modi in american parliament

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அவர்கள் அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். இது ஒன்றும் புதிய செய்தி இல்லை தான். ஏற்கனவே மோடி அமெரிக்காவுக்கு மூன்று முறை சென்றுள்ளதையும், ஓபாமாவுடன் ஹாட்லைனில் பேசும் அளவுக்கு மோடிக்கு செல்வாக்கு உள்ளதையும் நாம் அறிவோம். அப்படி புகழ் வாய்ந்த மோடிக்கு இந்த முறை அமெரிக்கா தனது நாடாளுமன்றத்தில் பேசும் வாய்பை வழங்கியது. எந்த மோடியை இனப்படுகொலையாளன் என்று குற்றம் சாட்டி அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்ததோ, அதே அமெரிக்கா மோடியை தன்னுடைய நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி கொடுத்தது. அதுமட்டும் அல்லாமல் மோடி பேசும்போது பல முறை எழுந்து நின்று தன்னுடைய மகிழ்ச்சி ஆராவாரத்தை வெளிப்படுத்தியது. அதை இங்கிருந்து தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த மயிலாப்பூர், மாம்பலம், திருவல்லிக்கேணி உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து அக்கிரகாரத்து அம்பிகளும் கண்ணில் நீர்மல்க பார்த்துப் பரவசப்பட்டுக் கொண்டிருந்தனர்.

தன்னை நாட்டுக்குள் வரக்கூடாது என்று சொன்ன ஒரு நாட்டில் அதுவும் அவர்களது நாடாளுமன்றத்திலேயே பேச வாய்ப்பு கிடைத்தால் மோடி சும்மா இருப்பாரா? 100 ஓட்டு, 200 ஓட்டு உள்ள தொகுதியில் பிரச்சாரம் செய்தாலே ஏகப்பட்ட பில்டப் செய்யும் மோடி, அமெரிக்க நாடாளுமன்றம் என்பதால் இன்னும் தனது திறமை, அறிவு என அனைத்தையும் பயன்படுத்தி டெலிபிராம்ப்ட்டை பார்த்து, பார்த்து பேசி தன்னை ஒரு சிறந்த பேச்சாளன் என காட்டிக் கொண்டார். சரி தொலையட்டும் அறிவு இருக்கின்றவர்கள் பார்க்காமல் பேசுகின்றார்கள், அறிவு இல்லாதவர்கள் இது போல பார்த்து பார்த்துப் பேசுகின்றார்கள்.

சரி, அப்படி மோடி என்னதான் பேசினார் என்று பார்த்தால் மிகக் கேவலமாக கெட்ட வார்த்தை எல்லாம் பேசியிருக்கின்றார். கெட்ட வார்த்தை என்றால் நீங்கள் மனதுக்குள் நினைப்பது போல அல்ல. உலகமே சொல்லத் தயங்கும் ஒரு கேவலமான வார்த்தையை மோடி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இந்த உலகமே பார்க்க சொன்னார். அந்த கெட்ட வார்த்தை என்னவென்றால் அமெரிக்காவைப் பார்த்து ‘உலக ஜனநாயகத்தின் கோவில்’ என்று சொன்னது.

உலகமே பார்த்துக் காறித் துப்பும் ஒரு நாட்டை, லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்த ஒரு நாட்டை , ஜனநாயகத்தைக் கற்றுக் கொடுக்கின்றேன் என்று ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என பல நாடுகளில் கொத்துக் கொத்தாக அப்பாவி மனித உயிர்களை பலி எடுத்த ஒரு பாசிச நாட்டை மோடி ஜனநாயகத்தின் கோவில் என்று சொல்கின்றார் என்றால் மோடிக்கு ஜனநாயகத்தைப் பற்றிய புரிதல் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை குஜராத்திலும், மாலேகானிலும், ஆஜ்மீர் தர்க்காவிலும் ஜனநாயகத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக தான் தாக்குதல் நடைபெற்றது என நம்மை நம்பவைக்க மோடி முயற்சிக்கின்றார் என்று நினைக்கின்றேன். முஸ்லீம் எதிர்ப்பு என்கின்ற அடிப்படையில் ஓபாமாவும், மோடியும் ஒரே சிந்தனைப்புள்ளியில் சந்தித்துக் கொள்வதால் மோடி அவ்வாறு பேசியிருக்கலாம். எது எப்படியோ முஸ்லீம்களை படுகொலை செய்வது என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படையான கொள்கை என புதிய விளக்கத்தை மோடி உலகிற்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றார்.

மேலும் “எனது தலைமையிலான அரசின் வேத நூல் சட்டம் மட்டுமே” என்றும், “இந்தியாவில் வாழும் 120 கோடி மக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாழ்கின்றார்கள். சுதந்திரமும் சமத்துவமும்தான் எங்களின் பலம்" என்றும் பேசியிருக்கின்றார். மோடி இதை எல்லாம் ஏன் அங்கு போய் பேசினார் என்று நீங்கள் நினைக்கலாம். மோடி இதை எல்லாம் தானாக பேசவில்லை. அவரை பேச வைத்திருக்கின்றார்கள். தொடர்ச்சியாக அமெரிக்காவுக்கு மோடி போக வேண்டும் என்றால் இதுபோல எல்லாம் மோடி பேச வேண்டிய சூழ்நிலையை அங்கிருந்த சில எம்.பிக்கள் உருவாக்கி விட்டார்கள் என்பதுதான் உண்மை.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த 18 எம்.பிக்கள் நாடாளுமன்ற கீழவை சபாநாயகர் பால் ரயனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்கள். குடியரசு கட்சியின் டிரென்ட் பிராங்க்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பெட்டி மெக்கல்லம் தலைமையிலான இந்தக் குழு கொடுத்த அந்தக் கடிதத்தில் "இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவம், பவுத்தம், சீக்கியம் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினர் பல ஆண்டுகளாக துன்புறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றனர். வேறு வழியின்றி இவர்கள் வன்முறையான சூழ்நிலையைச் சகித்துக் கொண்டு தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதேநேரம் வன்முறைக்குக் காரணமானவர்கள் தண்டனையிலிருந்து தப்பி விடும் சூழல் நிலவி வருகின்றது", "இரு நாடுகளுக்கிடையிலான உறவு வலுவடைந்து வரும் நிலையில் , மத சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டியது அவசியம்,எனவே இது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடியிடம் வலியுறுத்த வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது (நன்றி: தமிழ் தி இந்து).

இந்தப் பின்னணியில் தான் நீங்கள் மோடியின் பேச்சைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி ஒரு அழுத்தம் தரப்படவில்லை என்றால் மோடி அமெரிக்காவிலே போய் அரசியல் சட்டத்தை வேத நூல் என்றும், இந்தியாவில் வாழும் 120 கோடி மக்களும் எந்தவித அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் என்றும் நிச்சயம் பேசியிருக்க மாட்டார். இந்தியாவில் தொடர்ந்து மாட்டுக்கறியை மையப்படுத்தி இஸ்லாமியர்களும் தலித்துகளும் பார்ப்பன பயங்கரவாத கும்பலால் தாக்கப்படுவதும், பாரதமாதா, பகவத்கீதை, ராமன், யோகா, சமஸ்கிருதம், இந்தி போன்ற பார்ப்பன குறியீடுகளை நிராகரிப்பவர்கள் மீது வன்மத்துடன் பாய்ந்து குதறுவதும் அவர்களை சுட்டுக் கொல்வதும் கேட்பாரின்றி நடந்து கொண்டிருக்கின்றது. இதை அமெரிக்காவில் உள்ள சில ஜனநாயக சக்திகள் மோடிக்கு எதிராக ஒன்றுதிரண்டு அமெரிக்க அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுத்திருக்கின்றார்கள். இல்லை என்றால் மோடி வாயில் இருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்காது. ஆனால் உண்மையில் இந்தியாவில் இப்படியொரு சூழ்நிலையை ஏற்படுத்தியதே மோடிதான் என அவர்களுக்குத் தெரியவில்லை.

என்னதான் மோடி அமெரிக்காவை வானளவாகப் புகழ்ந்தாலும், ஒட்டி உறவு வைத்துக்கொண்டாலும் இந்தியாவுக்கான இடம் எது என்று அமெரிக்கா சரியாக சுட்டிக் காட்டியிருக்கின்றது. அமெரிக்காவுடன் பாதுகாப்புத்துறை கூட்டாளியாக மாற வேண்டும் என்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒட்டுமொத்த கனவை அமெரிக்கா களைத்து விட்டிருக்கின்றது. இந்தியாவை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கூட்டாளியாக அங்கீகரிப்பது தொடர்பாக அந்நாட்டு செனட்சபையில் கொண்டு வரப்பட்ட மசோதா தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மசோதா நிறைவேறி இருக்கும் பட்சத்தில் சர்வதேச போர்த்திறம் வாய்ந்த பாதுகாப்புத் துறை கூட்டாளியாக இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். இதன் மூலம் அமெரிக்க துணையுடன் ஆசியக் கண்டத்தில் பெரியண்ணன் பாத்திரம் ஆற்ற நினைத்த இந்திய ஆளும் வர்க்கத்தின் கனவு நிறைவேறி இருக்கும். ஆனால் அனைத்திலும் மண்விழுந்துவிட்டது.

மோடி அமெரிக்கா சென்றதுக்குக் கிடைத்த ஒரே பலன் என்.எஸ்.ஜி எனப்படும் அணு எரிபொருள் விநியோகக் குழுவில் உறுப்பினராக இந்தியாவுக்கு ஆதரவு தருவோம் என்று தெரிவித்ததுதான். இது முழுக்க அமெரிக்க அணு உலை நிறுவனங்களுக்குச் சாதகமான முடிவு என்பதால் அமெரிக்கா இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்கெனவே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன் படி இந்தியாவில் 6 இடங்களில் அமெரிக்க நிறுவனம் அணுமின் நிலையங்களை அமைக்க உள்ளது. ஆனால் அமெரிக்கா தனது சொந்த நாட்டில் அணுசக்தி திட்டங்களை எப்போதோ கைவிட்டுவிட்டது. அமெரிக்காவில் விற்காமல் கிடக்கும் பழைய அணு உலைகளை இந்தியாவிற்கு லட்சக்கணக்கான கோடிகளுக்கு (குறைந்தபட்சம் 2.8 லட்சம் கோடிகள் வரும் என்று சொல்கின்றார்கள்) வாங்கப் போகின்றது. இதன்மூலம் முழுபயனும் அடையப்போவது அமெரிக்காதான். இந்திய மக்களோ தங்களுடைய உயிரை பணயம் வைப்பது மட்டும் இல்லாமல் 12 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை அதிக விலை கொடுத்து அதை வாங்கப்போகின்றார்கள். ஒவ்வொரு முறையும் மோடி வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் போதும் இந்திய மக்களை மேற்கொண்டு சாவடிப்பதற்கான திட்டத்துடனேயே செல்கின்றார்.

இதை எதிர்த்துப் போராட வேண்டிய இடதுசாரிகளோ கேவலமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருகின்றார்கள். அதில் “அதீத விலைகொடுத்து எவ்விதப் பிரயோசனமும் இல்லாத அணு உலைகளை வாங்குவதை ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். ஒருவேளை விலை குறைவாக தரமான அணு உலைகளை கொடுத்தால் அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் போல் இருக்கின்றது. மக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் அணு உலை விசயத்தில் இவர்களின் நிலைப்பாடு மிக கீழ்த்தரமாக உள்ளது.

மோடியின் அமெரிக்கப் பயணம் இந்திய மக்களுக்குப் பல செய்திகளைச் சொல்லி இருக்கின்றது. அதில் ஒரு சிறப்பான செய்தி என்னவென்றால் மோடி அடிக்கடி அமெரிக்காவுக்குச் சுற்றுலா போவதற்காக இந்திய மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் இறையாண்மையும் அடமானம் வைத்துவிட்டார் என்பது. மற்றொன்று . மோடியை முன்னால் பேசவிட்டு கைதட்டி ஆராவரித்துப் பின்னால் காறித் துப்பி அமெரிக்கா அனுப்பிவிட்டது என்பது.

- செ.கார்கி

Pin It