கடந்த நவம்பர் 9 அன்று, சென்னை பாண்டிபசார் காவல் நிலையத்தில் கழுத்து அறுக்கப்பட்டு – எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட திருநங்கை தாராவுக்கு, காவல்துறையினர் இழைத்த கொடுமைக்கு நீதி கேட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், 04.12.2016 காலை, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எர்ணாவூர் அரசுக் குடியிருப்பில் வசிக்கும் திருநங்கை தாரா அவர்கள், கடந்த 9.11.2016ஆம் நாள் அதிகாலை இருசக்கர ஊர்தியில் செல்லும் போது சென்னை பாண்டிபசார் காவலர்களால்தடுக்கப்பட்டு வண்டியும் அலைபேசியும் பறிக்கப்பட்டது. அதை மீட்கச் செல்லும் தாராவை காவலர்கள் தரக்குறைவாகவும் பிறப்பை இழிவுபடுத்திப் பேசியும் நாக்கூசம் சொற்களால்மிரட்டினர்.
அலைப்பேசியையாவது தாருங்கள் என வலியுறுத்தியும் வன்மத்தோடு தர மறுத்த நிலையில், தனது இயலாமையின் வெளிப்பாடாகத் தன் கழுத்தைத் தானே அறுத்துக் கொள்கிறார் தாரா. அதைத் தடுக்க எந்த முயற்சியையும் காவல்துறை எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி தொடர்ந்து இழிவுபடுத்துவதையும் நிறுத்தாத போது, தன்னைத் தானே எரித்துக் கொள்வேன் நீங்களெல்லாம்அதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்கிறார். இதுவரைக்கும் காணொலிக் காட்சி ஆதாரமாய் உள்ளது.
கழுத்தைக் கண்முன்னே அறுத்துக் கொண்டதன் பிறகு தாரா தீப்பிடித்துக் கருகி மாண்டுபோகிறார். அப்படியானால் கழுத்தறுபட்டதற்கும் தீப்பிடித்ததற்கும் இடையில் என்ன நடந்தது? இதுகுறித்த உண்மைகளுக்கு முகம் கொடுக்க காவல்துறை மறுத்து வருகிறது.
தாராவின் இழப்பில் உள்ள ஐயங்களால் திருநங்கைகள் ஆணையர் அலுவலகத்திற்கு முறையிடச் சென்றபோது அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். பாதிக்கப்பட்டவர்களின்கோரிக்கையை செவிமடுக்கவும் காவல்துறை முன்வரவில்லை. தடியடிக்குப் பிறகு இப்போது வரை காவல்துறை திருநங்கைகளை அச்சம் மிகுந்த சூழலிலேயே வைத்திருக்கிறது.
எரிந்து போன உடலை எடுப்பதற்கு முன்பு உடலைச் சுற்றி காவல்துறையால் குறி (மார்க்) இடப்படவில்லை. கழுத்தறுத்துக் கொள்வது வரை காணொலி வைத்துள்ள காவல்துறை அதற்கு மேல்பதிவுகள் இல்லை எனச் சொல்கிறது. கண்காணிப்புக் காணொலி, அதுவும் பாண்டிபசார் காவல் நிலையத்தில் ஒழுங்காகச் செயல்படவில்லை எனச் சொல்வதெல்லாம் நமக்கு அவர்கள் மீதுவலுத்த ஐயங்களையே எழுப்புகிறது.
தாராவின் இரு சக்கர ஊர்தியைக் காவல்துறையால் பறித்துக் கொண்டது தவறு. தாரா மீது தவறு இருந்தால் சட்டப்படி உரிய கண்ணியத்தோடு நடவடிக்கை எடுப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அலைப்பேசியையும் இரு சக்கர வண்டியையும் பறிப்பதற்கு என்ன தேவை வந்தது என்பதை காவல்துறை இதுவரை எவ்வகையிலும் விளக்கவில்லை!
காவல் நிலையத்தில் தாரா திரும்பத் திரும்பக் கேட்டது அலைபேசியை மட்டுமாவது திருப்பித் தாருங்கள் என்பதுதான். தந்திருந்தால் தாரா இன்று உயிரோடு இருந்திருப்பார்.
இவை எல்லாவற்றையும் விட தாராவின் அழுகுரலைக் கல்மனம் கொண்டு அலட்சியப்படுத்தியது காவல்துறையின் மனிதத்தன்மையற்ற வக்கிரப் போக்கு!
இந்நிலையில், தாராவுக்கு நீதி கேட்டு தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது. தோழர் சுதாகாந்திஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார். த.தே.வி.இ. பொதுச் செயலாளர் தோழர் வே. பாரதி தொடக்கவுரையாற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், தமிழ்த்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, சி.பி.எம். தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் பாக்கியம், தமிழகவாழ்வுரிமைக் கட்சி கொள்கை விளக்க அணிச் செயலாளர் திரு. திருச்சி பெரியார் சரவணன், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் மாநிலச் செயலாளர் தோழர் பி. பத்மாவதி, தமிழர் முன்னணிஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், கவிஞர் சல்மா, இயக்குநர் இராம், தோழர் அர்ச்சனா (மனிதி) உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று கண்டனஉரையாற்றினர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டன உரையாற்றினார். அவரது உரையின் எழுத்து வடிவம் :
“திருநங்கை தாரா அவர்களுக்கு நீதி கேட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கு எனக்கு முன் பேசிய தோழர் சுதாகாந்தி, திருநங்கை தாரா பாண்டிபசார் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் கொல்லபட்டு, இத்தனை நாட்கள் கடந்துவிட்ட பிறகும், இதுவரை காவல்துறை மேலதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
தாராவுக்கு நீதி கேட்டு திருநங்கைகள் போராடியுள்ளனர். அவர் காவல்நிலையத்திலேயே கழுத்தை அறுத்துக் கொண்டதெல்லாம் அங்குள்ள கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.அது குறித்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனாலும்கூட, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையே, ஏன்?
ஒரு காவல் நிலையத்தில், பணியிலுள்ள காவலர்கள் ஏதாவது தவறு செய்தால், உடனே அதனை விசாரித்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் பழக்கமும் தமிழ்நாட்டில்வழக்கதிலேயே இல்லையே! அமைச்சர்களுக்கு கோவில் கோவிலாக சுற்றவும், காவடி எடுக்கவுமே்தான் நேரம் இருக்கிறதே தவிர, இதற்கு நேரம் கிடையாது!
கர்நாடகமும் இந்திய அரசும் காவிரி நீரை மறுத்துவிட்டதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இதுவரை 12 உழவர்கள் இறந்துள்ளனர். அந்தத் தஞ்சை மாவட்டத்தில்தான், தமிழ்நாட்டின்வேளாண்துறை அமைச்சர் இருக்கிறார். பக்கத்து மாவட்டத்தில் மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் இருக்கிறார். நாகை மாவட்டத்தில் இன்னொரு அமைச்சர் இருக்கிறார். ஆனால்,ஒருவர்கூட அங்கு என்ன நடக்கிறது, ஏன் உழவர்கள் அடுத்தடுத்து சாகிறார்கள், உண்மையிலேயே பயிர்கள் கருகிவிட்டனவா என்றெல்லாம்கூட நேரில் சென்று ஆய்வு நடத்தவில்லை.மக்களுக்கு ஆறுதல் சொல்ல முன்வரவில்லை!
உழவர்களின் தற்கொலைச் சாவுகளைக் கண்டு, மனித நேயத்துடன் ஏதாவதொரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரோ அல்லது அமைச்சர்களோ மக்களை சென்று பார்த்து, ஆறுதல்கூறினால், அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று பயப்படுகிறார்கள். அந்தளவிற்கு தமிழ்நாட்டில் நிலைமை சீரழிந்துகிடக்கிறது!
எனவே, இவற்றையெல்லாம் மாற்ற விழிப்புணர்வு பெற்ற தமிழ்நாட்டு இளைஞர்கள், எழுச்சியுடன் வீதிக்கு வர வேண்டும்! அரசும் நிர்வாகமும் செயல்படாத நிலையில், நாம்தான் களமிறங்கிப்போராட வேண்டும். மாற்று சனநாயகத்தை எழுச்சி கொள்ளச் செய்ய வேண்டும்.
இந்தியாவிலேயே மிக மோசமான – இனத்தற்காப்பற்ற – நீதியற்ற – மனித உரிமைக் காப்பற்ற – காவலற்ற மாநிலமாக தமிழ்நாடு சீரழிந்து கொண்டுள்ளது. திருநங்கை தாராவுக்குஇழைக்கப்பட்ட கொடுமை, அதிலொன்றுதான்!
திருநங்கை தாராவுக்கு நீதி அளிக்க மறுப்பதால் ஆளுங்கட்சிக்கு என்ன இழப்பு இருக்கிறது? அவர்கள்தான் 4,000 – 5,000 ரூபாய் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிக் கொள்கிறார்களே!எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியைக் கண்டித்து – வாக்குகளைக் கவருதற்கான பட்டியலில் தாராவுக்கும் இடம் இருந்தால், அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் குறிப்பிடுவதோடு, தம்கடமை முடிந்து விட்டதாகக் கருதிக் கொள்ளும்! அவ்வளவே! இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை!
இதனை மாற்ற, இளைஞர்கள் – இலட்சிய விழிப்புணர்வு பெற்று வீதிக்கு வர வேண்டும். நாம் ஒரு பேரணி நடத்தினால், அரசாங்கம் நிலைகுலையும் அளவிற்கு நாம் எழுச்சி பெற வேண்டும்.
சராசரி மனிதர்களைவிடப் பலவீனமாக உள்ளவர்களுக்குக் கூடுதல் உரிமையும் சலுகையும் வழங்க வேண்டும். அதுதான் மனித நீதி! அவர்கள்தான் Privileged Class! திருநங்கைகளுக்குக் கூடுதல்உரிமையும் சலுகையும் வழங்க வேண்டும்.
வெளிநாடுகளில் சாலையில் நடந்து செல்வோர், தவறுதலாக சிவப்பு விளக்கு எரியும்போது, சாலையைக் கடக்க நடந்து சென்றால், ஊர்திகளில் வருவோர், வண்டியை நிறுத்தி, அவர்கள் போகும்வரை காத்திருப்பர். ஏன்? அந்த நேரத்தில் மோட்டார் ஊர்திகளில் வருவோர் வலுவானவர்கள். நடந்து செல்வோர் பலவீனமானவர்கள்! நம் ஊரில் என்றால் அவ்வாறு சாலையைக் கடப்போரைக்காரோட்டி வருபவர் கொச்சையாகத் திட்டுவார்
எனவே, நாமும் அந்த மனித நீதியைக் கடைபிடிக்க வேண்டும். அந்த மனித நீதி - அறம் – ஒழுக்கம் ஆகியவை நம் எல்லோரையும்விட, காவல்துறையினருக்குக் கூடுதலாக இருக்க வேண்டும். ஆனால், இருக்கிறதா?
விபச்சாரத்தை யார் செய்தாலும் நாம் ஆதரிக்கவில்லை. சென்னை நகரிலே பெரிய பெரிய ஐந்து நட்சத்திர விடுதிகளில் விபச்சாரம் நடப்பதெல்லாம், காவல்துறையினருக்குத் தெரியாதா? தெரியும்! அங்கு போய் வரும் அதிகாரிகள் யார் யார், பெரிய மனிதர்கள் யார் யார் என்றெல்லாம்கூட அவர்களுக்குத் தெரியும்! ஆனால், அவர்களை விட்டுவிடுவார்கள். ஆனால், தன்னுடையபிறப்பால் எல்லாவற்றையும் இழந்து திருநங்கைகள் விபச்சாரம் செய்தால்மட்டும், அதைக் கேவலமான, கொடுங்குற்றமாகப் பார்ப்பார்கள்.
ஒரு மனிதன் தவறு செய்தால், உனது தாய் – தந்தை இப்படித்தான் வளர்த்தார்களா? உன் வாத்தியார் இப்படித்தான் சொல்லிக் கொடுத்தாரா என்று கேள்வி கேட்போம். அதுபோல், ஒரு காவலர்தவறு செய்தால், உங்கள் மேலதிகாரி இப்படி அநீதியாக – அநாகரீகமாக நடந்து கொள்ளத்தான் சொல்லிக் கொடுத்தாரா என்று நாம் கேள்வி கேட்க வேண்டும்! ஆனால், இங்குள்ள காவல்துறை அதிகாரிகளோ “மறத்தமிழர்களாக” இல்லை. தவறு செய்து செய்து பழக்கப்பட்டு – தோல் மரத்துப்போன “மரத்தமிழர்களாக” உள்ளனர்!
காவல் நிலையத்தில் சில காவலர்கள் தவறு செய்தவுடன், அவர்கள் மீது மேலதிகாரிகள் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை? நடவடிக்கை எடுக்காததால், அந்தத் தவறுக்கு அவர்களது மேலதிகாரிகளும், அவருக்கு மேல் அதிகாரியான அமைச்சரும் தமிழ்நாடு அரசும் பொறுப்பேற்கின்றனர். சில காவலர்கள் செய்த இந்தத் தவறை, இந்த மேலதிகாரிகளும் தமிழ்நாடு அரசும், ஏன்ஏற்்றுக் கொள்ள வேண்டும்? தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அரசுக்கும் அந்தத் துறைக்கும் நற்பெயர் கிடைக்கும்!
இப்படி தவறுகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் – அதனை கண்டுகொள்ளாமல்விட்டதால்தான், காவல்துறை நீடிக்க முடியும். காசுமீரிலும் மணிப்பூரிலும் இராணுவத்தினர் என்ன குற்றம்செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை கிடையாது. வழக்கு கிடையாது என்று அங்கு சிறப்பு ஆயுதப்படைச் சட்டம் இருப்பதுபோல், தமிழ்நாட்டுக் காவல்துறையினர் எந்தக் குற்றம் செய்தாலும்நடவடிக்கை கிடையாது என்று சட்டம் கொண்டு வாருங்கள்.
பாண்டிபசார் காவல் நிலையத்தில், இப்படியொரு நிகழ்வு நடந்தவுடன் அந்த காவல் நிலையத்துக்குப் பொறுப்பான மேலதிகாரிகள், உடனடியாக துடிப்புற்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை!
தன்னுடைய மகன் ஓட்டிய தேர்க்காலில் பசுவின் கன்று அடிபட்டு இறந்து போனதற்காக, மனுநீதிச் சோழ மன்னன், தன் மகனை அதே தேர்க்காலில் பலியிட்டான் என கதை படித்திருக்கிறோம். உண்மையில், அப்படி நடந்ததா என்பது முக்கியமில்லை. நடந்திருக்காமலும் இருக்கலாம். ஆனால், இப்படி செய்வதுதான் அரச நீதி என தமிழ்ச் சான்றோர்கள் கருதினார்கள். அதை ஒருகதையாக மக்களுக்கு வழங்கினார்கள்.
சிலப்பதிகாரத்தில், கோவலன் கள்வனில்லை, “யானே கள்வன்” என்று தன்னுடைய தவறை உணர்ந்து பாண்டிய நெடுஞ்செழிய மன்னன் இறந்து போவதாக இளங்கோவடிகள் கூறுகிறார். அது உண்மையாகவே நடந்ததா இல்லையா எனத் தெரியாது. ஆனால், தவறு செய்த ஒரு மன்னன் – அந்தத்த வறை உணர்ந்து இறந்து போவதுதான் அறம் – அரச நீதி என்று தமிழ்ச்சான்றோர்இளங்கோவடிகள் சித்தரிக்கிறார். அந்த அறவுணர்ச்சியை நாம் பெற வேண்டும்.
எனவே, இந்த அறவுணர்வோடு புதிய இளைஞர்கள் வீதிக்கு வர வேண்டும்! அப்படி வீதிக்கு வந்தால்தான், திருநங்கை தாரா போன்றவர்கள், சமூகத்தில் பின்தங்கிய மக்கள்காப்பாற்றப்படுவார்கள். இந்த சமூகமும் காப்பாற்றப்படும்! அநீதிகள் நடக்கும் போது, அரசு தலையிடவில்லையென்றால், மக்களாகிய நாம் தான் தலையிட வேண்டும். இந்தப் பொறுப்பைஉணர்ந்து நாம் இவற்றில் தலையிட வேண்டும்! நீதி கேட்க வேண்டும்! இல்லையெனில், திருநங்கை தாராவுக்கு நடந்தது, நாளை நமக்கும் நடக்கும்!”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், திரளான தமிழின உணர்வாளர்களும் சனநாயக ஆற்றல்களும் கலந்து கொண்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் திரு. ம.இலட்சுமி அம்மாள், புலவர் இரத்தினவேலவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் இரா. இளங்குமரன்,வடசென்னை செயலாளர் தோழர் செந்தில்குமரன், தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் செ. ஏந்தல், மு.வெ. இரமேசு, வடிவேலன், நல்லசிவம், சரண்யா,ஆனந்தராசு, அருண்குமார் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.