demonetization

வங்கியில் இல்லாப்பணம் கருப்புப்பணம்’, என்ற எமது முந்தைய கட்டுரையில் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மோடியாரின் அறிவிப்பு கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக அல்ல. (இது நமது காதில் பூ சுற்றுவதற்காக மோடி வைத்த பெயர்). உண்மையில் இந்திய மக்களில் நுாறு கோடிக்கும் மேற்பட்டவர்கள் சிறுக, சிறுக சேமித்து வைத்திருக்கும் பணத்தைப் பிடுங்கி முதலாளிகளுக்குத் தருவது. இதை சேமிப்பதற்கு அடிப்படையான தொழில்களை நம்மிடம் இருந்து பிடுங்கி முதலாளிகளுக்கு தருவதுதான் என்பதை குறிப்பிட்டிருந்தோம்.

            அந்த வகையில் இதுவரை வங்கிகளில் நாம் 6 லட்சம் கோடி ரூபாய் வரவு வைத்துள்ளோம். டிசம்பர் 31க்குள் மேலும் பல லட்சம் கோடி ரூபாய் நிச்சயம் வங்கிகளுக்கு வந்து சேரும்.

            அடுத்து நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத் தொழில்களைப் பிடுங்கி முதலாளிகளுக்குத் தருவது. இதற்காக முதற்கட்டமாக குறிவைக்கப்பட்டிருக்கும் தொழில்களில் மளிகைப் பொருட்கள் வி்ற்பனையும், மரச்சாமான்கள் விற்பனையும் அடங்கும். அதாவது மளிகைக் கடைக்காரர்களின், மரச்சாமான்கள் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கப் போகின்றனர்.

            உலகிலேயே மளிகைப் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தை இந்தியாவில் உள்ளது. இந்த சந்தையை கைப்பற்ற - அதாவது பல கோடி சிறு, குறு வியாபாரிகளின் வாழ்வைப் பறிக்க - சில முதலாளிகள் களத்தில் இறங்கியுள்ளார்கள்.

            இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்கள் நுாறு கோடி பேர். இதில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் 20 கோடி பேர். இணையதளத்தைப் பயன்படுத்துபவர்கள் தற்போது 40 கோடி பேராக உள்ளார்கள். இந்த எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 79 கோடியாக உயரும்.

            தற்போது இந்தியாவில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை 5 கோடி பேராக உள்ளது. இந்த எண்ணி்க்கை 2020-ம் ஆண்டில் 32 கோடி பேராக உயரும். ரொக்கமில்லாத ஆன்லைன் வர்த்தகம் அடுத்த நான்கு ஆண்டுகளில் 540 சதவீதம் உயரும் என்றும், 2022-ல் ஆன்லைன் வர்த்தகம் ரூ.30 ஆயிரம் கோடியாகவும், 2025-ல் ரூ.11 லட்சத்து 28 ஆயிரம் கோடியாகவும் உயரும் என்றும் இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

            அமேசான் என்ற நிறுவனம் இந்தியப் பெருநகரங்களில் மளிகைப் பொருட்களை ஆன்லைன் மூலம் ஏற்கனவே விற்கத் துவங்கிவிட்டது. தற்போது பிலிப்கார்ட் என்ற நிறுவனம் சில மாதங்களில் தனது விற்பனையைத் துவங்கப் போவதாக அறிவித்துள்ளது.

            இவர்கள் எல்லோருக்கும் முன்பாக ரிலையன்ஸ் அம்பானி காய்கறிகளை விற்க இந்தியா முழுக்க பெருநகரங்களில் கடைகளைத் திறந்தார். ஆனால் தெருத்தெருவாக காய்கறிகளை கூவி விற்கும் நமது தள்ளு வண்டிக்காரரிடம் போட்டியிட முடியாமல் தோற்றுப்போய் கடைகளை மூடிவிட்டு ஓடிப்போனார். அதைப்பற்றி அவர் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்போது அவரிடம் வருவாய்க்கு ஆயிரம் வழிகளை இருந்ததால் அரசாங்கத்திடம் சென்று அம்பானி ஒப்பாரி வைக்கவும் இல்லை .

            ஆனால் இந்த முறை மளிகைப்பொருட்களையும், காய்கறிகளையும், மரச் சாமான்களையும் விற்கத் திட்டமிட்டுள்ள முதலாளிகள், மோடி அரசின் தலைமையில் வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு தருவதற்காக இந்தியாவின் முப்படைகளும் மோடியின் உத்தரவுக்கு ஏற்ப அணிவகுத்து நிற்கின்றன. நாட்டில் செயற்கையான பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் உடனடியாகவும், எதிர்காலத்திலும் தமது இலக்கிற்கு ஏற்ப ரொக்கப் பண பரிவர்த்தனை அற்ற ஆன்லைன் வர்த்தகத்திற்கு பெருமளவு வாடிக்கையாளர்களை உருவாக்க முயலுகின்றனர். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைப் பறித்து முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதைத்தான் கருப்புப்பண ஒழிப்பு என்கிறார் மோடி.

            முதலாளிகள் என்றால் பொருள் உற்பத்தியில்தான் ஈடுபடுவார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதெல்லாம் உண்மையான முதலாளிகளுக்குத்தான் பொருந்தும். உலக முதலாளிகளோடு சந்தையில் போட்டியிடுவதைப் பற்றி கற்பனை செய்து கூட பார்க்க முடியாதவர்கள்தான் இந்திய முதலாளிகள்.

            இவர்கள் இந்தியாவின் சமூகப் பொருளாதார வளர்ச்சியின் தவிர்க்கவியலாத விளைவாக இயல்பாக உருவான முதலாளிகள் இல்லை. வெள்ளையர்கள் இந்தியாவின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க ஏதுவாக உருவாக்கப்பட்டவர்கள்.

            இவர்களை உருவாக்கிய வெள்ளையர்கள் இவர்களுக்குத் தந்த வேலை இந்திய மக்களுக்கும் தமக்கும் இடையில் தரகனாக வேலை பார்ப்பது தான். வெள்ளையர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறி எழுபது ஆண்டுகளுக்கும் பின்னரும் இவர்களின் வருவாய்க்கான வழியாக இப்போதும் இருப்பது இதுதான். இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது.

            இத்தனை காலமாக இந்திய முதலாளிகள் பயணம் செய்த மண்குதிரை மடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா தந்த மண் குதிரையில் இந்தியா மட்டும் சவாரி செய்யவில்லை. உலகின் வேறு சில நாடுகளும் பயணம் செய்தன. இந்த நாடுகள் அனைத்துமே இன்று மடுவில் இருந்து தப்பிக்கப் போராடுகின்றன.

            இப்படி போராடுகின்ற மற்ற நாட்டு முதலாளிகளுக்கும் இந்திய முதலாளிகளுக்கும் ஓர் அடிப்படையான வேறுபாடு இருக்கிறது. அவர்கள் மண் குதிரையில் ஏறுவதற்கு முன்பே நீந்தத் தெரிந்தவர்கள். அதனால் தேசியப்பொருளாதாரம் என்னும் நீச்சல் கலையின் மூலம் கரையேற முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்திய முதலாளிகளோ எப்போதுமே நீந்தத் தெரியாதவர்கள். அதனால், தாங்கள் உயிர் பிழைக்க தன்னோடு உள்ளவனை நீரில் அமுக்கி தான் தப்பிக்க முயலுகிறார்கள். அதாவது தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குப் பதில் அதைப் பலவீனப்படுத்தி – இல்லாமல் ஆக்கும் - இந்திய மக்களின் வாங்கும் சக்தியை அழிக்க முற்படுகின்றனர். மக்களின் வாங்கும் சக்திக்கான ஆதாரமாக விளங்கும் அவர்களின் சுயதொழில்களை அபகரிக்க களத்தில் இறங்கியுள்ளனர்.

            மக்களின் வாங்கும் சக்தியை பிடுங்கிக் கொள்வதன் மூலம் தமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர். இதன்மூலம் இவர்கள் தமது அழிவை சற்று தள்ளிப்போடலாமே தவிர உயிர் பிழைக்க முடியாது.

            உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதை, அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நவம்பர் 8 அன்றுதான் மோடி அறிவித்தார். இவ்விரு நிகழ்வுகளும் தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. மிகத் தெளிவாக முன்பே திட்டமிட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாகும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் கிளாரி கிளிண்டன் வெற்றி பெற்றிருந்தால் இந்த உலகம் மூன்றாம் உலகப்போரின் மூலம் மீண்டும் ஒரு அழிவைச் சந்தித்திருக்கலாம். இதே போன்று நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கும், பணம் செல்லாது என்ற வடிவிலான அழிவும் தள்ளிப் போடப்பட்டிருக்கலாம். இதற்கு மாறாக அமெரிக்கா, சீனாவிற்கு இப்போது தந்துள்ள உற்பத்தி வாய்ப்பை இந்தியாவிற்குத் தரவும் வாய்ப்பிருந்தது. அதற்கான வாக்குறுதியையும் கிளாரி இந்தியாவிற்கு வழங்கியும் இருந்தார். இந்த தெனாவட்டில் தான் இந்தாண்டு தீபாவளியின் போது சீனப் பட்டாசிற்கு இந்தியா தடை விதித்தது. சீனாவிற்கு எதிரான தேசப்பக்த பிரச்சாரத்தையும் மோடியின் அரசு செய்தது. இதன் மூலம் சீனாவை சீண்டிப்பார்த்தது.

இந்தியாவுடன் சீனாவின் வர்த்தகம் வெறுமனே 2 சதவிதம்தான். சீனாவுடனான வர்த்தகத்தைத் தடுப்பதன் மூலம் இந்தியாவில் சீனாவின் முதலீடுகள் வராமல் நின்றுபோகும். இதனால் இந்தியாவிற்குதான் இழப்பு ஏற்படும். சீனவிற்கு குறிப்பிடும்படியான எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. எனவே இந்தியா தனது சிறுபிள்ளைத்தனமான பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரித்தது.

ஆனால் அமெரிக்க மக்களோ அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப்பை தேர்ந்து எடுத்துவிட்டதால், இந்தியாவிற்கு அமெரிக்கா இப்போது தந்துள்ள உற்பத்திக்கான வாய்ப்பையும் இழந்துவிட்டது. ‘          

            எனவே, இந்திய முதலாளிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி உள்நாட்டு நிலைமைகளால் ஏற்பட்டதல்ல. சர்வதேச அளவிலான அரசியல், பொருளாதார நெருக்கடியின் தவிர்க்கவியலாத விளைவாகும். அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளாமல், பரிசீலிக்காமல் இந்தியாவி்ல் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற இந்திய அரசின் நடவடிக்கையை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள இயலாது. இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் இதனால் ஏற்படும் விளைவுகளை நாம் எதிர்கொள்ளவும் முடியாது என்பதால் அதைப்பற்றி இனி பரிசீலிப்போம்……

தொடரும்...

- சூறாவளி

Pin It