சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு, கர்நாடகாவில் பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரம் சிறையில் ஜெயலலிதா இருந்தபோது, தமிழகத்தில் இறந்து போனவர்களையெல்லாம் தனக்காக உயிர்விட்டதாக கணக்கெடுத்து, 260க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அஇஅதிமுக அரசாங்கம் நிவாரணங்களை வழங்கியது. ஆனால், நவம்பர் 8ந்தேதி முதல் கடலூரைத் தாக்கிய புயல் மழை வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் சேதாரம் பற்றிய முழுமையான அறிக்கையை இதுவரையிலும் அரசாங்கம் வெளியிடவில்லை; இறந்தவர்கள் பற்றிய முழுமையான கணக்கெடுப்பு நடைபெற்றதாகத் தெரியவில்லை.

cuddalore flood 543

நவம்பர் 15ந்தேதி கடலூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, இதுவரையிலும் பேரிடர் இழப்புகள் பற்றிய புள்ளிவிவரங்கள் வெளிவரவில்லை. 32 பேர் இறந்ததாக ஒரு பட்டியல் துவக்கத்தில் வெளியானது;  ஆனால், நூற்றுக்கும் அதிகமானவர்களின் விபரங்களை செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. இதுவரையிலும், 270 பேர் வெள்ளம்-பேரிடருக்குப் பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் கணிசமானோர் தலித்துகள். நீர்வழித் தடங்களை,  ஏரிகள் வாய்க்கால்களை ஒட்டிய பகுதிகளில், தாழ்வான/பள்ளப்பகுதிகளில் வாழ்ந்த தலித் மக்களின் குடிசைகள்/வீடுகள், கால்நடைகள்,  துண்டு துக்காணி நிலங்கள் பெருத்த சேதத்தை சந்தித்தன. மாவட்ட மக்கள் தொகையில் தலித்துகள் 30 சதவீதம் இவர். 2011 ஆம் ஆண்டு விவசாய சென்சஸ் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள மொத்த நில உடமையாளர்கள் 3.10 லட்சம் பேராவர். அதிலும், சிறு, குறு விவசாயிகள்தான், அதாவது 1 ஹெக்டேருக்கு (2.5 ஏக்கருக்கு) குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் தான் மிக அதிகமானவர்கள்; 2.50 லட்சம் பேராவர். அவர்களிலும் தலித்துகள் மட்டும் 50,067 பேராவர். மாவட்டத்தின் மொத்த விவசாய மொத்த நிலப்பரப்பில் தலித்துகளிடம் 10 சதவீதம், அதாவது 23,817 ஹெக்டேர்கள் (சுமார் 60,000 ஏக்கர்) நிலம் உள்ளது.

நவம்பர் 8 முதல் டிசம்பர் 10 வரை தொடர்ந்து பெய்த மழை, புயல், சூறாவளிக்காற்று ஆகியவற்றாலும், பரவனாறு, வெள்ளாறு, மணிமுத்தாறு, கெடிலம் ஆறுகள் மற்றும் வீராணம் ஏரி, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி மற்றும் பல்வேறு வாய்க்கால்கள், வடிகால்களில் பெருக்கு எடுத்து ஓடிய வெள்ள நீர் ஏற்படுத்திய பேரிடரால், கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்குடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம் ஆகிய தாலுக்காக்களில்/பகுதிகளில் 6 ஒன்றியங்கள், கடலூர், நெய்வேலி நகரங்கள் மூழ்கின. நவம்பர் 24ந் தேதிய சாட்டிலைட் (செனின்டெல்-1) படங்கள் கடலூர் மாவட்டத்தில் வெள்ள நீர் மூழ்கிய பரப்பு 360 ச.கி.மீ. எனவும், விவசாய நிலங்கள் மட்டும் 307 ச.கி.மீ. எனவும் தெரிவித்தன. 60,000 ஹெக்டேர் விவசாயத்திற்கு (சுமார் 1.50 இலட்சம் ஏக்கர்) சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல், சோளப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகிவிட்டன.

புயல் காற்றால், முந்திரி, பருத்தி பயிர்களின் பூக்கள் சேதமுற்றன. கரும்பு, மரவள்ளி போன்ற பணப் பயிர்களும் சாய்ந்தன அழிந்தன. 30,000 மக்கள் தற்காலிகமாக நிவாரண முகாம்களுக்கு (பள்ளிகள், சமூக கூடங்கள் போன்ற தங்குமிடங்களுக்கு) அனுப்பப்பட்டனர். நவம்பர் 9ந் தேதியன்று பரவனாறு கரை புரண்டு ஓடியதால் மட்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை சுற்றியுள்ள 40 கிராமங்கள் நீரில் மூழ்கின. என்எல்சி சாம்பல் ஏரி உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பண்ருட்டி தாலுகா பெரியகாட்டுப்பாளையத்தில் மட்டும் 10 தலித்துகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கின. மொத்த மக்கள் தொகையான 26 லட்சத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தின் தாக்குதலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆட்பட்டனர். (எனவேதான், தன்னார்வலர்கள் நிவாரணங்களை வழங்கச் சென்ற போது பொருட்களை ஆங்காங்கு கைப்பற்றுகின்றனர் என்ற செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியானது) ஆடு, மாடுகள், கோழிகள் உயிரிழப்பு, ஒரு இலட்சம் குடிசைகள்/வீடுகள் சேதாரம், வீட்டிலிருந்த உடமைகள், பொருட்கள் இழப்பு, படகுகள்-மீனவர்களுக்கு பாதிப்பு, சிறிய தொழிற்சாலைகளுக்கு பாதிப்பு என ரூ.10,000 கோடிக்கும் அதிகமான சொத்து இழப்பு, வெள்ளம்-பேரிடரால் கடலூர் மாவட்டத்திற்கு எற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டமானது, பூகோள ரீதியாக இயற்கை சீற்றங்களுக்கு இலக்காகும் வகையில் அமைந்து உள்ளது; 2004ம் ஆண்டில் சுனாமித் தாக்குதல், 2005ல் மழை, வெள்ளம், 2008ல் நிஷா புயல், 2009ல் நீலம் புயல்,  2011ல் தானேப் புயல் எனத் தொடர்ந்து கோரத் தாண்டவங்களை சந்தித்து வருகிறது. 2015ல் வரலாறு காணா மழை, புயல், வெள்ளம் பேரிடரை சந்தித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா இதுவரையிலும் வந்து பார்க்கவில்லை. மாவட்ட ஆட்சியர்/மாவட்ட நிர்வாகம் எங்கேயுள்ளது எனத் தெரியவில்லை. கடலூரில் அரசு நிவாரண முகாம்களில் குவிந்துவிட்டப் பொருட்களை வழங்கிட டிசம்பர் 24ந்தேதி தான், காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் (எஸ்.பி) வேலையை துவக்குகிறார். மாவட்ட அரசு அதிகாரிகளின் பணிகள் என்ன? மாவட்ட பேரிடர் மேலாளுமை நிறுவனம் எதுவும் உள்ளதா? என்பதெல்லாம் தெரியவில்லை. மீட்பு, நிவாரணம், புனர் வாழ்வு-இதில் எந்த வகையிலும் கடலூர் மாவட்டம் தமிழக அரசாங்கத்தின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரியவில்லை. இது குற்றமய அலட்சியமா? அரசாங்கமே செயல்படவில்லையா?

குற்றமய அலட்சியத்தில் ஜெயா அரசாங்கம்

சென்னையை, கடலூரைத் துவம்சம் செய்த லட்சக் கணக்கானோரை வாழ்வா- சாவா என்று கதிகலங்க வைத்த தமிழகத்தைப் பாதித்தப்  பேரிடரை மோடி அரசாங்கமானது தேசியப் பேரிடராக அங்கீகரிக்கவில்லை- மிக கடுமையான பேரழிவுதான் என்கிறது. ஒரு நாள் மேலோட்டமாக ஹெலிகாப்படரில் பார்வையிட்ட பிரதமர் மோடி போட்டோ ஷாப் செய்து ஒரு தில்லுமுல்லு புகைப்படத்தை வெளியிட்டு விட்டு, இரண்டு தவணைகளில் ரூபாய் 1980 கோடி மட்டும் கொடுத்துவிட்டு, எல்லாம் முடிந்துவிட்டது என்பது போல நடிக்கிறார். பெரும் சேத்திற்குக் காரணமான செம்பரம்பாக்கம் ஏரி, வீராணம் ஏரி போன்றவற்றின் மிகையான வெள்ள நீரை வெளியேற்றிய குற்றத்திற்கு ஜெயா அரசாங்கம் இன்றளவும் பொறுப்பேற்கவில்லை. மாறாக, மழுப்புகிறது, நழுவுகிறது.  மன்னிக்க முடியாத குற்றங்களுக்குச் சொந்தக்காரர்களாக பாஜக, அஇஅதிமுக அரசாங்கங்கள் மாறுகின்றன.

எந்தவொரு பேரிடர் சூழலும்-”மீட்பு, நிவாரணம், புனர்வாழ்வு'' என்ற மூன்று விதமான கடமைகளை அரசாங்கத்திடம் இருந்து கோருகிறது. அவை, உடனடியாக உயிர்களை காப்பாற்றுவது, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணங்களை வழங்குவது/பாதுகாப்பது மற்றும் புதியதொரு வாழ்வைத் துவங்குவதற்கும், பேரிடர் தடுப்பு/எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகள் உள்ளடக்கிய புனர்வாழ்வுத் திட்டத்தை மேற்கொள்வது ஆகியவைகளாகும். கடலூர் மாவட்டத்தில், தமிழக அரசாங்கம்/ மாவட்ட நிர்வாகம் இந்த வகையில் செய்தவை, செய்ய வேண்டியவற்றைப் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

நவம்பர் 9ந் தேதி வெள்ளம் பெருக்கெடுத்து, மனித உயிர்களை அடித்துச் சென்றபோது, ‘அரசாங்கமே இல்லை' என்றளவில் மாவட்ட நிர்வாகம் செத்துப்போய் இருந்தது. வரலாறு காணாத மழையை, வெள்ளத்தை எதிர்பாராத ஏழைகள் நூற்றுக்கும் அதிகமானோர் இறந்து போயினர். ஆங்காங்கு கிராமங்கள், வீடுகள்/குடிசைகள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தபோது, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருந்த மக்களை மீட்க அரசாங்கமோ, மீட்பு படைகளோ வரவில்லை. மீனவர்கள் உதவியுடன், படகுகளை வாடகைக்கு எடுத்துவந்து, ஒவ்வொரு கிராமமும், குடியிருப்பும் தங்களைத் தாங்களே மீட்டுக் கொண்டனர்; பாதுகாத்துக் கொண்டனர். மிகத் தாமதமாக டிசம்பரில் வந்த மீட்பு படையினர், இராணுவத்தினர் மருத்துவ முகாம்கள் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உயிர்கள் பறிபோய்க் கொண்டிருந்த தருணத்தில், தேசிய பேரிடர் மேலாளுமைச் சட்டம்-2005, அதன் வழிகாட்டுதல்கள் இருப்பது பற்றி மாவட்ட ஆட்சியர் துவங்கி எவருக்கும், எதுவும் தெரியவில்லை. தமிழக முதல்வர் தலைமையிலான மாநிலப் பேரிடர் மேலாளுமை நிறுவனமோ அதன் மாவட்ட முகமையோ செயல்படவே இல்லை என்பதுதான் அடிப்படைக் காரணமாகும்.

நிவாரணத்தில் அலட்சியமும், ஊழலும்:

கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பேரிடர் பாதித்த பகுதிகளுக்கு சில நாட்கள் கழித்து பயணம் செய்த அதிகாரிகள், ஆளும் கட்சியின் அமைச்சர்கள், அடையாளப் பூர்வமான நிவாரணங்களை வழங்கினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரசி, வேட்டி, சேலை, ரூ.5000 அல்லது ரூ.4000 என குடிசை/வீடுகள் சேதமுற்றதற்கான நிவாரணம் ஆகியவற்றை வழங்கினர். அவையும், பாதிக்கப்பட்ட கிராமங்களின் அனைத்து குடிசைகளுக்கும்/வீடுகளுக்கும் வழங்கப்படாததால், அவரவர் கிராமத்திற்கு கிடைத்த தொகையை ஊராட்சி தலைவர்கள் வகுத்து சராசரியாக ரூ.2800, ரூ.3000 என்றும் கூட வழங்கினர். ஒரு சில இடங்களில்  மனிதாபிமான ரீதியாக, அமைச்சர்கள் பிஸ்கட்டுக்களை வழங்கியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புப்படி, ரூ.100 கோடி ரூபாய்க்கு நிவாரணப் பணிகள் நடைபெறுவதாகவும், ரூ.40 கோடி உணவுக்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் தெரிவித்துள்ள விவரப்படி முகாம்களுக்கு அனுப்பப்பட்ட 30,000 பேருக்கு ஒரு நாள் உணவு வழங்க அதிக பட்சம் ரூ.1.5 லட்சம் செலவு செய்யப்பட்டதாக மதிப்பிட்டு, அதிகபட்சமாக ஒருமாத காலம் அவர்களுக்கு உணவு வழங்கியதாக கணக்கிட்டாலும் கூட நான்கரை கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிட வாய்ப்பில்லை. ஊழல் உணவிலிருந்து துவங்குகிறது. உண்மையிலேயே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி வந்து ஏராளமான அமைப்புகள், தன்னார்வலர்கள் ஒரு மாத காலமும் உணவுகளை வாரி வழங்கியுள்ளனர். விவசாய நிலங்களுக்கு நிவாரணம் வழங்குவது துவங்கப்படவே இல்லை. கணக்கெடுப்புத் தான் துவங்கியுள்ளது.

புனர்வாழ்விற்கான முக்கிய பிரச்சனைகள்:

மின்சார விநியோகத்தை மீட்டெடுத்தல், சாலைகளை சீரமைத்தல், ஏரி வாய்க்கால்களை தூர்வாரி ஆழ, அகலப்படுத்துதல், என்எல்சி நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மாற்றுத் திட்டங்கள், கடலூரில் பேரிடர் மேலாளுமை நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருதல்-போன்றவை உடனடி கவனத்தைக் கோரும் பிரச்சனைகளாகும். கடந்த டிசம்பர் 23ந்தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற வெள்ள நிவாரண ஆலோசனைக் கூட்டத்தில், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல் நிலையங்களை சீரமைப்பதுப் பற்றி' மட்டும் பேசப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. புனர்வாழ்விற்கான அடிப்படைப் பிரச்சனைகளில், தமிழக அரசின் சிந்தனையும், செயல்பாடும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

cuddalore flood

கடலூர் மாவட்டத்தில், 1000 கி.மீ. நீளத்திற்கானச் சாலைகள் மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், குண்டும் குழியுமாக உள்ளன. கடலூரிலிருந்து விருதாச்சலம், பண்ருட்டி, விழுப்புரம் செல்லும் சாலை வழிகளில் தார் ரோடுகளே இல்லை; அடித்து, அரித்துச் சென்றுவிட்டன. தமிழ்நாடு முழுவதுமான சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களை/குழிகளை அடைப்பதற்காகவென்று, தற்காலிக சீரமைப்பிற்காக மாநிலப் பேரிடர் நிவாரண நிதி (எஸ்டிஆர்எஅப்) லிருந்து ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.129.17 கோடி செலவு செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், கடலூர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

நவம்பர் 8, 9 புயல் மழைக் காற்றால் மின் இணைப்புகள் கடுமையாக துண்டிக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகள், சில நாட்கள் மின்சார இணைப்பு இல்லாமலிருந்தன. பிற மாவட்டங்களிலிருந்தும் மின்வாரிய பணியாளர்களை வரவழைத்து மின்சாரம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன; த.நா. மின்சார வாரியம் ஒரு வார காலம் பணியாற்றி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியது. ஆனால், சென்னையை மழைத் தாக்கத் துவங்கியவுடன், கடலூர் மாவட்டத்தில் பணியாற்றிய மின் வாரியப் பணியாளர்கள் அனைவரும் சென்னைக்குச் சென்றுவிட்டனர். கடலூர் மின்சார சீரமைப்பிற்கு ஆள் பலம் இல்லாமல் வேலைகள் மந்தமாக நடைபெறுகின்றன. மழை வெள்ளத்தால், சரிந்து போன டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் இன்னமும் ஆங்காங்கு அப்படியே கிடக்கின்றன. 10% விவசாய மின் இணைப்புகள் கூட இதுவரை மீட்கப்படவில்லை. இந்த நிலை நீடித்தால், முழுமையாக விவசாயத்திற்கு மின்சாரம் வழங்க சில மாதங்கள் ஆகும்.

பராமரிப்பே நடைபெறாத ஏரிகள், வாய்க்கால்கள்:

ஓராயிரம் ஆண்டு வரலாறு மிக்க வீர நாராயணப் பெருமாள் ஏரி என்கிற வீராணம் ஏரி, காவிரியின் மிகை நீரைப் பெறுகிற, 1500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவுள்ள விரிந்து பரந்துள்ள ஏரியாகும். காட்டுமன்னார்குடியில் துவங்கி, சேத்தியா தோப்பு வரையிலும், சுமார் 14 கி.மீ  நீண்டிருக்கிற பழம்பெரும் நீர்த்தேக்கத்தின் முழுக் கொள்ளளவு 14,650 இலட்சம் கன அடியாகும். 1851 ல் கட்டப்பட்ட சேத்தியாதோப்பு அணைப்பகுதியிலிருந்து தான், சென்னைக்கு குடிநீர் குழாய் மூலம் அனுப்பப்படுகிறது; தினசரி 1800 இலட்சம் லிட்டர் வரை சென்னைக்கு தண்ணீர் செல்கிறது; பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்பட்டிருந்தாலும், வீராணம் ஏரியானது, சென்னை குடிநீர் வழங்கும் வாரியத்தின் கட்டுப்பாட்டில்தான் நடைமுறையிலிருப்பதாகத் தெரிகிறது. பல்லாண்டு காலம் தூர் வாரப்படாததால், தூர் வாரி முழுமையான தண்ணீர் பிடிப்பைக் கொண்டு வருவதற்காக, ரூ.40 கோடி வழங்கியிருப்பதாக, 2013-ஏப்ரலில் பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தெரிவித்தார். ஆனால், வீராணம் ஏரி முழுமையாக ஆழப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஏரியின் பல இடங்கள் மண்மேடுகளாக இருக்கின்றன. எனவேதான், ஒரு நாள் பெருமழையையேத் தாக்குப் பிடிக்காமல், வீராணம் ஏரி திறந்துவிடப்பட்டு, அதன் வாய்க்கால்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து, காட்டுமன்னார்குடி, சிதம்பரம் தாலுக்காக்களின் பல கிராமங்களையும், குறிப்பாக,   திருநரையூர், நந்தி மங்கலம் கிராமங்களை முழுமையாக, மூழ்கடித்தது. வீராணம் ஏரியின் பராமரிப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதி, தூர் வாருதல் பணிகள் போன்றவற்றைப் பற்றிய விசாரணைத் தேவைப்படுகிறது; அதே போல பெருமாள் ஏரியிலும் பொதுப்பணித்துறை மேற்கொண்ட பணிகள் பற்றியும் வெளிப்படையான அறிக்கைத் தேவைப்படுகிறது.

கடலூர் முதுநகர் அருகேயுள்ள உப்பனாறு, கெடிலம் இரண்டு முகத்துவாரங்கள் தான், கடலோரமுள்ள 108 கிராமங்களுக்கும் வெள்ளநீர் வடிகால்களாகும். இவைத் தூர் வாரப்பட்டு 6 ஆண்டுகள் ஆகின்றன. எனவேதான், வெள்ளம் பேரிடரின் பொழுது, வெள்ளநீர் விரைந்து கடலுக்குச் சென்று கலக்காமல், கடலூர் நகரமே தண்ணீரில் மூழ்கியது. சிப்காட், காரைக்காடு போன்ற மீனவர் கிராமங்களும் வெள்ளத்தில் மிதந்தது. மீனவர்களின் படகுகள், வலைகள், உடமைகள் கூட அடித்துச் செல்லப்பட்டது. சிறிய தொழிற்சாலைகள், பட்டறைகள், நிறுவனங்களும் மூழ்கின.

என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் கேடுகள்:

என்எல்சி/ நெய்வேலி  பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு கடந்த 2015 டிசம்பர் 29ல் மத்திய அரசு, ஒருங்கிணைந்த நீர்வள மேலாளுமை விருது வழங்கியது. மத்திய அமைச்சர் உமா பாரதி வழங்க என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா பெற்றுக்கொண்டார். விருதுக்குச் சொல்லப்ப்ட்ட காரணங்களில் சில- நிரந்தரச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கூடுதல் கவனம், உலர் சாம்பல் அழிப்பு அளகு, நீர் வழிகளில் தடுப்பணை ஆகியை ஆகும்.

என்எல்சி சுரங்கங்களின் பரப்பளவு 60 ச.கி.மீ.க்கு கூடுதலானதாகும். (முதல் சுரங்கம் 24.69 ச.சி.மீ., இரண்டாவது சுரங்கம் 8.36 ச.கி.மீ., மூன்றாவது சுரங்கம் 27 ச.கி.மீ) தினசரி 24 மெட்ரிக் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. சுரங்கங்களிலிருந்து பெருமளவுத் தண்ணீர் தினசரி வெளியேற்றப்படுகிறது. தண்ணீரோடு மண்ணும் கலந்து வெளியேறி ஏரிகளை, வாய்க்கால்களை சேறு சகதி நிறைத்து தூர்ந்து போகின்றன. நீர்நிலைகள் மண்மேடுகளாக, செடி கொடி புதர்கள் நிறைந்த காடுகளாக மாறுகின்றன. தண்ணீர் போவதற்கு வழி, வடிகால்கள் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. வாலாஜா ஏரியானது வெள்ள நீரை முழுமையாக ஏற்கும் நிலையில் இல்லை.  எனவேதான், நவம்பர் 8ல் பெய்த வரலாறு காணாத மழையால் நெய்வேலி நகரியமே மூழ்கிப் போனது. சுரங்க செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. எனவே, ராட்சச பம்புகள் மூலம், உடனடியாக நீர் இறைக்கப்பட்டு பரவனாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் கரிவெட்டி கிராமம் மூழ்கியது. மற்றொரு புறம், முதல் சுரங்கத்தில் இருந்த சாம்பல் ஏரி உடைந்து, பண்ருட்டி தாலுகா, பெரிய காட்டுப்பாளையம், விசூர் பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிச் சென்று, 10 தலித்துகளை உயிரோடு இழுத்துச் சென்றது. விருது வழங்கும்போது பாராட்டப்பட்ட உலர் சாம்பல் அழிப்பு அளகுதான் இந்த உயிர்களை கொன்றது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால், முழுமையாக நாசமாகிப் போனது வாலாஜா ஏரிதான். 1851ல், முகமது அலிதான் வாலாஜா நவாப் நினைவாக பெயரிடப்பட்டதாக சொல்லப்படும், வாலாஜா ஏரி 1664 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பல கிராமங்களுக்கு நீர் வழங்கும் மிகப் பெரிய பாசனப் பரப்பை கொண்டதாகவும் திகழ்ந்திருந்தது. ஆனால், 1956 க்குப் பின்னர், என்எல்சி சுரங்க செயல்பாடுகள் படிப்படியாக விரிவடையத் துவங்கியவுடன், நெய்வேலி சுரங்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் சேறு கலந்த நீர் வாலாஜா ஏரியை நிறைத்து தூர்ந்து போனது. முந்தைய கடலூர் மாவட்ட ஆட்சியர் ககன்தீப்சிங்பேடி அவர்கள் மேற்கொண்ட முயற்சியால், மிகத் தாமதமாக மார்ச், 2014ல் என்எல்சி நிறுவனம் ரூ.13.72 கோடி செலவில், ஏரியில் இருந்து 21 இலட்சம் கன மீட்டர் மண் நீக்கத் திட்டமிட்டது.

என்எல்சி திட்டப் பொறியாளர் துரைக்கண்ணு தலைமையில், 15 கிராம மக்கள் உதவியுடன் ஓரளவு ஏரியை மீட்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஓரளவு ஏரி மீட்கப்பட்டது. அதுவும் நடைபெறவில்லையெனில், தற்போதைய பேரிடர் சூழலில் இன்னும் கூடுதலான உயிர் இழப்புகள், சேதாரங்கள் ஏற்பட்டிருக்கும். கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் அடிப்படையில், விதிப்படி என்எல்சி நிறுவனம் தனது வருமானத்தில் 10% சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் பகுதிக்கு, மக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால், வழங்குவதில்லை. கோடி கோடியாக கொள்ளையடிக்கும் என்எல்சி அதிகாரிகளுடன் கூட்டுக் கொள்ளையில் ஈடுபடும் ஆளும் கட்சியினர், பிற அரசியல் கட்சியினர், என்எல்சி  நிறுவன சுற்றுச் சூழல் கேடிற்கு எதிராகப் போராடுவதில்லை. கடலூர் வெள்ளப் பேரிடருக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்த என்எல்சி நிறுவனம் தற்போது வெறும் ரூ.50 கோடியைத்தான் நிவாரணப் பணிகளுக்கு வழங்கியுள்ளது. விருது வழங்கும்போது புகழப்பட்ட என்எல்சியின் "நிரந்தரச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கூடுதல் கவனம்’’ என்பது இதுதான் போலும்.

புறக்கணிக்கப்பட்ட பேரிடர் மேலாளுமைக் கட்டமைப்பு

2004 ஆம் ஆண்டு சுனாமித் தாக்குதலுக்குப் பிறகுதான், 2005ல் தேசியப் பேரிடர் மேலாளுமைச் சட்டம் உருவானது. தேசியப் பேரிடர் மேலாளுமை நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் த.நா.வில் பேரிடர் தாக்கும் மாவட்டங்களாக கடலூர், சென்னை, காஞ்சிபுரம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், 2008ல் தான், தமிழக முதல்வரை தலைவராகக் கொண்ட மாநில பேரிடர் மேலாளுமை நிறுவனம் (எஸ்டிஎம்எ) உருவாக்கப்பட்டது. 2005 மத்திய சட்டத்தை அமல்படுத்தும் வகையில், மாநில பேரிடர் மேலாளுமை நிறுவனத்திற்கு, தமிழகத்தில் நடைமுறை செயல்பாட்டு விதிமுறைகளை உருவாக்க வேண்டும்; இதுவரையிலும் உருவாக்கப்படவில்லை. ஜெயா ஆட்சியில், 2013ல் மா.பே.மே.நி(எஸ்டிஎம்எ) புதிதாக உருவாக்கப்பட்டது. அதற்கு தனி ஆணையரே கூட கிடையாது. முதன்மைச் செயலர் தகுதியிலிருக்கும் வருவாய் நிர்வாகத்துறை ஆணையரே அதற்கும் பொறுப்பாளர் ஆவார். ஆனால், ஜனவரி 8, 2015ல் மீண்டும் புதிதாக மா.பே.மே.நி. மாற்றியமைக்கப்பட்டது. இதுவரை ஒரு கூட்டமும் நடைபெறவில்லை. 2014ல் கடலூர் மாவட்டத்தில், தாசில்தார் தலைமையில் அவசரக் குழுக்கள் வரை அமைப்பதற்கான பேரிடர் மேலாளுமை திட்ட முன்வரைவு வெளியிடப்பட்டதோடு சரி; ஜெயா ஆட்சியில் பேரிடர் மேலாளுமை நிறுவனத்தின் கீழ் எந்த செயல்பாடும் இல்லை; வெற்றுத்தாள் அமைப்பாக மாற்றப்பட்டதுதான், ஜெயா அரசாங்கத்தின் குற்றமய அலட்சியத்தின் உச்ச கட்டமாகும். பேரிடர் மேலாளுமைக் கட்டமைப்பு, அதற்கான பணியாளர்கள், மீட்பு நடவடிக்கைக்கான பொருட்கள், நிதி என முழுமையானத் திட்டமாகும். இதைப் புறக்கணிக்கும் ஜெயா அரசாங்கத்தின் மகா அலட்சியம், மக்களை மீண்டும் மீண்டும் பேரழிவிற்கே இட்டுச் செல்லும்.

போராட்டப் பாதையே தீர்வாகும்

வெள்ளம் பேரிடர் தாக்கிய காலகட்டத்தையும், அதற்குப் பிந்தைய நிலைமைகளையும் பரிசீலித்தால், செயல்படாத குற்றமய அலட்சிய ஜெயா அரசாங்கத்திடம் போராட்டங்கள் மூலமாக மட்டுமே வாழ்வுரிமையை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனத் தெளிவாகத் தெரிகிறது.  புறக்கணிக்கப்பட்டுள்ள விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும். போராட்டங்கள், தொடர் இயக்கங்கள் இல்லாமல், கடலூர் மாவட்ட மக்கள் தங்களைத் தாக்கும் பேரிடர்களிலிருந்து மீண்டெழ முடியாது.

- சந்திரமோகன்

Pin It