக ஒப்பிலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து, ஆய்வுக்காக மலையாளம், தெலுங்கு மொழிகளை முறைப்படிக் கற்று, அனுபவம் மிக்கப் பேராசிரியர்களிடம் நேரடியாகக் கல்வி பயின்று நெறிப்படுத்தப்பட்டு, அப்பல்கலைக்கழகத்தில் முறையான பட்டங்களைப் பெற்றதோடு, தற்காலத்திலும் அந்தத் துறையில் ஆழ்ந்த கவனம் செலுத்தி, கருத்தரங்குகளில் கலந்துகொள்வதோடு,  கட்டுரைகளும் நூற்களும் எழுதி வரும் எனக்கு மட்டுமல்ல, தமிழ் ஆய்வுலகத்துக்கும் ஒப்பிலக்கியத் துறை அறிஞர்களுக்கும் இப்படியொரு  நூலை  அக்காலகட்டத்தில் (2007) திரு. உ. கருப்பத்தேவன் எழுதுவது சாத்தியமே அல்ல என்பது நன்கு தெரியும்.  

இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒப்பிலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றை உள்ளடக்கி 2007- ஆம் ஆண்டு திரு. உ. கருப்பத்தேவன் ஒப்பிலக்கியத்தில் ஒரு நூல் எழுதியிருந்தால் உண்மையிலேயே அவர் பாராட்டுக்குரியவர்தான்!. பள்ளியில் பணியாற்றிக்கொண்டு பக்தி இலக்கியத்தில் தவழும்போதே எவ்வித ஒப்பிலக்கியப் பின்புலமும் பயிற்சியும் இன்றி 2007-ஆம் ஆண்டு ஒப்பிலக்கியம் குறித்து நூல் எழுதி வெளியிட்டு யாரும் நிகழ்த்தவியலாத ஒரு செயலைச் செய்து சாதனை படைத்துள்ளாரெனின் நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவர் தான்!. மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒப்பிலக்கியத் துறையில் 2010 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் திரு. உ. கருப்பத்தேவனைப் பற்றியும் கல்வித்தளத்தில் அவரது பங்களிப்பு பற்றியும் தமிழுலகம் நன்கு அறிந்து வைத்துள்ளது. 20-06-2016 இல் கீற்றில் வெளிவந்த ‘தமிழ் ஆய்வுலகில் அறிவுத் திருடல்கள்’ (http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31064-2016-06-20-03-51-11) என்னும் கட்டுரைக்கு வாசகர்கள் பதிவு செய்த பின்னூட்டங்களிலிருந்து திரு. உ. கருப்பத்தேவனின் குணவியல்புகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

II

திரு. உ. கருப்பத்தேவன் தாம் 2007- ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடும் ‘ஒப்பிலக்கியம்’ என்ற தலைப்பிலான நூலில் 90-96 மற்றும் 168-179 ஆகிய பக்கங்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை 2008- இல் வெளியான எனது நூலில் (பக்.21-52) நான் எடுத்தாண்டு பயன்கொண்டுள்ளதாகப் பதிலுரையில் குறிப்பிடுகிறார். ஒப்பிலக்கிய ஆய்வுலகில் இப்படியொரு நூல் 2007-இல் முறைப்படி வெளிவரவே இல்லை என்பதை ஆணித்தரமாகச் சொல்ல முடியும். அதற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன. தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளப் பெருமக்களின் ஆதரவும் அதிகமாகவே உள்ளது.

மேற்சொன்ன இவரது ‘ஒப்பிலக்கியம்’ என்ற  நூலிலிருந்து  எந்தவிதக் கருத்துக்களையும் எனது ‘ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம்’ என்ற நூலில் நான் எடுத்தாண்டு பயன்கொள்ளவில்லை என்பதை எனது மனசாட்சிக்கு விரோதமில்லாமல், தெளிந்த சிந்தனையுடன் மன உறுதியோடு  இங்கே பதிவு செய்கிறேன். எழுதாத நூலொன்றை எழுதியதாக அடம்பிடிக்கும் திரு. உ. கருப்பத்தேவனின் முறையற்ற செயல்களைக் கீற்று வாசகர்களுக்கும்  தமிழ் ஆய்வுலகிற்குச் சற்று விரிவாகவே முன்வைக்க விரும்புகிறேன்.

இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒப்பிலக்கியம் என்னும் புதிய இலக்கியத்துறை தோன்றி வளர்ந்த வரலாற்றை, என்னுடைய பாணியில் , மொழிநடையில் ‘ஒப்பிலக்கியம்: இனவரைவியல் சமூகம்’ (காவ்யா பதிப்பகம், சென்னை, 2008) என்னும் தலைப்பிலான  நூலில் வெளியிட்டிருந்தேன். 2008-இல் வெளியான எனது நூலிலுள்ள 21 முதல் 52 வரையிலான மொத்தம் 32 பக்கங்களை திரு. உ. கருப்பத்தேவன்தான் அவரது  ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்: நோக்கும் போக்கும்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2015) என்ற நூலில் வார்த்தை மாறாமல், அச்சு மாறாமல், எழுத்துநடை மாறாமல், வரிசைக்கிரமத்தைக்கூட மாற்றாமல் பக்கம் பக்கமாக அப்படியே பெயர்த்தெடுத்து (பக்.127-152) அச்சிட்டுத் தனதாக்கிக் கொண்டுள்ளார் என்பதுதான் உண்மை. “ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம்” என்ற எனது நூலில் ‘ஒப்பிலக்கியம்: வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பின்  கீழுள்ள, ‘இந்தியாவில் ஒப்பிலக்கிய அறிமுகம்: பின்புலமும் வளர்ச்சியும்’ (பக். 21–52) என்ற இயலில் ‘இந்தியாவில் ஒப்பிலக்கிய அறிமுகம்’ (32-33), ‘இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஒப்பிலக்கிய அறிமுகம் (33-34), ‘வட இந்தியாவில் ஒப்பிலக்கியம்’ (34-41), ‘தென்னிந்தியாவில் ஒப்பிலக்கியம்’ (42-52) ஆகிய உத்தலைப்புகளின்கீழ் நான் விவரித்துள்ள அத்தனை விஷயங்களையும் அச்சு மாறாமல் வைப்புமுறை மாறாமல் அப்படியே திரு. உ. கருப்பத்தேவன் எடுத்தாண்டு வெளியிட்டுள்ளார். மேற்குறித்த இயலில் உள்ள கருத்துக்கள், கருப்பத்தேவனின்  கைவண்ணத்தில், ‘ஒப்பிலக்கியம் – பொருள் விளக்கமும் வரைவிலக்கணங்களும்’ (பக்.1–135) என்ற இயலின் கீழ் ‘மேலை நாடுகளில் ஒப்பிலக்கியம்- ஆய்வும் வளர்ச்சியும் (127-135), எனவும், ‘இந்தியாவில் ஒப்பிலக்கியம் – ஆய்வும் வளர்ச்சியும்’ (பக்.136–143), ‘வட இந்தியாவில் ஒப்பிலக்கியம் – தோற்றமும் வளர்ச்சியும்’ (ப. 137-143), ‘தென்னிந்தியாவில் ஒப்பிலக்கியம் – தோற்றமும் வளர்ச்சியும்’ (பக். 144–152) எனவும் பல தலைப்புகளில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளன.

எனது நூலில் உள்ள உள்தலைப்புகள் யாவும் அதே வைப்புமுறையில் இவர்தம் நூலில் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் எடுத்தாளப்பட்டுள்ளன.

எ.டு.:  ‘பிரெஞ்சுச் சூழலும் ஒப்பிலக்கியத்தின் தோற்றமும்’ (ப. 22), ‘இங்கிலாந்து நாட்டில் ஒப்பிலக்கியம்’ (ப. 25), ‘ஜெர்மன் நாட்டில் ஒப்பிலக்கியம்’ (ப. 27), ‘அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒப்பிலக்கியம்’ (29), என்ற உள்தலைப்புகள் கருப்பத்தேவனின் நூலில் முறையே ‘பிரெஞ்சு நாட்டில் ஒப்பிலக்கியம்’ (ப. 128), ‘இங்கிலாந்தில் ஒப்பிலக்கியம்’ (ப. 130), ‘ஜெர்மனியில் ஒப்பிலக்கியம்’ (132), அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒப்பிலக்கிய வளர்ச்சி (133), என்றவாறு இடம்பெற்றுள்ளன.

இதோடன்றி, இவ்வுட்தலைப்புகளின் கீழ் அமையும் பத்திகள், சொற்றொடர்கள், சொற்கள், மொழிநடை என்பனவும் அதே வைப்புமுறையில் அப்படியே கொத்தாகக் காணக் கிடக்கின்றன. மிகவும் அரிதாக ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் சில சொற்றொடர்களின் முதல்-இடை-கடைப்பகுதிகளில் இடம்பெறும் சொற்கள் சின்னஞ்சிறு மாற்றம் கண்டுள்ளன.

எ.டு.: “இலக்கியத்துறையில் ஒப்பிடுதல் என்ற சிந்தனையை முதன் முதலில் ஏற்படுத்தியவர்கள் பிரெஞ்சுக்காரர்கள்தான்” (ப.21), “மொழியியலுக்குப் புதுத்தகைமை அளிக்கும் முன் மானிடவியல், சமூகவியல், பொருளியல், புவியியல் முதலியவற்றிற்கு அறிவியல் அந்தஸ்தைக் கொடுத்தது ஒப்பியல் ஆய்வேயாகும்” (ப. 21), இது கருப்பத்தேவனின் நூலில் “இலக்கியத்துறையில் ‘ஒப்பிடுதல்’ என்ற சிந்தனையை முதன்முதலில் ஏற்படுத்தியவர்கள் பிரெஞ்சுக்காரர்களே” (ப. 127), “மொழியியலுக்குப் புதுத்தகைமை அளிக்கும் முன்னர் மானுடவியல், சமூகவியல், பொருளியல், புவியியல் ஆகியனவற்றிற்கு அறிவியல் தகுதியைத் தந்தது ஒப்பியல் ஆய்வே” (ப. 127) என்றவாறு இடம்பெற்றுள்ளன.  

மேலும், மேற்குறித்த எனது நூலில் ‘ஒப்பிலக்கியம்: வரையறையும் கொள்கைகளுள்’ என்ற இயலில் ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள் : சில விளக்கங்கள்’ என்னும் உட்தலைப்பில் கூறப்பட்டிருக்கும் அனைத்துச் செய்திகளையும் (61-64)  கருப்பத்தேவன், தமது  நூலில்  ‘ஒப்பிலக்கியச் செல்நெறிகள் கோட்பாடு’ என்ற இயலில் ‘இணைநிலைத் தாக்கக் கோட்பாடு’ என்னும் உட்தலைப்பில் (213-215) இட்டு நிரப்பிக்கொண்டுள்ளார்.   

மேற்சொன்னவற்றுடன், நான் எடுத்தாண்ட மேற்கோள்களுக்கு அளித்த சான்றெண் விளக்கக்குறிப்புகளை அப்படியே முனைவர் கருப்பத்தேவன் தம் வழமைக்கேற்பச் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் எடுத்தாண்டிருக்கிறார்.

எ.டு.: ‘க. கைலாசபதி, 1982: 3 (ப. 21)’ என்று நான் சான்றெண் விளக்கக்குறிப்புகளில் நூல் வெளியான ஆண்டைக் குறிப்பிட, இவர் ‘க. கைலாசபதி, ஒப்பியல் இலக்கியம், ப. 3 (ப. 127)’ என   ஆண்டுக்குப் பதிலாக நூல் பெயரைக் குறிப்பிட்டுச் செல்கிறார்

தொகுப்பு நூலில் எடுத்தாளப்பட்டுள்ள குறிப்பிட்ட பகுதி / பக்கம்  குறித்து அந்தந்த இடத்தில் குறைந்தபட்சம்  ஒன்றிரண்டு இடங்களிலாவது மூல நூலையும் அதன் ஆசிரியரையும் மேற்கோளாகக் காட்ட வேண்டும் என்பது ஆய்வு நெறிமுறை. இல்லாதபட்சத்தில் அவை அத்தனையும் தொகுப்பாசிரியரின்  சொந்தக் கருத்துக்களாகவே கருதப்பட்டுவிடும். திரு. உ. கருப்பத்தேவன் அவரது ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள் : நோக்கும் போக்கும்’ என்ற நூலில் தனதாக்கியுள்ளதாக  நான் குற்றம் சாட்டும் பக்கங்களில் உள்ள செய்திகள் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதற்கான மேற்கோள் ஆதாரம் அக்குறிப்பிட்ட பக்கங்களில் ஒரு இடத்தில் கூட இல்லை. இவர் பெயர்த்தெடுத்துப் பயன்படுத்தியுள்ள  நூல் பக்கங்களில் எந்த இடத்திலும்  எனது பெயரையோ, நூல் தலைப்பையோ  மேற்கோள் காட்டவுமில்லை; எனது நூல் குறிப்புகளை அவர் அடிக்குறிப்பாகக் கூடச்  சுட்டவுமில்லை என்பதைத்   தமிழுலகிற்குத் தெரிவித்துக்கொள்கின்றேன். மொத்தத்தில், எந்தவித முயற்சியும் உழைப்புமின்றி அடுத்தவருடைய உழைப்பைச் சுரண்டுவது அல்லது உறிஞ்சுவது என்னும் மகாபாவத்தைச் செய்துள்ளார். சிறிதும் பயமோ,  கூச்சமோ  இல்லாமல் இன்னொருவர்தம் எழுத்தை/ கருத்தைத்  தம் எழுத்தாக/ கருத்தாக  நூல் வடிவில் வெளிப்படுத்தியிருக்கும் முனைவர். உ. கருப்பத்தேவன்தம் கல்விப்பண்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கது.

இது குறித்து இவரின் நூலை வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினருக்கு நான் அளித்த புகாரின் (02.08.2016) அடிப்படையில் அதன்  நிர்வாக இயக்குநர் தவறு நடந்ததை நேர்மையாக ஒப்புக்கொண்டதொடு திரு. உ. கருப்பத்தேவனைச் சென்னைக்கு வரழைத்து அவர்மீது நடவடிக்கை எடுப்பதாகவும், அவரது ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்: நோக்கும் போக்கும்’ (2015)  என்ற நூலைத் திரும்பப் பெறுவதோடு அந்நூலிலிருந்து பிரச்சினைக்குரிய பக்கங்களை (பக்.127-152) நடவடிக்கைக் குழுவின் முன்பாகவே அகற்றி எனது தில்லி முகவரிக்கு அனுப்புவதாகவும் தொலைபேசி வழியாக உறுதியளித்திருந்தார். மேற்கொண்டு திரு. உ.கருப்பத்தேவனின் நூற்களை வெளியிடமாட்டோம் என்றுகூடச் சொன்னார். அண்மையில் சொந்த வேலையாக நான் மதுரை சென்றிருந்தபோது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மதுரை மண்டல மேலாளரை நேரில் சந்திக்க நேர்ந்த போது ‘தெரியாமல் தவறு நடந்துவிட்டது’ என்று  வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார் . நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தொலைபேசியில் வாய்மொழியாக அளித்த வாக்குறுதிப்படி திரு. உ. கருப்பத்தேவன் மீது நடவடிக்கை எடுத்ததற்கான எந்தவித எழுத்துப்பூர்வமான அறிக்கையும் எனக்கு 09.12.2016 வரை தரவில்லை, இதுநாள்வரை கிடைக்கவில்லை. மேற்குறித்த பிரச்சினைக்குரிய இந்நூலை NCBH நிறுவனத்தார் திரும்பப் பெறுவதாக வாய்மொழியாக உறுதியளித்த பின்னும் இந்நூல் சந்தை மற்றும் வலைத்தள வணிகத்திலும் (online) விற்பனைக்குக் கிடைக்கிறது. மேலும், ‘என்னைக் கேட்காமல் எப்படி கீற்றில் கட்டுரை வெளியிடலாம்?’ எனத் தொலைபேசியில் திரு. உ. கருப்பத்தேவன் என்னிடம் மிரட்டல் தொனியில் கூறினார். இவையெல்லாம்தான் சம்மந்தப்பட்டவர்களுக்கு 09.12.2016-ஆம் தேதி ‘லீகல் நோட்டீஸ்’ அனுப்புவதற்கான காரணங்கள் என்பதையும் இங்கே தெளிவுபடுத்துகிறேன்.       

III

இது ஒருபுறம் இருக்க திரு. உ. கருப்பத்தேவனின் மேற்குறித்த ‘ஒப்பிலக்கியம்’ (2007) என்ற நூல் போலியானது என்பதற்கான  அடிப்படை ஆதாரங்கள் சில இங்கே பதிவு செய்யப்படுகின்றன.

  • அதாவது, ஜூலை, 2015-இல் வெளியான இவரின் ‘தமிழும் பிற துறைகளும்’ (NCBH, ISBN: 978-81-2343-014-0) என்ற ஒப்பிலக்கியம் தொடர்பான நூலில் இடம்பெற்றுள்ள, ‘இந்நூலாசிரியரைப் பற்றி’ (பக். xii-xiv) என்ற பகுதியில் இவர் 2013 வரை வெளியிட்டுள்ள நூல்களின் விபரப்பட்டியலைக் (பக். xiii) கொடுத்துள்ளார். அதில் 2007-இல் வெளியானதாகச் சொல்லப்படும் இந்த ‘ஒப்பிலக்கியம்’ என்ற நூல்  குறித்த விபரங்கள் இடம்பெறவில்லை. ‘துணைநூற் பட்டியல்’ (பக். 236-243) என்ற பகுதியிலும் இடம்பெறவில்லை.   

  • ஜூலை, 2015-இல் வெளியான இவரின் ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்: நோக்கும் போக்கும்’ (NCBH, ISBN: 978-81-2343-041-6) என்ற நூலின் ‘துணைநூற்பட்டியல்’ (255-260) என்ற பகுதியிலும், இறுதிப்பகுதியான ‘இந்நூலாசிரியரைப் பற்றி’ (பக். 261-263) என்ற பகுதியில் இவர் வெளியிட்டுள்ள நூல்களின் விபரப் பகுதியிலும் (பக்.262) இந்த ‘ஒப்பிலக்கியம்’ (2007) என்ற நூல் குறித்த பதிவு எதுவும் காணப்பெறவில்லை.

  • மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகஸ்ட், 2013-இல் வெளியிட்டுள்ள அதன் தேசிய தர மதிப்பீட்டு அறிக்கை பாகம்-II-இல் (Madurai Kamaraj University, NAAC Self Study Report, Book-II, August, 2013) 447-ஆம் பக்கத்தில் திரு. உ. கருப்பத்தேவன் 2007 முதல் 2013 வரை வெளியிட்டுள்ள நூல்  விபரப்பட்டியல் தரப்பட்டுள்ளது. இதிலும் இவரது  ‘ஒப்பிலக்கியம்’ (2007) என்ற நூல் குறித்த பதிவு காணப்படவில்லை என்பதைத் தமிழ் ஆய்வுலகின்  கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

  • இவரது ‘ஒப்பிலக்கியம்’ (2007) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ISBN  எண்ணும் (No. 978-81-997706-1-4) நம்பத்தக்கதாய் இல்லை. நூல்களுக்கு ISBN எண்களை ஒதுக்கித்தரும் அதிகாரப்பூர்வமான அமைப்பான  Raja Rammohun Roy National Agency for ISBN, Dept. of Higher Education, Ministry of Human Resource Development, New Delhi அலுவலகப் பதிவேடுகளில் மேற்குறித்த ISBN எண் முறையாகப் பதிவு செய்த சான்று காணப்படவில்லை என்பதையும் தமிழ் ஆய்வுலகிற்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • மார்ச், 2007-இல் வெளியானதாகச் சொல்லப்படும் இவரது ‘ஒப்பிலக்கியம்’ என்ற நூல் கிட்டத்தட்ட பத்துவருடங்கள் கழித்தும் தோற்றத்தில்  சமீபத்தில் அச்சடித்தது போல் புத்தம் புதிதாகக் காட்சியளிப்பது விந்தையாக உள்ளது.

  • திரு. உ.கருப்பத்தேவனின் ‘ஒப்பிலக்கியம்’ (2007) என்ற நூலை வெளியிட்டுள்ள மீனாட்சி பதிப்பகமும் நம்பத்தக்கதாய் காணப்படவில்லை. இப்பதிப்பகம் அமைந்துள்ளதாகச் சொல்லப்படும்  2/304, டாக்டர் இராதாகிருஷ்ணன் தெரு, நாராயணபுரம், மதுரை-6250 014 என்ற முகவரியிலுள்ள இச்சொத்து நாகனாகுளம் ஊராட்சிப் பகுதியிலிருந்து 2010-2011 முதல்  மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 2013-இல் தான் குடியிருப்புக் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (தகவல்: மதுரை மாநகராட்சி, கட்டிட அனுமதி எண். 591/2013). 2010-2011-லிருந்து மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு குடியிருப்புப் பயன்பாட்டில் உள்ள மேற்குறித்த இந்த முகவரியில் 2007-இல் மீனாட்சி பதிப்பகம்  இருந்ததாக நூலில் குறிப்பிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஆக, திரு. உ.கருப்பத்தேவன் 2016-இல் தனக்கேற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க ‘ஒப்பிலக்கியம்’ என்ற போலியான நூலை முன் ஆண்டிட்டு (2007)  அச்சிட்டு உருவாக்கியுள்ளார் என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன்  தமிழ் ஆய்வுலகின் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளேன். இவற்றினடிப்படையில் இந்நூல் நிச்சயம் ஜூலை- டிசம்பர், 2016-க்கு இடைப்பட்ட காலத்திதில் உருவான திடீர்த் தயாரிப்பு என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ள முடியும்.  திரு. உ. கருப்பத்தேவன் 2007-இல் ‘ஒப்பிலக்கியம்’ என்றொரு நூல் எழுதவில்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில்  அவர் எனது 2008 நூலிலுள்ள கருத்துக்களைத் தமது 2015 நூலில்  கையாண்டுள்ளார் என்பது இயல்பாகவே நிரூபணமாகிறது.    

திரு. உ. கருப்பத்தேவன் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவர் எனின், அவரது உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டும் வகையில் தமது ‘ஒப்பிலக்கியம்’ (2007) என்ற நூலின் இரண்டு   அசல் படிகளை எனக்கு அன்பளிப்பாக (Complimentary) அனுப்பினாரெனில் உண்மையிலேயே இவர் நேர்மையானவர்தான்!.

IV

மார்ச் 2007-இல் வெளிவந்ததாகச் சொல்லப்படும் திரு. உ. கருப்பத்தேவனின் இந்தப் போலியான ‘ஒப்பிலக்கியம்’ (2007, மீனாட்சி பதிப்பகம், 2/304, டாக்டர் இராதாகிருஷ்ணன் தெரு, நாராயணபுரம், மதுரை-6250 014, ISBN No. 978-81-997706-1-4, விலை: Rs.100/-) என்ற நூலை முதன்முறையாக அண்மையில் (ஜனவரி, 2017) படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. படித்தவுடன் அதிர்ச்சியும் ஏற்பட்டது. அந்நூலில், நானும் எனது ஆசிரியரும் இணைந்து எழுதி 1991-இல் வெளியிட்ட ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்’ (ம. திருமலை, ச.சீனிவாசன். கமலாலயம், 30-A, ஜவஹர் தெரு மேற்குக் கடைசி , என்ஜிஒ காலனி, நாகமலை, மதுரை-625 019) என்ற நூலின் சில பக்கங்களில் (1முதல் 6 வரை) உள்ள எங்கள் கருத்துக்களை, சொற்றொடர்களை, எழுத்து நடையை இவர் எடுத்தாண்டு பயன்படுத்தியுள்ளது தெரியவந்தது. எங்களிடத்தில் எந்தவித முன் அனுமதி பெறாமல், உரிய இடத்தில் முறையான மேற்கோள் எதுவும் காட்டாமல் இவரது  ‘ஒப்பிலக்கியம்’ (2007) என்ற நூலில் 17 முதல் 20 வரையிலான பக்கங்களில் எடுத்தாண்டுள்ளார் என்பதைத்  தமிழுலகுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

மேலும், எங்களது அதே நூலில் 1 முதல் 10 வரையிலான பக்கங்களை இவர் தமது ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்: நோக்கும் போக்கும்’ (2015) என்ற நூலிலும் 14 முதல் 20 வரையிலான பக்கங்களில் எடுத்தாண்டுள்ளதை இப்போது கண்டுபிடிக்க நேர்ந்தது  என்பதையும் தமிழ் ஆய்வுலகிற்கு அறியத்தருகின்றேன்.  

ஒருவர் தன் கட்டுரை/ நூலில் மற்றவர் ஏற்கனவே தாமாகத் தேடிக் கண்டுபிடித்து கையாண்டிருந்த மேற்கோள்களை எடுத்தாளும்போது அந் நூலாசிரியர்/ கட்டுரையாசிரியர்  பெயரைக் கட்டுரை/ நூல்  ஓட்டத்திலேயே பக்க எண், ஆண்டு ஆகியவற்றோடு குறிப்பிட்டுச் செல்வதே நடைமுறை. இந்த நடைமுறையை, நாகரிகத்தைப் பின்பற்றாமல், அவர்களே மூல நூற்களைத் தேடிக் கண்டுபிடித்துப் படித்துப் பயன்படுத்தியது போல் பாவனை செய்கிறார்கள். ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்’ (1991) என்ற நூலில் அதன் ஆசிரியர்கள் 4 முதல் 6 வரையிலான பக்கங்களில் தந்துள்ள மேற்கோள்களை திரு. உ. கருப்பத்தேவனே தேடிக் கண்டுபிடித்தது போல் அவரது ‘ஒப்பிலக்கியம்’ (2007) என்ற நூலில் 19 மற்றும்  20-ஆம்  பக்கங்களிலும், ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்: நோக்கும் போக்கும்’ என்ற நூலில் 14 முதல் 20 வரையிலான பக்கங்களிலும் எடுத்தாண்டுள்ளார். அதற்கான  உரிய கடமைப்பாட்டினை அவர் தமது நூலில் பதிவு செய்யவில்லை.  

ஆக, 1991 மற்றும் 2008 –இல் வெளியான இரண்டு நூல்களிலிருந்தும் கருத்துக்களை முன் அனுமதியின்றி எடுத்தாண்டு பயனடைந்துள்ளார் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்’ (1991) என்ற நூலிலிருந்து அதன் ஆசிரியர்களிடத்தில் முறையான அனுமதியின்றிக் கருத்துக்களை எடுத்தாண்ட குற்றத்திற்காக இவருக்குத் தனியாக ஒரு ‘லீகல் நோட்டீஸ்’ அனுப்பும் சூழலை உருவாக்கியுள்ளார். எனது அறிவுச் சொத்துக்களைத் தொடர்ந்து சுரண்டிவரும் இவர்மீது துறை ரீதியான நடவடிக்க மேற்கொள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்குக் கேட்டுக்கொள்ளப்படும் என்பதையும் இங்குப் பதிவு செய்கிறேன்.     

V

ஒப்பிலக்கிய வரலாற்றைத் தொகுக்கும் தொகுப்புப் பணியையே (Collected Works) ‘ஒப்பிலக்கியம்’ (2007) என்ற நூலில்  மேற்கொண்டதாகப் பதிலுரையில் கூறிக்கொள்ளும்  திரு. உ. கருப்பத்தேவன் இது ஆய்வு நூல் இல்லை தொகுப்பு நூல்தான் என்பதை நூலின் முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிடவில்லை. அப்படிக் குறிப்பிடாத போது அந்நூல் ஆய்வு நூலாகவே கருதப்படும். ஆய்வு நூல் எனில் அது முறையான ஆய்வு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றியிருக்க வேண்டும். ‘ஒப்பிலக்கியம்’ (2007) என்ற நூலின் விரிவாக்கம்தான் (Revised) ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்: நோக்கும் போக்கும்’ (2015) என்ற நூல் எனத் தமது வழக்கறிஞர் வழிப் பதிவு செய்துள்ள திரு. உ.கருப்பத்தேவன் இது விரிவாக்கம் செய்யப்பட நூல் என முன்னுரையில் எந்த இடத்திலும் பதிவு செய்யவில்லை. எனவே இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கட்டுக்கதை என்பது புலனாகிறது.

ஒப்பிலக்கிய அறிஞர்களின் நூல்களினுடைய செய்திகளின் தொகுப்பும் பகுப்பும் என்ற நிலையில் இவரது  ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்: நோக்கும் போக்கும்’ (2015) என்ற நூல் உருவாக்கப்பட்டதாகப் பதிலுரையில் குறிப்பிட்டுள்ள திரு. உ. கருப்பத்தேவன் அதற்கான எந்தவிதக் குறிப்பையும் இந்நூலில்  குறிப்பிடப்படவில்லை என்பதைத் தமிழ் ஆய்வுலகிற்குத் தெரியப்படுத்திக்கொள்கிறேன். திரு. உ. கருப்பத்தேவனின் தனிக் கவனத்திற்கும்  கொண்டுவரப்படுகிறது.

மேலும், உண்மையிலேயே ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்: நோக்கும் போக்கும்’(2015) என்ற நூல் இவரது ‘ஒப்பிலக்கியம்’ (2007) என்ற நூலின் விரிவாக்கம்தான் எனின் அவரது 2015 நூலில் ‘திருத்திய பதிப்பு’ (Revised Edition) என்றுதான் குறிப்பிட்டிருக்க வேண்டும். மாறாக  ‘முதல் பதிப்பு’ (First Edition) என்று குறிப்பிட்டிருப்பது முரணாக உள்ளது. முதற் பதிப்புக்கு முன்னால் இன்னொரு பதிப்பு இருக்க முடியாது.

“இப்பல்கலைக்கழகம் ஒப்பிலக்கிய வளர்ச்சிக்கு இத்தகைய பங்களிப்பைச் செய்து வருகின்றது . இந்தியாவில் எந்தெந்தப் பல்கலைக்கழகங்களில் எந்தெந்த வகையான ஒப்பிலக்கியப் பணிகளும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன” என்ற வரலாற்றைப் பலநோக்கு நிலைகளில் பதிவு செய்யும் உரிமை பலருக்கும்  இருப்பதாகவும், தம்மை ஒரு வழித்தோன்றலாகக் கருதிப் பதிலுரையில் பதிவு செய்திருக்கும் திரு. உ. கருப்பத்தேவன், 2007-இல் வெளிவந்த ‘ஒப்பிலக்கியம்’ என்ற நூலை விரிவாக்கி ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்: நோக்கும் போக்கும்’ என்ற தலைப்பில் 2015-இல் நூலாக வெளியிட்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் திரு. உ.கருப்பத்தேவன் விரிவாக்கத்தின்போது பொதுக் களத்திலிருந்து (Public Domain) குறைந்த பட்சம் 2008 முதல் 2014 வரையிலான இந்திய மற்றும் பன்னாட்டு  ஒப்பிலக்கிய வளர்ச்சியையாவது தேடி ஆய்ந்து தமது 2015 நூலில் பதிவு செய்து பங்களித்திருக்க வேண்டுமல்லவா!. ஏன் பங்களிப்புச் செய்யவில்லை என்பது தெரியவில்லை?. ஒப்பிலக்கியத்தில் உண்மையான ஆர்வமும், முயற்சியும், ஈடுபாடும் உள்ளவர்களுக்கு இவையெல்லாம் சாத்தியமே!.

மதுரை காமராசர் பல்கலைக் கழக ஒப்பிலக்கியத் துறையில் பணியாற்றும் பொறுப்பான ஆசிரியரான இவர்!, ஒப்பிலக்கியக் கல்வியின் வரலாறையும் நோக்கையும் போக்கையும் முன்னெடுத்துச் செல்வதைக் கல்விப் பணியாகக் கொண்டுள்ளதாகத் தம்பட்டமடித்துக்கொள்ளும் இவர்!, இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒப்பிலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றைப் பதினைந்து ஆண்டுகளாகச் சேகரித்து வைத்துள்ளதாகப் பெருமை தேடிக்கொள்ளும் திரு. உ. கருப்பத்தேவன்! எனது ‘ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம்’ (2008) என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள 2008 வரையிலான ஒப்பிலக்கிய வரலாற்றுத் தரவுகளை மட்டும் தமது 2015 நூலில் பதிவு செய்துள்ளதன் காரணம் என்ன?.

‘ஒப்பிலக்கியத்தில் தடம் பதித்த ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் முன்னோடிகளையும் அவர்களது ஒப்பிலக்கியப் பணிகளையும் எனக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் முடிந்த வரையில் தொகுத்துத் தந்துள்ளதாகவும், வரலாற்றுச் செய்திகளைத் தொகுக்கும்போது கால வரிசைப்படியே தொகுக்க முடியும்’ இதைத்தான் ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்: நோக்கும் போக்கும்’(2015) என்ற நூலில் செய்துள்ளதாகப் பதிலுரையில் குறிப்பிடும்  திரு. உ. கருப்பத்தேவன், 2008 –க்குப் பிறகு உள்ள இந்திய ஒப்பிலக்கிய வரலாறு-வளர்ச்சித் தரவுகளையும் முடிந்தவரைத் தொகுத்துக் காலவரிசைப்படி தமது 2015 நூலில் எழுதிப் பதிவு செய்திருக்கலாமே !. இதைச்  செய்யாமல்  விட்டுவிட்டதன் நோக்கம் என்ன?. இயலவில்லையா?, இஷ்டமில்லையா?. இவற்றிற்கான விளக்கங்களையும்  இவர் ஒப்பிலக்கிய ஆய்வுலகிற்குத் தெளிவுபடுத்த வேண்டும்.   

உலக மற்றும் இந்திய ஒப்பிலக்கிய வரலாற்றை முன்னோடி ஒப்பிலக்கிய அறிஞர்களின் நூல்கள், கட்டுரைகள் அடிப்படையில்  அவரவர் நோக்கில் வடிவமைத்து அவரவருக்கான பாணியில், நடையில் பதிவு செய்யும் உரிமை பலருக்கும் உண்டெனினும் அந்த வரலாற்றை வடிவமைப்பதற்காக  அவரவர்கள் பயன்படுத்தியுள்ள உட்தலைப்புகள்,  வாக்கியங்கள்,  கையாளும் மொழிநடை  அவர்களுக்கே உரியது. அதை அவர்களின்  முன்  அனுமதியின்றி, முறையான மேற்கோளின்றி மற்றவர் எடுத்தாண்டு கையாள்வது ஆய்வு நெறிமுறைக்குப் புறம்பானதுடன் குற்றமுமாகும் . யாருடைய உதவியும் துணையும் இன்றிச் சுயமாகத்  திரு. உ.கருப்பத்தேவன் தமது சொந்த எழுத்து நடையில், பாணியில்  நூல்கள், கட்டுரைகள்  எழுதத்  தடையில்லை. இந்திய ஒப்பிலக்கிய வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கும் இது பொருந்தும். ஆனால், அடுத்தவரின் கருத்தை, எழுத்து நடையை எடுத்துக் கையாளும்போது நிச்சயம் முன் அனுமதி பெற்றே ஆக வேண்டும். முறைப்படி மேற்கோள் காட்டிக் கடமைப்பாட்டினைப் பதிவு செய்ய வேண்டும்.  ‘ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம்’ (2008) என்ற நூலில் உள்ள 21 முதல் 52 வரையிலான பக்கங்களில் கையாளப்பட்டுள்ள உட்தலைப்புகளின் கீழ் அமையும் பத்திகள், சொற்கள், சொற்றொடர்கள், மொழிநடை, மொழிபெயர்ப்புச் சொற்கள் என்பனவற்றைக்கூட முன் அனுமதி பெறாமல் அதே வைப்புமுறையில் அப்படியே கொத்தாகத் திரு. உ. கருப்பத்தேவன் தமது ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள்: நோக்கும் போக்கும்’ (2015) என்ற நூலில் கையாண்டுள்ளார். ஆய்வு நெறிமுறையைப் பின்பற்றாமல் வெறும் தொகுப்புப் பணி என்று சொல்லித் தப்பிக்க முடியாது  என்பதையே இங்குக் குறிப்பாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

VI

ஒப்பிலக்கியக் கல்வித்தளத்தில் பல வருடங்களாக முயன்று திரட்டி உருவாக்கிய எனது உழைப்பு சுரண்டப்பட்டுவிட்டதே என்ற ஆதங்கத்தில்தான் இவ்வளவுதூரம் போராடுகிறேனே தவிர யார்  மீதும்  எந்தவிதக் காழ்ப்புணர்ச்சி சிறிதும் எனக்குக் கிடையாது. இணையதளம் மற்றும் இலக்கிய இதழ்களின் மூலமாக வதந்திகளையும், அவதூறுகளையும் உண்மைக்குப் புறம்பானவற்றையும் பரப்பும் எண்ணம் எனக்கில்லை. சக மனிதர்களையும் அவர்களது திறமைகளையும் மதிக்கத் தெரிந்தவன். ஒப்பிலக்கிய அறிஞர்களின் நூல்களை மூலங்களிலிருந்து முறையாகக் கற்றவன் என்ற முறையில், ‘ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம்’ என்ற நூலில் எடுத்தாண்ட நூல் மற்றும் நூலாசிரியர்களை ஆய்வு நெறிமுறைப்படி அங்கீகரித்து மேற்கோள் காட்டிக் கடமைப்பாட்டினைச் செய்துள்ளேன்.

கடந்த இருபத்து நான்கு  வருடங்களாகப் புது தில்லியில் தமிழ்ப் பணியாற்றும் எனக்கு திரு. உ. கருப்பத்தேவனைப் பற்றி  அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத நிலையில் இவரது எழுத்துக்களுக்கு மரியாதையும் அங்கீகாரமும் கொடுத்து ‘சுதரம்பிள்ளையின் திராவிடக் கருத்தியல் : புனைவும் உண்மையும்’ (காவ்யா தமிழ், ஏப்பிரல்-ஜூன், 2015, பக்.54-62) என்ற எனது  கட்டுரையில் 57-வது பக்கத்தில் ஆய்வு நெறிமுறைகளுக்கு உட்பட்டு உரிய இடத்தில் மேற்கோள் காட்டி முறையாகப் பதிவு செய்துள்ளேன். இதைத்தான் எனது பேராசிரியர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். உரிய இடத்தில் இத்தகைய ஆய்வு நெறிமுறைகளுக்குட்பட்ட முறையான பதிவையும் அங்கீகாரத்தையும் மட்டுமே தமிழ் ஆய்வுலகம்  எதிர்பார்க்கிறது. நானும் அந்த சிறு அங்கீகாரத்தை/ பதிவை மட்டுமே எதிர்பார்த்தேன். வெறுமனே பயன்பாட்டு வரிசையில் எனது நூலினைப் பயன்படுத்தியுள்ளதாகக் கூறித் தப்பித்துக்கொள்வது ஏமாற்று வேலையாகும். சுரண்டல் தந்திரமாகும்.  சுரண்டப்பட்டவனுக்குத்தான் அதன் இழப்பும்  வலியும் வேதனையும் தெரியும்.

இந்தியப் பதிப்புரிமைச் சட்டத்தின்படி ஒருவரின் படைப்பிலிருந்து ஆய்வுக்காகவோ, தனிப்பட்ட படிப்புக்காகவோ சில பகுதிகளை எடுத்துப் பயன்படுத்துவது குற்றமாகாது. நியாயமான முறையில் மேற்கோள் காட்டவோ, சரியான முறையில் சுருக்கத்தைச் சுட்டவோ சட்டம் வாய்ப்பளிக்கிறது. ஒருவரின் படைப்பிலிருந்து சிலவற்றைப் பயன்படுத்தும் போது உரிய முறையில் உரிய இடத்தில் மூலத்தைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகும். அடுத்தவர்களுடைய எண்ணங்கள், எழுத்து, கருத்து உள்ளிட்ட  அறிவுச் சொத்துக்கள் (Intellectual Property) எனும்  சிந்தனைச் செல்வங்களை எடுத்தாண்டதற்கு ஆதாரமாக உரிய இடத்தில் மூலத்தைக் குறிப்பிடாமல்,  உரிய முறையில் கடமைப்பாட்டினைத் தெரிவிக்கத் திரு. உ. கருப்பத்தேவன் தவறிவிட்டார் என்பதையே இங்குக்  குறிப்பாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.(காண்க: V.R.Panchmukhi, ‘Intellectual Property Rights : Some Analytical Issues’, pp.25-29. , A.B. Bhattacharyya, ‘Intellectual Property Policy Proposal for Indian Academic Institutions’, pp.52-58 & David Vaver, ‘Some Agnostic Observations on Intellectual Property’, pp.238-262 In KRG Nair & Ashok Kumar (Eds.) Intellectual Property Rights, Allied Publishers Limited, New Delhi: 1994.)

மற்றவர் எழுத்தை / கருத்தை முன் அனுமதியோ முறையான மேற்கோளோ இன்றி    முழுவதும் அப்படியே எடுத்துப் பயன்படுத்துவதைத்  தொடர் பழக்கமாகக் மேற்கொண்டு வருவது ‘Habitual Plagiarism’ என்பதின்பாற்படும். !. ‘எனது எந்தப் படைப்பிலும் அறிவுத் திருடல்கள் இல்லை என்பதை ஆணித்தரமாகக் கூறுகின்றேன்’ என்று திரு. உ. கருப்பத்தேவன் தமது பதிலுரையில் பதிவு செய்திருப்பது ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை நினைவூட்டுகிறது. ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள் (1991), ‘ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம்’ (2008) ஆகிய நூல்களிலிருந்து கருத்துக்களை, பக்கங்களை அப்படியே எடுத்துத் தமது ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள் – நோக்கும் போக்கும்’ என்ற புத்தகத்தின் ஒரு பகுதியை நிரப்பியுள்ள கருப்பத்தேவனின் பிற நூல்களிலும் கருத்துத் திருடல்கள் இருக்கக் கூடும். இன்னும் யார் யார் புத்தகங்களிருந்தெல்லாம் இப்படிப் பெயர்த்தெடுத்து நூல்கள் எழுதியுள்ளார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். கீற்றில் வெளிவந்த ‘தமிழ் ஆய்வுலகில் அறிவுத் திருடல்கள்’ (20-06-2016) என்ற கட்டுரைக்கு வாசகர்கள் பதிவு செய்துள்ள பின்னூட்டங்களையும் குறிப்பாகத் திரு. மணி என்ற வாசகர் பதிவு செய்துள்ள பின்னூட்டத்தையும் சற்று உற்று நோக்குமாறு திரு. உ. கருப்பத்தேவன் வேண்டப்படுகிறார்.  

இந்த இடத்தில்தான் திரு. உ. கருப்பத்தேவனின் நூற்களின் உண்மைத் தன்மையையும் அவரது குணவியல்புகளையும், செயல்பாடுகளையும் தமிழ் ஆய்வுலகமும் ஒப்பிலக்கியத் துறையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

தமது பதிலுரையில் என்மீது குற்றம் சாட்டும் திரு. உ. கருப்பத்தேவன் இக்குற்றச்சாட்டை உடனுக்குடன்  சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தாமல் எனது 2008  நூல் வெளிவந்து ஏறத்தாழ எட்டு வருடங்கள் காலதாமதமாக வெளிக்கொணர்வதன் அவசியம் என்ன? மட்டுமன்றி, கீற்றில் எனது கட்டுரை வெளிவந்தவுடனே இதற்கு மறுப்பு தெரிவிக்காமல், ஆறு மாதங்கள் கழித்து வெளிக்கொணர்ந்துள்ளதன் மர்மம் என்ன?. காலச்சுவடு ஆய்விதழில் வெளிவந்து இரண்டு மாதங்கள் கழிந்த பின்பு இப்போது வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதன் காரணம் என்ன?. இவற்றையும் தமிழ் ஆய்வுலகம் கவனத்தில் கொண்டுள்ளது.

VII

தவறு செய்வது மனித இயல்பு. தவிர்க்க முடியாத காரணத்தாலோ, சூழ்நிலை காரணமாகவோ, தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் தவறு செய்ய நேர்ந்துவிட்டால்  அதை உரியவரோ மற்றவரோ அடையாளம் கண்டு சுட்டிக்காட்டும்போது வெளிப்படையாக ஒப்புக்கொள்வது நேர்மையின் முதற்படி. கீழிறங்கி வந்து சம்மந்தப்பட்டவரோடு சமாதானமாகிப்போவது மனிதகுலத்திற்கு நல்லது. மாறாக, செய்த தவற்றை மறைக்க மேலும் மேலும் தவறு செய்வது மனித இயல்புக்குப் மாறானது, ஆரோக்கியமற்ற செயலுங்கூட!. மனிதன் தெரியாமல் செய்கின்ற தவறுகளுக்கு உலகில் மன்னிப்பு உண்டு, ஆனால், மனசாட்சிக்குத்  தெரிந்தே செய்கின்ற தவறுகளுக்கு மன்னிப்பே கிடையாது.

ஆக, ‘ஒப்பிலக்கியம்’ என்றொரு போலியான நூலைத் தமிழாய்வு வெளியில் திரு. உ. கருப்பத்தேவன் உலவவிட்டிருப்பதான் மூலம் ஒரு தவறை மறைப்பதற்கு மற்றொரு தவறை அரங்கேற்றித் தமிழ் ஆய்வுலகத்தைக்  களங்கப்படுத்தியிருக்கிறார். மட்டுமன்றி, இந்நூல் தொடர்பாக வழக்கறிஞர் வாயிலாகப் பதிப்புரிமை மற்றும்  காப்புரிமைச் சட்டத்தின்படி  நஷ்ட ஈடு கோரி எனக்கு ‘பதில் மறுப்பு நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது வேடிக்கையாக உள்ளது. அதோடு என்மீது சட்டப்படி வழக்குத் தொடரத் தயாராக இருப்பதாகவும்  பதிலுரையின் இறுதியில் பதிவு செய்துள்ளார். மனசாட்சிப்படி தடயங்களை அழிக்காமல், மறைக்காமல், மேற்கொண்டு உருவாக்காமல் நேர்மையைக் கடைப்பிடித்து திரு. உ. கருப்பத்தேவன் ‘ஒப்பிலக்கியம்’ என்ற நூலை 2007-இல் வெளியிட்டதற்கான உண்மை ஆதாரங்களைக்காட்டி நிரூபிக்கும் பட்சத்தில், எனது 2008 நூலிலிருந்து கருத்துக்களை திரு. உ. கருப்பத்தேவன் எடுத்தாளவில்லை என்பதை ஆதாரபூர்வமாக நிலைநாட்டும் பட்சத்தில் என்மீது தொடரும் வழக்குகளைச் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்பதை முறையாகவும், துணிவுடனும்  தெரிவித்துக் கொள்கிறேன். யார் யார்மீது வழக்குத் தொடர யோக்கியதை இருக்கிறது என்பதைத் திரு. உ. கருப்பத்தேவனே முடிவு செய்து கொள்ளட்டும்.  

ஒப்பிலக்கியத் துறையில் முறையான பயிற்சியும் முன் அனுபவமும் முனைவர் பட்டமும்  பெற்ற நான் நேர்மையான முறையில் முயன்று சிந்தித்துச் சேகரித்து வெளிக்கொணர்ந்துள்ள  என்னுடைய கல்விசார் உழைப்பு, ஒப்பிலக்கியத்தில் பயிற்சியும் பட்டமும் பெறாத தனிப்பட்ட ஒருவரால் அவரது சுயநலத்திற்காகத் தொடர்ந்து சுரண்டப்படுவது வேதனையளிக்கிறது. இத்தகையவர்களால் தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவாகும். உழைப்பு, நேர்மை மற்றும் ஈடுபாடுடைய, தன்முனைப்பற்ற எழுத்து/ படைப்பு/ ஆய்வுகளால் மட்டுமே தமிழ் ஆய்வுலகம் மேன்மை அடையும்.  

முறையான வழிகளில் கல்விப் பட்டங்களும் பணி வாய்ப்பும் கிடைக்கப் பெற்ற நான், கல்வித் தளத்தில் எனது உழைப்பிற்கும் நேர்மைக்கும் ஏற்பட்ட பங்கத்தைத் துடைக்க, நீதி கிடைக்கக் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முறைப்படிப் போராடி வருகிறேன். தமிழ்  வாசகர்களும், தமிழ் அறிவுலகமும் கல்விசார் அறிவுச் சுரண்டல்களுக்கு எதிராகக்  குரல் கொடுத்து ஒத்துழைப்பு நல்குவார்கள் எனவும் நம்புகிறேன்.

- முனைவர்.ச.சீனிவாசன், தமிழ்  இணப்பேராசிரியர், நவீன இந்திய  மொழிகள் துறை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி (தில்லிப் பல்கலைக்கழகம்), புது தில்லி. 

Pin It