கீற்றில் தேட...

2016 ஜூலை 27 ம் நாள் குஜராத் மாநிலம் உந்நாவ் என்ற கிராமத்து கடை வீதியில் செத்துக்கிடந்த பசுமாட்டை அகற்றி, அதன் தோலை உரித்துக் கொண்டிருந்த 5 தலித் இளைஞர்களை பசுபாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த (RSS) சில நபர்கள் நிர்வாணப்படுத்தி பொது மக்கள் முன்னிலையில் சவுக்கால் அடித்து ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரமான காட்சியை சில தொலைகாட்சிகள் ஒளிபரப்பியதை நீங்கள் பார்த்திருக்ககூடும்.

attack on dalits 5002012 ஆகஸ்ட் 13 ம் நாள் ஹரியானா மாநிலத்தில், சத்கீர் கிராமத்தில் இதே மாதிரி இறந்து கிடந்த பசுமாட்டின் தோலை உரித்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்த 5 தலித்துகளை RSS கும்பல் படுகொலை செய்தது. 2016 மார்ச் 18 ம் நாள் ஜார்கண்டில் மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த லாரி டிரைவரையும், ஒப்பந்ததாரரையும் RSS கும்பல் மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்து கொன்று மரக்கிளையில் தொங்கவிட்டார்கள்.

சென்ற ஆண்டு உ.பி. மாநிலம் தாத்ரி நகரில் வீட்டில் உண்ணுவதற்கு மாட்டு கறி வைத்திருந்தாக கூறி முகமது இத்லா என்ற 65 வயது முஸ்லீம் பெரியவர் குடும்பத்தின் மீது RSS மற்றும் BJP யைச் சேர்ந்த 200 பேர் கும்பல் தாக்குதல் தொடுத்தார்கள். சம்பவ இடத்திலேயே முகமது இத்லா சித்ரவதை செய்து கொல்லப்பட்டார். மகன் முகமது யூனுஸ் ( விமானப்படை இளம் அதிகாரி) குற்றுயிரும் கொலை உயிருமாக சித்ரவதை செய்யப்பட்டு இன்னமும் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

RSS, BJPயினர் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இன்னும் சில மாநிலங்களிலும் புதிது புதிதாக நூற்றுக்கணக்கான பசு பாதுகாப்பு குழுக்கள் ( கவ் ரக்ஷ்னா சமிதி) சங்பாpவார் கும்பலால் தோற்றுவிக்கப்பட்டு சிறுபான்மை இஸ்லாமியர் மீதும் தலித் சமுகத்தவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடைபெறுவது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது.

குஜராத் மாநிலத்தில் உந்நாவ் நகரில் தலித்துகள் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து குஜராத் மாநிலம் முழுவதும் தலித்துகள் மிகப்பெரும் ஆர்பாட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கி அகமதாபாத்தில் 350 கிலோ மீட்டர் தூரம் கண்டன நடைப்பயணத்தை நடத்தி ஆகஸ்ட் 15 ம் நாள் உந்நாவ் நகரில் 5 லட்சம் தலித்துகள் கண்டன பேரணி நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

உ.பி. மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் இந்த மாதிரி சம்பவங்களால் தலித்துகளின் ஆதரவை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிரதமர் மோடி அண்மையில் ஹைதராபாத் நகரில் தனது நீண்ட நாள் மௌனத்தை கலைத்து “தலித்துகளை தாக்குவதற்கு பதிலாக என்னை தாக்குங்கள்” என்றும் “தலித்துகளை சுடுவதற்கு முன்னால் என்னை சுடுங்கள்” என்றும் “பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு சிலர் சமுக விரோத நடவடிக்கையில் இறங்கி மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக” வீரவசனம் பேசி நாடகமாடியிருக்கிறார்.

“பசு பாதுகாப்பு” என்ற பெயாpல் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை சேர்ந்தவர்களை அணி திரட்டுவதையும், இஸ்லாமியர் மீது வெறுப்பை உண்டாக்கி தனிமைப்படுத்துவதற்காக இந்துத்வா மதவெறி சக்திகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்துத்வா மதவெறி சக்திகளின் பசுபாதுகாப்பு அரசியலுக்கு ஒரு வரலாறு உண்டு என்பதை நாம் ஆழமாக சிந்தித்து பார்க்க வேண்டும். கி.மு.1500 ம் ஆண்டில் தொடங்கிய வேத கால நாகரிகத்தில் ஆரியர்கள் (பார்ப்பன சமுகம்) வேள்வியில் பசுக்களை கொன்றும், அவற்றை இந்திரன், அக்னி மற்றும் சோமன் ஆகிய கடவுள்களுக்கு படைத்த விவரங்களையும், பின்னால் அந்த பசுமாட்டு கறியை விருந்தினர்களோடு உண்டு மகிழ்ந்த விவரங்களையும் ரிக் வேதம் மிக விரிவாக பாடியிருக்கிறது என்று பாரத ரத்னா விருது பெற்ற சமஸ்கிருத மொழி அறிஞர், மாராட்டிய மாநில பார்ப்பனர் மகாமகோபாத்யாய பாண்டுரங்க வீணா கானே தனது இந்துமத சாஸ்திரங்கள் என்ற 5 நூல் தொகுப்பில் மிகத் தெளிவாக பதிவு செய்திருக்கிறார்.

பசியால் வாடும் மனிதர்களை காப்பாற்றாமல், பசுவை காப்பாற்ற சிலர் கிளம்பியிருக்கிறார்கள் என்று சுவாமி விவேகானந்தர் மிகக் கடுமையாக சாடியிருக்கிறார். “பசுவுக்கென தனியாக புனிதம் எதுவும் கிடையாது” என்று RSS & BJP தலைவர்கள் தூக்கி பிடிக்கும் சவார்க்கரே சொல்லியிருக்கிறார். வேத காலம் தொடங்கி 7ம் நூற்றாண்டு வரை இந்தியாவில் பார்ப்பனர் உட்பட அனைத்து சாதியினரும் தங்களது உணவில் மாட்டு கறியை சேர்த்துக் கொண்டதை வரலாற்று பேரறிஞர் J.N.ஜா அவர்களும் தனது புகழ்பெற்ற ஆய்வு புத்தகம் “பசுவின் புனிதம்” என்பதில் பதிவு செய்திருக்கிறார்.

பசுவுக்கென்று தனியாக புனிதத்தை கற்பித்து அதனை பாதுகாக்க முதன் முதலாக 1870 ல் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியரில் ஒரு பிரிவினரான நாமதாரிகள் தொடங்கினார்கள். ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதி 1880 ல் வட மாநிலங்களில் சுற்றுப்பயணங்கள் செய்து பசு பாதுகாப்பு சங்கங்களை தோற்றுவித்தார். இதன் விளைவாக 1886 முதல் 1946 வரை பஞ்சாப், உத்தர பிரதேசம், மாராட்டிய மாநிலம் மற்றும் அன்றைய பர்மாவின் எல்லையருகில் ரங்கூன் வரை நூற்றுகணக்கான இந்து முஸ்லீம் மதமோதல்கள் ஏற்பட்டு, அவற்றில் சிறுபான்மை முஸ்லீம் இன மக்கள், தலித்துகள் பலபேர் கொல்லப்பட்டதாக வரலாறு பதிவு செய்திருக்கிறது.

1966 ல் காந்தியடிகளின் முக்கிய சீடரான வினோபா பாவே நாடு தழுவிய அளவில் பசுவதை சட்டத்தை நிறைவேற்ற கோரி உண்ணவிரத போராட்டத்;தை தொடங்கினார். அதனையொட்டி RSS இயக்கம் ஆயிரக்கணக்கான சாமியார்களை திரட்டி டெல்லி நாடாளுமன்ற பாதையில் பேரணியை நடத்தினார்கள். ஊர்வலத்தில் சாமியார்கள் என்ற போர்வையில் வந்த சிலர் அன்றைய காங்கிரசின் தேசிய தலைவர் காமராஜரின் வீட்டிற்கு தீவைத்து அவரை கொல்ல முயன்ற சம்பவத்தை நாம் அறிவோம்.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் சில மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் அரசியல் நோக்கத்திற்காக, பசுபாதுகாப்பு என்ற இயக்கத்தை RSS மற்றும் BJP கும்பல் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு இஸ்லாம், கிறிஸ்துவர்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல் தொடுத்து தங்களது வாக்கு வங்கிகளை வலுபடுத்தி கொள்வதில் முனைந்திருக்கிறார்கள். அயோத்தி ராமர் கோவில், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடி அரசியலில் லாபம் தேடிய RSS மற்றும் BJP சக்திகள் பசுபாதுகாப்பு இயக்கத்தின் மூலம் மீண்டும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது. இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றினைந்து இந்துத்வா மதவெறி சதி திட்டத்தை முறியடிக்க வேண்டியது காலத்தே தொடங்க வேண்டிய முக்கிய அரசியல் பணியாகும்.

 - கே.சுப்ரமணியன், சட்ட ஆலோசகர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்